காற்றின் ஓசை – 18 – காதல் செய்யலையோ; காதல்!!

இதற்கு முன் நடந்தது..

ஹி சோடேங்கே.. நஹி சோடேங்கே..
மர்னே தக் நஹி சோடேங்கே..”

“நஹி சோடேங்கே.. நஹி சோடேங்கே..
மர்னே தக் நஹி சோடேங்கே..”

“என்னடா சந்திரா இது இப்படி கத்துரானுங்க..”

“தெரிலயே கொஞ்சம் நில்லு..”

“ஸ்ட்ரைக் பன்றானுங்களா..?!!!!”

“இருக்கும்”

“அதுக்கு இப்படி கத்துரானுங்க?!!!!!!!!”

“நீ பேசறது அவுங்களுக்கு புரியலைன்னா ‘உன்னையும் அவன் கத்துறதா தான் நினைப்பான்..” சுந்தர் சொல்ல

“அதொன்றுமில்லை நம்ம ஊர் போராடுவோம் போராடுவோம் சாகும்வர போராடுவோம் இல்ல”

“ஆமா……….ம்”

“அதுமாதிரி தான்” ரபிக் சொன்னான்

“ஓ இவனுங்க ஹிந்தியியா?”

“ஆமா, வடநாட்டு காரங்களும் இங்கு அதிகம், லோகல்னா இந்த பகுதியை பொருத்தவரை இவுங்க தான்..” சந்திரா சொன்னான்.

“ஆமாம்டா சந்திரா ஸ்ட்ரைக் தான் பண்றானுங்க, கொடியெல்லாம் வெச்சிருக்காங்க பாரேன்.., அப்போ அவ்வளவு தானா நம்ம கதி??? திரும்பி ஊருக்கா செல்வா கேட்க

“அதலாமில்ல நீ சும்மா இரு. ஆமாம் மச்சி, அதே ‘போராடுவோம் போல தான் தெரியுது, நீங்க இங்கயே இருங்க நான் போய் பார்த்துட்டு வரேன்..”

“டே டேய்.. நீ எங்க அங்க போற, அவனுங்க காட்டு தனமா கத்துரானுங்க உன்னை வேற அடிச்சி நீட்டிட போறானுங்க”

“என்னடா பேசுற நீ.., அவனுங்க எதிர்க்கிறது நம்ம முதலாளியை, அவர் நம்ம ஊர் தமிழ் காரர். அவருக்கு உதவி செய்ய தான் உங்களை கூட்டியாந்தேன் புரியுதா.. “

“நீ போயிட்டு வா மச்சி வரணும்னா ஒரு கொரலு குடு, வந்து சீவிடுறேன் சீவி”

“சரி.. சரி.. அதிகமா உணர்ச்சி வசப் படாத சுந்தரு.. போலிசு புடிச்சி என்னன்னு கேட்டா அவன் மொரிசியஸ் மன்னனை திட்டினான் அதான் கேக்குறேன்னு ஹிந்தில சொன்னானாகூட உனக்கு திருப்பி அவன் என்ன சொன்னான்னு தெரியாது, சரியா அடக்கி வாசி” ரபிக் சிரித்துக் கொண்டே கேலியாக சொல்ல

“சரி நீ கிளம்பு மச்சி நாங்க இங்கயே இருக்கோம் என்றான் சுந்தர்”

சந்திரா சிரித்துக் கொண்டே சென்றான்.. நாலு பேர் கூட இருந்த போது அவனுக்கு அப்படி யொன்றும் தெரியவில்லை, தனியே நடந்தபோது அவள் நேற்றிரவு தந்த முத்தமும் வந்து அவன்கூட நடந்தது..

இரவெல்லாம் என்னவோ தூங்காதவனை போல உணர்ந்தான் அவனை. மீண்டும் மீண்டும் அவள் ஏதோ கிசு கிசுத்தது.., அருகில் நெருங்கி வந்தது.., வாயை மூடி நின்றது.., முத்தமிட்டது.., என எல்லாம் ஒவ்வொன்றாய் நினைவில் சுற்றி சுற்றி வர ‘அவனால் அதை எல்லாம் ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் நிராகரிக்கவும் இயலாமல் தவிப்பவனாய் நடந்தான்.

இருந்தாலும் ஏனோ அவளின் நடத்தை மேல் ஒரு கோபம வந்தாலும், யோசித்துப் பார்க்கையில் அந்த கோபம் உடனே விட்டுப் போனது. காமத்தின் வாடையின்றி மனதின் அறிவிப்பாகவே இருந்தது அவளின் முத்தமும் நெருக்கமும்.

ஆசைக்காக வந்தவளாக இருந்திருந்திருந்தால் இன்னும் என்னை தொட்டிருக்கலாம், வேறேதேனும் பேசியிருக்கலாம், என்னென்னவோ செய்திருக்கலாம், அப்படியெல்லாம் இன்றி ஒரு முத்தத்தில் நானவளை கண்டுகொள்ளும் வரை மட்டும் நின்றுவிட்டு ஒரே ஒரு முத்தத்தோடு ஒடுவானேன்..?!!!

ஆனாலும் இதை எப்படி எடுத்துக் கொள்வதேன்பதே அவனுக்குப் புரியவில்லை. இதை தைரியமென்பதா அல்லது என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை என்பதா.., எப்படி அவளுக்கு என்மேல் இத்தனை நம்பிக்கை வந்தது. உண்மையிலேயே வந்தது பெண் தானா.., இத்தனை பேரை விட்டுவிட்டு என்னை மட்டும் தனியாக எழுப்பி இப்படி நடந்துக் கொள்ளும் அளவிற்கு என்னை நமபினாளா?? எப்படி நம்பினால் என்னை!!!!!!?

இரவாயிற்றே என்று கூட பயமில்லையா, தனியாக வந்தாலே பயமில்லையா, அவர்கள் வீடாயிற்றே இது யாரேனும் பார்த்துவிடுவார்கள் எனும் பயம் கூட இல்லையா???????????

கேள்விகள் இதயத்தின் பல கோடுகளாய் அவனுக்குள் நீண்டன. அதுசரி, அவர்கள் வீடென்று எப்படி எண்ணினேன். யார் அவள் என்று எனக்கேபப்டி தெரியும்?? யார் அவளோ யார் கண்டார்..

ஆனால் கனவில் வந்தாளே, கனவில் பேசினாளே, தொட்டாளே, முத்தமிட்டாளே, நேரிலும் அவளா வந்தாள்????????????

