சும்மா; அதிரவைக்கும் எந்திரன், சங்கரின் ரோபோ(ட்)!!

லகத்தின் வாசலை
எனக்காய் திறந்து விட்டுக் கொண்ட ஒரு சந்தோஷம்..

ஒரு தமிழனின் வெற்றியை
உலகின் நெற்றியிலெல்லாம் திறமையால் ஒட்டிவிட்ட ஒய்யாரம்..

ஒரு சாமானியனின் முயற்சிக்கு
ஒரு படைப்பாளியின் கனவுக்கு கிடைத்த கம்பீர பரிசு..

ஒரு வண்ணக் கனவிற்கு வாய் முளைத்து கைமுளைத்து
தன்னை கணினியில் புகுத்தி –
மீண்டும் கணினியிலிருந்து புதியதாய் பிறந்து
மொழி கடந்து இனம் கடந்து உலக உருண்டையை வலம்வர செய்த
ஒரு கணினி திரை காவியம்..எந்திரன்!

ஜினி என்ற மந்திரத்தின் சக்தியை மறக்கடித்த
சங்கர் எனும் திறமைசாலியின் –
ஒரு நல்ல பிரம்மிக்கத் தக்க படைப்பாளியின்;
மோதிரப் படைப்பு..எந்திரன்!

எதையேனும் செய்வேன்.. செய்வேனென்று தேடி
தடுக்கி விழுந்த இடமெல்லாம் தெரியும் குற்றங்களை
தன் திரை சித்திரமாய் தீட்டியவர் – சற்று குற்றங்களை மறந்து
நம் வல்லமையை உலகிற்கு காட்ட இரவுபகல் பாராது
ரசனை; சொட்ட சொட்ட உழைத்த உழைப்பு..எந்திரன்!

கொடுத்ததை கொடுக்கும் கணினியின் சிந்தனையில்
கொடுக்காததை எல்லாம் நினைக்கும் ‘மனதின் உணர்ச்சி புகுத்திய
ஒரு ஒற்றை மனிதனின் ரசனை ஜாலம்;
அந்த ஒற்றை மனிதனின் ரசனை ஜாலத்திற்கு – மொத்த
குழுவும் ஒத்துழைத்த உழைப்புப் பொக்கிஷம்..எந்திரன்!

ரு பெண்ணின் அழகை –
மனசு கொச்சையுறாமல் ரசிக்க வைத்த வித்தை;
அசைந்து அசைந்து அவள் நகரும் ஒவ்வொரு துளியிலும்
ஆண்களின் இதயத்தை ஸ்ட்ரா போடாமலே உறிஞ்சி குடிக்கும்
ஆட்டம் பாட்டு அட்டகாசம்.. எந்திரன்!

ஒரு அடடா… எனும் அலுப்பினை கூட
தமிழச்சி அச்சு மாறாமல் காண்பித்த நடிப்பின் அபாரம்,
காமத்தை உடலெல்லாம் புதைத்துக் கொண்டு –
கண்களில்; கோபத்தையும் காதலையும் புன்னகையாய் பூக்கும் ஒரு
இந்திரஜால திகைப்பு, எந்திரன் கதாநாயகி…யின் உழைப்பு!

ரு சாதனை நாயகனின் வெற்றி ஏக்கத்தை
தோல்வியின் வலியை, கோபத்தை, கருணையை, பயத்தை,
பொறாமையை, காதலை, ஸ்டெயிலை………
இத்தனை வயதிலும் காட்டும் வசீகரனின்
ரஜினி என்னும் – நல்மனதின்; நம்பிக்கையின், பலன்..எந்திரன்!

நடனத்திலிருந்து சண்டை காட்சியிலிருந்து
கைசுழற்றி பேசிடாத வசனம் வரை –
இயக்குனர் சொன்ன பக்கமெலாம் திரும்பி நின்ற ரஜினியின்
உழைப்பும் நம்பிக்கையும் ஒரு கண்ணிய படைப்பாளிக்கு அவர் தந்த
மதிப்பும் தொழில்பற்றும் ரஜினியை ரஜினி என்று ஒப்புக் கொள்ளவைக்கிறது
இந்திரனின் இரண்டாம் பாகத்திற்கு அச்சாரம் போடச் சொல்கிறது!

படம் முடிந்து வெளியே வருகையில்;

ரோபோடா.. ரோபோடா… இது ரோபாடா…
தமிழன் ஜெயிச்சாண்டா.. ஜெயிச்சாண்டா…
தமிழன் தமிழன் ஜெயிச்சாண்டா… என்று மார்தட்ட வைக்கிறது –
இசை புயலின் வேகமும் ‘அழகில் மொத்தமும் நீயா..எனும் ரம்யபாடலும்..
இன்னும் நிறைய இடங்களுமென நிறைகிறான்.. எந்திரன் மனதிற்குள்!

கிளிமாஞ்சாரோ பாட்டின்; அரிமா அரிமா.. பாட்டின்
ஒவ்வொரு காட்சியிலும் தயாரிப்பாளர் இயக்குனருக்கு தந்த சுதந்திரமே
இப்படத்தின்; ஒரு உண்ணத கலைஞனின் ‘திறமையின் சவாலுக்கான
வெற்றியின் திறவுகோல் என்பதை –
மறைக்காமல் ஒப்புக்கொள்ள வைக்கிறது..

