காற்றின் ஓசை (10) தோல்வியில் வெற்றியென்றொரு அனுபவ பாடம்..

இதற்கு முன் நடந்தது..

வாழ்வின் சவால்கள் திறமைசாலிகளால் எதிர்கொள்ளப் படுகின்றன, எல்லாம் வென்று தான் விடுவதில்லை. வெல்லாத இடத்திலிருந்து வெற்றியை நோக்கும் மனிதனுக்கு புரிகிறது ‘தான் வீழ்ந்த இடங்களும் தோற்றதற்கான காரணங்களும். தோல்வியை புறந்தள்ளி வெற்றிக் குதிரையேறி உலகம் முழுக்க சவாரி பிடிக்க அந்த தோல்வியின் அனுபவம் பின் பாடமாகிறது.

பாடங்கள் என்னவோ, ‘மாலனுக்கு எதிரே நின்று கள்ளம்கபடமற்று சிரிக்கும் ஒரு குழந்தையின் முகத்திலிருந்து கூட கிடைத்தாலும், ஒரு பெரிய வெற்றிக்கான சில தோல்விகளில் ஒன்றாகவே இச்சூழலும் அமைந்துப் போனது.

மாலன் எத்தனையோ போராடியும் மாலினியை காக்க முடிந்ததே தவிர தன்னை அத்தனை காத்துக்கொள்ள இயலவில்லை. அவர்கள் சரமாரியாக மாலனை தாக்கினார்கள். மாலனும் சற்றும் அசராமல்  போராடி அவர்களை எதிர்கொள்ளும்  தருவாயில் ஒருவன் கத்தியால் மாலனின் முதுகில் குத்தவர, அந்த ஓட்டுனர் இடையே புகுந்து ஒவ்வொருவரையாய் எவ்வளவோ தடுக்க முயல்கிறான், முடியாதபட்சத்தில்  யாரையேனும் உதவிக்கழைக்க எண்ணி தெருவின் வேறுமுனை நோக்கி  ஓடுகையில் , தெய்வாதீனமாக அந்த கூலிப் படையின் தலைவன் அந்நேரம் பார்த்து அங்கே வர, அந்த ஓட்டுனர் ஓடிச் சென்று அவனிடம்  நடந்த விசயத்தை சொல்லி, எப்படியோ சண்டை நிறுத்தப் படுகிறது. அவன் குரல் கேட்டதும் கத்தியை மடக்கி இடுப்பில் சொருகிக் கொண்டு, கூட்டம் கிளிப் பிள்ளை கூண்டிற்குள் அடைவதை போல, வண்டியிலேறி அடைந்தது.

மாலன் பெருத்த கோபம் கொண்டு ஓடி அவர்களை போகவிடாமல் மடக்கி எதிரே நின்றுக் கொண்டார். எதற்காக என்னை கொள்ள வந்தீர்கள், உங்கள் மதம் உங்களின் தலைக்கேறி விட்ட மதம், எத்தனையோ உயிர்களை குடிக்கும் ஒரு மதத்தின் வெறி ‘ஒரு மனிதனை விட பெரிதில்லையா? ம்ம்…. வாருங்கள் அடித்துக் கொன்று விடுங்கள் என்னை, என் ரத்தத்திலிருந்து இன்னும் ஆயிரம் பேர் பிறப்பார்.. ‘அவர்கள் சொல்லித் தருவார்கள் மதமென்றாலென்ன, மதம் என்பததெதற்கு, கடவுள் என்பது எதுவென்று’

மனிதம் அறுக்கத் துணியும் கூலிகளே ம்ம்… வாருங்கள் கொன்று விட்டு செல்லுங்கள் என்னை” மாலினி சென்று அவர் கைகளை பிடித்து கெஞ்சுகிறாள், போகட்டுமென்றில்லை, நீங்கள் மட்டும் கட்டளை இட்டிருப்பின், நானே அவர்களை வெட்டியிருப்பேன் ‘உங்கள் மேல் கைவைத்தபோது. நீங்களிருக்க நான் ஆடுவானேன் என்றிருந்தேன்.  ஆனால் இப்போது தான் உங்களை கண்டு கொண்டார்களே.. இனி எல்லாம் புரியும் விட்டுவிடுங்கள் என்கிறாள்.

