காற்றின் ஓசை (13) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்!

இதற்கு முன் நடந்தது

சொல்வதில் மட்டுமல்ல, கேட்பதிலும் ஒரு சக்தி கிடைக்கிறது. சொல்பவர் யார், அவர் சொல்லும் தகவல்கள் என்ன, அதை நாம் எவ்வாறு உள்வாங்குகிறோம், அதன் பாதிப்பு நமக்குள் ஏற்படுத்தும் அதிர்வுகள் சரியானதா, இத்தருணத்தில் நமக்கு தேவையா என்றதொரு எடைபோடல் கேட்போருக்கு வேண்டும்.

எதையோ எடுத்து படித்தோம் என்றல்ல, எதை படிக்கிறோம் என்பதில் யோசிப்பு வேண்டும். ஒவ்வொரு வாசிப்பிற்கும் நம் உணர்வலைகளின் பங்கு கொண்டு நம்மில் மாற்றம் ஏற்படுகிறது. எனவே என் உணர்வலைகள் எதை நோக்கி அதிர்வுற்றால் என் அடுத்த கட்ட வாழ்க்கை சிறக்கும் எனும் ஒரு நேர்த்தியான சுயபரிசோதனை உள்ளுக்குள் எச்சரிக்கை உணர்வினை போல, ‘படிக்கும் ‘பிறர் கருத்திற்கு காது கொடுக்கும்’ நமக்கு தேவை.

அதற்காக இது என் கொள்கைக்கு மாறுபட்டது இதை நான் படிக்கவே வேண்டாம் போல் என்றெல்லாம் இல்லை. வாழ்வின் புரிதலுக்கு தக்க கொள்கை மாறலாம். இன்று சரி என்றுணர்வது நாளை தவறென்று புரிபடுகையில் நேற்றைய கொள்கை முற்றிலும் சரியானது தானா என்பதை சீர்தூக்கிப் பார்க்கும் நிலையில் தான் மனிதப் போக்கு உள்ளது. இது ‘நான்’ என்று ஒரு வட்டத்தை பொட்டு உள்ளே அமர்ந்துக் கொள்வதை விட சுதந்திரமாய் காது கொடுத்து அனைத்தையும் உள்வாங்கி எடைபோட்டு நல்லதை எடுத்துக் கொண்டு கெட்டதை விட்டுவிடும் ஒரு திறன் வேண்டும்.

இதையும் நல்லது கெட்டது என்பதை விட, சரியெனப் படுவதை எடுத்துக் கொண்டு தவறெனப் படுவதை விட்டுவிடுவோம். எது தவறென்று மீண்டும் கேள்வி கேட்டு விடாதீர்கள். எது பிற உயிரை துன்புறுத்துமோ அதெல்லாம் திருத்திக் கொள்ள வேண்டியவை தான். திருத்திக் கொள்ளவேண்டியவையே தவறாக செய்யப் பட்டுள்ளதாய் கணக்கிடப் படுகிறது.

புரியுதா ஐயா…? புரியுதா திருமேனியா???” மாலன் சற்று நீட்டி முழக்கி நிறுத்தினார்.

“புரியுதையா இல்ல புரியுது சாமி.., ஆனா முன்ன தேவையானதை தான் படிக்கனும் கேட்கனும்னு சொன்ன மாதிரி இருக்குல்ல..”

“இப்படித் தான்னு இல்ல திருமேனியா, அந்த ஒரு எச்சரிக்கை உணர்வு, ஒரு கணக்கு போட்டு நகரும் பக்குவம், ஒரு கணிப்பு கணித்து வாழும் பேசும் யோசிக்கும் தன்மை உள்ளே பதிவிடப் படனும்.., புரியுதா?”

“அதாவது எவன் என்ன எழுதினாலும் படிக்கலாம், தெளிவு வேனும்றீங்க..”

