காற்றின் ஓசை (11) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்!

இதற்கு முன் நடந்தது..

டவுளும் மதமும் எவ்விதம் சரியோ; மனிதனும் அவன் மனமும் எவ்விதம் சரியோ; வளர்ச்சியும் மாற்றமும் எவ்விதம் சரியோ; வாழ்தலும் வரலாறும் எவ்விதம் சரியோ; எது சரி எது தவறாயினும் எனக்கு என் சோறும் என் தூக்கமும் என் வேலையும் என் வெற்றிகளுமே பெரிதாக தெரிகையில் என் பிறந்ததின் நோக்கம் வெறும் இறப்பை அடைவது மட்டுமேவா???

எதை பற்றியுமே விடைகாணாத வாழ்க்கையை வாழும் சம மனிதர்களை செதுக்க எடுத்த உளியில் என்னை நான் செதுக்கியுள்ள தூரத்தை எத்தனை பேருக்கு காட்டவோ? எல்லோருக்கும் எனை காட்டுவதன் மூலம் என் கீழுள்ள ஒருவரையேனும் ‘எனைவிட சிறப்பாக சிந்திக்கவும் வாழ்விக்கவும் மாட்டேனா??? அப்படி ஒருவரை என்னால் செய்யமுடியுமெனில் அது என் மகன் மகளாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை; யாரேனும் ஒரு வாழ்வினாதாரம் புரியாத ஒரு சாமானியராக இருக்கட்டும். அந்த சாமானியருக்கான பயணமாக ‘என் உயிர்ப்பு’ என் எழுதுகோலிலும் என் பேச்சிலும் என் வாழ்வின் ஒவ்வொரு நகர்தலிலும் வலித்தேனும் சொட்டட்டும்…” என்றெல்லாம் படுத்துக் கொண்டு மேல்கூரை பார்த்து யோசித்துக் கொண்டிருந்த மாலன் கடிகாரத்தின் க்ளிங் க்ளிங் சப்தம் கேட்டு நிமிர்ந்து பார்க்கிறார்.. ஜன்னலில் மூடிய கண்ணாடி கதவை துளைத்து பீரிட்ட சூரிய வெளிச்சம் அவர் கண்களை கூச செய்தது. எழுந்து முகம் துடைத்துக் கொண்டு மாலினியிடம் கூறிவிட்டு தலையை ஒதுக்கிக் கொண்டு சட்டை உடுத்தி வெளியே செல்கிறார்.

மாலினி அவரை பார்த்து ‘இப்பொழுது தானே படுத்தீர்கள் சற்று ஓய்வு கொள்வது தானே’ என்று கேட்க நேற்று அவர்களிடம் இந்நேரம் வெளியே காத்திருப்பதாக சொன்னேனே என்று நினைவு கூர்ந்து விட்டு, அவ்விடுதியின் வாசலில் வந்து அமர்ந்துக் கொண்டார்.

ஏதேனும் எழுதலாமென்று எண்ணி சட்டை பையில் கைவைத்து காகிதம் எடுக்கையில், அதில் நேற்றெழுதிய ‘சாமியும் சாதியும்; தியானமும் மதமும்’ என்ற தலைப்பு கண்ணில் பட, அதன் கீழே என்னவோ எழுதுகிறார்.

எழுதிக் கொண்டிருக்கையில் என்ன நினைத்தாரோ சட்டென நிமிர்ந்து தெருவை பார்க்கையில் அவர்கள் நான்கைந்து பேராக மாலனை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.

மாலன் அவர்களை அன்போடு வரவேற்று, வீட்டிற்குள்ளழைத்து பலகாரம் பரிமாறி சிரித்து கதைகள் பேசி அன்புக் கடலில் மூழ்கடிக்கிறார். வந்தவர்கள் நால்வரும் மிக எளிமையாகவும் ஏழ்மை தொற்றத்தையுமே கொண்டிருந்தனர்.