மாலனுக்கு ஆறவில்லை, என்ன அப்படி நான் தவறு செய்துவிட்டேன் மாலினி, நல்லது தான் சொல்கிறேனென ஏன் இவர்களுக்கு புரியவில்லை. நான் இவர்கள் கடவுளை இல்லை என்று சொல்லவேயில்லையே, அதை கூட ஏன் அவரவர் விருப்பத்திற்கு ஒரு பட்சமாக எதிர்கொள்கிறீர்கள் என்று தானே கேட்கிறேன்” கத்தி பேசுகிறார் மாலன், அவர்கள் அவரை அடித்து விட்டதல்ல, அடித்ததன் ‘காரணம் வலிக்கிறது. அடிபட்டதல்ல, அடிபடவேண்டிய சூழலுக்கு ஆட்பட்ட நோக்கம் வெட்கிப் போக வைக்கிறது. அவர்களை நோக்கி மீண்டும்..

“உண்மையை தான் சொல்கிறேன், வாழ்வு எனக்கு துச்சமென்பதற்காக இல்லை, மரணம் எனக்கு பெரிதுமில்லை என்பதால் சொல்கிறேன், என் மரணம் இன்னொருவருக்கு இன்னொரு போதனையை தருமெனில் நான் இந்த நொடியில் கூட இறக்கத் தயார்.., காரணம், ஒரு ஊரை ஒரு தேசத்தினை கொல்லும், நாளைய மனிதர்களை ‘மெல்ல கடவுளில் நஞ்சு பூட்டி கொல்லப் போகும், உங்களின் மதவெறி என்னோடு போகுமெனில்; போகட்டும் எனை கொல்லுங்கள்” என்கிறார்.

இப்படி, நமக்குள்ளேயே நாம், பல காரணம் கொண்டு நம்மை பிரித்து; ஆண்டாண்டு காலமாக தன் குடும்பத்தை அவனும் அவன் குடும்பத்தை நாமும் கொன்று எரியும் வெறி என்னோடு முடியுமெனில், முடியட்டுயம் கொல்லுங்கள் என்கிறார்.

“ச்ச.., கடவுள் இப்படி இருப்பார், இவ்வழியில் போனால் கடவுளை அடையலாம், கடவுள் இவ்வாறானவராக இருக்கலாம் என்று ஞானத்தில் யூகித்து மனிதன் தன்னை சீர்படுத்தி இறையினுள் கலக்க தானே மதம் பக்தி வழிபாடென்றெல்லாம் படைத்தோம். மனிதனை மனிதன் இப்படி அறுத்துக் கொள்ளவா? மனிதனை மனிதனே வெட்டியும் குண்டிட்டும் சவங்களை குவிக்கவா? இல்லையே!!!!!!!!! பிறகெப்படி வந்ததிந்த வெறி???

சுயநலம்!!!!!!!!!!!!! சுயநலமே மனிதனுக்கு தன் மதத்தையும் தன் பிரிவையும் பெரிதாக்கி; மாற்றானை சிறிதாக்கி விட்டது.

மனிதம் மறந்து மனிதம் துறந்து ஜாதியும் மதமும் தலைவிரித்தாடும் இம்மண்ணில், மனிதனின் சுயநலத்திற்கென மனிதன் பிறரை அழிக்கும் கருவியாக மதத்தை பிரயோகிக்கும் இம்மண்ணில், நானும் மனிதனாகிப் போனது பெருங்குற்றம். ஆம் மிகப் பெரிய குற்றம், வாருங்கள், கொல்லுங்கள் எனை, தாமதமேன், எனை ஒருவனை கொன்று விட்டால் உங்களின் மூடத்தின் கண் மூடியே கிடக்கும் என்றால் கொள்ளுங்கள். ஆனால்,

