காற்றின் ஓசை (15) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்!

வாசல்ல சாணி தெளிச்சா கிருமி நாசினி, மாவுல கோலமிட்டால் சிற்றுயிர்களுக்கு உணவு கிடைக்கும், உணர்வு கூடுமிடங்களில் தங்கம் அணிந்தால் அழகோடு உஷ்ணமும் இறங்கும், நல்ல விழா நாட்கள் வைத்தால் வாழ்வு குதூகலப்படும், தெய்வ நம்பிக்கை கூட்டினால் கர்வமும் பேராசையும் அற்று போகும், தானம் செய்யும் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டால் எளியோரின் வாழ்வும் சிறக்கும், மனதை ஒருமுகப் படுத்திக் கொண்டால் மனித பலம் ஆத்மபலமாக உடலெங்கும் பரவும், வாய் வார்த்தைக்கு அதிர்வேற்படுத்தும் சக்தி உண்டு, பார்வைக்கு சக்தி உண்டு, வானில் பறக்கும் பறவைமுதல் நகரும் சூரியனின் மாற்றம்வரை கூட ஒரு மாறுபட்ட சூழ்நிலையை ஏற்படுத்தலாம் எனும் அனுமானம், இது இப்படி நடந்தால் இது இப்படி நடக்கும் எனும் சாத்தியக்கூறுகளின் கணிப்பு என நம் முன்னோர் சொல்லிச் சென்ற நல்லவைகள் பல இல்லாமலில்லை.

அவர்கள் சொன்ன ஒவ்வொன்றிற்கும் அன்று ஒரு அர்த்தம் இருந்தது, அன்றைய பொழுதில் இடம் பொருள் ஏவல் கருதி சிலது தேவையாகவும் இருந்தது. எனவே அதை அவர்கள் சரிசமமாக எல்லோருக்கும் சொல்ல வெகுபாமரத் தனமாகவே சிந்தித்து படிக்காதவரும் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் சொன்னதில் தவறில்லை.

அதையே நாமும்; எதற்கு செய்தார்கள், அது இப்பொழுது தேவையா, இந்த சூழலில் அது சாத்தியப் படுமா, இதையே நானும் செய்வதால் என் தலைமுறையும் இத்தவறை செய்யாதா என்று யோசிக்காமல் கண்மூடித் தனமாக செய்ததில், அதீத நம்பிக்கையும் பயவுணர்வும் மேம்பட்டதில், தான் செய்பவை எவ்விதத்தில் சரி எவ்விதத்தில் தவறு என்று கூட சிந்திக்காமல் தான்தான் சரியாக செய்கிறோமென்று கர்வம் கொண்டு விட்டதில், மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை அலட்சியம் செய்ததில் அல்லது அவர்களுக்கு செவியுறாமலே நிராகரித்ததில், மாறுபட்டு சிந்தித்ததன் பேரில் ஏற்பட்ட பொறாமையில் நிகழ்ந்துபோனது நமக்கான ஒட்டுமொத்த தவறுகளும்.

நிறைய விசயங்களை அவர்கள் அக்காலத்திற்கேற்றார்போல் எப்படி சொன்னார்கள், அதை நாம் இப்போது எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதற்கிடையில் தான் துளிர்க்கிறது நமக்கான தவறுகள் மூடப்பழக்கங்களாகவும் அர்த்தமற்றதாகவும் இன்றைய பொழுதின் அவசியமற்றதாகவும் கூட’ என்று சொல்லலாம்.

உதாரணத்திற்கு, இருப்பவர் அடித்துக் கொள்ளும் வீண் டம்பத்தினாலும் ‘நான் தான் பெரியவனெனக் காட்டிக்கொள்ள பணம்படைத்தோர் புரியும் ஆடம்பர செயலாலும் இயலாதவரின் இல்லாதவரின் மனசு வெகுண்டு காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டு பொறாமை கொண்ட மனோபாவத்தில் ஏற்பட்ட எண்ணத் தாக்கம் பிறரையும் துன்புறுத்தும் என்பதை, கண்ணார் படுமென்று சொல்லி, அது போவதான நம்பிக்கையை ஏற்படுத்த சுத்திப் போட்டால் சரியாகும் என்று சொன்னனர். அதையே ஏன் இக்கலாத்திலும் அப்படியே எடுத்துக் கொண்டு, அதை வளர்த்தும்கொண்டதில் பூசணிக்காய் தெருவில் உடைந்து வாகன விபத்துக்களை ஏற்படுத்தியதும் பண விரயம் ஏற்பட்டதும் அதை கண்டு ஏளனமாய் பலர் சிரிக்க ஆளானதும் தான் மிச்சம்.

இக்காலம் அது அல்ல, நாலு பேருக்கு சொல்லி நாலு பேர் வாழ்த்த அந்த அதிர்வினால் ஒரு குழந்தையின் வாழ்வு வளமாகும் சாத்தியமும் உண்டு. ஆனால், நம் சந்தோஷம் பிறர் கண்ணை உறுத்தாமல் இருக்கவேண்டும். நம் மகிழ்வினை பகிர்வது கூட பிறரையும் மகிழ்விக்குமாறும் பிறரையும் நல்லவை சார்ந்து சிந்திக்குமாறும் அமைத்துக்கொள்ள வேண்டும். அங்ஙனம் இயலுமெனில் ‘பூசணிக்காய் உடைக்கும் பணம் பட்டினியில் வாடுவோருக்கு பசியாற்றவாவது மிஞ்சும்.