அவர்கள் பேசுகையில், ஏதோ ஒரு ஜமீன் வீட்டில் தோட்டவேலை செய்வதாகவும், நேற்று பேசியவரை கைகாட்டி இவர் தான் எங்களுக்கு சூப்பர்வைசர் என்றும் அவ்வப்பொழுது இவர் தான் அவர்களை ஆங்காங்கு நடக்கும் வீட்டு பூஜைகளுக்கும் கோவில்களுக்கும் கொண்டு செல்வாரென்றும், கடவுள் மேல் ஏதோ ஒரு பக்தி மிகையாக எழுந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

அதற்கிடையில் அந்த சூப்பர்வைசர் தன் பெயரை ‘திருமேனியன்’ என்று அறிமுகப் படுத்திக் கொண்டு மாலனின் இந்திய தொடர்பு விலாசத்தை கேட்டு ஒரு காகிதத்தில் எழுதித் தரச்சொல்லி கேட்கிறார். மாலன் அந்த தலைப்பெழுதிய காகிதம் எடுத்து அதன் மறுபக்கத்தில் எழுதி தர, திருமேனியன் அந்த காகிதத்தை திருப்பி அதன் மறுபக்கம் பார்த்து இதென்ன சாமி “சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்” என்கிறார்.

“சாமியார்ங்க இப்படி தான் எதனா எழதி வைத்திருப்பாங்கப்பா.. போவியா” இன்னொருவர் சொல்லி என்ன ஐயா சரி தானே என்கிறார்.

அப்படியெல்லாம் நீங்களே ஏன் கற்பனை செய்துக் கொள்கிறீர்கள், ஏதேனும் காரணம் இருக்கும் “என்ன சாமி அப்படி தானே என்கிறார் திருமேனியன்.மாலனை பார்த்து.

“அதொன்னுமில்லீங்க, முன்னிரண்டு கண்டிப்பா வேணும் பின்னிரண்டு அத்தனை ஒன்றும் வேணாம், மனுசனை நோவாதளவு இருந்தா போதும் அவ்வளவு தான்” என்கிறார்.

“முன்னிரண்டுன்னா சாமியும் ஜாதியுமா?”

“சாமியும் தியானமும்”

“தியானமா!!!!!!! மூக்கப் புடிச்சிக்குனு உக்காருவாங்களே அதா?”

“அதுமாதிரி ஆனா இது வேற, இது மனசை அமைதி படுத்தறது, அறிவை ஒரே செயல் நோக்கி சிந்திக்க வைக்கிறது, எதை செய்ய எண்ணுகிறோமோ அதை நோக்கியே உறுதிகொள்ள வைக்கும் ஒரு பயிற்சி. விசேசம் என்னன்னா ‘இது செய்தா உனக்கு என்ன சக்தி வேணுமோ அந்த சக்தி கிடைக்கும்”

“அப்படியாஆஆஆ!!!!!!!! எனக்கு தியானம் பற்றி விளக்குவீங்களா?”

“தியானம் பற்றித் தானே, அதோ இருக்குல்ல “காற்றின் ஓசையி”ன்னு ஒரு புத்தகத்தகம், அது நான் எழுதியது தான் அதை எடுத்து அதோட முதல் அத்யாயம் படித்துப் பாருங்க, தியானம்னா என்னன்னு விளங்கும்”

அவர் ஓடிப போய் அந்த புத்தகம் எடுத்துப் புரட்டினார். சில பக்கங்களை நிதானமாய் படித்தார். படித்த உடனே அந்த பெரியவரிடம் வந்து

“ஏன் சாமி, அதை படித்தேனே.., அதிலொன்னும் அவ்வளவு விளக்கமாக இல்லையே”

“ஆம்; சரிதான், அதில் தியானமெனில் இதென்று சற்று அடையாளம் காட்டப் பட்டிருக்கும், மற்றபடி இன்னும் விளக்கமாக வேண்டுமெனில் நிறைய படிக்க வேண்டும்., உணர்தல் வேண்டும்., நகரும் பொழுதுகளை அசையும் பொருள்களை எல்லாம் உற்று நோக்க வேண்டும்..”

“இருங்க இருங்க இதலாம் தியானத்திற்கு தேவையா?”

“வேறு? தியானம் என்பதென்ன; அமைதியில் பலம் கொள்ள செய்வது, இருட்டிற்குள்ளிருக்கும் வெளிச்சத்தை காண வைப்பது. தியானம் என்பது எதற்கு; எத்தருணத்திலும் மாறா நடு நிலையினை ஆடைவதற்கு, யாரையும் பிற எந்த உயிரையும் நிந்திக்க செயாத எல்லாமுமாய் கலந்து போனதன் புரிதலை ஏற்படுத்திக் கொள்வதற்கு. “

“நீங்கள் சொல்றது கண்ண மூடி உட்கார்ந்து ஓம் ஓம்னு கத்துவாங்களே அது போல தவமா???”

