எங்கெல்லாம் தமிழனின் தலை கனகம்பீரமாக நிமிர்ந்து நிற்பதாக நிறைவு கொள்கிறோமோ; அங்கெல்லாம் இன்னொரு தமிழனின் தலையாவது அந்நியனால் நசுக்கப் படவே செய்கிறது. புடைசூழ்ந்து படை வென்ற தமிழர் இனம் தட்டிக் கேட்க ஆளின்றி சுட்டுப்பொசுக்கும் நிலைக்கானதே. முகம் பார்த்து பேச தகுதியற்றோர் கூட; பல ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் வாழும் ஒரு இனத்தை செல்லரிப்பது போல் அரிக்கின்றனரே. மாற்றான் தேசத்தில் என் கொடி முதல் கொடியாகப் பறக்கவா கனவு காண்கிறோம்; தமிழன் கர்ப்பம் தரித்து கர்ப்பம் கிழிந்து கால் வைக்கும் முன் பூத்தமண் எம் தமிழ் மண், அதை மட்டும் தா என்றதில் எப்படி என் மக்கள் தீவிரவாதியாயினரோ!!!!!!!!!? என் சங்கருத்து வீசியிருப்பின் கூட வீசட்டுமென விட்டிருப்பேன்; என் தமிழச்சி கொங்கையை யறுத்து சொட்டிய ரத்தத்தில் எம் வீரக் கொடி நனைக்கிறான் எதிரியெயெனில்; என் மார்புடைத்து என் மூதாதையரின் வீர ரத்தம் பொங்கியெழுந்து யென் ஒரு தமிழச்சியையாவது மீட்டிருக்க வேண்டாமா????
முடியவில்லையே…!!! எங்கெல்லாம் என் இனம் என் மக்கள் இப்படி கேட்க நாதியற்று வாழ்கின்றனரோ; எங்கெல்லாம் எனை உறவென்று சொன்ன கூட்டம், எனை கடவுளென்று நம்பும் கூட்டம் என்னால் காக்க இயலாமலே போகிறதோ; எவரெல்லாம் இனியும் எனை நம்பி வீழ்வரோ… வீழ்வரோ… என கத்தி கதறி இருக்கும் போல் மாலனின் மனசு. அத்தனை சிவந்து போயிருந்தது அவரின் கண்களிரண்டும்.
சில்வண்டுகளின் சப்தத்தில் தொலைத்த அழுகையின் ஓலத்தை ‘சிவந்து கர்ஜிக்கும் அவரது விழிதனில் அவரால் மறைக்க இயலவில்லைதான். தனக்கான கொஞ்ச தூரத்தில் அவர்களெல்லாம் நின்றிருப்பதை உணர்ந்திருந்த மாலன் முகத்தை துடைத்து சரி செய்துக் கொண்டு சிரித்துக் கொண்டே செல்பவர் போல வீடு நோக்கி வருகிறார்.. எல்லோரும் அவரையே எதிர்நோக்கி இருந்தது போல் வந்தவரை சூழ்ந்துக் கொள்கின்றனர். அவர்களால் அவருக்கு பெருத்த சிரமம் என்று வருத்தம் கொள்கிறார்கள். அவர் அவர்களை திசை திருப்பி அவர்களின் மன உளைச்சலை போக்க எண்ணி, தண்ணீர் அல்லது தேநீர் ஏதேனும் குடிக்க கேட்கிறார். அவர்கள் அவருக்கு வீட்டில் இருந்து கொடுப்பதை தரக் குறைவாக நினைத்து கடைக்கு ஆள் விட்டு அனுப்புகிறார்கள். தேனிர் பலகாரமெல்லாம் வாங்கிவர சொல்கிறார்கள்.