அக்காலத்தில், இதுபோன்ற நிறைய விசயங்களை நல்லவை நோக்கி அவர்களின் புத்திக்கு ஏற்றவாறு சொன்ன ‘நம்ம பெரியவங்க ‘முழுக்க’ எல்லோருமே முட்டாளுமில்லை. அன்றைக்கு புரியிற மாதிரி அவ்வளோ சொன்னாங்க, நாம் இன்றைக்கும் அதையே பிடித்துத் தொங்காம சரியாக சிந்தித்து அவசியம் சார்ந்து எது தேவையோ, எது எது சரியோ அதை எடுத்துகிட்டு தவறோ அல்லது அவசியமற்றதோ இருந்தா அதை அறவே ஒழித்து, கால மாற்றங்களுக்கு ஏற்ப எதையும் யதார்த்தமாக எடுத்துக் கொள்ளும் மாற்றிக் கொள்ளும் சிந்திக்கும் மனப்பான்மையை குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்து, இதை இதற்காக செய்கிறோம் என்ற புரிதலோடு பிள்ளைகளை வளர்த்து வருவோமானால்; எதிர்காலத்திலாவது பெரியோர்கள் சொன்ன நல்லவைகளை எடுத்துக் கொண்டு ‘நடுவே கலந்த தீயவைகளையும் அறியாமையில் தொடரும் மூடப்பழக்கவழக்கங்களையும் கைவிட ஏதுவானதாக இருக்கும்.

அதேநேரம், எதையோ சொன்னார்களென்று நினைத்து எதைபற்றியும் சிந்திக்காமலேயே பெரியவர்களை இகழ்வதும் தவறு தான். மொத்த கடவுள் நம்பிக்கையே பொய் என்று சொல்லி அறியாமையில் இருப்போரை தெளிவுபடுத்தாமல் மொத்தமாக துண்டித்து எறிவதும் அல்லது அவர்களை அங்கிருந்து நகற்றி இன்னொரு பிரிவுணர்விற்கு உட்படுத்துவதும் வேறொரு புதிய கலாச்சாரத்திற்கு ஆட்படுத்துவதும் தவறுதான்.

நாமெல்லாம் இத்தனை சிந்திக்கும் மனப்பான்மையோடு இவ்வளவு தூரம் இங்கு வர, இங்கு வந்து நிற்க, அதற்கு மேல என்னன்னு யோசிக்க, இத்தனை வரை சரி தவறை அலசி சிந்திக்க, இவையெல்லாம் யார் மனசும் புண்படாம புரிய ‘இந்த கடவுள் உண்டுன்ற உணர்வு தேவை. ஆனால் சண்டையில்லாம தேவை. போட்டி.. பொறாமை.. தனது தான் ஒசத்தின்ற ஆணவம் இல்லாம தேவை. அதுக்கு மேலயும் என்ன இருக்குன்னு பார்க்க வேணாமா.., அதுக்கு தான் தியானம்”

“அப்படி போடு, எங்க சுத்தி எங்க வந்து எங்க போனாலும் கடைசியா தியானத்தை விடமாட்ட போலிருக்கே சாமி”

“விட முடியாதுப்பா. தியானம் பெரிது. பெரிய சக்தி மிக்க ஆயுதம் தியானம். எனக்கு தியானத்தால தான் இத்தனை விளங்குச்சின்னு அடிக்கடி நினைத்துக் கொள்வேன். தியானத்தின் பலன் உள்ளே ஊறி என்னை வலிமை படுத்தும்போதும் ஆனந்தப் படுத்தும் போதும், கடவுளின் மீதான வெறி விலகி தனை மறந்த அன்பும் நன்றியும் தானே உள்ளே மிகுந்துவிடும், கடவுள்; பெரிய புனிதம் திருமேனியா..”

“வேற, அவுர்தான் சாமி எல்லாம், கடவுள் இல்லாம ஒரு அணு அசையுமா???”

“அசையாது தான் அப்பா. எனக்கு எல்லாமே கடவுள் தான், எனக்கு நடக்கும் நன்மைகளுக்கான காரணத்தை கடவுளின் செயலென்று எண்ணிக் கொள்வேன். தவறிற்கு காரணம் நானாகவே இருப்பேனென்று என்னையே ஆராய்ந்து திருத்தமுயல்வேன். கடவுள் தான் என்னை மறைமுகமாக வளர்த்த அம்மையப்பன் மாதிரி.

அழுவதென்றால் கூட தனியே அமர்ந்து இறைவான்னு அவரிடம் சொல்லி அழுதா தான் மனசு இலகுவாகும். ஆனாலும், நாம இங்க பேசறது வேற. கடவுள் இல்லைன்னு நாம பேசல. இதலாம் மட்டுமே கடவுள் இல்லைன்னு தான் பேசுறோம்”

“புரியுது சாமி.., அதான் இவ்ளோ………….. நீட்டா………. சொன்னியே” திருமேனியனை தாண்டி அமர்ந்திருந்தவர் தலையை எட்டிப் பார்த்து சொன்னார்.

“சரி, அப்போ எது கடவுள்?” மாலன் அவர்களை பார்த்து கேட்டார்.

“அதையும் நீ தான் சொல்லணும். அதான் எதுமே இல்லன்னியே!!!!?”