ஒருகாலும் அது நடக்காது, மனிதன் சிந்திக்க துவங்கிவிட்டான், அதிலும் தமிழர் நிறையவே சிந்திக்கத் துவங்கி விட்டார்.. வா.., விட்டுசென்று எனக்கு உயிர்பிச்சையா இடுகிறாய்..? இனி நானென் தமிழருக்கு அத்தனை ஒன்றும் அவசியமில்லை கூலிகளே.. வாருங்கள்.. கொல்லுங்கள் எனை;

மக்கள் திருந்தாத இவ்உலகில் இறந்தான் மாலன் என்று போகட்டும்.. ம்ம்..” என்றவர் கத்தியடங்க, அவரின் ஆக்ரோசம் அவர் பக்கமிருக்கும் நியாயத்தையும், அவருடைய கோபத்தின் உள்நோக்கத்தையும், அவரை அடித்துவிட்டு வண்டியிலேரிய கூலியாட்களுக்கு புரியவைத்தது. அந்த கூளியாட்களின் தலைவன் அவரை பார்த்து –

“மன்னியுங்கள், எங்களிடம் இப்படி செய் என்று அனுப்பினார்கள் செய்தோம்; உங்களின் ஓட்டுனர் மிருத்யா சொல்லாது இருந்திருப்பனாயின் கொன்றும் கூட இருப்போம், அது தவறு தான் என்றாலும், உங்களின் கோபத்தை எய்தவர் மீது காட்டுங்கள். நீங்கள் சொல்லுமளவு யோசிக்காமைக்கு நாங்கள் வருந்தசெய்வதோடு மன்னிக்கவும் கோருகிறோம்” என்று பணிவு கொண்டான்.

மாலன் அவர்களிடம் நெருங்க பேசுகிறார். நிறைய பேசி நிறைய வலியுறுத்தி, அவர்களை சாட்சியாக வைத்தே நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய போவதாக அந்த அமைப்பிற்கு கடிதமும் அனுப்புகிறார். “மனிதமும் மென்மையும்” அமைப்பு இப்பிரச்னையை பெரிய அளவில் கொண்டுபோய், இவ்வாறு செய்ய கட்டளை இட்டவரை சாட்சிகள் வைத்து கைதுசெய்கிறது. வேறு ஒரு தேச விருந்தினரை அதும் வாழ்வியல் பேச வந்த சிறப்பு விருந்தினரை தாக்கியது குற்றம் என்று அந்த நபர் சார்ந்த அமைப்புகள் மன்னிப்பு கேட்கின்றன.

மாலனின் எண்ணங்கள் முழுதும் இக்கால சூழலில் கணிக்க தகாதவை, அவரின் நோக்கம் அவர்களை அசிங்கப் படுத்துவதோ தண்டிப்பதோ அல்ல. அதை அவரே வெளிக்காட்டும் வண்ணம்;  அவரே  சென்று தன் புகாரினை திரும்பப் பெற்று அவரை மன்னித்து விடுமாறும், மன்னிப்பதே மானுட தர்மமென்றும் வலியுறுத்த. அவர்கள் விடுவிக்கப் படுகின்றனர்.

மாலன் முழு நிறைவு கொள்கிறார். அவரின், உண்மையான சமுக அக்கறை, சுயநலமில்லா ‘மனிதர் மீதான பற்று அம்மனிதர்களை வியக்கவும் மரியாதை செய்யவும் வைக்கிறது. அவரின் எந்த செயலும், ஒரு மனித ரீதியான ஆய்வு முறைக்கானது மட்டுமே அன்றி யாரையும் துன்புறுத்த இல்லையென்று புரியவர அந்த அமைப்பினர் தன்மெச்சுதலையும் மன்னிப்பினையும் மாலனை நோக்கி முன்வைக்க அங்கே ஒரு சமரசம் முழு புரிதலோடு நிலவுகிறது.

“அப்படி என்ன தான் சாமி பேசிட்ட அந்த மேடையில?” யாரோ வேறொருவர் கேட்கிறார் மாலனை.