மாலன், அவர்களின் இந்த எண்ணத்தை போக்கும் விதமாக ‘எனக்கு மிகவும் பசிக்கிறதே சாப்பிட வீட்டில் ஏதாவது இருக்கிறதா’ என்று கேட்க, எல்லோரும் மாறி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். எங்கள் வீட்டிலெல்லாம் நீங்கள் தின்னத் தாகாதென்கிறார்கள். மாலன் அவர்களுக்கு ‘உணவு சுத்தமாக செய்தலும், சுவையாக இருத்தலும், சுகாதாரம் பயக்க பரிமாறுதலும் தவிர வேறெந்த ஏற்றத் தாழ்வுகளும் மனிதருக்குள் வேண்டாம் என்று சொல்லி, அவர்களை வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் அழைத்து எல்லோரையும் அமர சொல்லி எல்லோருக்கும் பரிமாற சொல்லி வேறு கதைகள் எல்லாம் பேசி சிரித்து பசியாறி முடித்து யெழ இவ்விவரம் அறிந்த “மனிதமும் மேன்மையும்” அமைப்பினர் விடுதியிலிருந்து வேறொரு வண்டியை மாலனுக்காக அனுப்பிவைத்துள்ளனர்.
மாலன் எல்லோருக்கும் கைகூப்பி விடைபெருவதாக சொல்லிக் கொண்டார். அதற்குள் அந்த அடிப்பட்ட இளைஞனின் மூத்த சகோதரி போல்; அவள் ஓடி வந்து நீங்கள் தெய்வமையா…. எங்களை காப்பாத்த வந்த தெய்வம்’ என்று சொல்லி காலில் வீழ்கிறார். மாலன் விரைந்து அவரை தூக்கி விட்டுவிட்டு கண்கள் சிவக்க கடுங் கோபம் கொள்கிறார் அந்தப் பெண்ணிடம்.
“என்று இந்த மனிதனை மனிதனென்று பார்க்கிறதோ இந்த சமுதாயம் அன்று தான் நம் விலங்குகள் உடைத்தெறியப் படும் தங்கையே. யார் சொன்னது நீங்களோ நானோ தெய்வமென்று…?”
“நீங்கள் தான் பேசும்போதெல்லாம் சொல்வீர்களாமே!!!?” இன்னொருத்தி சொன்னாள்
“அது வேறு கதை. அதற்கு வேறு காரணம் உண்டு. அதற்கர்த்தம் நான் கடவுளென்றல்ல; ஒரு நல்ல மனிதன் ‘கடவுளென்று நாம் நம்பும் சக்திக்கு சமமென்று அர்த்தம். மனிதன் அவ்வளவு சக்தி வாய்ந்தவன் என்றர்த்தம். அத்தகு சக்தி எல்லோரின் உடம்பிற்குள்ளும் உண்டு. அதை கடந்தெல்லாம் எந்த மனிதனும் எக்காலத்திலும் கடவுளாக முடியாது. கடவுளை ஒரு பொருளற்றவர் என்று கொள்ளுங்கள்; கடவுள் ஒரு செயலற்றவர் என்றுணருங்கள்; கடவுளை ஒரு சக்தியற்றவர் என்று கூட சொல்லி விட்டு செல்லுங்கள்; ஆனால் மூட நம்பிக்கைகளை வளர்த்து நல்ல நம்பிக்கையின் பேரில் முடமாகிப் போகாதீர்கள் உறவுகளே..” சற்று மௌனம் காக்கிறார் மாலன், அவள் சரியண்ணா என்பது போல் தலை ஆட்டுகிறாள்
அவர் மீண்டும் சுற்றியுள்ளவர்களை பார்த்து “கடவுள் என்பது யாதெனில், நீயும் நானும் பிறக்கவும் இறக்கவும் நம்மை மீறிய ஒரு சக்தி காரணமாக இருக்குமெனில் அது இறை சக்தி என்று நம்புமொரு நம்பிக்கை மட்டுமே கடவுள்; என்றால் நம்புவீர்களா????!!
