சொல்லும் பொருளும் அரசாலும்
எம் சந்தக் கவியும் ஜதிபாடும்,
உள்ளும் புறமும் அழகாகும்
தமிழ் எங்கும் எதிலும் முதலாகும்,
மொழியும் உயிரும் ஒன்றாகும்
அதிலும் தமிழே சிறப்பாகும்..,
கம்ப நாத கவிமலரே..
கடல் காற்று வானமென கலந்த தமிழழகே;
என் உச்சுமுதல் நிறைந்தவளே
நாவில் இனிக்கும் தமிழே முதல் வணக்கம்!
பெரியோர் வீற்றிருக்கும் அவைக்கும்
தோழமை பூத்திருக்கும் கவிச் சபைக்கும்
சொடுக்கும் சொடுக்கலில் வடுக்களை கவிதையாக்கும் நாயகர்
யுகக் கவிக்கும் என் தலைவணக்கம்!
————————————————————————–
உணர்வுகளை பாடலாய் இசைத்து, நம் நாடிகளை ஒருநொடி அசைத்து
நமக்கு பெருமை சேர்க்க வந்திருக்கும்
பல்கலை திறன் படைத்த ‘திரையிசை தென்றல்’
இசையமைப்பாளர் திரு. ஆதி அவர்களுக்கும்,
பதின்மூன்று வயதிலிருந்து – தன் – கிராம இசையை நகரம் வரை நகர்த்தி
ஒரேயொரு திரைப் பாடலில் உலகை சற்று திரும்பிப் பார்க்கவைத்த
அன்பு சகோதரி திருமதி சின்னப் பொண்ணு அவர்களுக்கும் என் நல்-வணக்கம்!
————————————————————————–
பொதுவாக கவிதைக்கு பொய்யழகு என்பார்கள், இங்கே; கவிதைக்கு மெய்யுமழகு என்று மெய்ப்பித்துக் கொண்டிருக்கும் என் சக கவிஞர்களுக்கு நன்றிகளை கூறி என் கவிதைக்குள் வருகிறேன்..
————————————————————————–
தலைப்பு : கற்பனை மட்டுமல்ல கவிதை!
என் தெருவெல்லாம் பூத்த காதல் பாடி
என் வாழ்வெல்லாம் அழுத கண்ணீர் சொட்டி
எம் இனத்தின் உயிர்பூ தமிழை சூடி
என் உறவுகளுக்கு நான் சேர்க்கும் பொக்கிஷம்; கவிதை!
உயிரெல்லாம் ரத்தம் சிந்தி
உறவெல்லாம் அறுத்துப் போட்டும்
மனசெல்லாம் காய்ந்துப் போய் திரியும் மனிதர்களின்
முகமூடி கிழித்து உலகிற்குக் காட்டியது; கவிதை!
காலம் தொலைக்காத காதலால் – ஒழியும்
ஜாதிமதங்களின் கொடூரம் பேசி,
கையளவுமனசில் உலக அவலம் சுமக்கும் வாழ்க்கையை
கதைகதையாய் – கோர்த்துக் கொண்டது; கவிதை!
காற்றில் இரண்டு சலங்கைக் குலுங்க
காதுகளில் உயிர்தொடும் அவள் குரல் கேட்க
அவளை எண்ணி உருகி இரவெலாம் சுமந்த கனவுகளை
பகலெல்லாம் எழுதித் தீர்த்த இனிய காதல்; கவிதை!
சில்லறை கொட்டும் சப்தத்தில்
சிந்தும் கண்ணீரின் விசும்பலில்
கொட்டும் மழையின் தாளத்தில்
காடுகனக்க சூழும் மேகநகர்தலில்
சில்லென்று கண்ணிமை நனைக்கும் காற்றினில்
இதயம் நிறைக்கிறது; கவிதை!
கைநீட்டி வாங்கிய லஞ்சத்தை
வழிமடக்கி அடிக்கும் கொள்ளையை
ஓட்டு விற்று வாங்கிய வெற்றியை
வட்டிக்கு கொடுத்து அறுக்கும் தாலியை
ஒரு சாமானியருக்கும் புரிய சாட்டைச் சொடுக்கியது; கவிதை!