ஆம்; அவளே தான், அதே முகம்.. அதே சிரிப்பு.. அதே நெற்றியில் குவித்து வைத்த அதே முடி.. அதே நெருக்கத்தின் வாசம்……

வாசமா? அதெப்படி எனக்கு வாசம் தெரியும், கனவில் வாசம் உணர்ந்தேனா?

இல்லையே…., ஆனால் நிஜத்தில் மணத்தாளே..?!! அருகில் வந்து விலகி சென்ற வாசம் என்னவோ ‘ஒரு வாசனை திரவியத்தின் குப்பி திறந்து முகர்ந்துவிட்டு உடனே மூடி வைத்துவிட்டது போல் அல்லவா மணத்துவிட்டு உடனே சென்றுவிட்டாள். அவள் வாசம் இன்னும் எனக்குள் இருக்கிறது. அவள் நினைவு போலவே அவளின் வாசமும் எனக்குள்ளே அப்பிக் கொண்டுவிட்டது,

ஆஹங்… கூடாது, கூடாது அவள் வாசத்திற்கு மயங்கக் கூடாது. அவளை யாரென்று பார்க்க வேண்டும்.. அழைத்து பொறுமையாக பேச வேண்டும். ஏன் அப்படி செய்தாயடிப் பெண்ணே என்று கேட்க வேண்டும்..

அதோடு அவள் பேசாமல் போய்விட்டால்?

கோபித்துக் கொண்டால்?

முத்தம் தந்த இடம் வலிக்காது???

வலிக்கும், பெரியோ ரோமியோவின் ஜூலியட் அவ, கிறுக்கு சிறுக்கி, என்ன நினைச்சி அப்படி செய்தா அவ? யாருன்னு நினச்சா என்ன, ஒருவேளை நம்ம பசங்க சொன்னது போல அவதானோ, அச்சச்சோ!!!!!!!! தப்பு தப்பு… அப்படி இருக்கவே இருக்காது, இருக்கக் கூடாது.. பாபாவுக்கு தெரிஞ்சா வெட்டிட மாட்டாரு??????? பாவம் அம்மி. அம்மி முகத்தை நான் எப்படி பார்ப்பேன், முதல்ல அது யாருன்னு பார்க்கணும் அப்படி அது மட்டும் அலியோட அக்காவாயிருந்தா உடனே போய் அம்மி கிட்ட சொல்லி மன்னிப்பு கேட்டுறனும்..

அந்த பொண்ண போட்டு அடிச்சாங்கனா??

அடிக்கட்டும், அடி வாங்கட்டும், தப்பு தானே அது செய்தது. தப்பு செய்தா அடி தான் வாங்கணும்..

டிக்காதே……… அடிக்காதே……..

அவன் அப்படி தான் கத்துவான் நீ அடி, போடு.., மாரோ.., மாரோ உசே.., மாரோ…. , பஹுத் மரோ, நல்லா அடி.. போடு.. உடாத.., சோட்னேகா நஹி.. மாரோ மாரோ..” நாலைந்து பேர் ஒண்ணா சேர்ந்து சந்திராவின் முதலாளியை துரத்தினார்கள்.., ஒருவன் எகுறி தலையிலேயே அடித்தான்.., ஒருவன் முதுகில் குத்தினான், இரண்டு பேர் வந்து அடிக்காதே அடிக்காதே என்று மடக்க, அவர்களை தள்ளிவிட்டு அந்த கும்பல் முதலாளியின் இரண்டு கையையும் பிடித்துக் கொள்ள, இன்னொருவன் ஒரு பெரிய தடி எடுத்து தலையில் ஒரு போடு போட..

அவர் தன்னை விடுவித்துக் கொள்ள போராடி இயலாமல் அடி பட்டதும் கீழே சரிந்தவாறு ஐயோ அம்மா என்று தமிழில் கத்த; சந்திரா ஓடி சென்று அவரை தூக்கிக் கொண்டு தடுத்த ஊர் காரர்களை ஆளுக்கு ஒரு குத்தாக முகத்தில் பார்த்து ஓங்கி குத்தினான்.

யாரடா இவன் எங்க ஆளை அடித்தவன் என, எல்லோரும் முதலாளியை விட்டுவிட்டு அவனை அடிக்க எகிறினார்கள். சந்திரா தூரத்தில் நின்றிருந்த செல்வம் ரபிக் ரமேஷ் சுந்தரை குரல் கொடுத்து முதலாளியை வேறொரு அறையினைக் காட்டி அங்கே கூட்டி போகச் சொல்ல, இவனை அடிக்க வந்த கும்பலில் ஒரு சிலர் அங்கே அவர்களை துரத்திக் கொண்டு ஓட ‘செல்வம் ஒரு இரும்பு குழாய் எடுத்து எல்லோரையும் நாலு வீசு வீசி விட்டு இரண்டு பேரை கைகால் பார்த்து ஓங்கி ஒரு போடு போட; அவர்கள் சுருண்டு அங்கேயே கீழே விழுந்து எழுந்து கத்திக் கொண்டே தூர ஓடினார்கள்.

சந்திரா ஒரு பக்கம் அந்த மீதி கும்பலை மாற்றி மாற்றி அடித்தும் தடுத்தும் இருக்க இன்னொருவன் பின்னால் வந்து மண்டையிலே அடித்தான். மண்டையில் ரத்தம் பொலபொலவென கொட்டியது சந்திராவிற்கு. அவன் அதை தாங்கிக் கொண்டு சற்றும் அசராமல் ஒரு சுழல் சுழன்று சுதாரித்து திரும்புவதற்குள் அந்த கும்பல் ஐயோ ரத்தமென ஓட.. அதற்குள் போலீஸ் வந்து அவர்களையும் எல்லோரையும் சுற்றிவளைத்து பிடித்தது.

சுந்தர் ரமேஷ் எல்லாம் ஓடிபோய் முதலாளியை காப்பாற்றி ஒரு தனியறையில் போட்டுவிட்டு சந்திராவிடம் ஓடிவந்தனர்.. ரத்தம் பார்த்து தவித்தனர், பதறினர், போலிஸோடு ஒரு ஆம்புலன்சும் வர..

சந்திராவை அந்த ஆம்புலன்ஸ் வந்து ஏற்றிக் கொண்டது..