“நான் சொன்னால் கேள்வி கேட்பீர்கள், கோபம் வரும், மறுக்கத் துணிவீர்கள்; காரணம் கடவுளை சொல்கிறேனே!!!? ஆனால் கடவுள் எங்கே? சுட்டும் விரல் இடுக்கில் கொண்டு நிறுத்தி இது தான் கடவுளென காட்டி விடலாமா….? அழைத்தால்; நானுன் கழுத்தை கத்த கத்த அறுத்தால் கடவுள் வந்து அறுக்காதே என்று என் கையை பிடித்துக் கொள்வாரா? அப்போ என் இனம் வஞ்சகத் தீயில் கருகிப் போனதே தட்டிக் கேட்காததேன் கடவுள்??? உலகெங்கிலும் தனி மனித சுதந்திரம் தேடியும், தேசமென்றும் பாதுகாப்பென்றும் மடிந்துக் கொண்டுள்ளதே எண்ணற்ற உயிர்கள்; வந்து கையை பிடித்து நிறுத்தி விட்டதா கடவுள்????
இல்லையே!!!! நிலநடுக்கம் கடல்கோள் மழை வெள்ளம் புயல் எரிமலையென வெடிக்கிறதே உலகின் உயிர்கள்; கடவுள் வந்து நிறுத்தி விட்டாரா????
இல்லையே!!!!!!!! காரணம் அது வேறு.. இதலாம் வேறு. அபப்டி உங்களுக்கு சந்தேகம்னா எங்கே என்னை வெட்டிப் போடுங்கள், கடவுள் வந்து காக்கிறாரா பார்ப்போம்!!!!!!!!
மாலனின் கண்களில் தீப்பொறி பறக்குமொரு கோபம். எல்லோரும் செய்வதறியாது அசந்து நின்றார்கள். இப்படி ஒரு கோபத்தை இந்த சாந்த முகத்திலிருந்து யாரும் எதிர்பார்த்திர வில்லை.
“ஆனால் வெட்டிப் பாருங்கள்; கடவுள் வந்து நிற்பார்’ என்று கொள்ளும் ஒரு திடம் நம்பிக்கை நம்மிடம் இருக்கிறதே; அந்த உறுதி இருக்கிறதே; அதை மனிதனுக்குள் ஆழ்த்தி, மனிதனை கடந்த ஒரு நிலையை; எல்லாம் உணர்ந்ததுமான ஒரு நிலையை; யாதுமற்ற ஒரு நிலையை யடையும் அந்த சக்திக்கும் ஒரு சாதாரண சக மனிதனுக்கும் இடைப்பட்ட எங்கோ கடவுள் இருந்து போகட்டும். ஆனால் தயவு செய்து மனிதனை கடவுள் ஆக்காதீர்கள். மனிதன் இங்கே கடவுளை விட பெரியவன். அவன் தோளில் கையிட்டு கட்டிக் கொள்ள உரியவன் காலில் விழ தகுந்தவன் அல்ல..”
“அப்போ காலம் தொட்டு நாம் செய்தது? என்று கேள்வி எழலாம். அது ஒரு மரியாதை நிமித்தம் என்று எண்ணி செய்தோம். மனிதனுக்குள் இருக்கும் எல்லையிலா சக்தியை எப்படி எல்லாம் எடுத்துக் கொள்ள முடியுமோ அப்படியெல்லாம் எடுத்துக் கொள்ள முயற்சித்தோம். ஆனால் உண்மையில் எந்த மனிதனும் கடவுளில்லை. கடவுள் என்ற ஒன்று இருக்கலாம், என்னை பொறுத்த வரை உங்களை பொறுத்த வரை இருக்கலாம். அதை பிற மனிதருக்குள் இருப்பதாய் மட்டுமே எண்ணித் தேடாதீர்கள். தனக்குள் கண்டுபிடிக்க முயலுங்கள்.
காலில் விழவைத்து விழவைத்து நாம் கொன்ற சாமிகளும் மனிதர்களும் ஏராளம், இனியும் அதற்கு வழி கொடுக்காதீர்கள். வெள்ளை புடவை உடுத்தினால் தேவதை என்றும், காவி உடுத்தினால் கடவுள் என்றும் சொல்பவர் ஒரு காலும் மனிதராக கூட இருக்கமாட்டார். தெய்வீகம் உள்ளே பூக்க பூக்க மனிதன் தன்னையும் மறைத்துக் கொள்ள துணிவான் அன்றி தன்னை கடவுளென்று சொல்லி கிரீடம் மாட்டி திரிய மாட்டான்.
