காற்றின் ஓசை (14) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்!!

இதற்கு முன் நடந்தது..

வாழ்வின் அனுபவங்களின் முக்கிய கூறுகளை, ஆரோக்கியமான சிந்தனைகளை பிறரிடம் பகிர்ந்துகொள்ளும் அக்கரையில் நீள்கிறது எனக்கான பயணம் திருமேனியா.

சுவற்றில் அடிக்கும் ஆணி போல் என் எண்ணங்களை உங்களுக்குள் குத்தி ஆழப் பதியவைக்க எண்ணவில்லை. அதே சுவற்றில் பூசும் ஒரு புதிய வண்ணத்தினை போல் ஒரு ஒத்திகைக்கு என் எழுத்தினை காட்டுகிறேன். இல்லை இல்லை இது சரியில்லை இது வேண்டாம் இது அத்தனை நல்லதில்லை யென்று நினைத்தால்; அதை அகற்றிக் கொள்வதும், அதைவிட நல்ல வண்ணங்களை பூசி உங்களை மிளிரச் செய்துக் கொள்வதும் உங்கள் திறன் மட்டுமே.

காரணம், யார் ஒருவர் சொன்னதையும் முழு பாடமாக எடுக்காமல், எனது சிந்தனைக்குட்பட்டதையே என் படைப்பாக பகிர்ந்து கொள்கிறேன். அது எத்தனை சரி என்பதற்கு என் வாழ்வின் வெற்றிகள் சாட்சியாயினும், அதை எடுத்துக் கொள்ளும் நிராகரிக்கும் பொருப்பு உங்களை சார்ந்ததே.

இங்கு இன்று தியானத்தை பற்றி சொல்லும் முன், ஒரு முக்கிய விடயத்தை சொல்லிவிடுகிறேன். கடவுளை பக்தியோடு வணங்கும் பலரில் சிலர் ஏனோ பெரியார் என்றாலே கைசுட்டுவிட்டது போல் பார்க்கிறார்கள், கண்டிருப்பீர்கள் நீங்களும்..” மாலன் அவர்களை பார்த்து கேட்கிறார்.

அவர்கள் “ஆம், அவர் தான் கடவுளையே கும்பிடாதே என்றாராமே..?!!”

“சொன்னாராம்.., எனை கேட்டால், முற்றிலும் மனிதத்தை முன்னிறுத்தவே எண்ணினார் பெரியார் என்பேன். அதற்கு கடவுள் மறுப்பினை அந்நாளிற்கான அல்லது அவருக்கு உகந்தது போல் ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டார். ஆனால் அவரின் நோக்கம் கடவுளை இல்லை என்று முற்றிலும் மறுப்பதற்கானது மட்டுமல்ல, அதை வைத்து இம்மூடப் பழவழக்கத்தை ஒழித்து அழிந்து வரும் மனிதத்தை எப்படியேனும் நிலைநிறுத்திட வேண்டும் என்பது தான்’ என்று நான் எண்ணுகிறேன்.

இன்றைய நிலைக்கு நமக்கே நாம் காணும் விஷயங்களில் பல நம் அறிவை உறுத்துகையில் ஐம்பது வருடம் முன் இருந்த நிலை என்னவாக இருந்திருக்கும்? அதிகம் வேண்டாம், இப்போது கணிசமாக குறைந்துள்ள உயிர்பலியிடல் முறையை பாருங்கள், தன் வேண்டுதலை நிறைவேற்ற ‘பிற உயிரை கொல்லும் அச்செயல் எவ்விதத்தில் நியாயமானது?

மனிதற்குள் தாழ்ந்தவன் உயர்ந்தவன் என ஒதுக்கி ஒரு மனித குலத்தையே பல ஆண்டுக்கு பின்தள்ளி வைத்துவிட்டது தவறில்லையா..? கூனி குறுகி இன்னொரு மனிதன் எனக்கு கைகட்டி நிற்க வேண்டும் என்று எண்ணுவது எவ்விதத்தில் சரியாகும்? அவரவர் தாய்தந்தையை தொழாத கரங்கள் என் காலில் விழுந்து வணங்குவது எப்படி சரியாகும்?

ஊரெல்லாம் சுத்தம் செய்யும் வேலையில் உள்ளவர் சற்று அழுக்கடைந்திருக்கலாம், அதற்காக அவருக்கு பின் வரும் அவர் தலைமுறையும் நாற்றமுடையவர்கள் தான் அல்லது அதை செய்யத் தான் அவர்கள் தகுதியுடையவர்கள் என்று ஒரு குலத்தையே ‘ஒரு பிரிவினராக ஒதுக்கி தாழ்த்தி வைப்பது எந்த விதத்தில் நியாயமாகும்?