பசங்களும் கலக்கத்தோடு சற்று பயந்த முகத்தோடு வண்டியில் ஏறி அவனோடு போனார்கள். ரமேஷ் சந்திராவிற்கு அடிபட்டுவிட்டதே என்ன ஆகுமோ என்று பதறி வாய்விட்டு அழுதான். ரத்தம் பார்த்ததும் அவனுக்கு தலையே சுற்றுவது போலிருந்தது.

சந்திரா அதை பற்றியெல்லாம் கவலைப் படவில்லை. பொட்டபசங்க பின்னாடி வந்து அடிச்சானுங்க பாரு.. நாதேரிங்கள வகுந்துருக்கனும்டா..” கோபம் அடங்கவே இல்லை அவனுக்கு பொருமிக் கொண்டே இருந்தான், ரத்தம் ஒரு பக்கம் வழிந்துக் கொண்டே இருந்தது.

சுந்தர் அவனை சாந்தப் படுத்த, உடன் வந்த கேரளா மேல்நர்ஸ் பேசாதே அமைதியாய் வா என்று கைகாட்டினான்.

நல்லவேளையாக முதலாளிக்கு கூடுதல் அடி ஒன்றும் பட்டிருக்கவில்லை. சந்திரா வந்து தடுக்கவில்லை எனில் அவர்கள் அடிக்கும் அடியில் செத்திருந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை. ஆனால், ஒன்றும் அப்படி நேரிடாதபட்சத்தில் ‘அடுத்த ஒரு மணிநேரத்தில் அந்த முதலாளி பெரிய ஆட்களை அழைத்து பேசி, வக்கீல் வைத்து நடந்ததை கூறி போலிஸோடு சென்று கொலை முயற்சி செய்ததாக அந்த மொத்த கூட்டத்தையும் பிடித்து உள்ளே போட்டார்.

சந்திராவிற்கு ஊசி போட்டு தலையில் கட்டு ஒன்று போட்டு வீட்டிற்கு அனுப்பினார்கள். வீட்டில் உள்ளே நுழைந்தததுமே அமளி துமளி யானது எல்லாம். அலி பாபாவிற்கு போன் போட்டான், பாபா யாரையோ அழைத்துக் கொண்டு அடுத்த சில வினாடிகளில் வீட்டிற்கு வந்தார். விஷயம் கேள்விபட்டு அந்த முதலாளியை வீட்டிற்கு வரச்சொல்லி அழைத்து தீர விசாரித்தார்.

முதலாளிஅவர் பேரைக் கேட்டதும் ஓடியடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து, நடந்ததை சொல்லி, லோக்கலில் ஆள் எடுக்கக் கேட்டார்கள் என்றும், எடுத்தால் வேலைக்கே வருவதில்லை என்றும், வந்தாலும் வேலை செய்வதில்லை, செய்தாலும் செய்யாவிட்டாலும் சம்பளம் குறைய கூடாதாம். உடன் இருப்பவர்களை வேறு வம்பிழுப்பது எல்லோரையும் அடிப்பது கேட்டால் ஆள் கூட்டி வருவது, எல்லாவற்றையும் விட லோக்கல் ஆளு கமிசன் கொடுக்கணும் என்று வெறுக் கேட்டதாகவும், முடியாதென்றதற்கு தவறாக சொல்லி மொத்த வேலையை நிறுத்திவிட்டு இரண்டு நாளாக தவறான அவதூறுகளை பரப்பி ஸ்ட்ரைக் செய்ததாகவும், ஏனென்று கேட்டதற்கு கூட்டமாய் வந்து அடித்ததாகவும் சொல்ல பாபாவிற்கு கடுங்கோபம் வந்தது.

சந்திரா தான் பாவம். இதில் சம்மந்தமே இல்லாதவன். என்னிடம் வேலை பார்த்த நன்றிக்காக வந்து என் உயிரையே காப்பாற்றி இருக்கிறான். சந்திரா மிகப் பெரிய மனசு காரன், குடும்ப பாரம் தெரிந்தவன், நல்லபையன் என்றெல்லாம் புகழ, அந்த வீடே சந்திராவை இன்னும் ஒரு அடி மேலே தூக்கி நிறுத்தியது. இன்னும் அதிக அக்கறையை அவன்மேல் சுமந்துக் கொண்டது.

அவர் நண்பர்கள் சுந்தர் செல்வா ரமேஷ் ரபிக் எல்லோரையுமே பாராட்டியும் நன்றி தெரிவித்தும், வந்த முதல் நாளே இப்படி ஆகிவிட்டதற்கு மன்னிப்பும் கேட்டார் அந்த கண்ணியமான முதலாளி. அவரின் நன்றியுணர்வு நேர்மை தவிர உதவிக்கு ஆளில்லா நிலை கண்டு எல்லோரும் அவருக்கு இனி முழு பலமாக இருப்பதாக உறுதி கொடுத்தார்கள். பாபா நாளையிலிருந்து அலியை அங்கே தினமும் சென்று வர உத்தரவிட்டார்.

யாரையோ ஒரு பெரிய தாதாவை அழைத்து, அவர்மூலம் ‘அந்த தொழிற்சாலை இருக்கும் ஊர்தலைவரிடம் பேசச் சொன்னார். முதலாளிக்கு பெரிய சந்தோஷம். இனி இந்த நிறுவனமே உன்னுடையது தான் சந்திரா என்றார். என் உயிரையே காத்தவன் நீ. உங்களை யாரையுமே எப்பொழுதுமே நான் மறக்க மாட்டேன். நானிருக்கும் வரை இனி நீங்களும் இருப்பீர்கள் என்றார்.

சந்திரா திரும்பி தன்னைச் சுற்றி இருப்பவர்களை நன்றியோடு பார்த்தான். பாபா அம்மி ஹினா அலி சாஸ்மா மட்டும் கீழே நின்றிருந்தார்கள். இன்னும் இரண்டு மூன்றுபெண்கள் மேலே கிரில் கம்பியில் உட்கார்ந்து கீழ்நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சந்திராவின் கண் ஏனோ அந்த ஒரு பெண்ணை மட்டும் இங்குமங்குமாய்த் தேடியது.

