உன் வாழ்க்கை கதைநூறு சொல்லும்
முகமோ அத்தனையையும் ஒற்றைசிரிப்பில் வெல்லும்,
காலம் உன் களப்பணியை நினைவில் கொள்ளும்
தமிழர் வாழும்வரை உன்புகழும் நில்லும்!
வானம் தொடுங் காலம்வரை
சமரிலும் அரசவை படையிலும் நீயே தூணானாய்;
எங்களின் காலம் சொல்லா தீர்ப்பிற்கு – உன் மரணத்தால் ஒரு
தோல்விசாசனம் எழுதிப் போனாய்!
மீண்டும் வெற்றிமுரசு கொட்டும்வரை
ஓயாது எம் ரத்தம், வெட்டி சுக்குநூறாய் போட்டாலும்
குண்டு பல பொழிந்தாலும் –
இறக்க இறக்க பிறக்குமெம் இனம், அது நீ கொடுத்த சினம்!
எம் தமிழர்களை தின்று குவித்த மண்ணில்
ஒர்தினம் வென்றுகுவிப்போம்;
வென்றுகாட்டிய வெற்றிகளை உம் போன்ற
வீரமறவர்க்கே; துயிலம் – சென்றுகுவிப்போம்!
அதுவரை, மூச்சில் நீ சுமந்த சுதந்திர வேட்கையை
உன் சுவடுகள் காற்றினில் கலந்து தரும்,
எமை வஞ்சித்து; அழித்திட்டதாய் நகைக்கும் பகைவர்க்கு
நீ சொல்லிச் சென்ற பாடங்களே நீதியை புகட்டித் விடும்!
வாழ்வின் அசாதாரன சந்தர்ப்பங்களில் – வெற்றியாய் துளிர்த்த
உன் வீரம், விரைந்து எம் மண்ணின் விடிவாய் விடிந்துவிடும்;
அநீதிக்கு துணைபோன வல்லமை தேசத்தை – அன்று நீ
திருப்பி விரட்டிய பயம் – இன்றும் எதிரியை கொன்று போடும்!
வாழ்வின் பாதியை அல்ல, நீ உலகம் பார்க்க துவங்கியதே
ஈழத்து சுதந்திரப் போரில் அல்லவா,
உனக்காய் வாழும் நாட்களை எல்லாம் – நீ
எமக்காய் வாழ்ந்த – உலகறியா விடுதலை தியாகியல்லவா!
உன் வெள்ளை சிரிப்பில் கூட ஒரு தீயுண்டு
அது அன்பிற்கு உடன் எரிகையில் வெளிச்சமாய் பரவியது
ஆணவத்தின் எதிரே எரிகையில் – எதிரே நின்றவரை
வீரமாய் நின்று கொளுத்தியது!
இனி உன் வெள்ளை தீயின் விடுதலை வேட்கை
எம் நெஞ்சில் எரியுமையா;
அது அடங்கும் நாள் – எம் மண்ணில் நீ கேட்ட
சுதந்திரம் கிடைக்குமையா!
காலத்தை எத்தனை ஏமாற்றி வஞ்சித்தாலும்
வெற்றி ஓர்நாள் கிடைப்பது காலத்தின் உறுதியையா –
அந்த வெற்றியை தாங்கும் கொடி; அன்று உன்
உழைப்பையும் தியாகத்தையும் சுமந்தே பறக்குமையா!!
——————————————————————————
வித்யாசாகர்
//காலத்தை எத்தனை ஏமாற்றி வஞ்சித்தாலும்
வெற்றி ஓர்நாள் கிடைப்பது காலத்தின் உறுதியையா –
அந்த வெற்றியை தாங்கும் கொடி; அன்று உன்
உழைப்பையும் தியாகத்தையும் சுமந்தே பறக்குமையா!!//
உண்மை வரிகள் அனைத்தும், தூங்கி இருக்கும் தமிழ் உணர்வை மீண்டும் மீண்டும் எழுச்சியடை செய்கிறது உங்கள் கவி வரிகள்..
வெற்றி பெறும் நாள் வெகு விரைவில்
தொடரட்டும் உங்கள் தமிழ் பணி
LikeLike
மிக்க நன்றி தமிழ்த்தோட்டம், மாவீரர்களின் உழைப்பையும் தியாகத்தையும் வீரத்தையும் அடக்க நம் கவிதைக்கு அத்தனை ஊட்டமில்லை. இயன்றதை அந்த விதைகளின் வேரிற்கு சமர்ப்பிப்பதில் பெருமிதம் கொள்கிறது நம் எழுத்துக்களும்!!
LikeLike
அருமை அண்ணா… எழுச்சியூட்டும் வரிகள்… இதைப் போன்று நிறைய எதிர்பார்க்கிறேன் உங்களிடம்… பிரபாகரன், பாலசிங்கம் அவர்களுக்கு அடுத்து புலிகள் என்றால் என் நினைவில் ஆழப் பதிந்தவர் தமிழ்ச்செல்வம்… அதற்கு அவரது உற்சாகமூட்டும் புன்னகையே ஒரு காரணம்… மாவீரர் தினத்தை நோக்கி…..
LikeLike
ஆம்; கண்டிப்பாகப்பா.., நேரம் கிடைக்கையில் அல்ல ஒதுக்கியேனும் ‘இவர்களுக்கான எழுத்துக்கள் என்னுள் இருந்தும்’ பிரவாகம் எடுத்துக் கொண்டே இருக்கும்.. உங்களின் அன்பிற்கு மிக்க நன்றி என்னருமை தம்பி!!
LikeLike