சிறு பெண்களை கற்பழித்த பாதிரியார், பேய் பிடித்து விரட்டுவதாகவும் சாமி வந்து ஓதுவதாகவும் பில்லி சூனியம் எடுப்பதாகவும் வீடு வந்தும், கொடிமரம் நட்டும் அப்பாவி மக்களை ஏமாற்றிப் பிழைத்தும் திரியும் மோசக் காரர்கள், பீடி சாமியார், பிராந்தி சாமியார், பான்பராக் சாமியார், சுருட்டு சாமியார், சாக்கடை சாமியார், ச்ச…நினைக்கவே கேவலமா இல்லை???? யார் காரணம் இதற்கெல்லாம்??? என்னை நான் தொடப்பகட்டை சாமியார்னு சொன்னா கூட என் கிட்ட வந்து அடி வாங்கிட்டு அருள் கிடைத்ததா ஏத்துக்க நீங்க தயாரா இருப்பது தானே???”
“அப்போ கடவுள்னு நாம வணங்குவதும் அதன் காலில் வீழ்வதும் கூட தவறா?”
“அது வேறு. அது கடவுளை நம்புபவர் கடவுளிற்குள் ஆட்படுத்துதல் அது. அந்த நம்பிக்கைக்குள் தன்னை ஆட்படுத்தி; அந்த நம்பிக்கைக்கு சரணடைந்து; இப்படி தான் இருக்கிறது கடவுள் சக்தி என்றொரு பாவித்தலை ஏற்படுத்தி; அதற்குள் லயித்து லயித்து நம்பிக்கையின் உச்சியில் சென்று நின்று தன்னை பலப் படுத்திக் கொள்வதற்கும், தன்னை முறை படுத்திக் கொள்வதற்கும், மனிதனின் உச்ச சக்தியை அடைவதற்கும் அந்த எல்லாம் மீறிய ஒரு சக்தியற்ற பொருளற்ற செயலற்ற நம்பிகையெனும் கடவுளின் தன்மையை யடைய சில வழிபாட்டு முறைகள் ‘மனிதனை மேம்படுத்தும் அளவிற்கு ‘மனிதனை மூடனாக்காத அளவிற்கு தேவை படுகிறது; அது வேறு…”
ஒரு பெற்றோர் காலில் விழுந்து என் கடவுள் நீ என போற்றுகையில் அந்த பெற்ற மணம் பொங்கி நிறைந்து நம்மை அனைத்துக் கொள்வது வேறு, இப்படி கண்டவன் காலில் விழுந்து போலி மனிதர்களை கடவுளாக்கியதால் தான் நாம் முட்டாள்களாக மதிக்கப் படுகிறோம், அதை மாற்றிக் கொள்ள வேண்டாமா?
மரியாதைக்கும் பக்திக்கும் வெகு நீள இடைவெளி உண்டு, மனிதனின் மேல் பக்தி வேண்டாம் மரியாதை போதும்”
மாலன் மிக ஆக்ரோசமாக இடைவிடாமல் பேசி நிறுத்த அவர்கள் அவரிடம் கேள்வி கேட்கும் எண்ணமின்றி மௌனித்து நின்றிருக்க, தான் தான் ஏதோ நல்லதை சொல்லும் நோக்கில் கேள்வியில்லாத இடத்தில் பேசக் கிடைத்ததை போல் பேசி நீள்கிறோமோ என்று நினைத்து, அவர்களிடம் அதற்கும் மன்னிப்பு கேட்டுக் கொண்டு அங்கிருந்த ஒரு இருக்கையை வெளியே தள்ளிப் பொட்டு அமர்ந்துக் கொண்டார்.
