1
பேச வாயற்று போன இடத்திலிருந்தே
வார்த்தைகள் வீரியமாய் விழுகின்றன;
விழுகின்ற வார்த்தையினால்
கொதிக்கும் ரத்தத்தில் தான் –
மூழ்கிக் கிடக்கிறது; நம் சுதந்திரம்!!
—————————————————————–
2
நாம் அணியும்
ஒவ்வொரு சட்டைக்குள்ளும்
நம்மை காக்கும் – மானமும் இருக்குமெனில்
அதற்குள் –
விடுதலையும் இருக்கும்!!
—————————————————————–
3
வெள்ளைக் கொடியில்
விடுதலை எல்லாம் –
இனி வெற்று வாய்க்கு
மெல்ல வெற்றிலை போல்;
உடல் கீறி ஒழுகும்
ரத்தம் நனைத்தேனும்
சிவக்கட்டும் – இனி வெள்ளைக்கொடி!!
—————————————————————–
4
என் கையில்
நூறு கத்தி கொடுத்து
யாரையேனும் வெட்ட சொல்;
வெட்ட மாட்டேன்.
என் தமிழச்சியை தொட்டால்
கத்தியின்றி
ரத்தமின்றி
வெட்டுவேன்!!
நான் வெட்டிய வலியில்
விடுதலை பிறக்கும்,
விடுதலையை கவிதைகளும் வெல்லும்!!
———————————————-
5
இதயத்தை மிதித்துக் கொண்டு
மார்பை ரசித்தவனை –
வெட்டிப் போடாவிட்டாலும்
ஒட்டி வாழாமலுக்கேனும் –
விடுதலை வேண்டும்!!
—————————————————————–
வித்யாசாகர்