“ஆங், அது மாதிரி தான்.., ஆனாலும், கையில பத்து புத்தகம் தராங்க, அதுல ஒரு புத்தகத்தை எடுத்துக்கோன்னு சொல்றாங்கன்னு வையி, அதுல எதை எடுத்தா அது நம்மை மேலும் கொஞ்சம் வளப்படுத்தும், எது இன்னும் கொஞ்சம் என்னை நேர்த்தியாக்கும், எது எனக்கு வாழ்வின் யதார்த்தத்தை பாகுபாடின்றி எடுத்து என்னை பிறர் நோகாது வாழும் கலையை கற்று தரும்னு பார்க்கும் மனோபாவம் வேணும். அது இருக்கணும். அது இருந்துட்டா; உனக்கு தேவையானது உன்னை வந்து சேரும்..”

“ஓ… சரி சாமி, ஒன்னு சொன்னா தவறா எடுத்துக்க மாட்டீங்களே..”

“நிச்சயமாக இல்லை.. கேளுங்க ஐயா..”

“அந்த சாமி பத்தி சொல்றன்னுன்னிங்க..???????!!!!!!! தவறா நினைத்துக் கொள்ளாதீங்க சாமி, அப்புறம் அவரு என்னவோ நான் அப்படி சொன்னதால தான் நீங்க அதை பத்தி பேசலன்னு என்னை திட்டுவாரு..”

“அப்படியா திருமேனியா..??? ரொம்ப கடிந்துக் கொள்வீங்களா? நம்ம கிட்ட வேலை செய்றவங்க நமக்கு பயந்து செய்தா அது பாவம். இது அவர்கள் வேலைன்னு அவர்களையே உணர்ந்து அதை செய்ய வைக்கணும், அது தான் சாமர்த்தியம்.. சரி விடு அதை பற்றி பிறகு பேசுவோம்..”

திருமேனியன் அவரை கூர்ந்து கவனித்துக் கொண்டார். சரி என்று தலையாட்டிக் கொண்டார்.

“நான் சொல்ல வருவதை முழுதுமா கேட்டுக்கோ திருமேனியா, பிறகு உன் விருப்பம். பொதுவா.., என்ன தான் கடவுள் பற்றி இருக்கு இல்லை என எத்தனை வாதங்கள் இருந்தாலும், யார் யார் என்னென்னவெல்லாம் சொன்னாலும், எல்லாத்துக்கான காரணமா ஒரு மூலசக்தி எங்கோ எதுவாவோ ஒன்றாக நிச்சயம் இருக்கு. அது நான் உணர்ந்த உணரும் என் உணர்வு.

நானுன்னு இல்ல நன்றியுணர்வும் தெளிவும் மிக்க எல்லோருக்குள்ளும் ‘ஒவ்வொரு அசைவிற்கும் ‘எல்லாவற்றிற்கும் மேலான ஏதோ உயர்ந்த ஒரு சக்தி இருக்கும்ற சிந்தனை, நம்பிக்கை, மானசீகமாக இல்லாமல் இல்லை”

“அப்போ உன்னை பொருத்தவரை சாமி இருக்குன்ற, அதானே சாமி?”

“ஏன் உன்னை பொருத்தவரை இல்லையா பின்ன? வெறும் கேள்வி கேட்க தான் விருப்பம்னா அதை பத்தி பேசி பயனில்லை, விட்டுடு. இதை பத்தி பேசாத. இல்ல, இதை ஆராய்ந்து தெரிந்துக்கொள்ள விருப்பமெனில் காத்திரு. இந்த கணம் என்றில்லை இன்னும் எல்லையின்றி காத்திருத்தலில் மட்டுமே புரியக் கூடும் அது.