இன்றைய இந்த குறுகியகால அசூர வளர்ச்சியில் பெண்களின் பங்கு அதிகம் இருப்பது நமக்கு எத்தனை பலம்? அதை அன்றெல்லாம் இந்தளவிற்கு இல்லாமல் இழந்துதான் இருந்தோம். ஆண்பெண் உடலால் பிறப்பால் மாறுபட்ட இரு இனமாக இருக்கலாம் அதற்காக அவர்களை ஒன்றன்கீழ் ஒன்றாக வைத்து ஒருசாராரை தன் காலுக்கடியில் அமரவைப்பது இயற்கைக்கே மறுப்பானதில்லையா?

அதேநேரம் பெண் விடுதலை எனும் போக்கில் முற்றிலும் பண்பிழந்த நிலையினை பெண்கள் சிலர் அடைவதும், அதை சரியா தவறா என்று யோசிக்காமலே பொழுதுபோக்க நினைத்து செய்யும் வாதமும், இவ்வாதத்தை வைத்து பிழைப்பு நடத்தும் ஒருசிலரின் வக்கிரசெயலும் வாழ்வின் நல்ல நிலைக்கு பொருந்துமா எனில், இல்லை என்பதை நிறைய பேர் ஏற்ப்படுமில்லை..,

என்றாலும்,

மனைவி இறந்த மறுநாளே திருமணம் செய்துக் கொள்ளும் ஆணின் உணர்வுகள்; அதே இன்னொரு பெண்ணின் கணவன் இறந்துவிட்டால் மட்டுமென்ன கழற்றி எறியவா பட்டுவிடும்? பிறகு அவளை விதவை என்று சொல்லி வாழ்க்கையை பிடுங்கிக் கொண்டதல்லாமல், நாமே அவளை பார்த்து ‘நீ எதிரே வந்தால் அமங்கலம்’ பாவம் செய்தவள்’ முண்டச்சி என்றெல்லாம் பழித்தால், ‘அது எந்த தர்மத்தில் சேரும்?

என் மதம் பெரிது என் ஜாதி பெரிதென்று இன்னும் எத்தனை மனிதரை தன் சுயநல கர்வத்திற்கும் கௌரவத்திற்கும் நாம் கொல்லப் போகிறோமோ? வாழ்வின் திசை தெரியாப் பறைவகளாக பறக்கும் நமக்கு உண்மை எதென்று தெரியும் முன்னே இத்தனை பாகுபாடும் மனிதகுல ஒழிப்பு செயலும் ஏனோ???!!

வாஸ்து, செவ்வாய் தோஷம், திருமண ராசி இல்லை, நேரம் சரியில்லை, ராகு பிடிக்கும், சனியன் பிடிக்கும், சாமி கண்ணை குத்தும், தீட்டு படும், கண்பட்டு போகும்…. வலதுகால் எடுத்து வை, இடது கை இழுக்கு இப்படி இன்னும் எத்தனை எத்தனையை சொல்லி நம்மை நாம் பின்னுக்கு தள்ளிக் கொள்ளப் போகிறோமோ???

சாமியார் வேஷம், கடவுள் பெயரில் சூழ்ச்சி, மதவெறி, ஜாதிவெறி, மூடப் பழக்கம், பெண்ணடிமை, தீண்டாமை இதலாம் இன்னமும் தவறேயில்லையா? தவறெனில் அதை திருத்திக்கொள்ளும் பொறுப்பும் நமக்குரியதே இல்லையா???

ஆம் எனில் அதைத்தானே பெரியார் நமக்கும் உணர்த்த முயன்றார்?

என்னடா இவன், தியானம் பற்றி சொல்றேன்னு சொல்லிட்டு திடீர்னு பெரியார் பற்றி கேட்கிறானே என்று பார்க்கிறீர்களா திருமேனியா..?”

“எதனா காரணத்தோட தான் சொல்லுவீங்கன்னு தெரியுமே, சொல்லுங்க சாமி”

“காரணமுண்டு, நாம் தியானம் சாமி கடவுள்னு எல்லாம் பேசறதால திரும்ப நம்பிக்கையெனும் பெயர்ல வேறேதேனும் பல மூட தனத்தில் சிக்கிவிடக் கூடாதில்லையா.., அதனாலதான் இதையும் சேர்த்து சொல்றது. ஒரு ஆண்டிபயோடிக் மாதிரி”

“ஆண்டி!!!!!!!!!!!!!!!!????????????”