“இல்ல இல்ல.., எதுவுமே இல்லைன்னு சொல்லல. இதலாம் ‘மட்டும்’ இல்லைன்னு சொன்னேன். முழுக்க இல்லைன்னு சொல்ற அளவுக்கு நான் பக்குவம் அடையல. கடவுள் வேணும். நம்ம போல உணருகிற அளவுக்காவது வேணும். சண்டையில்லாம, மதமென்னும் வெறி இல்லாம, பல சச்சரவு வளர்க்கும் பிறரை வருத்தும் காரண காரணிகள் இல்லாம, ஒருவரை ஒருவர் வெட்டி மாளும் போர் இல்லாம ‘கடவுளை புகட்டும் பாடம்’ கண்டிப்பா வேணும்”

“புதுசா கண்டுபுடிக்கனும்ன்றியா சாமி?”

“இருப்பதே நம்மை அழிக்கிற அளவுக்கு அதிகமா தான் இருக்கு. முடிந்தால் எல்லாத்தையும் எடுத்துடலாம். குறைத்திடலாம். அது உடனே முடியாது. அதனால புதுசா எதுவும் வேணாம், வேணும்னா இருக்கறதுல எதை வேணுமோ எடுத்து, எது சரியோ அதை எடுத்து, எந்த வழி பிறந்தோமோ அதன் படி நடந்து அவற்றுள்ளும் எதெல்லாம் தவறோ.. சரியில்லையோ.. அதையெல்லாம் விட்டுவிடலாம். அப்படி விட விட மெல்ல மதவேறியோ, தேவையெனில் மதமோ கூட தன்னால அற்று போகும்”

“அது என்ன தவறுன்னு ஒன்னு சொல்றீங்க பிறகு சரியில்லைன்னு ஒன்னு சொல்றீங்க? ரெண்டும் ஒன்னு தானே..?”

“இல்லை, எனக்கு இந்த சட்டை போதவில்லை எனில், அதை சரியான அளவில் இல்லை என்று பொருள் வை. இன்னொரு சட்டை என் உடம்பிற்கு போதும், அளவெல்லாம் சரி என்றாலும் என் உடம்பை கொச்சை படுத்திக் காண்பிக்கும் என்று வை, அது பார்ப்பவரின் கண்களை உறுத்துவது போல் உள்ளது என்று வை, அப்போ அது தவறு இல்லையா?

அப்படி நம் மதம் வழிபாடு பண்பாடு எல்லாவற்றிலுமே, சிலது சரியாக சொல்லப் படாமலும், சொல்லிய சிலது காலப் போக்கில் தவறாக திரிந்துப்போயும் விட்டது, அல்லது இக்காலத்திற்கு அது தகாததாக உள்ளது என்று வை, அவைகளை சரி செய்வதும் மாற்றி ஒழுங்கு படுத்திக் கொள்வதும், அவசியமற்றதை, தவறினை நீக்குவதும் நம் கடமை இல்லையா?”

“அப்போ மதம் ஜாதி எல்லாம் வேனும்ற?”

“ஜாதி பக்கம் போகாதே, அது வேறு. மதமே தவறுன்னா ஜாதி எப்படி தவறில்லாம இருக்கும். அன்னைக்கு செருப்பு தைக்கிறவன் மகன் செருப்பு தான் தச்சான் அவனை அடையாளப் படுத்தி படுத்தி அழித்தது நம் கொடுங்கோல் சமூகம்.

இன்னைக்கு செருப்பு தைப்பவரின் மகன் அமெரிக்காவுல பெரிய தொழிலதிபராவும், ஒரு ஊருக்கே அதிபதியாவும் வரான், மருத்துவரா இருக்கான், வழிபாட்டுல பெரிய ஆளா இருக்கான் அவனை செருப்பு தச்சவன் மகன்னு சொல்லுவியா? முடியாதுல்ல, பிறகெதுக்கு ஜாதி?”

“…………..”

“இவர்கள் இந்த தொழிலை செய்தவர்கள், இந்த தொழில் சார்ந்திருப்பதால் இவர்களின் குணநலம் சற்று இதன் அடிப்படையில் இருக்கும்னு தெரிந்து, தன் நடவடிக்கைகள் அவர்களை துன்புறுத்திவிடாமல் நடந்துக் கொள்ள, அன்னைக்கு யார் யார் என்னென்ன ஜாதின்னு தெரிந்துக் கொள்ள ஒரு தேவை இருந்தது. அல்லது அப்படி அதை வளர்த்து வைத்திருந்தார்கள் என்று சொல்லலாம்.

அதுபோல், இவன் இந்த மதத்தை சார்ந்தவன் இவனுடைய பழக்கவழக்கங்கள் இப்படி இருக்கும், இவன் அணுகுமுறை, நம்பிக்கை, வாழ்க்கை முறை, உணவு சார்பு எல்லாம் இப்படியானது என்றொரு உணர்தலை ஏற்ப்படுத்தி அவனை அதற்கேற்றார் போல் அணுக, அவருக்கு ஏற்றாற்போல் ஒத்து வாழ அன்று அவர் என்ன மதம் என்று அறிந்துக் கொள்ள தேவை இருந்தது.

ஆனால் இன்று வேண்டாம். வெல்டிங் அடிக்கிற வரையும் நான் வெல்டர், அனுபவம் கூடிட்டா போர்மேன், இன்னும் மேல படிச்சா சூப்பர்வைசர், இன்னும் ரெண்டு படி மேல போனா மேனேஜர் இல்லையா இன்றைக்கு? அப்புறமெதுக்கு ஜாதி?”

