எவனோ கிள்ளியெறியத் துணிந்த எம் வீரத்தை
விடுதலையை –
எம் உணர்வை –
மீண்டும் மீண்டுமாய் உயிர்பித்துத் தந்தவரே;
வாழ்வின் வெற்றிதனை –
விடுதலை வேட்கையாகக் கொண்டு –
மொழி உணர்வை தமிழ் உணர்வென – என்
கடைசி தமிழனுக்கும் ஈந்தவரே;
வீழும் ஒரு தோல்வியில் கூட –
பாடம் உண்டென மீண்டு –
எமை மெல்ல மெல்ல ஒருங்கிணைத்து
ஒரு தேசமாய் வளர்த்தவரே;
அடங்கிப் போனவள் கையில் ஆயுதம் பிடிக்கவும்
அடிமை என்றெண்ணியவனுக்குத் திருப்பியடிக்கவும்
உயிர் பறித்துப் போனவனிடம் இருந்து – எம்
விடுதலையை மீட்கவும் பாடம் புகட்டியவரே;
ஒழுக்கத்தை ஒவ்வொரு குடிமகனுக்கும் போதித்து
வீரத்தை எம் குழந்தைகளுக்கும் ஊட்டி –
தேசம் என்றால் எது என்றும், அதை தமிழன் ஆண்டால்
எப்படி இருக்குமென்றும் உலகிற்குக் காட்ட உழைத்தவரே;
என் தாய் வயிற்றில் பிறக்காமல் உற்ற
என்னன்பு அண்ணனே,
என்றேனும் ஓர் தினம் எம் தேசம் ஆளப் போகும்
எம் புகழ்மிகு மன்னனே,
உனக்கு செல்வங்கள் பதினாறென்ன –
இருக்கும் எல்லாம் வளமும் நலமும் கிடைத்து
சுதந்திரம் வீசும் மண்ணின் – ஒற்றை தலைவனாய்
எமை காக்கும் உண்மை தலைவனாய்
வாழ்வாங்கு வாழ –
எம் இனத்தின் மொழியின் வழிநின்று
இறையின் அருளுக்கு இறைஞ்சி
மனதார வாழ்த்துகிறோம்!!
——————————————————
வித்யாசாகர்
காலத்தை வென்ற தலை வனுக்கு வாழ்த்துக்கள்.
LikeLike
மிக்க நன்றியென் அன்பு சகோதரி..
நம் மொத்தபெரின் நம்பிக்கையாலும் வாழ்த்தினாலும்.. வானை உடைந்துக் கொண்டெழும் பலத்தோடு அண்ணன் விரைவில் வருவார்.. நம்பியிருப்போம்!!
LikeLike