“ஏண்டிபயோடிக். நோய் தடுப்பு மருந்து மாதிரி, வரும் முன் காப்போம்னுவோமே அது. ஏன்னா, பக்தின்றது தன்னை மேன்மைபடுத்திக்க தானே யொழிய, பிறரை வருத்தவோ துன்புறுத்தவோ பிறருக்கு நம்மால் தொந்தரவினை ஏற்படுத்துவதற்காகவோ இல்லை, இல்லையா?”

“சரிங்க சாமி..”

“மேல பேசுன்றியா??”

“இல்ல புறப்படும் நேரமாச்சி சாமி”

“சரி தியனாம் பத்தி சொல்லிடறேன், தியானம் பற்றி பேசணும்னா, பெருசா ஒண்ணுமில்ல, உன் விருப்ப தெய்வத்தை மனதில் நினைத்து, அந்த கடவுள் எனும் சக்திக்கு தான் முழுவதும் சரணடைவதாக ஏற்று, அந்த சக்தியை மையப் படுத்திய சிந்தனையோடு, வேறு குழப்பங்களோ அல்லது வேறு எதை பற்றியான சிந்தனையோ இன்றி, அமைதியாய் அமர்ந்து ‘நெற்றியின் நடுமத்திக்கு பார்வையை செலுத்தி, ஆழ அதையே உற்றுநோக்கி, சுவாசத்தை சீராக்கி, சீரான சுவாசத்தை கவனித்து, நேராக பத்மாசனத்தில் அல்லது ஏதேனும் ஒரு நேராக இருக்கத் தக்க நிலையில் இருந்து, ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு வேறெந்த எண்ணம் பற்றியும் சிந்திக்காமல், முழு இறைபக்தியோடு அமர்வது தான், மீண்டும் மீண்டும் கடவுளின் நாமம் சொல்லி தன்னை மறப்பது தான் தியானம்.

அதாவது, கண்களை நேராக பார்த்தவாறு மூடி, கடவுளின் நாமத்தை மனதிற்குள்ளேயே உச்சரித்தாலும் உதடு அசைய அசைய அதை காதால் கேட்பது போல் உச்சரிகையில் மனது சற்று எளிதாக குவிவதை காணலாம். உதாரனத்திக்று ‘ஓம் நாம சிவாய’ என மனதிற்குள் அழைப்பதை, உதடுகள் அசைய உச்சரித்து  அதை காதால்  கேட்பது போல், புத்தியில் அந்த சப்தத்தை மட்டும் கவனிப்பது போல் தொடர்ந்து உச்சாடனம் செய்ய, மற்றவை, விரைவில் விலகி, மனது தானே  தியானத்தில் குவியும்.

இதை, ஒரு நாளைக்கு இரண்டு வேலையும் செய்வது நல்லது, அதிலும் குறைந்தது இருபது நிமிடமாவது செய்யலாம். நான் காலையும் மாலையும் அரை மணி நேரம் செய்வேன்.

“இவ்வளோ தானா தியானம்????”

“இல்லை அப்பா, இது செய்ய செய்ய பிறகு நீயே புரிந்துக் கொள்வாய் தியானம் என்றால் என்னவென்று. அது நீ செய்ய செய்ய தானே உன்னை உள்ளிழுத்துக் கொள்ளும். இதில் இன்னும் நிறைய இருக்கு, ஆனாலும் ஆரம்பத்திற்கு இது போதும்.

பொதுவாக தியானம் பழகும் போது, ஒரு குருவை வைத்து பழகுவது தான் சிறந்த முறை என்பார்கள். ஆனால், எல்லோருமே குருவை எதிர்பார்த்திருந்தால் பிறகு எல்லோருக்கும் அல்லது எல்லா இடத்திலும் தியானம் சாத்தியமாகாது இல்லையா? அதனால ஒரு ஆரம்ப பயிற்சி மாதிரி இம்முறைய செய்யலாம். தியானத்தில் பல சிறப்பு இருக்கு அதுல ஒன்னு என்னன்னா ‘நீங்க முதல்ல தியானம் செய்ய ஆரம்பித்தாலே போதும், மீதியை அது எவ்விதம் சரி என்று தானே உங்களுக்குப் புரியவைக்குமாறு தான் அடுத்த எல்லாம் நிகழ்வுகளுமே அமையும்”

அதிலும் இன்றைய நிலையில் பார்த்தால் தியானம் பற்றி பலவாறு பல பேச்சு உள்ளது. தியானத்தை குருமார்களே கூட பல வகையில் அவரவருக்கு ஏற்றது போல அவரவர் முறையில் கூறியுள்ளனர். எது எப்படியாயினும், இதை ஒரு பக்தி சார்ந்த பயிற்சி போல எண்ணி ஒரு நாலு நாள் தொடர்ந்து தியானம் பண்ண அமர்ந்துட்டா போதும், மீதி நாள் தானாக கைகூடும்.