குடிக்க தண்ணீர் கேட்டு குடித்துக் கொண்டார்.. அதற்குள்.. மதலை முத்துவும், அவர் மனைவி சூரிக் கண்ணுவும் வந்து விடுகிறார்கள். வண்டி விட்டு இறங்கியதும் கதறிக் கொண்டே ஓடி வருகிறார்கள். எல்லோரும் பதற்றமுற்று எழுந்து அவர்களை நோக்கி ஓட, மாலனும் அவர்களை பின் தொடர்ந்து எழுந்து போகிறார்.
அந்த பெண்மணியும் மதலை முத்துவும் ஓடிவந்து இவர் காலை கட்டிக் கொள்கிறார்கள்; இன்னும் நூறு இருநூறு வருடங்களாவது கடந்த ஒரு காலமே இம்மனிதர்களை புரட்டிப் போடுமோ என்று வருத்தம் கொள்கிறார் மாலன்.
அவர்கள், மகன் விழித்துக் கொண்டதாகவும் பெரிய மருத்துவமனை, நல்ல மருத்துவம் பார்த்தார்கள் என்றும் சொல்லி உவகை கொள்கிறார்கள். இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு அங்கேயே தங்க வேண்டுமாம், உங்களுக்கு வெறும் வார்த்தையினால் நன்றியை சொன்னால் போதாதென்று பாதம் தொட்டு வணங்கி செல்லவே வந்தோம் என்கின்றனர் மதலைமுத்துவும் சூரிக் கண்ணும்.
“இப்போதும் உங்களுக்கு புரியவில்லையே, நான் கடவுளாக இருந்தால் இங்கேயே காப்பாற்றி இருக்க மாட்டேனா உங்கள் மகனை, நான் உங்களை போல சாதாரண மனிதன், ஒரு பேச்சாலனுக்கான மரியாதை எனக்கு போதுமானது”
“அட போங்க சாமி, இத்தனை காலத்திற்கு எங்களை எந்த சாமி வந்து காத்துது? எங்களை அடிச்சி போட்டா இங்க கேட்க நாதியில்ல, ஆபத்துல உதவுற உங்களை போன்ற மனிதருங்க தான் சாமி தெய்வம்” சூரி சொல்லி நிறுத்த
“ஆமாங்க சாமி இத்தனை ராத்திரில எங்களுக்காக நின்னு எங்க உணர்வுகளை எல்லாம் மதித்தீர்களே இது பெருசில்லையா” என்று மதலை ஆரம்பிக்க, வீட்டிலிருந்த மகள்களும் மற்றையோரும் அவர் உணவருந்தியது.., காலில் விழ கத்திப் பேசியது.., என எல்லாம் சொல்கிறார்கள். மிக பெரும் அன்பு மழை அங்கே பொழிந்து எல்லோரும் மனிதத்தினால் நனைய மாலன் மீண்டும் நாளை மருத்துவ மனையில் வந்து பார்ப்பதாக சொல்லிவிட்டு கைகூப்பி வணக்கம் தெரிவித்து ,விட்டு இரவு தூக்கத்தை தொலைத்த வருத்தமின்றி அதிகாலை பொழுதினில் விடுதி நோக்கி புறப்படுகிறார்.
வாகனத்தின் ஜன்னல்களை திறந்து விட்டுக் கொண்டார், எல்லாம் அவன் செயலென ஓர் எண்ணம் உள்ளே உதிக்கிறது அவருக்குள். இடையே, கடவுளை பற்றி இப்படி எல்லாம் சொல்கிறோமே, இல்லை என்று கூட சொன்னோமே, நன்றியற்ற உணரவில்லையா அது’ என்றொரு வருத்தம் வருகிறது. ஆனால் இப்படிப் பட்ட மனிதர்களிடம் வேறென்ன சொல்லி ரத்தத்தில் ஊறிய மடமையை போக்குவது!!!!!!!!?