அதுவரை, எல்லாவற்றையும் உற்று கவனி. எது சரி எது தவறென்று எடை போடு. யாரையும் நோகாமல் உண்மையை அலசு. புரிந்தவரை நண்பர்களிடம் பேசி அனுபவம் பகிர்ந்துக் கொள். எதுவாயினும் உன் புத்திக்கு தெரிந்தளவு மட்டுமே பேசு. பேசுமளவு மட்டுமே நம்பு.

ஒரு தேடலை உனக்குள் ஏற்படுத்தி கடவுள், இறை சக்தி, என எல்லாம் கடந்த நிலை தன்மைகளை ஆராய்ந்து வா. இப்படி மேலும் மேலும் ஆராயமுயல்கையில் மேலும் மேலும் எல்லாமே புரியக் கூடும். மேலும் பல சூழ்சுமம் புரிய தியானம் அவசியப் படும்.

தியானம்னா, அதான் அமைதியான உற்று நோக்கல், தவம் புரிதல், ஜபம் பண்ணுதல் எதுவாக வேண்டுமோ இருந்துபோகட்டும், ஆனால் ஒருமுகப்படுத்துதல் மட்டுமே தியானம் என்று கொள். தியானம் செய். தியானத்தினால் நம்முன் இருப்பது அத்தனையும் கடவுளில்லை கடவுளை தேட நம்முன்னோர் காட்டி வைத்துள்ள பாதை தான் இதெல்லாம் என்று மிகத் தெளிவாக புரியும்”

“ஓஹோ..”

“சட்டென்று இல்லை என்பதற்கும், ஆராய்ந்து பார்த்து வேறேதுவாகவோ இருக்கிறது என்பதற்கும், வித்தியாசம் உண்டு. ஆனால், எதற்காக எல்லாம் அடித்துக் கொள்கிறோமோ, பிறரை வஞ்சிக்கிறோமோ நிந்திக்கிறோமோ அதற்கெல்லாம் இனி அவசியம் இல்லை என்பதை தியானம் விரைவாக உனக்கு காட்டும்.

தியானம் செய்யசெய்ய எதை நோக்கி செய்தோமோ அதெல்லாம் கடவுளே இல்லை என புரியவைக்கும். கடவுளை எதுவென்று புரிந்துக் கொள்ள மாற்றுப் பாதையை ஏற்ப்படுத்தி தரும். இன்னும் ஆழமாக உணர்தலை உனக்குள் உருவாக்கும். இதலாம் தாண்டியும், அல்லது இதோடு நாமும் எல்லாமுமாக சேர்ந்து தான் கடவுளோ என்ற ஓர் பிணைப்பின், ஈர்ப்பின் நெருக்கத்தை புரியவைக்கும்.

எனக்கும் ஆரம்பமே புரிந்துள்ளது, ஆனால் மீதியும் புரிந்துவிடும் எனும் நம்பிக்கையை எனக்கு தந்தது தியானம். என்னை ஆழமாக சிந்திக்க வைத்தது தியானம். என் வாழ்வின் பாதைகளை திருத்தி என்னை நேர்வழி படுத்தி எனக்குள் நேர்த்தியான எண்ணங்களை உருவாக்கியது தியானம். தியானம் செய்யும் தினம் எனக்கு தோல்விகளில்லை அல்லது தோல்வியை சமாளிக்கவோ எதிர்த்து போராடவோ பக்குவப் பட்டேனும் விடுகிறேன்.

தியானம் தான் என் இத்தனை தூரத்து மையக் காரணம் என்பேன் திருமேனியா. தியானத்திற்கு; தியானத்தில் ஒருமுகப்படுத்தும் அந்த மனதிற்கு; அந்த அமைதியான அமர்தலுக்கு; அந்த சக்தி எங்கிருந்தோ வருகிறதெனில், அதை தரும் சக்தி எங்கோ ஒன்று இருக்கத் தானே வேண்டும்? சரியாக சொல்வதெனில்; ‘இல்லை என்று மறுக்க முடியாத அல்லது ‘ஏதோ ஒன்று உண்டு என்று முழுதாய் உணர்ந்து விட்டதாய் சட்டென சொல்ல இயலாத’ இடத்தில் தான் நானும் இருக்கிறேன் அப்பா.