“ஆமா.. ஆமா.. “

“செருப்பு தைக்கிறவன் சக்கிலின்னா, அவன் புள்ள படிச்சி கலெக்டர் ஆயிட்டா அவனும் சக்கிளியாவானா? இன்றைக்கு இருக்கும் பல ஜாதிகள் ‘அதிகபட்சம்’ அன்றைய தொழில் ரீதியாகத் அவர்களின் வாழ்தல் சார்ந்துதான் ஆரம்பகாலத்தில் அடையாளம் காட்டப் பட்டது, பிரிக்கப் பட்டதெனில், தொழில் மாறும் போது அதுவும் மாறனும்ல? ஏன் மாறலை?

அன்றைக்கு பரம்பரை வழி தொழில்முறை இருந்தது. அப்பா செய்த தொழிலை பிள்ளை வளப் படுத்துவதும் அதன் படியே நடப்பதும் சாத்தியப் பட்டிருந்தது. எனவே இவன் இதை தான் செய்வான் என்ற ஒரு கருத்தை அழுத்தமாக எடுத்துக் கொண்டார்கள். அது மேல்மக்களை மேல்மக்களாகவும், ஏழ்மைக்குடிகளை தாழ்த்தப் பட்டவர்கலாகவும் ஆக்கிவிட ஏதுவாகி போனது. அது இன்று சாத்தியமா? இன்று ஜாதி என்பதே, இவன் அன்று அப்படி வாழ்ந்தவன் என்பதன் குறியாகி மட்டுமே போனதொழிய, அதை சார்ந்து வாழவேண்டிய அவசியம் அறுத் தானே போனது?

இன்றும் ஒரு சிக்கல் உண்டு, ஜாதி என்ற ஒரு வகைப்படுத்தப் பட்ட முறையினால் வாழ்வுமுறை அவரவர்க்கு ஏற்றார் போல் மாறிப் போனது. ஒரு சாதியினரின் வீட்டு முறைகள், ஏன் உணவு முறைகள் கூட இன்னொருவருக்கு முழுமையாக பொருந்துவதில்லை. அதையும் சரி செய்ய காதல் திருமணங்கள் அப்படிப் பட்ட ஒரு தாராளமான மனநிலையை ஏற்படுத்தும்.

இருப்பினும் காதலும் முழுமையாய் எல்லோருக்குமே செயற்கை தனமாக சாத்தியமும் இல்லை. அப்போ என்ன பண்ணலாம் எனில், ஜாதியை மெல்ல ஒழிக்கணும். ஒழியனும் என்ற எண்ணத்தை மனதில் கொண்டு காதல் திருமணங்களை அவர்களின் பொறுப்புணர்வு புரிதல் பார்த்து ஏற்றுக் கொள்ளனும்.

அல்லது பெரியோர்களால் செய்யப் படும் திருமணங்களிலும் கூட நல்ல பிள்ளைகள் பொருத்தமான குணம் நிறைந்த குடும்பங்கள் எனில் மாற்று ஜாதியில் திருமணம் செய்து சிலதை அவசியம் பொருத்து விட்டுக் கொடுத்து மாற்றிக் கொள்ளவும் செய்யலாம். அங்ஙனம் செய்கையில் பழக்கத்திற்கு ஏற்ப மனிதர்கள் அமையும் நிலை உள்ளது.

இல்லை அப்படி எப்படி உடனே மாற்றிக் கொள்ள முடியும் என்பவர்கள் வெறும் உலக போக்கிற்கு மாறுவதாக எண்ணியோ, அல்லது சந்தர்ப்பத்தால் பிற ஜாதியில் மனம் புரிந்தோ கொள்வதால், தன் பழக்கவழக்கங்களை உடனே மாற்றிக் கொள்ள இயலாமல் நிறைய மனங்கள் முறிந்துபோவதுமுண்டு. அதன் காரணம் தான், வெறி, அன்றிலிருந்து மனதில் எதற்கு ஜாதியென்றே புரிபடாமல், இது என் மக்கள்,அதெல்லாம் பிறர், பிற குலத்தை சார்ந்தவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்றே கணக்குப் போட்டு வாழ்ந்து விட்டதன் வெறி. பிரித்து பிரித்து பார்த்து, மட்டம் தட்டி மட்டம் தட்டி வைத்துவிட்ட ஜாதி வெறி. தன்னை ஒசத்தியாவே வைத்துக் கொள்ளனும்னு மற்றவனை அடிமை படுத்திய வெறி.

அப்படி பார்த்தா இன்றைய நிலைமைக்கு கம்ப்யூட்டர்ல இருந்து ராக்கெட் வரையும் ஆயிரம் தொழிலுக்கு ஆயிரம் ஜாதி வந்துடுமில்லையா? அப்போ எதுக்கு ஜாதி? ஜாதியே வேணாம், அதை விடு. இப்போ ஜாதியை விட்டாதான் ‘இன்னும் கொஞ்ச நாள்ல ஜாதியை கொட்டை எழுத்துல போட்டுக்குற வெறியும் விட்டுப் போகும். அப்புறம் மதத்தையும் மத வெறியையும் எப்படி விடுறதுன்னு யோசிப்போம். இப்போ ஏன் அதுக்குள்ள ஜாதியையும் போட்டு மனுசன கொல்லனும்?