உலகத் தரத்திற்கு பிரம்மாண்டத்தை மட்டுமே எடுத்து
அதற்கு பல ஆஸ்கார் விருதுகளை கொடுத்துக் கொண்ட அந்நிய தேசத்திற்கு
‘உன் பிரம்மாண்டத்திற்கு சற்று என் உணர்வுகளை தருகிறேன்,
எங்களின் மண்ணின் உணர்ச்சியை தருகிறேன் பார் என்று
ஒரு தமிழன் அடித்த உணர்வு பறை; பறைசாற்றிய வெற்றி;
என்னாலும் எங்களாலும் உன்னலவிற்கு உழைக்க முடியும்,
உன்னை மிஞ்சி நிற்க முடியும் என்று –
இந்திய வாசலில் நின்று ஒரு தமிழனும் தமிழர் கூட்டமும் காட்டிய
வீரிய வீராப்பு – ஒரு பிரம்மிக்க தக்க படம்.. எந்திரன்!

தமிழகம் தாண்டி –
இந்திய திரையுலகை சற்று அதிர்ச்சியோடு பார்க்கவைத்து
ஒரு பிடி அதன் தரத்தை வெற்றிகளின் போராட்டத்தை –
தொழில்நுட்ப நூதனங்களை அறிவியல் ஆதாரபூர்வத்தோடு
அறிவின் மேன்மையோடு சற்று மேலேற்றி விட்டுவிட்ட சாதனை..எந்திரன்!

ஆங்கிலம் புரியாத அந்நிய மொழிப்படங்களை
என் கிராமத்து கொட்டகையில் அமர்ந்து வாய்பிளந்து பார்த்த
எனை போன்றோருக்கு –
அதே என் கிராமத்து கொட்டகையில் அமர்ந்து
புரியும்; இனிக்கும்; என் அழகு தமிழில் பார்த்து ரசிக்கக் கிடைத்த
அதே; அனகோன்டா வரிசைகளை உடைத்துப் போட்ட –
முதல் தமிழ் படம்.. எந்திரன்!

பார்ப்பவர் ஆயிரம் பேசலாம்
தன் எண்ணத்தில் வந்தவாறு என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்,
இதிலாவது என் தமிழன் வென்றான் என்று நான்
மனதார ஒரு நிம்மதி மூச்சுவிட்டு – மூன்று மணிநேரத்தை
என் வரவுக் கணக்கில் எழுதிக் கொண்டேன்..,

ஒரு ‘இந்தியன்’ படமெடுத்தார் – சங்கர்
லஞ்சத்தின் புரட்சி இந்திய எல்லை வரை தொட்டது,
அந்நியன் படமெடுத்தார் –
அங்குலம் அங்குலமாக எம் தவறுகளின் அவலம் காட்சியாகி
உலகின் கடைகோடி தமிழனையும் இந்தியனையும்
இதலாம் தவறு தானே என்று சிந்திக்க வைத்தது,
இப்பொழுது எந்திரனை இயக்கி –
உலகின் கண்களில் என் தமிழன் கலைதிறனை காட்டி
ஊசிவைத்து குத்தாமல் உச்சுகொட்டவைத்து –
என் மண்ணில் விதைக்க கணினியை விதையாக்கி
பல கனவுகளை நடுவாக நட்டு – நாளைய பல பிரம்மாண்டத்தின்
இன்றைய முதல் புள்ளிகளாகிவிட்டனர் சங்கரும்.. அவர் குழுவினரும்..

பாடல் வரிகளில் நியூட்டனை அழைத்து
வசனத்திற்கு வசனம் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்து
நம் பொன்னான நேரங்களை எழுத்தாக கரைத்துக் கொண்ட
கவிப்பேரரசு, ஐயா சுஜாதா, பா.விஜய், கார்க்கி மற்றும்
ஏனைய எழுத்தாளர்களுக்கும்,
நம் அன்பிற்குரிய ரஜினிக்கும்,
உலகின் அழகுகளின் அழகுதேவதை ஐஸ்வர்யா ராய் அவர்களுக்கும்,
வெள்ளித்திரையில் மட்டுமே சென்று பார்க்க தன் இசைதிறனால்
கட்டாயப் படுத்தாது கட்டாயப் படுத்திய ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கும்,
மற்றும் இணை இயக்குனர்கள்,
சில காட்சிகளில் வந்தாலும் சிரிக்க வைத்த கருணாஸ்,
சந்தானம் மற்றும் சண்டை காட்சி, ஒளிப்பதிவு, காட்சிசீரமைப்பு,
நடன இயக்கம், கட்டிடக் கலை, ஒப்பனை, இடம் தேர்வு செய்த குழு,
இன்ன பிற உதவியாளர்கள்,
கைகாட்டிய இடத்திற்கெல்லாம் கொண்டு சேர்த்த வாகன ஏற்பாடு போன்ற திரையின் பின்னால் உழைத்த அத்தனை பேருக்கும்,
இவர்களை வழி நடத்திய சரித்திர நாயகன் சங்கருக்கும்,
இந்த மொத்த பேருக்குமே ஒரு உயர்ந்த வாய்ப்பினையளித்த
சன் பிக்சர்ஸின் உரிமையாளர் கலாநிதி மாறன் அவர்களுக்கும் நம் மனமார்ந்த பாராட்டினை –
எந்திரன் – பாகம் இரண்டு’ எடுக்குமளவு வெள்ளித் திரையிலேயே காட்டுவோம்!