ஆனால் இந்த வணங்கல்; என்னை நேற்படுத்தியதை மட்டுமே பிறருக்கும் தர எண்ணுகிறேன். அதை சார்ந்து மக்கள் தலையில் தூக்கித் திரியும் கடவுள் பேரில் நடக்கும் வெறியினையோ மூட பழக்க வழக்கத்தையோ அல்ல.

உங்களுக்கொன்று தெரியுமா, நான் கடவுளிடம் எத்தனை நம்பிக்கையோடிருக்கிறேன் என்பதை நீங்களும் உணர்வீர்கள் தானே, ஆனால் எனக்கு இந்த நாள் கிழமை சாஸ்திரம் சம்பிரதாயம் அதலாம் ஒன்னும் கிடையாது. குடும்பம் சார்ந்தோருக்காக அவர்கள் மனசு நோவாம ஊறுகா மாதிரி கொஞ்சம் தொட்டுக்குறதுண்டு. அதையும் நாங்க தனியா வந்த பிறகு அதலாம் நிறுத்திட்டோம்.

சொல்லப் போனா எனக்கு தடுக்கி விழுந்தா கடவுளேன்னு தான் தோணும், அசையும் பொருளின் ஒவ்வொரு நகர்தலிலும் அவனின்றி அசையாது அணுவும என்று நம்புறேன்..”

“இப்படியும் சொல்றீங்க அப்படியும் சொல்றீங்களே சாமி..?”

“நீங்க இதை அப்படி எடுத்துக்க கூடாது, எனக்கு அந்தளவு கடவுள் மீது நம்பிக்கை இருப்பதால, இதுபோன்ற மனிதர்களை வேறுபட்டு நிக்கவைக்கிற, மனிதர்களை நிந்திக்கிற, தன்னைத் தானே பொய்யாக்கிக் கொண்டு சிந்திக்கும் மனோபாவத்தயொயே ஒழித்து விடுகிற சில காரியங்கள்ல நம்பிக்கை இல்லை, அவ்வளவு தான். நம்பிக்கை இல்லைன்றதை விட, வைக்க வேண்டாம் என்றெண்ணுகிறேன். காரணம், என் மனிதர்களை நான் காத்துக் கொண்டால், என் மனிதத்தை மீதப் படுத்திக் கொண்டால் போதும்; எனை அவன் காக்கிறான் என்பதை உணர்ந்திருக்கிறேன் அப்பா.

ஆயினும், என்ன தான் நாம ஆத்மார்த்தமா மனதில் பக்தி கொண்டிருந்தாலும் ஆழ்நிலை தியானத்திற்கு சென்றாலும் ‘இப்போது நாம் வணங்குவதெல்லாம் வெறும் கடவுளை அடையும் வழி தான்; வழி மட்டும் தான்; இது மட்டுமே கடவுள் இல்லை’ என்பதனை தெளிவாக புரிய வைக்கிறதே தவிர, நாம் பார்க்கும் படங்கள் கேட்கும் கதைகள் நம்பும் கோவிலை கூட மறுக்கவே செய்கிறது ஆழ்மனசு. அதலாம் ஒரு நம்பிக்கைக்கான ஏற்பாடு அவ்வளவு தான். இதை பற்றி விவரமா வேணும்னா நம்ம “சாமி வணக்கமுங்க”ன்னு ஒரு ஆன்மிக குறுநாவல் தொகுப்பு இருக்கு அதை முழுக்க படித்துப் பாரு புரியும்”

“அப்போ கடவுளே இல்லைன்னு தெரிந்துக் கொள்ளவா தியானம் பண்ண? அதுக்கா எங்களையும் பண்ண சொல்ரீங்க சாமி?”