‘இல்லை வெறும் நம்பிக்கை தான், இருப்பதான சரணடைதலின் பாவனை தான்; எனும் போதே இம்மனிதர்கள் தன்னை இத்தனை தொலைத்து விடுகிறார்களே, இன்னும் கடவுள் இவர்கள் சொல்லும் வழியிலெல்லாம் இருக்கிராறென்று சொன்னால் ‘இந்த அப்பாவி மக்களை இன்னும் மூடக் கிணற்றிலே தள்ளிவிட்டது போலாகாதா?
எது செய்தோமோ அதை சரியாக தான் செய்தோம், யோசிக்க வைத்து விட்டால் போதும் ‘கடவுள் இருப்பதும் தெரிந்துவிடும், எது வரை அல்லது எங்கிருந்து, எப்படி, எதற்கு இருக்கிறதென்றும் தெரிந்துவிடும்.
சொல்வதை செய், சொல்வதை கேளென்று அதட்டி அடக்கி கட்டாயப் படுத்தித் தானே இத்தனை நூற்றாண்டுகளை தட்டிவைத்துவிட்டோம், அது போதாதா…?” என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கையில் சடாரென வந்து மோதுகிறது ஒரு பெரிய டேங்கர் லாரி மாலனின் மகிழ்வூந்தின் மீது!!!!!!
எதிர்பார்க்காத நேரத்தில் தான் மரணம் நேரும் என்பார்கள், மாலனும் எதிர்பார்க்கவில்லை. இப்படி நேரும் என்று எண்ணிக் கூட இருக்கமாட்டார்.
சற்றே சுதாரிப்பதற்குள் சுழன்று சுழன்று எங்கோ தூக்கி வீசப் பட்டு தூரம் சென்று வீழ்கிறது அவர் வந்த வாகனம்..
முன்னே இடித்ததில் சல்லடையாக உடைந்து வாகனம் ஓட்டியவர் ஐயோ என்ற ஒரு குரலோடு நொறுங்கிய உடைசல்களில் நசுங்கி போனார்.
மாலன் என்ன ஆயிருப்பார்? அடுத்த தொடரில் பார்ப்போம் என்றெல்லாம் போட மாட்டேன். அதற்காக கதாநாயகர்களுக்குத் தான் கதை முடியும் வரை ஒன்றுமே ஆகாதே என்று சொல்லவும் வரவில்லை. அவருக்கான கண்டத்தில் இதுவும் ஒன்று அவ்வளவு தான்.
அவர் வந்தது பதினான்கு பேர் அமரும் ஊர்தி. முன்னே இடித்ததில் முன்னே நசுங்கி தூர விழுந்தாலும், மாலன் தான் சற்று விவரமானவராயிற்றே; பின்னே அமர்ந்திருந்தாலும் ‘சேப்டி பெல்ட்’ இட்டிருந்ததால் எத்தனை கரணம் அடித்தும் அவருக்கு அதிர்ச்சி தவிர பெரிதாக வேறெந்த சேதமும் நேரவில்லை என்று சொல்லி மனதை தேற்றிக் கொள்வோம்.
ஆனாலும், தான் இறந்திருந்தாலும் இத்தனை வருந்தியிருக்க மாட்டார், அத்தனை வருத்தத்தை தந்தது அந்த ஓட்டுனரின் மரணம். நாமும் இத்தருணத்தில் இதுபோன்ற அகால மரணம் எய்திய உயிர்களின் ஆத்மா சாந்திக்கென வேண்டிக் கொள்வோம்.
எப்படியும் நாளை மாலனால் மொரிசியஸிலிருந்து போக இயலாது. மருத்துவரின் ஆலோசனை படி ஒரு வாரம் தங்கி ஓய்வெடுத்துவிட்டு , அங்கு நடக்கவிருக்கும் இன்னுமொரு கலைநிகழ்விலும் கலந்து சொற்பொழிவாற்றவும், இன்னுமொரு பத்து நாள் இங்கேயே தங்கிவிடவும் சம்மதிக்கிறார்.