மிழ் திரையின் ஒரு உச்சபட்ச கதவினை தன்
வியாபார அறிவினால் திறந்து நம்பி –
என் தமிழரின் திறமையை ஒரு திரைபடத்தின் வாயிலாக
உலகரங்கம் வரை கொண்டு சென்ற கலாநிதிமாறனுக்கு என்
மனம் நிறைந்த நன்றியை சமர்பித்து –
இப்படத்திற்கென உழைத்த அத்தனை பேருக்குமே –
அத்தனை ஆஸ்கார் கிடைத்த மகிழ்வினை பரிசாக்கி
ஒருவேளை, இப்படத்திற்கு அவ்விருது கிடைக்காவிடில் ‘இனி
அதை விருதென்றே எண்ண மறப்போம்; முடிந்தால் மறுப்போம்!

இதுபோன்ற உழைப்பின் திரைசித்திரங்களுக்கு மீண்டும் நம் கனவினையே விருதென எண்ணி உலகின் மொத்தபரப்பிலும் விரிப்போம்!

தமிழிலேயே பார்க்க தகுந்த ஒரு உலகத் தர திரைப்படத்தை கைதட்டி வரவேற்போம்!!

வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in திரை மொழி and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

14 Responses to சும்மா; அதிரவைக்கும் எந்திரன், சங்கரின் ரோபோ(ட்)!!

 1. noorul ameen சொல்கிறார்:

  அன்பு வித்யாசாகர் அவர்களுக்கு வணக்கம் …….,

  உங்களின் எந்திரன் திரை விமர்சனம் படித்தேன் சுவையாக இருந்தது.
  இதை விட சிறந்த திரை விமர்சனத்தை பார்க்க முடியாது. எந்திரனின்
  முழுமையான ஒரு விமர்சனம். வாழ்த்துக்கள்………

  என்றும் அன்புடன்
  ச. நூருல் அமீன்
  ஷார்ஜாஹ்

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மிக்க நன்றி நூருல் அமீன்.. ஒரு நல்ல படைப்பு, எத்தனை பேரின் உழைப்பு.., எவனோ வெள்ளைக்காரன் பண்றான்னு ஆ..ன்னு வாய் பிளந்து பார்த்ததை நம்ம தமிழன் பண்ணிட்டு CNN வரை பேட்டி தரதும், அரபி சேனல்களில் ‘கலாநிதி பிலிம்ஸ் ‘சூப்பர்ஸ்டார் நடிக்கும் சங்கரின் ரோபோ……ட்’ என்று விளம்பரம் வருவதும் பெருமையா தான் இருக்கு.

   எத்தனை இடத்தில் கூனிக் கிடக்கும் தமிழினம் இதிலாவது ‘அப்படி’ எழுந்து காட்டியிருக்கேன்னு ஒரு திருப்தி சந்தோஷம்.. அமீன். ஒரு படத்தின் வெற்றி பலருக்கான வெற்றி என்பதற்கான ஒரு உதாரண படம் இதென்று நினைத்தேன்.. மனதின் ஆற்றாமையை எனக்கு கொட்டினால் மட்டுமே தீரும், எனவே கொட்டிவிட்டேன்..

   அந்தளவு ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவரும் உழைத்த உழைப்பிற்கு, வெற்றியின் ஏக்கத்திற்கு நம்மாலான நன்றி; எனது பார்வையில் நான் பார்த்த எந்திரனின் எடை இது, அவ்வளவு தான்!

   இதை குறை சொல்பவர்களும் கூட இருக்கலாம், அப்படி இருந்தால் அவர்களை ஆஸ்கார் லிஸ்ட்ல சேர்த்துக்க வேண்டியது தான், அல்லது அது அவர்களின் விருப்பம் என்று விட்டுவிடுவோம்!

   Like

 2. MOHAMED ABUSAMHU. சொல்கிறார்:

  இனிய தமிழ் வணக்கங்களுடன்,
  கணமூலை அபூஸம்ஹு,
  ஷார்ஜாஹ்.

  தங்கள் இணைய முகவரி நண்பர் நூருல்அமீன் மூலம் கிடைக்கப்பெற்றேன். அதிலே அண்ணன் சூப்பர் ஸ்டாரின் எந்திரனின் திரை விமர்சனம் படித்தேன். அழகுதமிழில் அமைந்த விமர்சனம், படம் கண்டுமகிழ்ந்த பெருமிதத்துக்கு கொண்டுசென்றது, நன்றி. உங்கள் முயற்சிக்கும் தமிழ் புலமைக்கும் இவன் வாழ்த்துக்கள்.

  வணக்கம்.
  நன்றி,

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மிக்க நன்றி அபு, பொதுவாக நான் திரைப்படம் பார்ப்பது மிக குறைவு. எழுதவே நேரம் போதாத வேளையில் எதற்கென விட்டுவிட்டாலும், இப்படி மனைவியின் நண்பர்களின் மகிழ்விற்கென சென்று நானும் மகிழ்வதுண்டு. அங்ஙனம் போன ‘இப்படத்தின் பிரம்மிப்பு இவ்விமர்சனம் எழுதும் வரை எனக்கு குறையவேயில்லை.