“இல்லை ஐயா, இது ஒரு அமைதியின் ரகசியம் உணரும் கலை. கண்மூடி உலகம் பார்க்கும் விந்தை. கடவுளின் உயிர்ப்பை உணர்ந்து வெறிகளை வேரறுக்கும் உண்மை நிலை. அண்ட சராச்சரத்தின் அசைவுகளுக்கான உண்மை நிலையை அறியத் தரும் பாதை, கடவுள் யாதுமானவன் அல்லது ஏதுமற்றவன் என்ற உண்மையினை உணரும் வழி, ஜாதி மதமெல்லாம் கடந்து மனுசனை வாசனையா பார்க்கவைக்குற வித்தை “

“கடவுள் ஏதுமற்றவன்னு தெரியறதுக்கா கடவுள் பேர்சொல்லி உட்கார சொல்ற?”

“ஆம்; முள்ளை முள்ளால் எடுப்பதாக சொல்வார்களில்லையா? அப்படி”

“அதுசரி……..”

“கண்ணாடியை கண்ணாடியால் அறுப்பதில்லையா? அப்படி”

“அது சரி.. அது சரி..”

“இதை கூட நானாக சொல்லவில்லை, நமக்கு கடவுள் பற்றி அப்படி தான் சொல்லித் தரப் பட்டிருக்கு. நாம் வணங்கும் முறைகளின் எல்லை இதுவென்று தெளிந்த அறிவோடு சிந்திக்க சிந்திக்க அல்லது மீண்டும் மீண்டும் வணங்குகையில் வணங்குதலுக்கான சாரம் என்னவென்று தானே புரிந்து விடும்”

“ஓஹோ”

“புரிந்துக் கொண்டவர் ஏனோ அதிகம் வெளியில் சொல்வதில்லை, சொன்னவர் புரியும் படி சொல்லவில்லை, ஏதோ பயம் ஏதோ ஒரு சுயநலம் பல மகான்களையே ஆண்டு விட்டது. ஆனால், இப்போது தெளிவாக புரிந்துக் கொள்ளும், சிந்திக்கும் அறிவை மனிதர் பெற்றுவிட்டனர். எல்லாவற்றையும் தீர ஆலோசித்து தீர்வினை ஏற்கும் மனநிலைக்கு வந்து விட்டனர், எனவே இப்போது உணர்ந்ததை உண்மையை நேரிடையாக சொல்லலாம்”

“இரு.. இரு சாமி.., கொழப்பாத. ஒழுங்கா சொல்லு சாமி இருக்கா? இல்லையா?”

“…………….”

“இப்படி மூச்சை இழுத்து விட்டியினா???”

“ரொம்ப………… பெரிய கேள்வி. சட்டுன்னு சொல்ல முடியல. சொல்லாததுக்கு அர்த்தம் வேறெதுவுமில்ல, சொன்னா என்னை திட்டுவ, சொன்னா சிக்கல் இருக்கு, ஏன்னா சிக்கல் இல்லாம புரிந்துக் கொள்கிற பக்குவம் நிறைய பேருக்கு வந்திருக்கே தவிர, இன்னும் எல்லோருக்கும் வரல”

“எல்லோரையும் விடுங்க நீங்க என்ன சொல்ல வரீங்க அதை எங்களுக்கு சொல்லுங்க..”

“என்னை கேட்டால், இருக்குன்னு தான் சொல்வேன். நீயும் இருக்குன்னே நினைத்துக் கொள்; உனக்கும் இருக்கும்”

“அப்போ நீங்க தியானம்லாம் பன்லையா? தியானம் பண்னிணா கடவுள் இல்லைன்னு புரியும்னு சொன்னீங்களே..?”

“விளையாட்டா கேட்குறீயா திருமேனியா…?”

“இல்ல இல்ல சாமி.. உங்களிடம் போய் விளயாடுவனா.., நீங்க தானே முதல்ல சொல்லும் போது தியானம் பண்னிணா கடவுள் இல்லைன்னு புரியும்னு சொன்னீங்க….?

“பெரிய கேள்வி காரனய்யா நீ(யி). ஆனா சரியாகத் தான் கேட்குற. நான் சொல்றது எப்படின்னா நம்பிக்கை ஏற்படணும், ஓரிடத்தில் நிக்கணும், ஆனா கடவுள் பெயர் சொல்லி மனிதனை வேறுபடுத்தி பார்க்கவோ கடவுளுக்கென மனிதனை கொல்லவோ கூடாது”

“ஆமாமாம்..”