முதலாளி எல்லோருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு புறப்பட்டார். எல்லோரும் உடன் இருந்து ஒரு வாரத்திற்கு சந்திராவை பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு வேலைக்கு வந்தால் போதுமென்றார். மேலும், சந்திராவின் அருகில் வந்து அவனுடைய கையைப் பிடித்து மன்னித்துக் கொள்ளப்பா, என்னால் தானே உனக்கிந்த உபாதை, இத்தனை வலியை எப்படி நீ பொறுத்துக் கொள்கிறாயோ என்று வருத்தப்பட “என் அண்ணன் மாதிரிங்க நீங்க, அவன வெட்டியிருப்பேன், பொட்ட பசங்கண்ணே அவனுங்க, பின்னாடி வந்து அடிக்கிறானுங்க”

“அவனை நான் பார்த்துக்குறேன் தம்பி. நீ உடம்பை பார்த்துக்கோ. பொறுமையா ஓய்வெடுத்துட்டு வேலைக்கு வா. வீட்டுக்கு எதனா பணம் அனுப்பனும்னா எனக்கு போன் போடு.. நான் நேரம் கிடைத்தா வந்து பார்த்துட்டுப் போறேன்” என்று சொல்லிவிட்டு விடைபெற்றார்.

அவர் போனதும் செல்வம் வந்து “சந்திரா எவ்வளோ தங்கமானவங்கடா இந்த பாபா மம்மியெல்லாம்” என்று சிலாகித்துக் கொள்ள சந்திரா சிரித்துக் கொண்டான்.

“ஏன்டா சிரிக்கிற.”

ரபிக்குக்கு புரிந்தது போல்.. “அது மம்மி இல்லடா செல்வம் அம்மி. எங்க இதுல அம்மாவ அம்மி னு தான் கூப்பிடுவாங்க.

“ஓ அப்படியா.. அதை விடறா. இந்த பசங்க கூட என்ன தீயா இருக்குதுங்ககடா.. அந்த அலி பையனுக்கு என்ன பாசம் தெரியுமா நம்ம சந்திரா மேல. ஹினா ஒரு பக்கம் அலி ஒரு பக்கம் பறக்குதுங்க இவனுக்கு அடிப் பட்டுடுச்சின்னு.

அதுக்குள்ள இவன் தலைல கட்ட பார்த்தது தான் தாமதம் மேல ஒரு பொண்ணு அழவே ஆரம்பிச்சிடுச்சி, நீ கேட்டா பேசவே இல்லைன்ற பிறகெப்படிடா இதலாம்….?????”

“மேல அழுதுதுன்னியே அது எப்படி இருந்துது மச்சி, முன்னாடி நெற்றியில முடி ஸ்டைலா வெச்சிருப்பாங்களே அப்படி வைத்திருந்தாளா???” சந்திரா கொஞ்சம் ஏக்கமும் வருத்தமும் வியப்புமாக கேட்டான்.

“ஆமாம்டா, அந்த லூசு ஒன்னு உன்னையே பார்க்குதுன்னு சொன்னமே அதுடா சந்திரா” ரமேஷ் சொன்னான்.

“டேய் லூசு நீ போயி அதை லூசுன்றியா?”

“டேய் பொறுமையா பேசுங்கடா மேல கேட்கும்..”

“ஆமா கேட்டா மட்டுமென்ன நம்ம பேசுறது அவுங்களுக்கு புரியவா போகுது?”

“புரியலைன்னாலும் லூசுன்னு சொல்றது தப்பு ரமேசு.., பின்ன என்னடா அதுங்க நம்ம கூட பொறந்தது மாதிரி பார்துக்குதுங்க, நமக்காக எப்படி தவிக்கிதுங்க அதுகளைப் போயி லூசுன்ற..” சுந்தர் கோபமுற்றான்

“சரி சுந்தரு.. பசிக்குதுடா, காலைல இருந்து பச்சைத் தண்ணிக் கூட வாய்ல படலடா”

“ஆமா ல்ல சரி சந்திரா நீ படு.. நாங்க எதனா செய்யுறோம்..” என்று சொல்லிவிட்டு எல்லோரும் எழுந்து துணி மாற்றிக் கொண்டார்கள். பாத்திரம் கழுவி சாதத்திற்கு உலை வைத்தான் ரபிக், செல்வா வீடெல்லாம் சுத்தம் செய்தான், ரமேஷ் காய்கறி நறுக்கினான். சுந்தர் தேநீர் ஆத்தி எல்லோருக்கும் கொடுத்துவிட்டு ஒரு புத்தகம் எடுத்துக் கொண்டு அமர்ந்தான்.

மாலை சூரியன் சற்றிற்கெல்லாம் மறைந்து பகலின் மீது இருட்டை போர்த்தத் துவங்கியது. எங்கோ சற்று தூரத்தில் அல்லா………… என்று பாங் ஓதும் சப்தம் கேட்டது. ஜன்னலருகே மரங்கள் ஆடின. காற்று நன்றாக உள்புகுந்து மின்விசிறியோடு சேர்ந்து சப்தம் எழுப்பியது. ஏதோ மைனா போல் ஒரு பறவை மரத்தில் இருந்துக் கொண்டு கீச் கீச் கீச் என்று கத்தியது. வெளியே கூண்டில் தொங்கவிட்டிருந்த பச்சைக் கிளி ‘மிட்டு’ அதற்கு எதிர்குரல் கொடுக்க, ஆஷா இறங்கி வந்தாள்..

எல்லோரும் சற்று திடுக்கிட்டு அவளைப் பார்க்க அவள் உள்ளே வந்து அவருக்கு இப்போது எப்படி இருக்கிறது? எண்ண செய்கிறார் தூங்குறாரா? என்று கேட்டாள், அவர்களுக்கு அவள் கேட்டது அத்தனை சரியாக புரியவில்லை.

அவளே தயங்கியவாறு உள்ளே அவனுக்கருகில் சென்று ஒரு நிமிடம் அவனையே பார்த்துவிட்டு. பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியாவாறு சோகம் நிறைந்தவளாக மேலேப் போனாள். படிக்கட்டில் மீதி பெண்கள் நின்றிருந்திருப்பார்கள் போல். அவர்களும் கீழே இறங்கி வந்து சாப்பாடெல்லாம் இருக்கா? என்ன சமையல் செய்தீர்கள்? எப்படி இருக்கிறார் சந்திரா? ரொம்ப அடியா என்றெல்லாம் கேட்டார்கள்.

அம்மி அதற்குள் மேலிருந்து ஒரு தட்டு முழுக்க பலகாரம் எடுத்துக் கொண்டு கீழிறங்கி வந்தாள். சந்திரா உறங்குகிறானா என்று கேட்டுவிட்டு யாரும் கத்தி பேசாதீர்கள் என்று பெண்களை அதட்டினாள்.