மறுநாள் வேறுநாட்டில் நடக்கவிருந்த கூட்டமெல்லாம் பத்து நாட்களுக்கு ரத்து செய்யப் படுகிறது. வீட்டிற்கும் விபத்து செய்தி தெரிவிக்கிறார்கள். ஊரில் அவர் மனைவி விவரமறிந்து மயங்கி விட்டதாகவும், பிறகு தெளிந்ததும் உடனே அவரை பார்க்க வேண்டுமென கேட்டு தொல்லை செய்ததாகவும், அவரின் கெஞ்சுதலின் பேரில் நாளைக்கே அவருக்கு விசா அனுப்பப் பட்டு மொரிசியஸ் வருவதாகவும் முடிவு செய்யப் படுகிறது.
ஆக, நாளைக்கு மருத்துவமனைக்கு சென்று மதலைமுத்து சூரியின் மகனை பார்க்க இயலாது. தவிர மருத்துவர்கள் வேறு அவரை இரண்டு மூன்று நாட்களுக்காவது ஓய்வுவெடுக்க வேண்டுமென்று கூறியிருப்பதால் மூன்றாம் நான்காம் நாளில் புறப்படும் முன் வந்து போவதாக அவர்களுக்கு தகவல் தெரிவிக்கிறார்.
நாமும் இரண்டு மூன்று தினங்களுக்குப் பின் மதலைமுத்து சூரி தம்பதியர் வீட்டில் மாலனை சந்திப்போம்…
————————————————————————————————-
காற்றின் ஓசை – தொடரும்.. ‘அதில் காதலும் காமமும் கடவுளும் வாழ்கையும் மனிதமும் ஓசையாய் எழுத்தாய் இன்னும் நீளும்….
மனிதம் இன்னும் இறந்துவிடவில்லை என்பதற்கான சான்று இது…..
ஏற்றத்தாழ்வு மனிதருள் இன்னும் மறுக்கவில்லை அதுவும் வேதனையான விஷயம்…..
மாலனின் மனிதாபிமானமும் கருணை மனமும் ஒரு உயிர் போய்விட்டதே நம் கண் எதிரில் என்ற வருத்தமும்…
ஆண்டாண்டு காலமாக அடங்கி கிடந்து யாரோ ஒருவர் உதவ வரும்போது அவர் தெய்வமாக தெரிவது இயல்பே….
நம் மஹாத்மா சுதந்திரம் பெற அஹிம்சா வழியில் சென்று போரிட்டு வென்று இன்று நாம் நிம்மதி மூச்சு விடுவதை நினைவில் வருவதை தடுக்க முடியவில்லை….
தமிழன் மட்டும் ஏன் எங்கு சென்றாலும் ஈனப்படுத்தப்படுகிறான்? மானபங்கப்படுத்தப்படுகிறான்? தமிழர்களின் நிலை இத்தனை சிரமமாவது எதனால்? கனிவும் அன்பும் மனதில் நிறைந்திருக்க யார் வந்தாலும் விருந்தோம்பலில் சளைக்காத தமிழினத்திற்கு மட்டும் ஏன் எங்கும் இத்தனை இன்னல்…..
விடை தெரியாத முடிவுமில்லாத விஷயமாக இருக்கிறது தமிழனின் நிலை…..
ஆர்பாட்டமில்லாத அழகிய எளிய நடையில் வித்யாவின் எழுத்துக்கள் இங்கே காண்கிறேன்….
படிக்கும்போதே நமக்குள் ஆழ்ந்து யோசிக்க வேண்டியது இவை என்று பட்டியலிடமுடியாத அளவு மாலனின் வார்த்தைகள் படிக்க படிக்க ஆவேசம் நமக்குள் வருவதை தடுக்க முடிவதில்லை….
மனிதனை மனிதனா பாருங்கய்யா….. வெள்ளை துணி உடுத்தினவரெல்லாம் தேவதை காவி உடுத்தினவரெல்லாம் சாமியார் என்பது காலம் காலமாக வருவதால் மக்களும் இங்கே மந்தையாக்கப்படுகின்றனரே என்ற வேதனையின் நச் வரிகள் வித்யா….
அடுத்து என்ன நடக்கிறது பார்ப்போம்….