“கடவுளை தேடணும்னு சில வழிபாடு முறைகளும் புராண கதைகளும் சாமி படங்களும் பல உருவமும் என ஆயிரமாயிரம் வேறுபட்ட சாமிகள் உலகம் முழுக்க வணங்கப்படுதே.. அப்படி அது மாதிரியெல்லாம் ‘சாமி ஆயிரம் மொழி பேசி திரிய இதென்ன அத்தனை சாதாரண செயலா அப்பா? கடவுள்!!!”

“இல்ல தான், அதனால தான் அங்கங்க அடிச்சி மாள்றானுங்களே”

“இது புரிவததொன்றும் அத்தனை பெரிய விசயமில்லை, கொஞ்சம் உலகம் சுத்தி பல மக்களையும் வழிபாடுகளையும் பார்த்தோம்னா சட்டுன்னு புரிந்து போயிடும். ‘ஓஹோ இது ஒரு வழிமுறை அவ்வளவு தான்னு.அந்த வழிமுறைப்படி வரையில தெரியவரும் “ஓ இது சாமியில்லை, அதாவது இதுமட்டும் சாம்யில்லைன்னு புரியவரும். எல்லாம் அண்டசராச்சரமும் நிறைந்தவன் அவனென்று புரியவரும். பிறகு எங்கும் நிறைந்த இறைசக்தியை எதுவாக வணங்கினாலென்ன ? எதுவாக வணங்கினாலும் அந்த வணக்கத்தின் அகப்பொருளாய் அந்த இறைச் சக்தி இருப்பதை அரிய நம்மைநாம் பக்குவப்படுத்திக் கொள்ளவே தியானம் செய் என்றேன். தியானம் மட்டுமே இல்லாத கடவுளின் மீதிருக்கும் வெறியை அறுக்கவும் இருக்கும் இறைசக்தியின் மீது நம்பிக்கையை வலுக்கவும் வைக்கும்.

சைனாவுல, ஜப்பான்ல, இந்தோனோசியாவுல, தாய்லாந்துல, ஐரோப்பாவுல, ஆப்ரிக்காவுல, எகிப்துல, இந்தியாவுல, அரபு தேசங்களிலென்று உலகத்துல மொத்தம் எத்தனை எத்தனை கடவுள் மற்றும் கடவுளின் வழிபாடுகளிருக்கு தெரியுமா? எல்லோருமே தன் வழிபாடுகளை, தன் மதங்களை, தான் வணங்கும் கடவுளையே சரியென்று எண்ணுகிறார்கள். வாதாடுகிறார்கள். இதில் ஆச்சர்யம் என்னவெனில், அவரவர் தெய்வம் அவரவர்கான அருளையும் தருகிறது பார்; அது தான் நம்பிக்கியின் வெற்றி”

“அப்போ எல்லாம் சாமியும் இருக்குன்னு தானே அர்த்தம் சாமி?”

“அத்தனை சாமியும் இருந்தா சண்டை நமக்குள் அல்ல இந்நேரம் சாமிகளுக்குள் வந்திருக்கும். அது அப்படியல்ல அப்பா ‘உனக்குள்ள இருக்க கண்ணியம், ஒழுக்கம், நேர்மை, உண்மை, மனதின் அடி ஆழ அன்புதனில் எதை கண்மூடிக் கேட்டாலும், ‘அதை கொடுக்கும் திறன்’ நம் இயற்கைக்கு; இயற்கை சக்திக்கு உண்டு”

“ஓ அதுக்காகத்தான் நாம இயற்கையை வணங்குறோமா? சூரியனுக்கு சாமி கும்பிட்ற சமாச்சாரம் இது தானா?”

“ஆம்; இயற்கை தான் மாபெரும் சக்தி. அந்த இயற்கையின் சக்தி தான் நம்மையெல்லாம் ஆளும் சக்தி, அந்த இயற்கையின் சக்தி தான் நம் எல்லோருக்கும் மேலான சக்தி, அந்த இயற்கையின் சக்திக்கு பூ வைத்து, பொட்டு வைத்து, மாலை போட்டு கூட வாளும் வேலும் கையில் கொடுத்து ஆத்தான்னு கூப்பிட்டாலும் வரும் ஐயான்னு கேட்டாலும் தரும்.