பசங்க சற்று கூச்சப் பட, யாரும் கூச்சப் படாதீங்க நான் உங்க அம்மா மாதிரி என்றாள். பசங்களுக்கு அத்தனை புரியவில்லை. யாருக்குமே ஹிந்தி தெரியாதா?

கொஞ்சம் கொஞ்சம் புரியும் ஆனா நீங்க பேசறது அவ்வளவா புரியவில்லையென்று செல்வம் ஆங்கிலத்தில் சொல்ல, ரபிக்கு தெரியும் அவன் குளிக்கிறான் இப்போ வந்துடுவான் இருங்க என்றான் ரமேஷ்.

ரபிக் வந்ததும் அம்மியைப் பார்த்து சலாம் வைத்தான், அவள் அவனை நோக்கி நீ இஸ்லாமியனா? என்றாள், அவன் ஆம்  என்று சொல்ல, என்ன பிரிவு ? பெரியவங்க யார் ? பரம்பரை என்ன? எப்படி பின்புலம் என்றெல்லாம் விசாரித்து விட்டு, எல்லோரும் என்னை உங்க அம்மா மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள் என்றும், எனக்கு மேல ஏழு பிள்ளைங்க ‘கீழ ஐந்து பிள்ளைங்கன்னு பாபா சொன்னதாகவும் சொல்லிவிட்டு, உங்களைப் போன்ற ‘ஒற்றுமையான நல்ல நண்பர்களை பார்ப்பதில் தமிழர்களை எண்ணி பெருமை அடைகிறேன்’ என்றும் சொல்லிவிட்டு.., எல்லாவற்றிற்கும் காரணம் சந்திரா தான் அவனை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் சொல்லிவிட்டு, மொத்தத்தில் எல்லோரையும் பாராட்டியவாறே, மகள்களை அழைத்துக் கொண்டு மேலே போனார்.

சற்று நேரத்தில் எல்லோரும் சாப்பிட ஆயத்தமாகி சந்திராவிற்காக காத்திருந்தார்கள்., சந்திராவும் கண்களை திறந்தான். சுற்றி எல்லோரையும் பார்த்தான். நல்ல தூங்கியிருந்ததால், எழுந்த கணத்தில் சற்று தலை சுற்றுவது போல் இருந்தது. இருட்டிவிட்டதென்று மட்டும் ஆங்காங்கே பளிச்சென இட்டிருந்த மின்விளக்குகள் சொல்லின. எழுந்து வெளியே எட்டிப் பார்த்தான்.

ரமேஷ் ரபிக் மடியில் வெளியில் கட்டிலில் படுத்துக் கொண்டு பாட்டுப் பாடி கொண்டிருந்தான். சுந்தர் பக்கத்து அறையில் அமர்ந்து ஏதோ படித்துக் கொண்டிருக்க செல்வம் வெளியிலிருந்து சாப்பாட்டினை கொண்டுவந்து உள்ளே வைத்தான்.

வீட்டு வாசலின் ஒரு புறம் அதாவது வராண்டாவின் ஒரு ஓரத்தில் கட்டிலும் எதிர்புறம் சின்னதாக சமைக்க அறையும் மறுபுறம் குளியலறையும் நேரெதிரே வெளியில் போகும் வாசலும் இருந்தது.

சந்திரா லேசாக தலையை சாய்த்து வெளியே வராண்டாவின் மேல் இருக்கும் கம்பிகளை எட்டிப் பார்த்தான். கம்பிகளின் ஓரத்தில் மேலே கட்டிலிட்டு அம்மி உட்கார்ந்திருந்தாள். அருகே வேறு இரண்டு பெண்களும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். ஹினா ஓடி வந்து மேலே எகுறி கட்டிலில் அமர பாபா அவர்களை நோக்கி குரல் கொடுத்துக் கொண்டே அவர்களுக்கருகில் வருவது தெரிந்தது.

சந்திரா பாபாவைப் பார்த்ததும் சடாரென தலையை உள்ளே எடுத்துக் கொண்டான்.

அந்நேரம் பார்த்து சந்திரா பக்கம் திரும்பிய செல்வம் ‘என்னடா மச்சி தேவலையா..? இப்போதான் கொஞ்ச நேரத்திற்கு முன்பு மம்மி பசங்க எல்லாம் வந்து போனாங்க.’ என்று சொல்ல

“மம்மி இல்லடா மச்சி அது அம்மி டா”

“அடப் போடா, எனக்கு அம்மி னா நம்ம அம்மிக் கல்லுதான் ஞாபகம் வருது, நீங்க ஹிந்திலையே பேசிக்குவீங்க அம்மின்னா வித்யாசமா தெரியாது. நாம தமிழ்ல சொல்லும்போது அம்மின்னா எனக்கு எப்படியோ இருக்குடா. நாங்க மம்மி னே கூப்பிடறோம்.

“சரிடா கூப்பிடு, என்ன சொன்னாங்க உங்க மம்மி, நல்ல பேசினாங்களா எல்லோரிடமும்? தங்கமானவங்கடா அவுங்க செல்வம், ஆமா அவுங்க இந்தில தானே பேசி இருப்பாங்க, உங்களுக்கு எப்படி புரிந்தது?”

“அதுக்குதான் நம்ம ரபி இருக்கான்லா”

“ஆமால்ல, சரி நல்லாப் பேசினாங்களா, நீங்க எல்லோரும் கலந்துப் பேசிக்கினீங்களா?”

“ம்ம்.. பேசினாங்கடா. நமம்ளைபத்தி யெல்லாம் ரொம்ப உயர்வா சொன்னாங்க. அவுங்க பிள்ளை மாதிரின்னாங்கடா நம்மையெல்லாம்..”

“என்னைப் பற்றி ஏதேனும் சொன்னாங்களா ?”

“நீ தான் அவுங்களுக்கு முதல் பிள்ளை”

சந்திரா கொஞ்சம் அதிர்ச்சியும் விசனமும் பட்டான். அந்தப் பொண்ணு அவுங்க மகளாயிருந்தா என்னாகுமோ என்று தோன்றியது. அதற்குள் செல்வமே தொடர்ந்தான் –

“ஆமா சந்திரா, அவுங்களுக்கு மேல ஏழு பிள்ளைங்களாம், கீழ ஐந்து பேராம்” என்றான். அவன் அப்படி சொல்லிக் காட்டியதும் சந்திராவிற்கு சுளீர் என யாரோ மேலிருந்து அடித்ததுபோல் இருந்தது.