   நல்லதென்று பட்டுவிட்டாலே பாராட்டிவிடவேண்டும் என்று துடிக்கும் ஒரு உள்ளுணர்வு தான் இவ்விமர்சனத்திற்கும் காரணம் போல்.., எதுவோ, இதன் மூலம் உங்களைபோன்ற அன்புள்ளங்களும் மகிழ்வதில் நிறைவுமடைகிறேன். மிக்க நன்றி!!

   Like

 3. lakshminathan சொல்கிறார்:

  வணக்கம் வித்யா,

  எப்படி இப்படி எல்லாம் ரசித்து எழுதுறீங்க.., ரொம்ப சந்தோசமா இருக்கு. உங்களின் எழுத்துக்களை பார்க்கும் போது. மிக்க நன்றி..

  M.லக்ஷ்மிநாதன்

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   என்னன்பு லக்ஷ்மிக்கு.., வணக்கம் நலமாக உள்ளீர்களா. மிக்க மகிழ்ச்சிக்குரியது தங்களின் வருகை.. எங்கோ தூரத்தில் இருந்துக் கொண்டு நெருங்கிப் பழகிய நாட்களை ஆசைப போட்டுக் கொள்ள எழுத்து உதவுகிறது பாருங்கள்.

   எழுத இருக்கும் ஆயிரம் சமூக அக்கறைகளை கடந்து ஏதோ என் தமிழனின் ஒரு வெற்றிபோல் என்று கருதியதால் எழுதிய பதிவு லக்ஷ்மி. ஈர்ப்பின் தாகம் எழுத்தில் அடங்கிப் போனது. மிக்க அன்பும் நன்றிகளும் உரித்தாகட்டும் தங்களின் வருகைக்கும் நினைவிற்கும்…

   Like

 4. sankar சொல்கிறார்:

  i have not seen this movie so far, after your thirai vimarsanam I will see immediately, yes it is a success of tamil cini field.

  உங்களின் விமர்சனம் பார்க்கும் வரை இப்படத்தை நான் பார்க்கவில்லை; ஆனால் உங்களின் விமர்சனம் படித்ததுமே சென்று பார்த்தேன், உண்மையாகவே இது ஒரு தமிழ் திரையுலகின் வெற்றிப் படம் தான்..

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   அன்பு வணக்கம் சங்கி…, மிக்க நன்றி.. தங்களின் நம்பிக்கைக்கு. நீங்களெல்லாம் நம் வலைதளத்தில் வலையவருவது மகிழ்விற்குரியது..

   படம் என்னையும் மிக கவர்ந்தது என்பது மட்டுமல்ல; இந்த விமற்சனத்திற்கான காரணம். பலரையும் கவருமென்றும் நம்பினேன். அதையும் கடந்து அதற்கெல்லாம் முன்பாக பலரின் உழைப்பிற்கு ஒரு சந்தோசத்தை, எந்த நம் அங்கீகாரம் நோக்கி உழைத்தார்களோ அந்தஅங்கீகாரத்தை அவர்களுக்கு திருப்பித் தரும் ஓர் எண்ணம். பாராட்டும் ஒரு நோக்கு, அவ்வளவு தான்.. சங்கி.

   எப்படியோ நம் விமர்சனம் படித்து படம் பார்த்தீர்களெனில்; அது மறைமுகமாக ‘எனை எழுதவைத்த படத்தின் வெற்றியும், மற்றும் இறைவன் தந்த, உங்களை போன்றோரின் அன்பினால் பெற்ற எழுத்தின் வெற்றியுமே.., மிக்க நன்றி சங்கர்!

   Like

 5. பாரத் சொல்கிறார்:

  வணக்கம் வித்யாசாகர் அவர்களே….

  உங்கள் விமர்சனம் மிக அருமை ஐயா… படத்தை பார்த்த பிறகே உங்கள் விமர்சனத்தை படித்தேன்…. ஆக, நீங்கள் சொன்ன விடயங்களை முழுமையாக உணர்ந்து இன்புற முடிகின்றது…

  உங்கள் கைவண்ணம் தொடரட்டும்…

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   அன்பு வணக்கம் பாரத், தங்களின் உயர்வான அன்பிற்கு மிக்க அன்பும் நன்றியும். தவிர, சற்று என் பிற தோழர்களிடம் பகிர்ந்துக் கொண்டதையும் இங்கே பதிவாக்கிக் கொள்ளவிரும்புகிறேன் பாரத்.

   //படத்தை பார்த்த பிறகே உங்கள் விமர்சனத்தை படித்தேன்…. ஆக, நீங்கள் சொன்ன விடயங்களை முழுமையாக உணர்ந்து இன்புற முடிகின்றது.//

   மிக சரியாக சொன்னீர்கள். படத்தை பார்க்கும் முன், நம் முந்தைய அனுபவங்களை வைத்தே இப்படம் பற்றியும் பேசுவோம். படத்தை பார்த்தால் மட்டுமே இப்படத்தின் உழைப்பு தெரியும்.