நீ ஒரு மண்ணை புடிச்சு வெச்சு கும்பிட்டு பாரு, அது கூட பலன் தரும். நான் கும்பிட்டு பார்த்திருக்கேன். நம்ப பெரியவங்க முதலில் அப்படி கும்பிட்டு பார்த்தவங்க தான். அப்படி கும்பிட்டவங்க தான் நாகரீகம் வளர்ந்ததும் வண்ணப்பூச்சு தடவி, சிலை செய்து, கோவில் கட்டி, காவியம் புனைந்து, பக்தி வழியாகவும் யோகா நிலையிலும் கடவுளை வணங்கி, அதோடு நிற்காமல் மிலிட்டரி பிள்ளையார்ல இருந்து கிரிக்கெட் பிள்ளையார் வரையும் உருவாக்கிட்டாங்க”

“அப்போ அதலாம் பொய்யா?”

“பொய்யீன்னு இல்ல. உணர்தந்ததை உணர்ந்த மாதிரி சொல்லி இருக்கலாம். தன் சுய தினிப்புகளால் சொல்லவந்தவை சற்று மாறிதான் விட்டது. ஆயினும், அவர்கள் எது செய்கிறார்களோ செய்தார்களோ ‘அது அவர்களின் எண்ணத்திற்கு அறிவிற்கு எட்டிய உண்மையான நம்பிக்கை. அது ஒரு உருவேற்று முறை, அது வேறு”

“அப்போ அதுவும் சரின்ற இதுவும் சரின்றியா சாமி?”

“ஆமா, ஒரு கோணத்துல, அவுங்க பக்கமும் சரி”

“அதெப்படி நியாயம் ஒண்ணுதானே?”

“உன்னால ஒரு ஆறடி தாண்ட முடியுமா?”

“ஏன் முடியாது”

“முடியுமா????”

“முடியும்”

“எட்டடி?”

“கொஞ்சம் சிரமப் பட்டா தாண்டலாம்”

“சரி, பத்தடி?”

“சிரமம் தான்…”

“அப்போ இருபதடி?”

“அட போ சாமி நடக்கறதை பேசுவியா, பத்தடி இருபதடின்றியே, அதுக்கும் சாமிக்கும் என்ன சம்மந்தம்?”

“சொல்றேன். பத்தடி நமக்கெல்லாம் கொஞ்சம் சிரமம்னா, தூரம் தாண்டும் போட்டியில ஒரு பெண்ணால இருபத்தியிரண்டு அடிக்கு மேல தாண்டி சாதிக்க முடியுதே எப்படி?”

“அப்படி போடு சக்கைன்னானாம், விஷயம் இல்லாம கேட்க மாட்டியே!!!?”

“காரியமின்றி எதுவுமே நடப்பதில்லை அப்பா. சரி அது போகட்டும், அப்படி ஒரு பெண்ணால் மட்டும் சாதிக்க முடிவதன் காரணம் என்ன? திறமைன்னு வைத்துக் கொள்வோம், ஆனால் திறமை மட்டுமே போதாதில்லையா……? “

“வேறென்ன வேணும்?”

“எனக்கு திறமை இருக்கு, எல்லாம் வரட்டும்னு இருந்தா வருமா?”

“வராதுதான்..”

“முயற்சி வேணும். வென்று காட்ட எண்ணம் வேண்டும். அந்த எண்ணம் மனதெல்லாம் ஊற சங்கல்பம் வேண்டும். தான்டனும், வெல்லனும், சாதிக்கனும்னு இரவும் பகலும் செய்த சங்கல்பம் அந்த பெண்ணிற்கு நம்மை மீறிய ஒரு சக்தியை கொடுத்துள்ளது.

“என்ன சங்கல்பம்னு கேட்பியா…ஒரு “

“ஆமா சாமி அதென்ன சங்கல்பம்…?”

“ஒருமுகப் படுத்தும் பயிற்சி. ஒன்றையே நினைத்து, ஒன்றிலேயே சிந்தித்து, ஒன்றினை பற்றியே எண்ணம் வைத்து, தொடர்ந்து அதையே எண்ணி எண்ணி போராடி, வெற்றியை பெறுவதற்கான எண்ணத்தை தனக்குள்ளேயே துழாவி துழாவி உறுதியாக பிடித்துக் கொள்ளும் ஒரு பயிற்சி. உருவேத்தி வலுவேத்தி தனையே தன் மூலம் மாற்றிக் கொள்ளும் திறனை பெரும் வித்தை”

“அவ்வளோ முழுசா புரியலையே சாமி”

“அதாவது உடல் கூறு படி, ஆழ்மனசு மேல்மனசுன்னு புத்தியில இரண்டிருக்கு. அதுல மேல் மனசுல நினைத்து நினைத்து, பேசி பேசி, பதிய பதிய அது ஆழ்மனசுல பதியும். ஆழ்மனசுல பதிந்ததையெல்லாம் வேதியியல் மாற்றங்களால் நிறைவேற்றிக் கொள்ளும் திறத்தை, பலத்தை, தேவையை ‘உடல்’ தன்னியல்பாகவே நாளடைவில் ஏற்படுத்திக் கொள்ளும்”

“…………….”