ஒருவேளை, அப்படியும், சரி ஜாதி வேணும், என் குளம் இப்படி பட்டது, நாங்கள் இப்படி எல்லாம் ஆச்சாரமானவங்க, எங்கள நாங்க பெருசா……………….. அடையாளப் படுத்திக்க வேண்டுமென்றெல்லாம் சொன்னா, அவசியப் படுறவங்க படுத்திக்கட்டும். பெருமை கொண்டாடட்டும். முடிந்தால் பிறரை சுடாமல் பாரம்பரியம் காத்துக் கொள்ளட்டும், தவறில்லை. ஆனா, வேனான்றவங்க விட்டுடலாம்ல?

அதையும் தாண்டி நீ இந்த ஜாதி, நீ இப்படி, நீ இப்படி தான் இருக்கணும், நாங்கலாம் மேல்சாதி, நாங்கள்லாம் கொட்டைபோட்டு முளைத்தோம், நாங்கள்லாம்கடவுளால ஆசிர்வதிக்கப் பட்டவங்க என்றால், அது மனிதத்தை நசுக்காதா? நசுக்கும்ல………………., அது தான் மதத்திற்கும்.

“……………….” யாரும் பேசவில்லை மாலன் சொல்வதை மட்டுமே கேட்டுத் தலையாட்டினர். தலையாட்டலில் சில நியாயங்கள் அல்லது உண்மைகள் கொள்ளப் பட்டுவிடுகிறது என்றாலும் குறுக்கே பேசி மறுப்பதிலும் வாதம் தலைதூக்கி சில உண்மைகள் நசுக்கப்படவே செய்கிறது என்று எண்ணி அவர்கள் அமைதியாக மாலனையே பார்த்து அவர் சொலவதற்கு தலையசைத்து கேட்டுக் கொண்டார்கள் அவர்கள்.

“ஆனா, இப்படி நீ தேவைன்னா வெச்சிக்கோ வேணாம்னா விட்டுடுன்னு நான் மதத்தை சொல்ல வரலை. மதம் கடவுள் பற்றி பேசுகிறது. மதம் கடவுளின் சிந்தனையை தக்க வைக்கிறது. மதம் கடவுளை நோக்கிய பயணத்திற்கு வழி கோனுகிறது. கடவுளில் முடிச்சி போடப் பட்டு வாழ்வோடு சிக்கிக் கொண்டுள்ளது மதம். எனவே, மதத்தை உடனே கைதட்டி விட்டுட முடியாது. ஆனா, மெல்ல அவிழ்த்துவிட்டுடு, அந்த அவிழ்த்தலில் எவரின் இதயங்களும் உடைந்து விட வேண்டாம் என்பதை உறுதியாக மனதில் கொள்.

அதை அவிழ்க்க முடியும் வரை மதம் சார்ந்த செயல் பாடுகள், அதாவது, எது சரி எது தவறென்று சிந்தித்து, அலசிப் பார்க்க இயலும் வரைக்கான செயல் பாடுகள் மதம் சார்ந்த நலல் சிந்தனைக்குட்பட்ட செயல்பாடுகள் இருந்துக்கட்டும். அதில் யாரும் உடைந்து போகாமல் சற்று பொருத்து, திருத்தி, திருந்தவும் வேண்டுமெனில் தியானம் வேண்டும். தியானத்திற்கு யாரையும் நிந்திக்காமல் அவரவர் வழியில் காட்டியுள்ள வழிபாடு படி அவரவர் முறைகளும் அவரவருக்கு வேண்டும்”

“திரும்ப எண்ண சாமி நீ, தியானத்திற்கு வழி பாடெல்லாம் வேண்டுமா? அப்போ சுத்தி சுத்தி மதத்திற்குள்ள தானே சாமி வருது நீ சொல்றதெல்லாம்?”

“மேலே ஏறவேண்டுமென்றால் ஏனியோ படிக்கட்டோ தேவை இல்லையா? ஏனிக்கும் படிக்கட்டிற்கும் கல் மண் இரும்பு என இன்ன பிற பொருள்களும் உழைப்பும் முயற்சியும் தேவை இல்லையா? தியானமும் ஒரு மேலேறும் வழி தான். அதையடைய வேறு சில பண்புகளும் வேண்டும் அப்பா. அந்த பண்பினை மதங்கள் மிக நன்றாக சொல்லித் தருகிறது.

நாம் தான் அவைகளை கூட விட்டுவிட்டு அவைகளுக்கு மத்தியில் இருக்கும் சில ஓட்டைகளில் மட்டுமே வீழ்ந்து போகிறோம். மதத்தை மாற்றி அமைக்கும் தவறுகளை களைந்து திருத்தியமைக்கும் பணி யாரேனும் ஒருவரால் இயலுமெனில் அவர் அதை உடனே செய்யலாம், ஆனால் ஒருவரால் நேர்ந்து விடாது மத சீர்திருத்தம். நம் மாற்றத்தில் நாளை அதுவும் மாறும்”

“அப்போ தொட்டுக்காம தொட்டுக்கனும்ற”

“ஹாங்……….. இப்போ சொன்ன பாரு, இதான் விஷயம். பெரிய ஞானமுள்ளவனப்பா நீ.., நான் இவ்வளோ தூரம் பேசுன அர்த்தத்தை இப்படி சொடீர்னு சொன்ன பாரு, நீ தான் ஞானவான். ஏன்னா எதையும் விவரமா உணராம, ஆராயாம, இப்படி தான் இது தான்னு பட்டுனு உதறிட கூடாது.