   நானும் அப்படி கண்மூடித் தனமான யாருக்குமான ரசிகன் என்று முத்திரை குத்திக் கொள்ள விரும்புபவனுமல்ல. எதையும் சற்று தூர நின்று பொது நோக்கில் சீர்தூக்கிப் பார்த்து யார் எதை சிறப்பாக செய்யினும் அதை மெச்சும் விதமாகவே இவ்விமர்சனத்தையும் இட்டேன்.

   நமக்கு வெளிச்சப் படுத்த ஆயிரம் கவலைகளும் வேதனைகளும் இருந்தும் இப்படம் பார்த்த ஒரு பிரம்மிப்பு, ஒருவேளை அதிக சினிமா பார்க்காததால் வந்த ஆச்சர்யம் போல். எழுதி முடிக்கும் வரை மனதின் வெப்பம் உள்ளே தகித்தது…, நம் சமுதாய இழிவுகளை சுட்டெரிக்கவும், வலிகளை வார்த்து உலகிற்கு காட்டவும் புறப்பட்டவனுக்கு இதலாம் தேவையா, அதான் எங்கு கண்டாலும் எல்லோருமெழுதி தீர்கிறார்களே, நாமும் ஏன், வேண்டாமே என்றும் நினைத்தேன்.

   பிறகு இதை ஒரு உணர்வின் பகிர்வாக எண்ணியும், ஏதோ தமிழன் உலக அரங்கிற்கு வருகிறானே என்றும், படம், கதை, கதை விமர்சனம், கதை சொல்லல் ‘என்பதை தாண்டி, அதன் பாதிப்பினை மட்டும் பதிவுசெய்தேன்.

   அது கூட நான் படம் பார்க்க நேர்ந்து பார்த்ததால் எழுதினேனே தவிர, எழுத வேண்டுமென்று இப்படத்தை பார்க்கவில்லை. இபப்டத்தின் நிறைய இடங்களில் நிறைய காரணங்களை தாண்டி படத்தின் உழைப்பை கண்டே பிரம்மித்தேன், அதன் திரை வடிவம் எனை மிக கவர்ந்தது.

   சிலருக்கு பிடிக்கலாம் பிடிக்காமலும் போகலாம் அது அவரவர் பார்வை. அவரவர் ரசனை. ஒரு திரை படம் என்பதை மீறி அதை சுயமாக பயன்படுத்திக் கொள்ளும் தலைவர்களால், அதை தவறாக பார்க்கும் மனநிலையும் நம்மிடம் ஏற்ப்பட்டு விட்டதில்; ரசனை தாண்டி அதன் இதர நோக்கங்களை விமர்சிக்கும் மனோபாவத்திற்கு ஆளானோம்.

   நாட்டின் அவலங்கள் எத்தனையோ தலைவிரித்தாட கோடிகளின் அவலங்கள் தேவையா என்பது நிறைய பேரின் கேள்வியாகவே இருக்கிறது. என்னை கேட்டால் அத்தனை லேசாக தேற்றிக் கொள்ள இயலவில்லையென்றாலும் இதை ஒரு திரைதுறை சார்ந்த வளர்ச்சியென்று வைத்துக் கொள்ளலாம்.

   ஆயினும், இத்தனை கோடியில் என் சமுதாயத்திற்கான சேவையின் தேவை எத்தனையோ இருந்தும்; இந்த திரைத்துறையின் வளர்ச்சியென்ன அத்தனை முதன்மையானதா? முக்கியதத்துவம் வாய்ந்ததா ?

   இல்லையே…; என்றால் அது வேறு.., அதை சிந்திக்கவேண்டியவர்களும் செயல்படுத்தவேண்டியவர்களும் நாம் தான். அவர் பணம் அவர் போட்டார் என்னுமளவிற்கு அவரை வளர்த்தது நாம் தானே?

   என்றாலும், இது ஒரு சுயநலம் சார்ந்த போராட்டம் தான். இதில் பொதுமக்களுக்கென்ன லாபமெனில்; அந்த கேள்வி நம் ரசனைகளுக்குட்பட்டது, உலக அரங்கின் மாற்றங்களுக்குட்பட்டது, உலக அரங்கின் வாசல் தொடும் லட்சியத்தில் மற்ற நம் நிறைய உறவுகளின் வீடுகள் திறந்தே கிடந்தாலும் பரவாயில்லை என்று எங்கோ பிசரி நாம் நம் பணக்கார மனிதர்களுக்கு மறைமுகமாய் போதித்தவிட்ட ஒரு தவறன்றி வேறென்ன?

   ஒருவேளை, இல்லை இதொன்றும் என் ரசனையில்லை என்போமெனில், பிறகு நம்மை நாம் நம் சமுதாயத்தினோடு சேர்த்துக் கொள்ள வேண்டாம் தனித்த கருத்தென்று சொல்லிக் கொள்வோம். காரணம், அத்தனைக்கு அத்தனை சமுதாயமும் இதில் ஒன்றியே இருக்கிறது.