“அதன் வெற்றியினை கண்டு கொண்டதன் பின், அது போன்ற சங்கல்ப முறைகளை மையப் படுத்தி தான் தவமும், ஜபமும், வழிபாடுகளும் நிறுவப் பட்டிருக்கலாம் என்பது ஆய்வு. அதாவது சங்கல்பம் செய்து செய்து உரு ஏற்றும் முறை என்று வைத்துக் கொள். மெல்ல மெல்ல எண்ண அலைகளால் சக்தி கூட்டிக் கொள்ளும் ஒரு முறை. இப்போ புரியுதா?”

“அட போ சாமி, அது எப்படி சங்கல்பம் பண்ணினா உடல்ல தானே வேதியியல் மாற்றத்தால பலம் வரும், உடலுக்கு தானே திறன் கிடைக்கும், உடல் தானே தேவைக்கு தகுந்தாப்புல மாறும்னீங்க, அப்புறம் தனியா நட்டு வைத்த கல்லுல எப்படி சக்தி வரும்? சிலைல.. சுவத்துல எப்படி சாமி, சாமி வரும்???”

“அங்க தான் தெளிவு வேணும் அப்பா. நிறைய தெளிவு அங்கு தான் வேணும். நமக்கும் அண்ட பெருவெளிக்கும், அந்த கடவுள்ன்ற எல்லாம் மீறிய சக்திக்கும் உள்ள நெருக்கம் அது தான். உரு ஏத்தினா சங்கல்பம் செய்தா ஒரு சக்தி வருதே எங்கிருந்து வருது? இயற்கை என்கிறோமே, இயற்கையின் காரணமென்ன? அது பிறந்த இடம், மொத்தமும் உருவான சூழ்ச்சுமம் யாது? அது தான் நம்மை நம் சக்திகளை தாண்டிய சக்தி, அதைத் தான் கடவுள் என்றிருக்கலாம் இல்லையா?”

“ஆமாவா இல்லையா நீங்க தான் சொல்லணும், நீங்க தானே ஆழ்மனசு மேல்மனசுன்னெல்லாம் சொன்னீங்க”

“ஆம்.. இல்லை.. புரிய தான் மிக்க நாளாகும் போல் அப்பா. ஆனா மற்றொரு காரணம் ரொம்ப எளிதா புரியும் என்னன்னா ‘நமக்குள்ளிருந்து வர சக்தியை தான் நாம் கல்லிலிருந்தும் அதாவது சிலையிலிருந்தும் கடவுளிருந்தும் கிடைப்பதாக எண்ணிக் கொள்கிறோம்.

“அதானே பார்த்தேன், எங்க ஆழ்மனசால கல்லுக்கும் சக்தி போச்சின்னு சொல்லப் போறீங்களோன்னு நினச்சேன்”

“நம் என்ன ஓட்டத்தால் நம் பலத்தை நம்மால் பிறர் மேல் பாய்ச்சவும் முடியும். கண் மூடி அமர்ந்து உன்னை உன் வருகையை அறிந்துக் கொள்ள முடியும். உலகின் எங்கோ ஒரு மூலையிலிருந்து தொலைபேசியில் பேசி வேறு எங்கோ ஒரு மூலைக்கு கேட்பது போல் ஒரு அலையின் வேகத்தை நமக்குள்ளும் நம்மால் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

அதன் அடிப்படை சார்ந்தது தான் தவம், தியானம், சக்தி எல்லாம். ஆனால் அது உயிர்களுக்குள் மட்டுமே நிகழும் ஜடப் பொருள்களுக்குள் அல்ல. ஜடப்பொருள்களால் சக்தி எழுகிறதென்பது ஒரு நம்பிக்கைக்கான மூலம், அவ்வளவு தான். இங்கே போனால் கடவுளை வழிபடலாம் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தற கோவில் மாதிரி.