என்னஒன்னு, அடுத்தநாள் தியானம் செய்துவிட்டு எழுந்திருக்கும் போது தன்னை ஒரு பெரிய சாமியார் போல நீனைத்துக் கொண்டு, வாயிலிருந்து லிங்கம் கக்கலாமா, பொண்ணுங்க மத்தியில் சூ மந்திரக் காலின்னு சொல்லி பூ எடுத்து தரலாமான்னு எல்லாம் எண்ணம் வந்துடக் கூடாது.

தியானம் மனிதன் தன்னை நேர்த்திப் படுத்திக் கொள்ள விழையும்போது, அது மேலும் மனிதனுக்கு அதற்கான கூடுதல் சக்தியை தருகிறது’ என்பது என் நம்பிக்கை. அதை நம் முன்னோரும் பலர் பலவாறு வலியுறுத்தியும் உள்ளார்கள்.

என்னை பொருத்தவரை, தியானத்தை விளக்கேத்தி வைத்து அதன் சுவாலை பார்த்து, பார்த்தவாறே கண்மூடி, ஓம் நம சிவாய  என்று சொல்லியோ, அல்லது தேவாலயத்துக்கு போயி முட்டிப் போட்டு கர்த்தாவே கர்த்தாவே என்று தியாநித்தோ, மசூதியில் அமர்ந்து சுபான் அல்லா  சொல்லியோ  எப்படி வேணும்னாலும் சொல்லிக்கலாம், சொல்லிக்கோ; அது தப்பில்ல. ஆனால், எழுந்து வரும் போது எல்லாம் மீறிய சக்தியை உணர்ந்த திருப்தியோட மட்டும் எழுந்திரு. இதெல்லாம் தாண்டி மனிதன் பெரிதென்ற உணர்வோட எழுந்திரு. பிற மதத்தினரை பாக்கும்போது ‘அவனும் பாவம் நம்மலை மாதிரி தானே கடவுளை தேடி அலையறான்ற’ பொது மதநல்லிணக்க சிந்தனையோட எழுந்திரு. எல்லாம் மதமும் கடவுளை காட்டும் வழி மட்டுமென்ற புரிதலோட மட்டும் எழுந்திரு ‘அது தான் முக்கியம். இதலாம் மதவெறியை அறுக்க நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு புரிந்துணர்வு. பக்தி கூடவே இதையும் வளர்துக்கணும், அப்பதான் மனிதனை மதமின்றி மனிதனா பார்க்கமுடியும். சாமி இல்லைன்னு நான் சொல்லும் நோக்கம் கூட இவைகளை முன்வைத்துத் தான்.

“நீ சொல்றது சரி தான் சாமி.. எல்லோரும் இப்படி யோசித்தா கடவுளுக்குன்னு மனிதனும் சாவ மாட்டான், மனுசனுக்கும் கடவுள் வெறுக்காது”

“அதுதான். மனிதன் தான்.. உயிர்கள் தான் முக்கியம். அதோட, மொத்த உயிர்களோட நன்மை வேண்டி தான், மேன்மைக்கு உறுதுணையாகத் தான் இத்தனை உருவாக்கப் பட்டது. இதை மட்டும் உணர்ந்துட்டா பிறகு இதற்காக என் மதம் பெருசு, என் சாமி பெருசுன்னு சண்டை போட மாட்டல்ல? அதுக்காக யாரையும் வெட்ட மாட்டல்ல? அதுக்காக மனிதம் கொன்று திரிய மாட்டல்ல? ஆனால் நான் சொல்றதெல்லாம் பாதி கிணறு போன உத்தி தான்..
———————————————————————————————–

மீதியை பிறகு கேட்போம் – அதுவரை – காற்றின் ஓசை – தொடரும்…

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காற்றின் ஓசை - நாவல் and tagged , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s