   எல்லாம் காலத்தின் மாற்றம் என்றே உள்ளே நொந்துக் கொண்டாலும், இந்த படம் ஒரு நல்ல வியாபாரியின் வியாபாரம் என்பதும் நமக்கு தெரிந்ததே என்றாலும், இந்த வியாபாரத்தில் பங்குற்று பயனுற்றோர் பலர் என்பதையும் பார்க்கலாம்.

   ஒரு திரைப்படம் என்பது, அதிலும் இதுபோன்ற அதிக பட்ஜெட் படம் என்பது ஒருவரின் வெற்றிமட்டுமல்ல; பலரின் வெற்றி என்பதில் முடிவாய் சமாதானம் கொள்வோம்!

   பின்பும், இதில் எவன் புதியவன், சிறியவன் வென்றான்? எல்லோருமே வருடக்கணக்கில் பணத்தில் படுத்து புரளும் பெரியபுள்ளிகள் தானே எனில்; திரைமறைவில் ‘இன்னும் வேறுசில மட்டத்திலிருந்து, வெளியே வரத் துடிக்கும் வேறுபல தொழிலாளிகள் உழைப்பாளிகள் நிறைய எளியவர்களும் ஒவ்வொரு படத்திற்கு பின்னும், வெற்றி தோல்விகளை கடந்து இருக்கவே செய்கிறார்கள் எனலாம், அல்லது ஓடிப் போய் படம் பார்ப்பவர்களை எல்லாம் வேண்டாம் பார்க்காதே என்று கைபிடித்து நிருத்திக்கொள்வதை தவிர வேறு வழியில்லை.

   ஏன்; அதிக செலவில்லாமல் வேறு படங்களே வரலியா? பசங்க, கலவாணி, அங்காடி தெரு- ன்னு நிறைய படங்கள் எல்லோரையும் கவராமையா போச்சி? விசு ரெண்டு வீட்டுக்குள்ளேயே படம் எடுத்து நம்மை எல்லாம் சிந்திக்க சொல்லலியா, வெயில் படமெடுத்து உலகரங்கில் ஓடலையா என்றால், நானும் அதை நினைத்தேன், அதுவும் சரிதான், மிக திறமையாக நன்றாக நிறைய படங்கள் வருகிறது தான், அது அவர்கள் திறன் போல் அல்லது அது அவர்களின் கோணம்.

   இதை இன்னும் ஒருபடி மேலே ‘உலகமெலாம் திரும்பிப் பார்க்கும் பிரம்மாண்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சி என்கிறார்கள். படம் பார்த்தால் அதை ஏற்கும் படி உழைத்திருப்பதும் தெரிகிறது…

   தமிழரின் திறனை ஒரு பிரம்மாண்ட உலகிற்கு காட்ட; கோடிகளை கொட்டும் சவாலான உலகில் தான் வசிக்கிறோம் என்பதும் யோசிக்கவேண்டியதாகவே உள்ளது.

   ஆயினும், வீட்டுக் கூரையே பிரிந்துக் கிடக்க, வானின் நட்சத்திரத்தை பிடித்து சுவற்றில் கட்டுவானேன்… என்றால், அது வேறு.. பார்வை!

   Like

 6. இராஜ.தியாகராஜன் சொல்கிறார்:

  கவிஞர் வித்யாசாகர், உங்கள் திரைப்படக் கண்ணோட்டத்தின் தரம் நன்றாகவே இருக்கிறது. நேற்று அந்த திரைப்படத்தை என் மைந்தனுடன் கண்டேன். மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நான் கண்ட தமிழ்ப்படம் இது.

  என்னுடைய கருத்துகள் கீழே:

  ஆங்கிலத்தில் புகழ் பெற்ற பல அறிவியற் புனைவுகளை நெடுங்கதைகளாகவும் சிறுகதைகளாகவும் எழுதிய ஐசக் அசிமோவ், ஜூல்ஸ் வேர்ன், டி.டபிள்யூ. காம்ப்டன், ஆர்தர் சி. கிளார்க், எச்.ஜி. வெல்ஸ், பால் ஆண்டர்சன், ஜே.ஜி. பலார்ட், ஹெயின்லெயின், தியோடர் ஸ்டர்ஜியன், தமிழில் நம் சுஜாதா போன்றோர் என்னுடைய விருப்பமான புகழ் பெற்ற எழுத்தாளர்கள். ஆங்கிலத்தில் பால் ஆண்டர்சன் எழுதிய Tau Zeroவையும், அசிமோவின் night fallஐயும், சுஜாதாவின் திமலா, என் இனிய எந்திரா, மைடியர் ஜூனோ இவற்றை எப்படி மறக்க முடியும்?

  அசிமோவின் ஐ ரொபாட், பைசெண்டென்னியல் மேன், சுஜாதாவின் என் இனிய எந்திரா, மைடியர் ஜூனோ போன்ற கதைகளில் வரும் சில/பல கூறுகளை ஒன்று சேர்த்து, தமிழ் சினிமாவின் வண்ணம் பூசி, சங்கர் செய்திருக்கும் கதம்பக் கூட்டாஞ்சோறு ‘எந்திரன்’. ஆனால் மிக நன்றாகவே தமிழ்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். மேலும் அறிவியல் புனைக் கதை எனும் போது, ஜேம்ஸ் காமரூனின் ஆங்கிலப் படமான அவதார் போல கற்பனை செய்து கொண்டு எந்திரனை பார்ப்பவர்களுக்கு, அந்த ஒப்பீடே பைத்தியக்காரத்தனமாக இருக்கக்கூடும்.