அதேநேரம் என்னன்னு தெரியாமையே அதை பெருசா கட்டிக்குனும் அழக் கூடாது. அதுலவேற அதுக்கு அவன் வாங்குற வக்காலத்துல, வேற யாரோ ரெண்டு பேரு தலையையும் சேர்த்து போட்டு உருட்டுவான்’ அதை செய்யாதே என்பது தான் என் வேண்டுகோள் அப்பா”

“சரி சாமி… ஏதோ எதேச்சையா பார்த்தோம், சரி பெரிய மனுசனாச்சே இந்தியாவுல இருந்து இவ்வளோ தூரம் வந்திருக்கியே, நாலு வார்த்தை பேசி நாலு விஷயம் தெரிந்துக் கொள்ளலாமென்று வந்தோம். அதில்லாம அன்னைக்கு நீங்க அந்த நிகழவுல பேசியதை ரொம்ப பெருசா பேசினாங்க எல்லோரும். அதான் ‘அப்படி என்னதான் பேசி இருப்பீங்களோ என்று கேட்டு தெரிந்துக் கொள்வோம்.., என்று எண்ணி தான் வந்தோம். கடைசில இப்படி ஒரு பெரிய நட்பு இவ்வளோ பெரிய மனிதரோட அன்பு, இவ்வளோ பொதுப்படையான நீதி கிடைக்கும்னு நினைக்கல சாமி”

“ஆமாங்கய்யா நாங்க கேட்க கேட்க சலிச்சிக்காம இவ்வளோ சொன்னிங்களே பெரிய உதவி தான். அது சரி, உங்களுக்கு இதான் வேலையேவா…?”

“எனக்கு என் வீட்டை சுத்தி நிறைய வேலை இருக்கு”

“இத்தனூண்டு வீட்லையா?” அவன் வீட்டை சுற்றி பார்த்தான். சிரித்துக் கொண்டே கேட்டான் திருமேனியன். அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்து நெட்டை முறித்து தன் தலைகளையும் துணிகளையும் சரி செய்தனர் எல்லோரும். மாலன் திருமேநியனின் கேள்விக்கு லேசாக புன்னகைத்துவிட்டு

“என் வீடு என்றதன் அர்த்தம் எனை சார்ந்த சமூகம் என்று பொருள். எனவே, என் வீட்டிலிருந்து சமூகம் வரை எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. அதில் யாரெல்லாம் கேட்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் முடிந்ததை சொல்ல முயல்கிறேன், சொல்கிறேன்.

இன்னும் சுருக்கமா சொன்னா என்னிடம் இருப்பதை கொடுக்கிறேன். யாரெல்லாம் கொடுக்கிறார்களோ அதிலிருந்து தேவையெனில், பெறத்தக்கதை மட்டும் பெற்றும்கொள்கிறேன்”

“எல்லாத்துக்கும் மலை மாதிரி விளக்கம் வைத்திருக்கிற சாமி..”

“சிந்தனைன்றது கோவில் சாப்பாடு மாதிரி, ஒருத்தர் போட்டா எல்லோரும் சாப்பிடலாம்.. இதுல என்ன போடறோம்றது தான் விசேசம்”

“சரி சாமி, நீ இவ்வளோ சொல்ற, நான் ஒன்னு கேட்டா தவற எடுத்துக்க மாட்டியே”

“நிறையதான் கேட்டியே நான் அப்படி எடுக்கவே இல்லையே”

“இல்ல நீ எல்லாமே ஒன்னு தான்ற, பிறகு எல்லாமே சாமிதான்ற, ஏற்றத் தாழ்வு எல்லாம் நலல்தில்லைன்னு எவ்ளோ சொன்னல்ல, அப்போ நான் மட்டும் உன்னை சாமி சாமின்னு கூப்பிடறேன், ஆனா நீ என்னை அப்பா அப்பான்றியே.. நீயும் என்னை சாமின்னு சொல்லலாமில்ல? அல்லது சாமின்னாவது கூப்பிடாதீங்கப்பான்னு சொல்லியிருக்கலாம்ல”

“நான் இங்க வந்திறங்கிய முதல் நாள்தொட்டு அதை தான் சொல்றேன். இங்க நாம பேசிக்கொண்டது ஒரு யதார்த்தம் சார்ந்தது. இப்போ கூட நீ கேட்காம இருந்திருந்தா கடைசியா நீங்க போகும் போது நான் சாமியெல்லாம் இல்லை, சாதாரண மனிதனாக வாழ முயற்சித்துக் கொண்டிருக்கும் ஒரு பிறவி அவ்வளவு தானென சொல்லியும் இருப்பேன். நீங்க முந்திக் கொண்டீர்கள்.

இன்னொரு வேடிக்கையற்ற உண்மையை சொல்லட்டுமா.., நீங்க என்னை சாமின்னு தானே கூப்பிட்டீங்க, நான் அதை விட பெருசா உங்களை கூப்பிடுவோமேன்னு தான் அப்பா அப்பா என்றழைத்தேன். அம்மா அப்பா ஆசானுக்கு அப்புறம் தானே அப்பா சாமியெல்லாம்.

