பெரியோர் வீற்றிருக்கும் அவைக்கும்
தோழமை பூத்திருக்கும் கவிச் சபைக்கும்
முதல் வணக்கம்,
வானத்தில் பூ பூத்து
அன்பில் நட்பாய் காய் காய்த்து
வார்த்தையில் எளிமை கூட்டி
பேசுகையில் இதயக் கூடெங்கும்
என் தமிழ்போல் நிறையும் அன்பு தலைமை ஐயா சிவமணிக்கும் வணக்கம்!
என் கவிதை சற்று சோகம் கூட்டலாம்; ஆனால் காரணம் நானல்ல எனக்கு தலைப்புக் கொடுத்த தமிழோசை என்று கூறி, ஒருவேளை அவர்கள் மகள் பிறந்த மகிழ்வில் கொடுத்திருக்க கூடும் என்றாலும் என் மூத்த மகளிற்கு ஈடான, அன்புத் தங்கை வித்யாவிற்கே முதல் வரிசை என்பதை முன்வைத்து என் கவிதைக்குள் நுழைகிறேன்.
எனக்கான தலைப்பு: தீபாவளி சீர்வரிசை..
மார்மீது உதைக்காமல்
தோள்மீது சாய்ந்தவளே..
மனசெல்லாம் பாசத்தால
மழைபோல பெய்தவளே..
சீர்வரிசை தட்டெடுத்து
சின்ன அண்ணன் வாறேண்டி..
தெருவெல்லாம் –
கண்ணீரால் நனைக்காம என் முதல் பொண்ணே ஓடியாடி!!
பட்டமரம் பூத்தது போல்
உன் மனசெல்லாம் பூத்திடுமா..
இந்த அண்ணன் முகம் பார்த்ததுமே –
பத்து வயதுனக்குக் குறைந்திடுமா..?!!
தூக்கி நான் தாலாட்ட
அண்ணா என்றுருகிடுமா..
உன் தீபாவளி வரிசையில
என் உயிரெல்லாம் கரைந்திடுமா?!!
குறும்பு செய்து சிரிப்பவளே
அடிக்கும் முன்னே அழுபவளே..
உன் சின்ன மனசு இதயத்துல –
அண்ணனையே –
உயிர்வரைக்கும் சுமந்தவளே ஓடியாடி..
ஒரு நாள் பிரிந்தாலே
ஓயாது அழுபவளே..
பள்ளிக்கூட பையில் கூட
என் பிரிவை தூக்கிப் போனவளே..
காலை எழுந்து விழிக்கக் கூட
என் முகத்தையே கேட்பவளே.. ஓடியாடி..
கணவன் அடித்தானோ..
மாமியார் வைதாளோ..
நாத்தனா முறைத்தாளோ ..
துரும்பாட்டம் இளைத்தாயோ –
எனைக் கண்டதும்; பொய்யாய் சிரிப்பாயோ???!!!
சிரிப்பு தான்.. சிரிப்புதான்..
உன் ஒற்றை சிரிப்புதான் போதுமடி –
அது என் ஆயுள் வளர்க்கும்
சாமியாடி..
ஆழிக் குள்ள புதைந்து போன
ஏஞ் சோகம் தீர்க்கும் வாஞ்சையடி!!
எனக்கு கருவா பிறந்தவளே..
மகளா பிறந்தவளே..
உனக்கு பாசத்துல பட்டுடுத்தி
கண்ணீரால் நகைபோட்டு
என் உயிரை பிடுங்கி வரிசை வைப்பேன்;
நீ –
உயிரோடில்லை யென்றே
எப்பவுமே நினைக்க மாட்டேன்!!
——————————————————————————
வித்யாசாகர்
//வானத்தில் பூ பூத்து
அன்பில் நட்பாய் காய் காய்த்து//
மிக்க நன்றி உறவுகளே.. இக்கவிதை என் முழுக்க சுயம் சார்ந்த அதாவது என் குடும்ப வருத்தத்தை பாரத்தை இங்கே உங்களுக்கும் தருவதற்கான நோக்கமல்ல பதிந்தது. என் தங்கை என்னோடு தான் இருக்கிறாள், அவள் இல்லாமல் இல்லை என்பதை மறுபதிவு செய்துக் கொள்ளும் முயற்சி. எவரேனும் வருந்தியிருப்பின், மன்னிக்கவும்.
தவிர, மேலே குறிப்பிட்டுள்ள அந்த // வானத்தில் பூ பூத்து// அன்பில் நட்பாய் காய் காய்த்து// என்று காரணமின்றி எழுதியுள்ள வரிகள், கவியரங்க தலைமை வகித்த நண்பர் கவிஞர் சிவமணி அவர்களின் ஒரு சிறப்புக் கவிதையின் ஆரம்ப வரிகள். நடுவரை போற்றும் / அல்லது கவரும் வண்ணம் அவ்வரிகள் அங்கே சேர்க்கப் பட்டுள்ளது, இதர அர்த்தமின்றி!
LikeLike