“நான் அப்படி மட்டும் சொல்ல வில்லை. இருந்தாலும், இதலாம் கடவுள் இல்லை என்று புரிவதே, ஏற்பதே பெரிய ஞானம் தான் அப்பா. அத்தனை வரை சிந்திப்பதே எல்லோராலும் எளிதில் இயலாத காரியம் தான். நாமெல்லாம் எங்கு தவறு செய்கிறோம் யோசித்தாயா?”

“……………..” அவர் பதில் பேசவில்லை, ஆனால், இதற்கு தான் உன்னை உதைக்க வந்தார்கள் போல் அன்று என்பதை மட்டும் மனதில் நினைத்துக் கொண்டார்.

“என்னங்கையா ‘என்னடா இவன் எசக்குபிசகா ஏதோ சொல்றானேன்னு பார்க்குறீங்களா?”

“இல்லைங்க சாமி, அன்னைக்கு நிகழ்ச்சில பிரச்சனையை வந்ததில்லையா, அது இதனால் தான் வந்ததோ என்று நினைத்துக் கொண்டேன்”

“சரியா தான் நினைத்திருக்கீங்க. ஆனா, நான் சொல்றதை நடுநிலை தனமா நிதானமா யோசித்து புரிந்துக் கொண்டீங்கனா, மனிதனுக்கு மத்தியில் மனிதன் மேல மதத்துக்காகவும் கடவுளுக்காகவும் கோபமோ வருத்தமோ வரவே வராது அப்பா; அது தான் என் எண்ணம்”

“எல்லார் கூடையும் இருந்து எல்லாம் செய்யி.,அதேநேரம், யாராலையும் வருத்தப் படாத, யாரையும் வருத்தமும் படுத்தாதன்றீங்க.. இல்லயா.. புரியுது.. சாமி”

“ம்ம்.. அதுமாதிரி தான்.., நாம எல்லாம் என்ன பண்றோம், கடவுள் இருக்குன்னு சொல்லிட்டு இல்லை என்பவனை திட்டுறோம், இல்லைனா, இல்லைன்னு சொல்லிட்டு இருக்கென்பவர்களை குறைகூறி கேலி பேசி ஏதேனும் ஒருவர் மனதை ஒருவர் புண்படுத்தும் நிலையில்தான் வாழ்கிறோம் இல்லையாயா”

“ஆமா.. ஆமா சாமி..”

“அந்த நிலையை இன்னும் கொஞ்சம் நடுத்தரமா சிந்தித்து மாற்றிக் கொண்டாலென்ன? மூடப் பழக்கம் உள்ளவனுக்கு சொல்லி புரிய வை, சும்மா இருக்கிறவனை ஏன் சீண்டுவான? அதேமாதிரி உனக்கு இருக்குன்னா நீ கும்பிட்டுட்டு போ, உன் நல்லதுக்குன்னு எதையோ சொல்ல நினைக்குற மத்தவனை ஏன் விரோதியா பார்க்குற?

இது தான் கடவுள் என்று உறுதியா ஓரிடத்தில் நின்று விடுவதால்,  நின்று பிற இல்லை என்போரை ‘கொன்று வருவதால், அந்த கடவுளின் பெயர் சொல்லி இதுவரை இறந்தவர்கள் எத்தனை பேர் யோசித்தாயா?

உண்மையில் இது தான் கடவுளெனில் இத்தனை பேரை அந்த கடவுள் சும்மா விட்டிருக்குமா? ஒரு உயிரை துடிக்க துடிக்க அறுத்துத் தர எந்த கடவுளேனும் கேட்குமா?

இன்று இந்த ‘தன் கடவுள் பெரிதென்று எண்ணும் புத்தியால் ஒற்றை மதமென்னும் போர்வை உடுத்தி, அதை கொச்சையாக்கி, குளிர்காயும் சண்டாளர்கள் எத்தனை பேர் பெருகி விட்டார்களே தவறில்லையா?