என்னைக்கேட்டால் முதல்ல மனுஷன். மனுஷன் தான், உயிர்கள் தான் பெருசு. ஒரு சின்ன எறும்பா கூட இருக்கட்டும், அதற்கும் ஒரு உயிருக்குரிய மதிப்பிருக்கு. அசையும் மரம் செடி கொடிகளுக்கு கூட உயிரிருக்கு. அளவில் வாழ்வு முறையில் தான் வித்தியாசமே தவிர, உயிர் பொது தான். உயிருக்கப்புறம், மனுஷனுக்கப்புறம் தான் சாமியெல்லாம். நீங்கள் சாமியை விட பெரியவர்களப்பா.. அதான் அப்பா என்று அழைத்தேன்”

“நல்ல பேசுற சாமி நீ. நீ பெரிய டெக்னிக்கலான ஆளு. சரி, கடைசியா சொல்லு, சாமி கும்பிடனும், ஆனா சாமிக்காக மனுசன பிற உயிர்களை கொள்ளக் கூடாது அதானே சொல்ற”

“அப்படின்னு வெச்சிக்கலாம்”

“அதென்ன வெச்சிக்கலாம், அப்போ சுருக்கமா தெளிவா வேறெதனா சொல்லுவியா?”

“நிறைய சொல்லலாம்.. இதை பற்றியெல்லாம் பேச நிறைய இருக்கு. ஒரு நாளில் அதும் நானே தீர்வு கண்டு கூறிவிடும் விஷயங்கள் அல்ல இது. என்னால் உங்களுக்குள் ஒரு சிந்தணியை ஏற்படுத்திவிட முடியும். தீர்வு சொல்வது தவறு. ஒரு வேலை என் புரிதலில் என் அனுமானத்தில் நாளைய மாற்றம் படி தவறு இருக்கலாம். இன்றே கூட பிறருக்கு இது போதாதென்று தோன்றலாம், முழுதையும் சொல்லும் ஞானியல்ல நான், உங்களை போன்றோர் விரும்பினால் அவர்களுக்கு என் சிந்தனையை பகிர்ந்துக் கொள்ளும் ஒரு தோழமை நிறைந்தவன், வெகு சாதாரணமானவன். தெருவில் போகும் யாரோ வந்து சிரித்துவிட்டு நலமா என்றால் கூட, வணக்கம் கூறி அன்பு காட்டும் பண்பினை மட்டும் வளர்த்துக் கொள்ள விரும்புபவன். என் தொழில் என் கடமை ‘இயன்றளவு எனக்கு கீழுள்ளோரை என்னளவிற்காவது கொண்டுவருவது, அவ்வளவு தான்”

“நல்லது சாமி, மனிதர்களை மனிதர்களாக வாழவைக்க முயலும் உங்களின் இந்த ஆக்கப்பூர்வமான பணி சிறக்கட்டும். நாங்கள் விடை கொள்ளும் நேரமானது. அம்மா வேறு உங்களுக்காக காத்துள்ளார்கள். இன்னொரு தினம் சந்திக்கையில் இன்னும் பேசுமளவு சிந்தித்துக் கொண்டு வருகிறோம். இப்போதைக்கு நன்றியோடு விடை பெறுகிறோம் சாமி..”

“நல்லது சகோதரர்களே, நன்றி சொல்வதெனில், திருமேனியனுக்கே சொல்லுங்கள், அலல்து இது போன்ற பிறர் நோகாத சிந்தனைகள் சரியெனில் பிறருக்கும் சொல்லிக் கொடுப்பதைவிட பிறர் உணறுமாறு வாழ்ந்துக் காட்டுங்கள். கடைசியாக நாம் பேச வந்த தலைப்பின் சாரம் முடியும் வகையில் ஒன்றை மட்டும் சொல்லிமுடிக்கட்டுமா…?”

கேட்டுவிட்டு மாலன் அவர்களின் ஆர்வத்தை பார்த்தார்.

“……….” சொல்லென்பது போல் இருந்தது அவர்களின் பார்வையும் ஆர்வமும்.

“சாமி கும்பிடுங்க, வழிபாடு செய்யுங்க, விழா எடுங்க, எல்லாம் நடக்கலாம் தவறில்லை. அதே நேரம் நீங்க கும்பிடுவது தான் சாமியான்னு அறிவு பூர்வமா பார்த்து சிந்தித்து தெரிந்து கொள்ளனும். எதை செய்தாலும் சிந்திக்கணும். சரியா தேவையா கடைபிடிக்கலாமா, அல்லது இதோடு விட்டுவிடுவோமான்னு யோசிக்கணும். என்னதான் யோசித்தாலும் புரிந்துக் கொண்டாலும், அதை தெரியாதவர்களை இகழ்வது போலவோ, பிறருக்கு வலிப்பது போலவோ சொல்லக் கூடாது .

தன் புத்திக்கு தெரியும் வரை, முன் தெரியாத ஒன்றிற்காக குருட்டு தனமா சரி தவறு என்ற முடிவிற்கும் வரக் கூடாது. இது தான் சரி என்று தீர்மானம் கொண்டு அதற்கு யாரையும் எவரின் உணர்வுகளையும் பலியாக்கலாகாது. உயிர்களை காக்கின்ற, மனிதரை மதிக்கின்ற, யாரையும் நோகடிக்காத பண்பினை கற்றுக் கொள்ளவும், வளர்த்துக் கொள்ளவும் வேண்டும். அன்பினை மனிதர்களிடத்தில் பிற உயிர்களிடத்தில் பெருக்கிக் கொள்ளல் வேண்டும். அங்ஙனம் இருப்பதன் மூலம். சாமி காலத்துக்கு தகுந்தா மாதிரி மெல்ல புரியும். எல்லாம் மெல்ல மாறும்.. சரியா?”