உறவெல்லாம் பிரிந்து
மனைவி குழந்தைகளைப் பிரிந்துப் – ஊர்விட்டு
தேசம் கடந்து – அரபி அழைத்த ஒமாருக்கெல்லாம் ஆமாம் போட்டு
குவைத்தில் குப்பூசுத் தின்னக் கூட நேரமின்றி உழைக்கும் –
என் உறவுகளின் தவிப்பை; வெளிச்சம் போட்டு ஊருக்கு காட்டியது; கவிதை!
மண்வாசம் மறக்காத
இரவெல்லாம் தலையணை நனைய அழுது
பகலெல்லாம் பைப்பிலும் பாலைவனத்திலும்
மணற்காற்றோடு காற்றாக திரிந்து
கடிதம் போய் தொலைபேசி போய் மின்னஞ்சல் போய்
ஸ்கைப்பிலும் யாகூவிலும் கூகுல்டாக்கிலும் வருடங்களை தொலைத்து
தன் வாழ்க்கையை கூட திரைப்படங்களில் ரசித்து
வயோதிகம் வாட்டும் நாளில் ஊருக்கு போ’ என்றனுப்பினால்
அதன் – அத்தனை வலிகளையும் கண்ணீராய் சுமந்தவனின்
தீர்ந்து போன வாழ்க்கை; கவிதை!
காதோடு காது பேசி
திருமணமான முதல் மாத நாட்களை
‘வாழ்வெல்லாம் நினைத்துருகி –
விமானம் வரும் திசைபார்ப்பதை தினசரி கடமையில் ஒன்றாக்கி
இன்று வருவார் நாளை வருவாரெனக் காத்திருந்து
வங்கி தோரும் நடையாய் நடைநடந்து /
கரண்ட் பில் கட்டி / மளிகை வாங்கிபோட்டு /
மகன்- மகள் திருமணத்தை நடத்தி / பேர-பேத்தியை படிக்கவைத்து /
நானிருந்து செய்வதை எல்லாம் நானின்றி செய்து –
நரைத்த முடியில் அவளுக்கான ஆசைகளை மிச்சம் வைத்திருக்கும்
என் மனைவியின் ஏக்கத்தை எழுத்தாக்கிக் கொண்டது; கவிதை!
மதம் பிரச்சனையா? ஜாதி பிரச்சனையா?
மூடப் பழக்கம் எதிர்ப்பா?, பகுத்தறிவு பேச்சா ?
ஆன்மீக சொற்பொழிவு வேண்டுமா?, கடவுகளை தேடுகிறாயா ?
கைம்பெண் மறுவாழ்வு பற்றி விழிப்புணர்வா?
திருநங்கையின் வலி தெரிய வேண்டுமா?
தேடிப் பார் எம் கவிதையில் கிடைக்கும்!
சிட்டாடப் பட்டுடுத்தி சீரெல்லாம் சேர்த்து வைத்து
மொட்டாட்டோம் அனுப்பினோமே,
கேஸ் வெடித்ததாமே; எம் குலவிளக்கு அணைந்து போச்சே!!!!!!!
உன் தாய் கதறினாளா – தேடிப் பார் எம் கவிதையில்
என் கவிஞன் வரதட்சணைக் கொடுமையில் எழுதியிருப்பான்!
கவிதை வெறும் நாலடியில் பாடி
ஆறடியில் மாலை வாங்க அல்ல;
கவிதை வெறும் நாலடியில் பாடி
ஆறடியில் மாலை வாங்க அல்ல
வெறும் கற்பனை அல்ல – கவிதை
கவிதையில் ஒரு ஜீவன் பூக்கிறது
கவிதையில் ஒரு வாழ்வு மலர்கிறது
கவிதையில் ஒரு புரட்சி வெடிக்கிறது –
இச்சமுதாயத்தைப் புரட்டிப் போடுகிறது கவிதை!