புனிதத்தை போர்வை எனப் போர்த்தி, காமப் பார்வை வீசி, தனை ஞானி என்று சொல்லிக் கொள்வதை காட்டிலும், இதற்கெல்லாம் காரணமான மதம் என்ற ஒரு வழி; வழி மட்டுமே, அதில் பொதிந்துள்ள அத்தனையும் நமக்கு எதையோ காட்ட முனையும் சில சிந்தனைக்குரிய நிலைகள் மட்டுமே வெறும் பாதை மட்டுமே என்றெண்ணி தூக்கியெறி மதமென்னும் சுயநலத்தை.

இயலுமெனில், எம்மதமும் சம்மதமென ஏற்று நில். இது மட்டுமே கடவுள், தான் வணங்குவது மட்டுமே தெய்வம் வேறெல்லாம் கல்லென்று புரிந்துக் கொண்டால், அதுவும் பிறரை நிந்திக்கும் செயலன்றி வேறென்ன? எனவே இதலாம் தவிர, இவைகளெல்லாம் இல்லாத வேறேதோ நம்மை கடந்த சக்தி ஒன்றே கடவுள் என்று புரி.

இது கடவுளிற்கான, கடவுளை அடைவதற்கான பாதை மட்டுமே என்று புரி. பிறகு நீ ஏன் இதற்காக என் மதம் என் கடவுளென ‘மனிதனையோ பிற உயிர்களையோ கொள்ள போகிறாய்? யாரையும் கொள்ளாது மனிதம் காக்க துணிவது தானே ஞானம். அது இதில் இருக்கு என்பதை விட இதில் இல்லை என்பதில் கிடைக்கிறதெனில் மறைப்பானேன்?”

“அப்போ நம்ம பண்றது எல்லாமே அவசியமற்றது தானா வழிபாடே வேண்டாம் றீங்களா?”

“இல்லை இல்லை, அதை சொல்ல நான் யார்? இங்கு ஒன்றை கவனிப்போம். பட்டம் முடிப்பது நம் லட்சியம். பட்டப் படிப்பிற்கு முதலாம் வகுப்பு பாடங்களும் வேண்டாம் என்று சொல்லத் தகுமா?”

“அதெப்படி.. முடியாதே..சாமி”

“அப்படி தான், இதுவும். சற்று தேவையாக உள்ளது. நம் பின் வருவோருக்கு, குழந்தைகளுக்கு இதுபோன்ற நம்பிக்கயை ஏற்படுத்தும் அளவிற்கு மட்டும் அவசியமாக உள்ளது. ஆனா குழந்தை வளர வளர நாம தான் எதை எதற்கு செய்தோமென்றும் சொல்லித் தந்து, அதன் மூலம் அவர்களை தெளிவா சிந்திக்கவும், தேவையற்றவைகளை களைந்து விடவும், இது நம் வீடு இதை நாம் தான் மெல்ல மெல்லவேனும் சரி செய்துக் கொள்ளவும்வேண்டுமென்று முற்படுத்தனும்.

அதுபோல எடுத்த உடனே மதத்தையோ சாதியையோ சட்டுன்னு உதறி தூக்கி வீசிடவும் உன்னாலோ அல்லது என்னாலோ எல்லோராலும் உடனே ஆகாத காரியம். உலகம் முழுக்க இது தான் சரி, இது தான் கடவுள்னு ஊறி போச்சி. ரத்தத்தோட ரத்தமா அணுவோட..அணுவா நமக்குள்ள சிற்றணுவாகூட பரவி போச்சி. என்ன ஒரு அறை அறைஞ்சி பார்.. ‘ஐயோ ஈஸ்வரான்னு தான் கத்துவேன். “

“அதெப்படி சாமி நீ சரியான ஆளு போ..”