“சரிதாங்க சாமி, ரொம்ப நன்றி சாமி, மனித உணர்வுகளை மீறி வேறொன்றும் பெரிதில்லை என்பதை புரிந்தோம், அதேநேரம் மனித உயிர்களை போற்றும் மனதினை, அன்பு சுரக்கும் ஆனவமற்ற குணத்தினை, நல்ல பழக்கவழக்கங்களை கடவுள் நம்பிக்கையும், பாகுபாடு பார்க்காமல் படித்தறிந்துக் கொள்ளும், அரவணைத்துக் கொள்ளும் போது ஆன்மிகமும் தருமென்று புரிந்தோம்”

“ஆம், அது போதுமப்பா.., மிக சரியாக புரிந்துக் கொண்டீர்கள்..”

“ரொம்ப ரொம்ப நன்றிங்க சாமி…” எல்லோருமே கைகூப்பி விடைபெற ஆயத்தமானார்கள்

“எனக்கு எதற்கு நன்றி, நன்றிகளை கடவுளுக்கு தெரிவியுங்கள். யார் யாருக்கு என்னென்ன எப்பொழுது தரப்பட வேண்டுமோ அப்பொழுது அவனால் அது தரப் படுகிறது. அல்லது அவரவர் தேவை படி எண்ணத்தின் படி அவரவரால் அது பெறப்படுகிறது. என்னை பொருத்தவரை, தரப் படுகிறதென்பது எனது நம்பிக்கை. அவ்வளவு தான். அந்த நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள தியானம் ஒரு மனிதனின் அளப்பறியா சக்தி”

“சரி தியானத்தை பத்தி சுருக்கமா ஒன்னு சொல்லுங்களேன் சாமி” ஒருவர் மட்டும் கேட்க இன்னொருவர் உடன் சேர்ந்து “தியானம் பண்ணா சக்தி வருமா சாமி? யாருக்குன்னா அப்படி வந்திருக்கா?” என்றார்.

“அதை பற்றி பேச ஏராளம் இருக்கிறது. நேரம் போதாது. எங்களுக்கும் ஊருக்குப் போக ஆயத்தமாகும் பணிகள் உண்டு, மன்னியுங்கள், இத தேசம் எனக்கான ஒரு நெருக்கத்தை எனக்குள் உணர்த்துகிறது. நாம் மீண்டும் சந்திப்போம். அப்போது பேசுவோம். சுருக்கமா தியானம்னா, ஒரு மனித சக்தி கூட்டும் பயிற்சி. நம்பிக்கையோடு செய்வதன் மூலம் கடவுளை உணர்த்தும் ஒரு நிலை, தியான நிலை. தியானத்தை ஒழுங்குற தொடர்ந்து செய்வதன் மூலம், நேரம் அதிகப் படுத்திக் கொள்வதன் மூலம், ஆழ்நிலை கைகூடுவதன் மூலம், மனசு ஒருமுகப் பட்டு மான அமைதி கொள்வதன் மூலம் உலகின் அத்தனை சூழ்சுமமும் புரியலாம். தியானத்தினால் எத்தகைய சக்திகளையும் அடையலாம், அத்தகு கட்டுப் பாடும், புத்திக் குவியலும், மன ஒருநிலை பாடும் தான் அவசியம்”

“அப்படியா…….”

“ஆனால், நாமெல்லாம் ஆரம்பத்தில் அத்தனை கடுமையாக செய்யவேண்டியது ஒன்றுமில்லை. சற்று கூடுதல் முறை ஆரம்பத்தில் அவசியமில்லை. என்றாலும், வாழ்கைக்கெனவும் தியானம் கை கொடுக்கிறது. சுருங்க சொல்வதென்றால் ‘எண்ணியதை எண்ணிய படி அடையும் தன்மையை அல்லது உங்கள் மனதின் உடலின் தேவைக்கான வேதியல் மாற்றத்தினை தியானம் ஏற்படுத்துகிறது, அதற்கான உறுதியை தியானம் தருகிறது. அதற்கான சூழ்நிலையையும் தியானம் ஏற்படுத்துகிறது’ என்று சொல்லி பெரியவர் முடிக்க, வெளியிருந்து விடுதியை சார்ந்த ஒருவர் வந்து அவரை வேறு யாரோ ஒருவர் சந்திக்க வந்துள்ளதாக அழைக்க, திருமேனியன் மற்றும் உடன் வந்தவர்களும் வணக்கம் கூறி, நன்றியறிவித்து விடை பெற்றார்கள்.

அவர்களிடம் பேச இருந்த மீதமான எண்ணக் குவியல்கள் மாலனுக்குள் மீண்டும் சிறகு விரிக்க அவைகளை அசைபோட்டவாறு எழுந்து வெளியே போனார்.. மாலன்.

அவரை நோக்கி அவர் எதிர்பாராத ஒரு சம்பவம் வந்து அவரை மொரிசியசிலேயே நிறுத்திவைக்க இருப்பதை அவர் உணர்ந்திட வில்லை. அது என்ன ஆபத்து அந்த ஆபத்து யார் உயிரை எடுத்துக் கொள்ள வருகிறது என்பதை பார்ப்போம்..

————————————————————————————————

னி கடவுள் மதம் தியானம் ஜாதி என்பதையெல்லாம் கடந்து, இனம் காதல் காமம் வாழ்க்கை குணம் மனிதர்கள் என – காற்றின் ஓசை – தொடரும்..

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காற்றின் ஓசை - நாவல் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to காற்றின் ஓசை (15) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்!

  1. பிங்குபாக்: காற்றின் ஓசை – 16 – காதல் செய்யலையோ; காதல்!! | வித்யாசாகரின் எழுத்து பயணம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s