இதை கண் மூடி மனதிற்குள் வணங்கினால் கேட்டதை கேட்டவாறே கொடுத்துவிடும் என்ற நம்பிக்கையை ஏற்ப்படுத்தி, உனக்குள்ளேயே நீ பேசி, உன் பேசுதலை நீயே கேட்டு, நீ கேட்டதை உனக்குள்ளேயே பதிந்து, பதிந்தவை உன்னையே மாற்றி, உன் மாறுதல்களின் மூலம் நீ கேட்டதை உனக்குள்ளிருந்தே உன்னாலேயே நீ பெற்றுக் கொள்ளத் தான் சிலைகள் நம்பிக்கையின் ‘மூலமாக’ நிறுவப் பட்டன.

“அதாவது தன்னம்பிக்கையை நமக்குள்ளே ஏற்படுத்த தான் இந்த சிலைகள்? அந்த சிலைகளுக்கு பினாளிருக்கும் கதைகளெல்லாம் நம் புனைவு தான்றீங்க”

“ஆம்; அதிகபட்சம் அதுபோல தான். முன்பு மரத்தை வணங்கினோம், பின் வெறும் குழைத்துப் பிடித்த கல்லினை வணங்கினோம், அறிவு வளர்ந்ததும் ‘சக்தியும் புரிந்து விட்டதும் ‘அதையே சிலையாக்கினோம். இன்னும் விரிவு அடைந்ததும் வளர்ச்சிப் பெற்றதும் அதற்கு கதை வடித்து, உருவங்கள் தந்து, நம்பிக்கையை மேன்மை படுத்தி, அதை சீர் செய்ய வழிபாடுகள் அமைத்து, அதை சிலர் ஆமென்று வணங்கி, சிலர் அப்படி இல்லை இப்படி என்று மாற்றி, சிலர் இரண்டும் இல்லை எல்லாம்பொய்யென ஒதுங்கி, உண்டென்றும் இல்லையென்றும், நான் என்றும் நீ என்றும், நம்மை நாமே கொன்று கொள்கிறோம். சாமி சாமியாய்; நாம் உண்டாக்கியவாறே நின்று நம் கொலைகளை பாவமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதை தான் சூசகமா நம்ம பெரியவங்க அப்பவே இப்படியும் சொல்லுவாங்க, ‘சாமி நேரா வந்து எதையும் செய்யாது யார் மூலமாகத் தான் வரும்னுவாங்க”

“அப்போ முடிவா என்ன தான் சொல்ல வர சாமி, நெஜமா சாமியெல்லாம் இல்லைன்றியா?”

“அவசரப்படாதே. இருக்கு. இல்லாம எப்படி, உலகம் முழுக்க தானே ‘வெடிச்சோ ‘சிதறியோ ‘எப்படியோ என்றாலும், தன்னால எந்த சக்தியுமே இல்லாம உருவாகுமா? உலகின் கோடான கோடி உயிர்கள் ‘ஏதுமே இல்லாததை’ கண்ணுக்கு தெரியலைனாலும் நீ தான் கடவுள்னு எதையோ வடித்து வைத்து கும்பிடுமா அல்லது பலனில்லாம இத்தனை காலம் நம்பத் தான் செய்யுமா?”

“நீ தான் சாமி சொன்ன, கோவில்லையும் இல்ல, வழிப்பாட்லையும் இல்ல, தியானம் பண்ணாலும் இல்ல, அப்போ எங்க தான் சாமி ‘கடவுள் இருக்கு?”

“நான் சொல்வதெல்லாம் வேதமோ இறுதி முடிவோ இல்லை அப்பா. இது என் எண்ணம். என் சிந்தனை. என் அறிவிற்கு உட்பட்டது. நீ கேட்பதால் சொல்கிறேன். நீயும் சிந்தித்து பார். எது சரியோ அதை எடுத்துக் கொள்”

“அப்போ கடவுள் பத்தி..????????????”

“முதல்ல வந்து எல்லோரும்.. பசியாறுங்க.., பிறகு கடவுள் பத்தியெல்லாம் பேசலாம்..” மாலினி அப்படி சொல்லி எல்லோரையும் சாப்பிட அழைக்க, அவர்கள் மாலனை திரும்பி பார்க்கிறார்கள்

“நான் சொல்லலை சாமி தான் சொல்றாரு, முதல் நம்ம வயிறு நிரம்பி ஒரு மனிதனுக்கு வேண்டியதெல்லாம் கிடைத்து விட்டால், நீ பிறருக்கு செய்யவேண்டியதை செய்துவிட்டால், பிறகு தாராளமா சாமியை பற்றி சிந்திக்கலாமாம்.. ” மாலினி சொல்லிவிட்டு சிரித்தார், மாலனும் ஆம் என்கிறார், எல்லோரும் அமர்ந்து பசியாறுகிறார்கள்..