“அப்படியாடா சொன்னாங்க..?!!”

“ஆமாம்டா சந்திரா, என்னடா அவுங்க இவ்வளோ நல்லவங்களா இருக்காங்க..”

“அதாண்டா அம்மி”

“சரி உனக்கு உடம்பெப்படி இருக்கு?”

“ஹாங்… ஹாங்.. பரவாயில்லைடா. தலை தான் கொஞ்சம் வலிக்குது..” அதற்குள் சந்திரா குரல் கேட்டு தூரமிருந்த ரமேஷ் சுந்தர் ரபிக் எல்லோரும் அருகே வர..

என்னை மன்னிச்சிடுங்கடா..’என்று சந்திரா எல்லோரையும் பார்த்துக் கைகூப்ப

“டேய் அடிச்சன்னா பார்த்துக்கோ..” என்று கோபத்தில் ரபி கை ஓங்கிப் போனான்

“பின்னஎன்ன.. என்னத்துக்குடா இப்போ மன்னிப்பெல்லாம்..” சுந்தர் கேட்க

“இல்லைடா வேலைக்குன்னு கூட்டி வந்தேன், என்னால உங்களுக்கும்…” என்று அவன் இழுக்க

“ஆளப் பாரு எங்கள என்ன வெறும் வாங்கித் தின்ற பசங்கன்னு நினைச்சியா சந்திரா?” நான் பேரிட்டு கூப்பிட்டாலும் உம்மேல ஒரு அண்ணன் மாதிரி மரியாதை வெச்சிருக்கேன் தெரியுமா!!” ரமேஷ் கண் சிவக்கப் பேசினான்..

செல்வம் அருகே வந்து அவன் கையைப் பிடித்துக் கொண்டு “எங்கள உன் மனசார நண்பனா மதிச்சவண்டா மச்சி நீ, தெருவுல சுத்திக் கொண்டிருந்த எங்கள கூட்டி வந்து சீராக்கனும்னு நினைத்த நண்பன்டா, உன்னை சும்மா விட்டுடுவோமா???”

“இல்லடா மச்சி..”

“நீ ஒன்னும் பேசாத இந்தா கை கழுவு” ஒரு தட்டையும் தண்ணியும் எடுத்து நீட்டினான் ரபிக்.

“நான் உங்களாண்ட ஒன்னு சொல்லனும்டா ரபிக்கு..”

“இன்னும் என்ன சொல்ல போற..”

“ஒரு விஷயத்தை உங்களிடம் சொல்லவே இல்லைடா”

“எதைச் சொல்ற..”

“நேற்று இரவு..”

“ஓ அதுவா………” அவர்கள் அவன் முத்தமிட்டதை சொல்லிச் சிரித்தார்கள்

“அதுக்கப்புறமாடா..”

“திருப்பியுமா?????????!!!!!!!!”

“விளையாடாதீங்கடா.. நான் ரொம்ப முக்கியமான விஷயம் ஒன்னு சொல்லப் போறேன்”

“என்னடா சொல்ற??”

“ஆமான்டா, எதிர்பார்க்காத ஒன்னு”

“அப்போ ஷாக் கொடுக்காமப் பட்டுன்னு சொல்லு”

“அந்த கதவைச் சாத்திட்டு வா செல்வம்..”

கதவு சாத்தப் பட்டது. அடுத்த கணம் ஆஷா வாசலில் வந்து நின்றாள். அதை யாரும் கவனித்திருக்க வாய்ப்பில்லை.

கதவு மூடப் பட்டுள்ளதாய் எண்ணி நடந்ததையெல்லாம் சொல்லிமுடித்தான் சந்திரா.

“உண்மையாவாடா சொல்ற?????????”

“ஆமாம்டா.. “

“நம்பவே முடியலையேடா…”

“அம்மா சத்தியமா, செஞ்சாடா…”

“முத்தம் கொடுத்தாளா?????????”

“ம்ம்….”

“அதும் உதட்டுலையா?”

“ஆமாம்டா மச்சி. ச்ச.. மச்சக்காரன்டா நீ”

“போடா.. அதை நெனச்சாலே பயமா இருக்கு”

“யார்றா மச்சி அது??!!”

“தெரியலையேடா..”

“என்னடா முத்தம் கொடுத்துதுன்றான்.. ஆனா யாருன்னு தெரிலன்றான்… எபப்டிடா இது?”

“சத்தியம் செல்வம். எனக்கு அவளை இதுக்கு முன்னாடி தெரியாது. நான் தான் ஏற்கனவே சொல்லி இருக்கேன்ல, எனக்கு மேல யாரையும் அவ்வளவா தெரியாது, எல்லோரையும் அத்தனை நேரா பார்த்ததுமில்ல. ஆனா இந்த பொண்ணு ரொம்ப புதுசா இருந்தாடா. அழகா இருந்தா. பார்க்க நல்லவளா தெரிந்தா”

கதவிற்கு பின்னால் நின்றுக் கேட்டுக் கொண்டிருந்த ஆஷா திடுக்கிட்டாள், கண்கள் கலங்கியது, உதடு கோனி உள்ளம் சிரித்துக் கொண்டது, சந்திரா தொடர்ந்துப் பேசினான்..

“இதுக்கு முன்னாடி அவ இந்தவீட்ல இருந்தமாதிரி தெரியலை. ஆனா..”

அவன் நிறுத்த

“சொல்லு மச்சி.. என்ன ஆனா?”

“சொன்னா நம்பமாட்டீங்கடா.., நேற்று கனவுல ஒரு பொண்ணு வந்ததான்னு சொன்னேனே,

ஆமா அதுக்குதானே முத்தம் கொடுக்குறேன்னு…”

“ம்ம்.. அது கூட இதே பொண்ணு தண்டா.., ஒரே முகம் இரண்டும்”

“போடா…”

“உண்மையாடா மச்சி, சொன்னா நம்புங்கடா..”

சிரித்தார்கள்.. சற்று நம்ப இயலாமல் கோபமுற்றார்கள்..