“சிலது பேசப் பட்டது; அது பேச்சு வாக்கில் முரணனானது. நான் சொன்ன கருத்தெல்லாம் கடவுள் பற்றிய மனிதர் பற்றிய ஒரு சமமான புரிதலை ஏற்படுத்தும் கருத்தன்றி வேறில்லையப்பா..”

“அப்படியா கடவுள் பத்தி என்ன பேசுனீங்க..”

“நாளைக்கு வா சொல்றேன்..” சிரித்துக் கொண்டார் மாலன்

“என்ன சாமி..?” இதுக்கு போயி.. அவரும் சிரித்துக் கொண்டே இழுத்தார்..

“மன்னிச்சுக்கோப்பா.. இன்று எனக்கு நிறைய செய்ய வேண்டிய வேலைகள் இருக்கிறது. என் மனைவியோடு வெளியில் வர சம்மதித்துள்ளேன். எனவே, நாளை உனக்காக நான்,  நான் தங்கியிருக்கும் விடுதியின் வாசலிலேயே காத்திருக்கிறேன், வருகிறாயா…?”

அவர் வருகிறேன் என்கிறார். மாலனும் மாலினியும் அவருக்கும் அங்கிருந்த அனைவருக்கும் கைகூப்பி வணக்கம் சொல்லி விட்டு விடை கொள்கிறார்கள்.

“ஒரு வழியா சமரசம் செய்துட்டீங்க..?” மாலினி கேட்டாள்..

“ஆம்; சமரசம்!!!!!!!!! .. வாழ்வின் ஒவ்வொரு நகர்விலும் செய்துக் கொள்ள வேண்டியதான ஒரு செயலாகித் தான் போனது  மாலினி..”

“சரி சரி.. வீட்டுக்கு கொஞ்சம் அழைத்து பாருங்களேன்.. பிளளைகளிடம் சற்று பேசுவோம்..”

“அவர்களிடம் இதலாம் சொல்லாதே..”

“என்னால் பொய் சொல்ல முடியாது.. என்னை எப்பொழுதோ கேட்டார்கள் நானும் முன்னமே எல்லாம் இப்படி யிப்படி.. ஆயி இப்படி யிப்படி.. இருக்கிறதென சொல்லி விட்டேன்..”

“வருத்தப் படப போகிறாங்க..மா..”

“படாமல்????????? மாரி அப்படி துடித்தான்.. பிறைசுடர்  அழுதேவிட்டாள் எப்படியோ சொல்லி சமாதானம் செய்தேன்.  சரி, ஆதலாம் போகட்டும் நம் பிள்ளைகள் பாவமில்லையா  மாலன்?”

“ஆம் இரண்டு பேரையுமே பிரிந்துள்ளதால் அவதி படுவார்கள்..”

“அப்போ ஒன்னு செய்வோம், நீங்களும் என்னோடு வந்து விடுங்களேன்.. இரண்டு பேருமா சேர்ந்து ஊருக்கு போவோம்..”

“அதுசரி..,  என்ன ஒரு திடீர் ஆசை..!!!!! ஒன்றுசெய் நீயும் இன்னும் ஒரு மூன்று நாளிரு, நாளைய பயணத்தை ரத்துசெய்துவிட்டு  உன் விருப்பப் படி ஒன்றாகவே  தாயகம் போவோம்,  பிறகு அங்கிருந்து நான் வேறு தேசம் போயிக் கொள்கிறேன்”

“அடுத்து எங்க போறீங்க..முடிவு செய்தாகிவிட்டதா ?”

“ஓ.., சிங்கை.. சிங்கப்பூர்..,  என் தமிழர்.. ஓரளவு நிம்மதியாய் வாழுமிடம்”

“அப்படியா..?!!!”

“அப்படி தான் கேள்வியுற்றேன்.. சென்று பார்த்தால் தானே தெரியும்.. அங்கென்ன நடக்கிறதோ..”