அன்பு பாராட்டுக்கள் வித்யா….
LikeLike
மிக்க நன்றி மஞ்சு. பெருசா கடவுள் பற்றிய அறிவையோ; அல்லது நாம் உணர்ந்த விதம் சரி என்ற முடிவிற்கோ எல்லாம் வரவில்லை என்றாலும், அதை பற்றி ஒரு நடுத்தரமாக சிந்திக்க தான் உணர்ந்த விதத்தில் மட்டுமே சொல்வதான ஒரு முயற்சி தான் ஆங்காங்கே கடவுள் பற்றி பேசுவதற்கான காரணம். நிறைய உயிர்கள் நிறைய இடத்தில் பறிக்கப் படுவதற்கு நாம் பெருமிதமாய் எண்ணி வணங்கும் கடவுள் பக்தியில் காலத்தின் மாற்றத்திற்குத் தாக்கவோ என்னவோ திணிக்கப் பட்டுவிட்ட சுயநலமும் மேல் சென்று சிந்தித்து சற்றும் வெளியே நின்று தண்ணி திரும்பிப் பார்த்துக் கொள்ளாததன் பேரில் தானோ என்ற வருத்தம் வருகிறது. இன்றைய வளரும் இளைஞர்களின் மனதில் கடவுள் பற்றிய ஆன்மிகம் பற்றிய குழப்பமானது குழப்பமாகவே வளர்ந்து விடாது அதை தன் நடுத்தர இடத்தில் இருந்து சிந்தித்துக் கொள்ளுங்கள் என்று சிறு தீப்பொறியை தட்டிவிடுவதற்கான முயற்சி.
நம் முதல் அத்யாயத்தில் கூட நண்பர் ஒருவர் தியானம் பற்றி கேட்டிருந்தார். அதை எந்த வட்டத்திற்குள்ளும் நின்று விடாமல் கடவுள் எனும் உயிர் ஒன்றினை கொண்டு, பொதுவாக சொல்லி, மனிதன் பெற்று வந்துள்ள பலத்தை மட்டும் சொல்வதான ஒரு விருப்பை அநேகம் அடுத்தடுத்த பதிவில் ”சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்” என்ற தலைப்பில் சேர்க்க உள்ளேன். அதை படிப்பவர்கள் கூட என் ஒரு சிந்தனை என்று மட்டும் கருதி ‘எதையும் முடிவென்று எண்ணிடாது தனக்கான தீர்வுகளை தானே எடுத்துக் கொள்ளவேண்டும் என்பது; படிப்போரிடத்தில் எனதான வேண்டுகோள் நிறைகிறது!
ஒரு மனிதம் நிலைப்பதற்கான பிறரை பிறர் வஞ்சிக்காமல் எல்லோரும் இணைந்து வாழும் ஒரு சமரச நிலையை ஏற்படுத்துவது மட்டுமே நம் எழுத்தின் காற்றின் ஓசையின் நோக்கம்!
மனிதனை காண்கையில் மனிதனுக்கு மனிதன் என்று நம்ப அல்லது மனிதனாக ஏற்றுக் கொள்ள இடையே எந்த சாமியோ ஜாதியோ மதமோ குறுக்கே நின்று விடக் கூடாது, மனிதன் மனிதனாக மட்டுமே மனிதனால் ஏற்றுக் கொள்ளல் படவேண்டும் என்பதே எழுத்தினால் நான் கேட்கும் வரம் மஞ்சு. பார்ப்போம் நாம் சரியென எண்ணுவதை; தான் வந்த பாதையின் சுவடுகளை நமக்குக் கீழுள்ளோருக்காய் பதிவு செய்து வைத்து விடுவோம். அது எத்தனை சரி என்பதையும் அதற்கு மேல் அவர்களை எத்தனை மேல் கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் காலம் முடிவு செய்துக் கொள்ளும்!!
LikeLike
பிங்குபாக்: காற்றின் ஓசை (9) குடும்பத்தின் வாச மலர்கள்.. | வித்யாசாகரின் எழுத்து பயணம்