தமிழரின் அன்பு அங்கே பண்பாக சுவையாக உணவில் விரிகிறது.. நாமும் காற்றின் ஓசைக்குள் கடவுளின் சப்தம் கேட்க நாளை வரை காத்திருப்போம்…
————————————————————————————————————
காற்றின் ஓசை– தொடரும்..

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காற்றின் ஓசை - நாவல் and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to காற்றின் ஓசை (11) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்!

 1. Justin Jose சொல்கிறார்:

  ரொம்ப சரியாக சொல்லி இருக்கிறீர்கள். நம் மனதை ஒரு முகப்படுத்தி….. நீ, நான் என்று பிரிக்காமல் நாம்(மனிதன்) என்ற எண்ணத்தோடு செயல்பட்டாலே மனிதன்தான் ( நாம்தான்) கடவுள். இந்த சாதி, மதம், கடவுள் இவை எல்லாம் நாம்தாம் படைத்தோம். நம் முன்னோர்கள் செய்து செய்து வைத்த சில தவறுகளை நாம் திருத்தி நம் சந்ததியருக்கு நல்ல எதிர் காலத்தை காட்டுவோம். ஒற்றுமையான உலகை உருவாக்குவோம்.முயற்சித்தால் மனிதனால் முடியாதது இந்த உலகில் ஒன்றும் இல்லை.

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மிக்க சரியாக சொன்னீர்கள் உறவே.. மனிதனை தாண்டி ஒன்றுமே பெரிதில்லை.. மனிதனை வளப்படுத்தத் தான் எல்லாம் என்று புரிய வைத்துவிட்டால்; அவைகளுக்கென மனிதனுக்குள் சண்டை இராது..

   எறும்பை எறும்பின் வழியாக சென்று வழி நடத்தும் ஒரு முயற்சி இது.. தங்கள் புரிதலுக்கு நன்றியானேன்..

   இந்த அத்யாயத்தின் சாரம் அடுத்த ஓரிரண்டு பதிவுகளில் நிறைவுறும்..

   Like

 2. Rameshkumar சொல்கிறார்:

  ரொம்ப நல்லாருக்கு..

  Like

 3. Premathas Sashi சொல்கிறார்:

  எது எது எப்படி எப்படி நடக்கனுமோ; அது அது அப்படி தான் நடக்கும்ம்ம்ம்ம்ம்ம்…………..

  Like

 4. Suresh Kumar சொல்கிறார்:

  பகவத் கீதைதான் வாழ்க்கை… பொறுமையா வாசித்தால் அருமையாக புரியும்….,

  Like

 5. வித்யாசாகர் சொல்கிறார்:

  வேண்டுமெனில், பகவத் கீதையும் வாழ்க்கையென்று வைத்துக் கொள்வோம்.

  ரொட்டியும் சோறும் எல்லோருக்குமே உணவு தான். ஆயினும் சிலருக்கு ரொட்டி மட்டுமே உணவாகவும் வேறுசிலருக்கு சோறு மட்டுமே உணவாகவும் தெரிவது அவர்கள் பிறந்த வாழ்வுமுறை வழியினாலாக இருக்கலாம்..

  இன்னும் சிலர் வெறும் பீசா பர்கரில் வாழ்க்கை நடத்துவதுமுண்டு. சிலர் உணவே இல்லாமல் மாத்திரைகளை விழுங்கி வாழ்வதுமுண்டு. முக்கியத்துவம் என்பது; அவரவர் தேவை பொருத்தது மட்டுமே..

  என்றாலும் பகவத் கீதையில் நிறைய பொதுக் கருத்துக்கள் வாழ்வின் பாடங்கள் வளமாக போதிக்கப் பட்டிருப்பது அதன் சிறப்பு!

  எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
  எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
  எது நடக்க இருக்கிறதோ,
  அதுவும் நன்றாகவே நடக்கும்
  உன்னுடையதை எதை நீ இழந்தாய்?
  எதற்காக நீ அழுகிறாய்?
  எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
  எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு ?
  எதை நீ எடுத்து கொண்டாயோ,
  அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
  எதை கொடுத்தாயோ,
  அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
  எது இன்று உன்னுடையதோ
  அது நாளை மற்றொருவருடையதாகிறது
  மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்!!

  -கீதாசாரம்

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s