பாரதி கவிதை எழுதினார்
பாப்பா பாட்டு குயில் பாட்டுவரை கவிதையானது,
வைரமுத்து கவிதை எழுதினார்
பட்டிதொட்டி யெல்லாம் கவிதையின் வாசம் பரவியது,
நம் யுகபாரதி கவிதை எழுதினார்
தெருவாசிகளின் வலி கூட தெருவாசகம் ஆனது,
ஐயா சேது கவிதை எழுதினார் –
வளைகுடா வானம்பாடி கவிஞர்சங்கம் – பிறந்தது,
வானருவி முதியோர் இல்லம்; திறம்பட திறந்தது!
கவிதை; அவரவருக்கான வாழ்க்கையை அவரவருக்குத் தருகிறது
கவிதை; படிப்பவரின் வாசிப்பிற்கான ஞானத்தை கேட்போருக்கும் தருகிறது
கவிதை; உன்னையும் என்னையும் இக்குளிரில் கூட கூட்டி
இங்கே ஒன்று சேர்த்திருக்கிறது.
எனவே – வெறும் கற்பனை மட்டுமல்ல கவிதை’ என்று கூறி
விடைபெறுகிறேன்! நன்றி வணக்கம்!!
—————————————————————————————————-
வித்யாசாகர்
இந்த கவிதை வாசிப்பிற்கான இசைக் குறுந்தகடு விரைவில் கிடைக்கும் கிடைத்ததும் அதையும் பதிகிறேன்.
இக்கவிதை என் வாசிப்பிற்கு அல்லது என் குரலுக்கு உட்படுத்தி எழுதியதாகும். அதிலும் கவியரங்கம் என்பதால், தலைமை ஏற்ப்பவருக்கு மரியாதை செய்தல், விருந்தி…னருக்கு வணக்கம், பெருமை சேர்க்க வந்த உணர்வுப் பெட்டகங்களாகிய பொதுமக்களுக்கு மதிப்பு சேர்த்தல் என; எல்லோரையும் கருத்தில் கொண்டு இக் குவைதிற்கும் தமிழகத்திற்கும் இடைப்பட்ட வாழ்தலை மையப் படுத்தி எழுதியதாகும்.
எப்பொழுதும் போல் –
மிக்க நன்றிகளே உரித்தாகட்டும்..
LikeLike
தமிழ் எப்போதும் இனிமை. வித்யா கவிதை அருமை.
எனக்கு தமிழும் பிடிக்கும். கவிதையும் பிடிக்கும் .
கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பதுபோல் சில நாளில் வித்யாசாகர் நன்பன் நானும் கவி எழுதுவேன் போலும்…
LikeLike
படிக்க படிக்க; தன்னைத் தானே எழுதிக் கொள்ளும் இனிய மொழி தமிழ்.
கொஞ்சம் உணர்வு, கொஞ்சம் முயற்சி, கொஞ்சம் ஆர்வம் நிறைய நம் சமூகத்தின் மீதான அக்கறை என்றிருந்தால் போதும்; தமிழ் தானே நம் கையிலொரு தீப்பந்தம் கொடுத்து இச் சமூகத்து தெருவெல்லாம் தீ வைத்துத் தீர்த்துக் கொள்ளும் அதர்மங்களை.
அதின்ரி, நல்லவைகளின் வேர்களில் கவிதையாய் கதைகளாய் இன்னப பிற படைப்புக்களை பூத்துக் கொள்ளும் தமிழ்.
நம் உயிரின் நாதம் தொட்டு; எழுதுவதற்கான கலையை படிப்பவருக்கு வழங்கி மகிழும் சிறப்பென்பது தாய்மொழிக்கே உரிய ஒரு மகத்தானப் பேராகும்.
நீங்கள் தான் எப்பொழுதே படிக்க துவங்கி விட்டீர்களே; இனி விரைவில் எழுதவும் செய்வீர்கள் ரவி சகோதரர்.
மிக்க வாழ்த்துக்களுடனும்.. நன்றிகளுடனும்..