“இதலாம் ஓவரு மச்சி, கனவுல பார்த்த பொண்ணுதான் நேர்ல வந்ததுன்னு எல்லாம் சொல்லி காம்பிரமைஸ் பண்ணிக்காத, ஏன்னா நீ தப்பு பண்ணக் கூடாது, அவுங்க நம்மல பெத்தப் புள்ள மாதிரி பார்க்கிறாங்கடா”

“எனக்கு தெரியும் சுந்தர், நான் எப்பவும் அவுங்களுக்கு துரோகம் பண்ண நினைக்க மாட்டேண்டா, மனசை இழுத்து புடிச்சாவது என்னை சரி செய்துக்குவேன். எனக்கு அவுங்க தான் முக்கியம்..”

“இல்ல மச்சி, நீ பேசுறதை பார்த்தா கவுந்துடுவ மாதிரி தெரியுதேடா” செல்வம் பதறினான்

“ச்சி போடா.., என்னமோ நான் போய் அவளுக்கு முத்தமிட்டா மதிரி பேசுறீங்க.. ‘அவளே வந்தா ஏதோ சொன்னா எனக்கு என்னன்னுப்  புரிலன்னேன், உதட்டை புடிச்சி முத்தம்கொடுத்துட்டு சிரிச்சிக்குனே ஓடிட்டா”

“தடுத்திருக்கலாம்ல”

“முடிலடா, அந்த கனவால கொஞ்சம் மயங்கிட்டேண்டா…”

“என்ன கனவுடா மச்சி பாபா யாராவது பாத்திருந்தா”

“அதாண்டா நெஞ்சி பதைக்குது”

“எங்களை யாரையாவது எழுப்பி யிருக்கலாமே”

தோனலைடா.., கனவு மாதிரி இருந்துது, திடீர்னு வந்தா, எதிரே நின்னா, ஏதோ பேசினா, உதட்டை எழுத்து ….. கொடுத்தா போய்க்கினேயிருந்தா”

“நிருத்தனும்னா நிறுத்தி இருக்கலாம்டா”

“ஆமாம் ரபி, தப்பு தாண்டா பண்ணேன், நிறுத்தி இருக்கலாம் தான், இப்போ தோணுது; அப்போ தோணலைடா”

“யாரு..? எந்த பொன்னுன்னாவது தெரியுமா?”

“முகம் தெரியும், ஆனா யாருன்னெல்லாம் எப்படிடா!!!!!!!” கவலையுற்றான் சந்திரா

“என்ன பேருன்னு கூட சொல்லலையா அவ”

“இல்லடா..”

“அதெப்படி மச்சி???!!”

“அது தான் எனக்கும் ஒரே ஆச்சர்யம்டா, என்னவோ என்னை பல வருசமா தெரிந்தவ மாதிரி வந்தா, பேசினா, கொடுத்தா, போயிட்டா..”

“எங்க இங்கயா இந்த ரூம்லையா சந்திரா” ரமேஷ் கு ஆச்சர்யம் அடங்க வில்லை இன்னும்

“ம்ம் உன் பக்கத்துல வந்து நின்னு தாண்டா என்னை எழுப்பினா(ள்)”

“எங்களை யாரையாவது எழுப்பி இருக்கலாம் மச்சி, தப்பு பண்ணிட்டடா”

“இல்லடா செல்வா, அப்போதாண்டா கனவு கண்டேன் திடீர்னு அவளும் வந்து எழுப்பினா எனக்கு இப்போ கூட நடந்ததெல்லாம் வெறும் கனவு போலவே இருக்குடா.. ஆனா ஒரே குழப்பமாவும் இருக்கு. அதே நேரம் யாரும் என்ன தொட்டு உதடு வரையும், ச்ச… இதுவரையும் எந்தப் பொண்ணும் என்னை ..”

“யார்னா ஒருத்தர் பார்த்திருந்தா கூட மம்மி முகத்துல கரி பூசினா மாதிரி ஆயிருக்கும்டா, அதும் ஒரு வேளை அவுங்கப் பொண்ணா ஏதேனும் இருந்திருந்தால்?” ரபி சொல்லி நிறுத்த சுந்தர் சொன்னான் –

“அவுங்க உம்மேல நிறைய நம்பிக்கை வைத்திருக்காங்க மச்சி”.

“ஒன்னு பன்லாம்டா சுந்தர், இதுக்கு ஒரே வழி தான் இருக்கு”

“என்ன?” எல்லோரும் ஆச்சர்யமா சந்திராவையே பார்த்தார்கள்

சந்திரா சற்றும் தாமதிக்காமல், “உடனே வீட்டை மாத்துறோம்…………..” என்றான்

“போடா.. “

“என்ன போடா.. அவன் சரியா தான் சொல்றான் ரபி……….”

“இப்படி தாயா புள்ளையா பழகுறவங்கள விட்டுட்டு எங்கடா போவ?”

“எங்கனா போறோம் ரபி.. அவுங்களுக்கு என்னால எந்த ஒரு துரோகமும் நடக்கக் கூடாதுடா”

“சரிடா உன் விருப்பம். நீ என்ன சொல்றயோ அதுக்கு நாங்க கட்டுப் படுவோம். ஏன்னா நீ சுயநலமா நடக்க மாட்டான்னு தெரியும்”

“நாளைக்கு நீங்க புறப்பட்டு எங்கனா வெளியப் போங்க.. நான் தனியா இருக்கும் போது மம்மி வருவாங்க அப்போ பேசிக்கிறேன்”

“சரிடா வாங்க சாப்பிடலாம்..” எல்லோரும் எழுந்தார்கள்.. சந்திராவும் எழுந்தான்.. உள்ளே ஏதோ ஒரு ஏமாற்றம் போல், தன்னை தானே ஏமாற்றிக்கொள்ளப் போவதுபோல் ஒரு உணர்வு பொங்கியது. ஒரு வாலி தண்ணியை எடுத்து கப்புன்னு தலையில ஊத்திக்கணும் போல இருந்துது.