அவர்கள் பேசிக் கொண்டே நடக்கிறார்கள். வாகனமும் வேண்டாமென்று மறுத்துவிட்டார் மாலன். அவர்கள் அருகிலிருக்கும் கடைத்தெரு செல்வதாக சொல்லிவிட்டு காலாற நடக்கிறார்கள்.. கைகோர்த்து சிரித்து பேசுகிறார்கள். மாலன் தன் அலைபேசியில் ஊருக்கு அழைப்பு போட்டு மாலினியிடம் தருகிறார்.. பிள்ளைகளின் பாசத்தில் தாய் தந்தையின் பாசத்தில்.. கனவன் மனிவியின் அன்பில் அந்த தெருவெல்லாம் மனிதப் பூக்களாய் பூத்து, அதன் வாசம் வீசும் நிமித்தமாய், தென்றலின் சில்லென்ற காற்றெழுந்து’ மனிதனுக்கான ஒரு மெல்லிய ஓசையை உலகின் காதுகளில் ஓதத் துவங்குகிறது…

————————————————————————————————

மாலன் முழுப் பொழுதையும் மாலினியோடு கழித்துவிட்டு மறுநாள் காலை அந்த கடவுள் பற்றி கேட்ட நபருக்காய் காத்திருக்கிறார்.

சாமியும் ஜாதியும்; தியானமும் மதமுமென்ற” அன்று பேசிய அதே  தலைப்பினை தன் கையிலிருந்த காகிதத்தில் குறித்துக் கொண்டார்.

சற்று தூரத்தில் அந்த நபர் ஒரு நான்கைந்து பேரோடு வந்து கொண்டிருப்பதை அவர் அத்தனை கவனித்திடவில்லை..

————————————————————————————————

காற்றின் ஓசை – இன்னுமொரு பதிவிற்கு மட்டும் – கடவுளின் ஓசையாக – தொடரும்..

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காற்றின் ஓசை - நாவல் and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to காற்றின் ஓசை (10) தோல்வியில் வெற்றியென்றொரு அனுபவ பாடம்..

 1. C. துரை ராஜா சொல்கிறார்:

  //மனிதம் மறந்து மனிதம் துறந்து ஜாதியும் மதமும் தலைவிரித்தாடும் இம்மண்ணில், மனிதனின் சுயநலத்திற்கென மனிதன் பிறரை அழிக்கும் கருவியாக மதத்தை பிரயோகிக்கும் இம்மண்ணில், நானும் மனிதனாகிப் போனது பெருங்குற்றம். ஆம் மிகப் பெரிய குற்றம், வாருங்கள், கொல…்லுங்கள் எனை, தாமதமேன், எனை ஒருவனை கொன்று விட்டால் உங்களின் மூடத்தின் கண் மூடியே கிடக்கும் என்றால் கொல்லுங்கள். ஆனால்,//

  //“மன்னியுங்கள், எங்களிடம் இப்படி செய் என்று அனுப்பினார்கள் செய்தோம்; உங்களின் ஓட்டுனர் மிருத்யா சொல்லாது இருந்திருப்பனாயின் கொன்றும் கூட இருப்போம், அது தவறு தான் என்றாலும், உங்களின் கோபத்தை எய்தவர் மீது காட்டுங்கள். நீங்கள் சொல்லுமளவு யோசிக்காமைக்கு நாங்கள் வருந்தசெய்வதோடு மன்னிக்கவும் கோருகிறோம்” என்று பணிவு கொண்டான்//

  மிகவும் பிடித்த வரிகள்.. ஒருவன் இவ்வளவு கஷ்டம துன்பம் அடைந்து தான் மக்களுக்கு தன்னை புரிய வைக்க வேண்டியிருக்கிறது.. நன்றி!!!!!

  C. துரை ராஜா

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   வாழ்வின் நடைப்பாதையில் பூம்பாதம் பதிக்கும்
   இளைஞர்களின் நடக்கவொனா முள் தரையில்
   முட்களை அகற்றும் முயற்சியிது காற்றின் ஓசை துரை ராஜா..

   இதற்கான உங்களின் தொடர் ஆதரவிற்கும் முகநூல் தோழமைகளுக்கும் மிக்க நன்றியாவேன்..

   Like

 2. Pingback: காற்றின் ஓசை (11) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s