“இரு இரு அவசரப் படாத. வேறென்ன செய்ய.., நான் அப்படி கத்துற மாதிரி தானே வளர்ந்திருக்கேன். நாம எல்லோரும் அப்படி தான் வளர்ந்திருக்கோம். வளர்க்கப் பட்டிருக்கோம். இடையில பட்டுன்னு எதையும் நம்பாதே, எல்லாத்தையுமே யோசி, நான் திடீர்னு வந்து எல்லாம் பொய்யின்னா ஏத்துக்குவியா? முடியுமா? முடியாதில்லையா??”

” அப்போ ஆகமொத்தம் நாம செய்யறதெல்லாமே தப்பூன்ரீங்களா சாமி?”

“கண்டிப்பா இல்ல திருமேனியா. நான் சொல்ல வரதையே நீ புரிந்துக் கொள்ள மாட்டேன்றியே. நான் சொல்ல வரது கடவுளை மொத்தமா இல்லைன்னு அல்ல, அதை என்னாலும் கூட ஏற்க முடியாது ஆனா எதற்காக அடித்துக் கொள்கிறோமோ எதற்காக வெட்டி மாண்டுக் கொள்கிறோமோ எதற்காக நான் நீயென மனிதரை மனிதரே கொள்கிறோமோ அதலாம் பொய்யி…., விட்டுடுங்கோன்றேன்.

அதுக்காக ஒண்ணுமே இல்ல, எல்லாத்தையும் விட்டுடனும்னு நான் சொல்ல வரல. ஆனா யோசி, நடுத்தரமா யோசி, எதை எதற்காக செய்கிறோம்றதை மட்டும் சிந்தித்துக் கொள். மனிதன் முக்கியம், மனித உணர்வுகள் முக்கியம்றதை மட்டும் லட்சியமா வைத்து சிந்தித்து வா. உன்னை யோசிக்க வைப்பது தான் என் வேலை, அதுக்கு தான் தியானம் செய்யுன்னேன்.

—————————————————————————————

மாலன் சொல்லிவிட்டு அவர்களை பார்க்கிறார். அவர்கள் தியானத்தை பற்றி கேள்வியெழுப்புவதற்குள் அவரேசொல்கிறார்.. ஆனால் அதை அடுத்த பதிவில் பார்ப்போம் – காற்றின் ஓசை – தொடரும்..

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காற்றின் ஓசை - நாவல் and tagged , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to காற்றின் ஓசை (13) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்!

  1. Venkadesan சொல்கிறார்:

    அருமையாக எழுதியள்ளீர்கள். ஒவ்வொருவரும் மிக எளிதாக புரிந்து கொள்ளும் விதத்தில்…, மக்களுக்கு நல்லது செய்யும் விதத்தில், யோசிக்கத் தூண்டும் அளவில் எழுதியுள்ளீர்கள். ஒரே கருத்தைப் பலர் பலவாறு வெளிப்படுத்துவர். ஆனால், அனைவரையும் சென்றடையும் விதத்தில் உள்ளது உங்களது… எழுத்து..

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி வெங்கட். யாருக்கும் தீர்வு சொல்லும் அளவில் எல்லாம் ஞானமும் பெற்றுவிடவில்லை, அதேநேரம், அறிந்ததை நம்மளவுக்கேனும் அறியாதோருக்கு சொல்லும் முயற்சி. படிப்போரை இது இது இங்ஙனம் என்று சொல்லி அதற்கு மேல் அவர்களையே சிந்தித்துக் கொள்ள சொல்லும் நோக்கம். தங்களை போன்றோரின் புரிதலில், மெச்சுதலில், அடுத்த பாகம் எழுதுவதற்கான கோணம் எளிதில் பிடிபடும். அனேகம் இன்று பதிந்து விடுவேன்.. மிக்க நன்றி!

      Like

  2. பிங்குபாக்: காற்றின் ஓசை (14) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்!! | வித்யாசாகரின் எழுத்து பயணம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s