  ஆனால் தமிழில் மிகப் பெரிய அளவிலான முதல் முயற்சி என்ற அளவில், தமிழரின் மிகப் பெரிய சாதனை என்று நீங்கள் சொல்வதை நிச்சயம் ஒப்புக் கொள்கிறேன். (எம்ஜியார் நடித்த கருப்பு வெள்ளை படமான கலையரசிதான் நான் பார்த்த முதல் சயின்ஸ் ஃபிக்‌ஷன் என்று எண்ணுகிறேன்! பறக்கும் தட்டு, வேற்று கிரகம் எல்லாம் வரும்!). கிளைமாக்ஸ் காட்சிகள் அனைத்தும் ஆங்கிலப் படங்களுக்கு இணையாக படமாக்கி இருப்பதை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். பாரபட்சமில்லாமல் பாராட்டி இருக்கிறீர்கள்.

  என்ன பாதி படத்திலேயே அமரராகிவிட்ட சுஜாதாவைத் தனியாக டைட்டிலில் போட்டு அஞ்சலி செலுத்தி இருக்கலாம் என்பது என்னுடைய கருத்து.

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மிக்க நன்றிகள் சகோதரர். தங்களின் பேறுபெற்ற மைந்தனுக்கும் குடும்பத்தினருக்கும் என் வணக்கத்தை சொல்லுங்கள். தங்களின் வருகைக்கும் நேர்த்தியான கருத்திற்கும் எம் பயணம் கூடுதல் மதிப்புறும் என்று மகிழ்கிறேன்.

   பொதுவாக பார்த்தால், இனி நாம் புதிதாக படைக்க ஒன்றுமே இல்லை என்றே சொல்லலாம், அப்படி அத்தனையையும் நம் முன்னோர்களும் ஏன் சமகாலத்தவர்கள் கூட படைத்து விட்டனர். அதையும் கடந்து ‘நாமெப்படி அதை ‘இன்றைய வாழ்வுமுறைக்கேற்ப ‘பார்ப்பவர் ஏற்கும் வண்ணம் தருகிறோம் என்பதில் தான் தற்போதைய பாடு இருக்கிறது. அவ்விதத்தில் இது சரியாக தொய்விலாது செய்யப்பட்ட படம் என்று ஒப்புக் கொள்ளலாம், எனும் தங்களின் கருத்தமைவிற்கு மிக்க நன்றியானேன்.

   //என்ன பாதி படத்திலேயே அமரராகிவிட்ட சுஜாதாவைத் தனியாக டைட்டிலில் போட்டு அஞ்சலி செலுத்தி இருக்கலாம் என்பது என்னுடைய கருத்து//

   ஆம்; சங்கர் இது பற்றி கூறியுள்ளார். மலேசிய விழாவில் கூட ‘பாதிபடம் வரை சுஜாதா தான் எழுதினார் மீதியை நான் எழுதினேன்’ என்று கூறியதாக நினைவு.

   தவிர, படத்தின் முதல் பாதிக்கு முன் சுஜாதா எழுதிய வசனங்களும் அதன் பின் அவர் இல்லாத வெற்றிட குறையும் ஒருசில இடத்தில் தெரியாமலில்லை.

   ஒரு தீயில் ரோபோ உள் புகுந்து முக தோல் எல்லாம் கருகிய பின்னரும் அதற்கு 1000 டிகிரி வெப்பம் தாங்க கூடிய நிக்கல் உடல்வாகு என்பதால் ஒன்றும் ஆகாது என்று காட்டுவார்கள். ரோபோவிற்கு ஒன்றும் ஆகாது சரிதான், ஆயினும், அந்த வெப்பத்தில் குழந்தைகளையும் பெரியோர்களையும் காப்பாற்றுவதாக காட்டுவதும் , பிறகு, நாயகி சனா சிட்டியிடம் உயிர் பற்றி பேசும் ஓரிடத்தில் காதலியின் வலியை முழுதாக சொல்லாததாக எனக்கொரு வசன குறையும் உண்டு..

   அதுபோல் சிட்டியை வசி துண்டம் துண்டமாக வெட்டி விடுவதாகவும், பிறகு சந்தானமும் கருணாசும் அதை சுக்குநூறாக்கி கொட்டுவதாகவும் கொட்டுவதாகவும், பிறகு ஏதோ அசுரனின் படத்தில் அசுரன் உயிரை விட்டு விடாமல் பின் எழுந்து வருவது போல் குப்பை மேட்டிலிருந்து காரில் வந்து படுத்திருப்பதாகவும், என்னை இங்கே விட்டு விடு என்று போராவின் வீட்டு விலாசம் சொல்வதாகவும் கதை அமைப்பு இருக்கிறது.