அதேநேரம் மனதிற்குள் ஏதோ ஒரு அலை பரவி, அவள் இங்கே தான் எங்கோ நிற்கிறாள் என்பது போல் ஒரு உள்ளுணர்வு மேலிட, ‘எட்டிப் பார்ப்போமா, வேண்டாம், சும்மா பார்ப்போமே, வேண்டாம் ஒருவேளை அவள் நின்றிருந்தால், நின்றிருந்தால் என்ன, பாவம்ல, மான்சாட்சிப் பேசிக்கொண்டது.., மனசை அடக்கி, அவளை உள்ளே நிரப்பி, எதிரேதான் நிற்பாளோ என்றெண்ணி கதவைத் திறக்கப் போனான்

அதற்குள் ரமேஷ் ‘சந்திராவை அழைத்து அவன் உறங்கும் போது அந்த லூசுப் பொண்ணு, மன்னிச்சிக்கடா அவ பெயர் தெரியாது, அந்த பொண்ணு வந்தது, உன்னை கேட்டது, உன் பக்கத்தில் நின்று உன்னை பார்த்துட்டுப் போச்சி’ ரொம்ப கவலை வேறு பட்டது’ என்று சொல்ல –

சந்திராவிற்கு சடாரென இரவு வந்து முத்தம் கொடுத்துப் போனதும் அதுவாகத் தான் இருக்குமோ என்று எண்ணம் எழ, பாவமென்று எண்ணி அவளுக்கான ஒரு பரிதாபம் உள்ளே மனதெங்குமாய் பரவியது. தனையறியாது ஒரு கலக்கம் உள்ளே கண்ணீராய் கரைந்துக் கொண்டது.

ஏன், எப்படி அவளுக்கு என் மேல இவ்வளவு பாசம் வந்தது? ஒருவேளை நான் வீடு மாற்றிவிட்டுப் போனால் பிறகு என்ன செய்வாள், பாவம், நான் தான் தவறான முடிவை எடுத்தேனா” என்று நினைப்பதற்குள் சுந்தர் தட்டில் உணவு பரிமாறி சாப்பிட அழைத்தான்.

சந்திராவிற்கு மனசே சரியில்லை, அவனுக்கு என்னவோ அவள்மேலே தனக்காக காத்து நிற்பது போன்ற ஒரு உணர்வு மேலிட மேலே எட்டிப்பார்க்க எண்ணி விருட்டெனப் போய் கதவைத் திறந்தான். வாசலில் அவள் கிளிக்கு உணவிட்டுக் கொண்டே கிளியிடம் பேசிக் கொண்டிருப்பது போல் நின்றிருந்தாள்..

அவன் விருட்டெனக் கதவைத் திறந்ததும், அவளைக் கண்டதும் அசந்துபோய் நின்றதும், அவளும் திடுக்கிட்டுத் திரும்பினாள், அவனை ஈரக் கண்களால் ஆழாமாகப் பார்க்கிறாள், கண்ணீர் ஒரு துளி உடனே சொட்டி உலகை நனைத்துவிடும் ஈரமென’ விழிகளில் தேங்கிக் கொண்டது அவளுக்கு. ஈர விழிகளில் காதலால் அவனைத் துளைத்தெடுக்கிறாள்.

அவன் செய்வதறியாது அவள் பார்வையிலிருந்து விலகிட இயலாமல் நிற்க,

ஆயிரம் விளக்குகளும் ஒற்றை கணத்தில் எரிந்தது போல் ஒரு ஆச்சர்யம் பொங்குகிறது அவளுக்கு. சிலை போல் உறைந்தாள் அங்கேயே. சந்திராவிற்கு உடம்பெல்லாம் ஒரு புது மின்சாரம் பாய்ந்தது. எதற்கோ காத்திருந்த ஒரு நிம்மதி வந்து அவனின் மனசெல்லாம் ஒட்டிக்கொண்டுவிட்டது போல் உணர்ந்தான் சந்திரா.

அவள் லேசாகப் புன்னகைத்தாள். இவனும் மறுக்க முடியாதவனாய் உதடு கோனி சிரிக்க எத்தனித்தான். அவனின் உதடு கோனி சிரிக்க எண்ணியதைப் புரிந்துகொண்டவளுக்கு அது ஏனோ அவனுடைய சம்மதம் போல் மனசுக்குத் தோனியதுபோல், ஒரு நிம்மதிப் பெருமூச்சு மனசு விம்மி வெளிப்பட்டது.

சந்திரா சற்று மலைத்ததுபோல் நிற்க; அவள் சிரித்துக் கொண்டே ஓடி குளியலறைப் பின்னிருந்த படிக்கட்டில் ஏறி மேல்தளத்திற்கு ஓடினாள். சந்திரா அவள் போன பாதையையே ஒரு ஏமாற்றமாய் ‘ஐயோ போய்விட்டாளே..’ என்பது போல் தவிப்பாய் பார்த்துக் கொண்டு நின்றான்.

மேலே கிரில் கம்பியில் நின்றுக் கொண்டு மம்மி இவர்கள் இரண்டு பேரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள். மேலே சென்ற ஆஷாவை ஏதோ கோபமாக சொல்லி கத்தினாள். சந்திராவிற்கு உடம்பெல்லாம் ஒரு கணம் ஆடிப் போனது..

மௌனமாக குளியலறை சென்று தண்ணீரை எடுத்து முகத்தில் அடித்தான்… தண்ணீரோடு சிதறிக் கொண்டு தரையெல்லாம் கொட்டியது அவள் நினைவுகள்..

அவனையறியாது மனது பிழியப்பட்டு ஒரு சொட்டுக் கண்ணீர் இறங்கி யாருக்கும் தெரியாமல் வாலி தண்ணீரில் விழுந்து கரைந்தது.. தண்ணீரை வேகமாக எடுத்து முகத்தில் அடித்தான் சந்திரா.

தண்ணீர்.. தண்ணீர்.. தரையெங்கும் தண்ணீர் பரவ; தண்ணீரெங்கும் அவள்; அவள்; ஆஷா!! ஆஷா!! ஆஷா!! என்று யாரோ எழுதியதைக் கலைத்துக் கொண்டுப் போவதுபோல் நீர் விலகி ஓடி வடிகாலிற்குள் விழ; அதிலிருந்து எழுந்த அவளின் நினைவெல்லாம் அவனுக்குள் ரத்தமும் சதையுமாய் கரைந்தது. அதற்குள் –

அவள் மேலே எங்கோ ஒரு மூலையில் மறைமுகமாய்ச் சென்று நின்றுகொண்டு அவனுக்காய் விசும்பும் ஒரு விசும்பளின் சப்தம் அவனுக்குள் விஷமாய் இறங்க; காதல் செய்றியோ காதல்; காதல் செய்றியோ காதல்’ என்றொரு பேரொளி எழும்பி வீடெல்லாம் ஒலித்தது. மரண வலியென மனசு வலித்தது..

—————————————————————————————————————————————–

னி.. காற்றின் ஓசை – தொடரும்..

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காற்றின் ஓசை - நாவல் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s