வித்யாசாகர்
LikeLike
கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பதுபோல் சில நாளில் வித்யாசாகர் நன்பன் நானும் கவி எழுதுவேன் போலும்…
LikeLike
கவிதை நன்றாக இருக்கிறது போல் எண்ணும் ஒரு புன்னகையை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை உங்களின் அன்பிற்கும் இறைவனின் அருளிற்குமே சமர்ப்பணம் என்று விட்டுவிடுகிறேன் தமிழ்த்தோட்டம். மிக்க நன்றிகளும் அன்பும் உரித்தாகட்டும்.
அதே நேரம் நீங்கள் எத்தனை உயர்வுக்குரியவர். இரண்டு தளங்களை வெற்றித் தளங்களாக இயக்குபவர், நீங்கள் எண்ணினால் எழுதுவது ஒன்றும் அத்தனை கடினமல்ல. முயற்சியுங்கள். மிக்க வாழ்த்துக்கள்!!
LikeLike
வித்யாவிற்கு,
என் எந்திர வாழ்க்கையில், என்னையும் கவிதை எழுத என்னை மீண்டும் மீண்டும் தூண்டும் உங்கள் கவிதை.
நன்றி
லக்ஷ்மி
LikeLike
அன்பு வணக்கம் லக்ஷ்மி, நீங்கள் முன்பே நன்றாக எழுதுபவர் தானே? வேண்டுமெனில் மீண்டும் எழுத நினைவுருத்துபவனாக நானும் இருப்பேன் எனில் மிக்க மகிழ்வு தான். நிறைய எழுதுங்கள். விரைவில் புத்தகமாக பதிந்து வையுங்கள். மிக்க வாழ்த்துக்கள் உண்டாகட்டும்.
அதேநேரம், நம் முயற்சியினால் ஒருவரை எழுத வைக்க முடியுமெனில் அது பெரிய விஷயம் தான். அதை ஏராளமாக செய்துள்ளோம் என்பது நாம் அறிந்ததே என்றாலும், இனியும் எப்பொழுதும்; நாம் எழுதுவதன் காரணம் நம் பின்னால் வருபவர்களை வளர்ப்பதாகத் தான் நீள்கிறது…
மிக்க நன்றி தங்களின் நெருங்கிய அன்பிற்கு லக்ஷ்மி…
LikeLike
வாழ்வின் வலிகள்,பாலையில் வயதைத் தொலைத்து வாலிபம்
இழந்து வயோதிகனாய், திரும்பி வருகிற எண்ணற்ற என்
சகோதரர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.கவிதை மிக மிக அருமை .. Kalidoss
LikeLike
மிக்க நன்றி காளிதாஸ். வாழ்வை மணலில் தொலைக்கும் மனிதர்கள் மட்டுமல்ல; உறவின் பிரிவில் தொலைக்கும் மனிதர்களோடு வாழ்வதால், அந்த வலிகள் கவிதையானதில் பிரம்மிப்பில்லை.
எல்லாம் நம் வெற்றிக்கும் காரணாமாய்; உங்களைப் போன்றோரும் இருப்பதில் மகிழ்வு கொள்கிறேன்..
LikeLike
வித்யாசாகர் அவர்களே ,
வல்லின ” ற் ” க்குப் பின்னர் மெய்யெழுத்து மிகாது ..
நிற்போம் , கற்போம் , கற்சிலை ,வரவேற்கிறோம் . காற்சிலம்பு ,பொற்கைப் பாண்டியன்
அம்பலவாணன்
LikeLike
தெரியாமலில்லை திரு.அம்பலவாணன். கவிதைகள் பிற இணையங்களில் வருவதால் தட்டச்சு பிழையின்றி பதிய முயல்கிறேன். ஆயினும், மறுமொழி அவசர நேரங்களில் கொடுக்க நேர்வதால், சிலநேரம் கவனக் குறைவு ஏற்பட்டுவிடுகிறது.
தெரியத் தந்தமைக்கு நன்றி.. நேரம் கிடைக்கையில்; திருத்திவிடுகிறேன்!!
LikeLike