   இதில், ஒன்று அப்படி உடைத்தெரிந்தவர்கள், அதன் சூழ்சும பாகங்களை மாற்றாமலும் எடுக்காமலுமா விட்டு விடுவார்கள்? குறைந்த பட்சம் பேட்டரி??? சரி இதலாம் பார்த்தால் கதை செய்ய முடியாது என்பதால் அதை அப்படியே ஏற்றுக் கொள்வோம். என்றாலும், அந்த குப்பைகளின் ஈரத்தில், நேர விரயத்தில் அந்த பேட்டரியேனும் செயலிழந்திருக்காதா? என்ற கேள்வி எழாமலில்லை. ஒருவேளை அதை பற்றிய நுண்ணறிவு நமக்கில்லையோ தெரியவில்லை மன்னிக்கவும்; எனக்கில்லையா தெரியவில்லை.

   ஆக, அவைகளை மிஞ்சிய ஏராளமான பிரம்மிப்பிலும், ரஜினியை அப்படி இப்படி என்று வெள்ளை பூச்சு தடவி பெரிய சைன்டிஸ்ட் என்றெல்லாம் காட்டாமல், வயதொப்ப அழகாகவும், நிறைய பல போலி காட்சிகளை புகுத்தாமல் அதிக பட்சம் ஆம் சரி தான் என்றும், கதாநாயகியை கூட ஒரு தேவதை போலவே காட்டி, அவர் உடலை காமக் கண்ணிலிருந்து மறைத்து அழகையும் அவரின் திறமையையுமே ரசிக்கும் வண்ணம் காட்சிப் படுத்தியதும், ஒரு பிரசவ முறையில் கூட பழைய முறையை பயன்படுத்தி இப்படி செய்யாலாமே அதை விட்டு ‘எத்தனை பேரை அறுத்து எரிகிறீர்களே என்று கேட்காமல் கேட்கும் கேள்விகளுக்குமாக, முந்தைய குழப்பங்களை தள்ளுபடி செய்துவிடுவோம்..

   துள்ளி திமிரி வரும் தமிழனுக்கு வழிகொடுப்பதாக எண்ணுவோம். எனினும் நீங்கள் சொல்வது போல் படத்தில் சுஜாதாவிற்கான நன்றியை படம் துவங்கும் முன் ஒரு தனி பிரேமில் கண்டிப்பாக காட்டி இருக்கலாம் தான் சகோதரர்!

   Like

 7. வித்யாசாகர் சொல்கிறார்:

  கார்ட்டூனிஸ்ட் பாலாவின் இந்த முகநூல் சுட்டியில்:-

  //http://www.facebook.com/jeevartist#!/photo.php?pid=31044282&id=1423116401&ref=notif&notif_t=like//

  சென்று பார்க்கையில், தொலைகாட்சிகள் தங்களின் விளம்பர தேவைக்கென மக்களிடையே புகுத்தும் கலாச்சார சீரழிவை பற்றி தெரிந்துக் கொள்கையில்’ இந்த என் பதிவையும் எண்ணி வருத்தமடையவே செய்தேன்.

  ஒருவேளை திரு. சங்கர், திரு. ரஜினி கூட வருந்தியிருக்கலாம். ரசிகர்களை இந்தளவிற்கு ஆக்கக் கூடாது என்பதில் கவனம் கொள்ளத் தக்கவர்கள் அவர்கள்.

  உண்மையில் இதுபோன்ற புதிய கலாச்சார புகுத்தல்களை, உதாரணத்திற்கு ‘கட்டவுட்டிற்கு பாலபிசேகம் செய்வது, காவடி எடுபப்து, தேரில் வைத்துக் கொண்டு வருவது.., இதையெல்லாம் ஒரு பொது தொலைகாட்சி அப்பட்டமாக காட்டி அவைகளை ஊக்கப் படுத்துவது என்பது வருந்தத் தக்கது.

  படிக்கவே வருத்தமாகத் தான் இருக்கிறது. நான் வேறு மிக நல்ல படமென்று இதற்கு கருத்தெல்லாம் பதிந்துள்ளேன். படைப்பினை பாராட்ட போய் இவர்கள் செய்யும் இந்த அட்டகாசத்திற்கு நாமும் துணைபோனது போல் ஆச்சே!!!!!!!!

  இவர்களின் எல்லை மீறும் செயல படிக்கவே கொடு…மையா இருக்கே; பார்க்கிறவர்களுக்கு கொள்ளை கோபம் வராதா???!! ஒருவேளை யாரேனும் என் விமர்சனத்தை கண்டிருந்தால் அது வெறும் படத்திற்கானது, படத்தின் உழைப்பிற்கானது மட்டுமென்று கொள்க. அதன் உழைப்பை வைத்து இவர்கள் அடிக்கும் கூத்திற்கு கண்டனமே தெரிவிப்போம்!!

  இங்கு (குவைத்துல) நாங்க கேபுள் தொடர்பே எடுக்கலை. குறிப்பாக சன்’னுக்காகவே வேண்டாம்னுட்டேன். அதிக பட்சம் வீட்டினருக்கு தொலைகாட்சி பார்க்கும் பழக்கத்தை குறைக்கும் முயற்சியில் செய்தது, வேறெந்த காழ்ப்புணர்வுமில்லை.

  எப்படியோ…………. இதையெல்லாம்பார்க்கமுடியாமல் போனதற்கு ‘அது ஒரு நல்லதை செய்திருக்கிறேன்!

  Like

 8. பிங்குபாக்: 2010 in review | வித்யாசாகரின் எழுத்து பயணம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s