1
சிலநேரம் நீ
வயிற்றிற்குள் அசைவதே
இல்லை,
பதறி போவேன்..
சூடாக ஏதேனும் குடி அசையும் என்பார் அம்மா.,
சூடு ஒருவேளை உனக்கு பட்டுவிடுமோ’ என்று அஞ்சி
யாருமில்லா அறைக்கு சென்று
வயிற்றில் கை வைத்து
ஏய்……. என்ன செய்கிறாய்; அப்பாவிடம்
சொல்லவா என்பேன்,
எட்டி………… ஒரு உதை விடுவாய் நீ
எனக்குத் தான் சுளீர் என்று வலிக்கும்!!
————————————————————————————–
2
அவ்வப்பொழுது
வயிற்றில் கீறியது போல்
சுள்..ளென்று வலிக்கும்,
வெளியே வந்ததும் உனக்கு
முதலில் நகத்தை வெட்டிவிடவேண்டும் என்று
எண்ணிக் கொள்வேன்..
நகத்தை நினைத்ததும்
விரல் எப்படி இருக்குமோ
கை கால் முகம் எப்படி இருக்குமோ..
என்னவெல்லாம் செய்வாயோ
எப்படியெல்லாம் பேசுவாயோ என
உன் கனவுகள் – நீ வரும்
நாளுக்காய் நீளும்;
நீ மீண்டும் எட்டி ஒரு
உதை விடுவாய்
நகம் வைத்து வயிற்றில் கீறுவாய்
வயிற்றை பிடித்துக் கொண்டு
சுருண்டு படுத்துக் கொள்வேன்
அந்த படுத்திருந்த நாட்கள்
பெற்றபின் –
பெற்ற குழந்தைகளுக்குத்
அத்தனை ஒன்றும் பெரிதாகத் தெரிவதில்லை!!
————————————————————————————–
3
உனக்கு என்னை தேய்த்து
உடம்பு குளிப்பாட்டி
உடம்பு துடைத்து
மருந்து ஊற்றி
நீ அழுகையை நிறுத்துவதற்குள் –
யாருக்கும் தெரியாமல் தினம் தினம் வந்து
என் காதுகளில் அடைத்துக் கொள்கிறது –
உன் வீல் என்று அலறும் அந்த உன்
அழுகையை பொறுத்துக் கொள்ள முடியாத
அந்த பிரபஞ்சம் குடித்துவிடும் வலி!!
————————————————————————————–
4
இரண்டு குழந்தை வைத்து
அல்லல் படுகிறாயே
ஒரு ஆயா வைத்துக் கொள்
நன்றாக பார்த்துக் கொள்வாள்
என்றார்கள்
நானும் வைத்தேன்
அவள், நீ ஓவென்று கத்தியழ
ஏன் பிடாரி இப்படி கத்துறியே’ என்று சொல்லி
நருக்கென உன் தொடையில் கிள்ளினால்
நீ துடித்து அழுதாய் –
நான் அவளை பளார் பளாரென நான்கு
அரை விட எண்ணி கோபமுற்று அடக்கிக் கொண்டு
உனை வாழ்விற்குமாய் சுமக்க
எனை தயாராக்கிக் கொண்டேன்
அவள் அந்த நொடியில் இருந்தே
சம்பளத்தோடு நிறுத்தப் பட்டாள்!!
————————————————————————————–
5
மூன்று மாதம் தான் ஆகிறது பிறந்து
அப்பா பார் என்றதும் –
திரும்பிப் பார்த்தாய்..
எனக்கு ஒரு முப்பது
வருடம் தாண்டி போயிற்று சிந்தனை
அன்று ‘அப்பா பார்’ என்று சொன்னால்
பார்க்க –
உன் கணவன் சிலவேளை சம்மதம் தர வேண்டியிருக்கும்!!
————————————————————————————–
வித்யாசாகர்
//இல்லையே, ‘சுளீர்” என்றெல்லாம் வலிக்காதே//
//ஒரு பட்டாம் பூச்சியின் படபடப்பும்//
அன்புள்ளங்களுக்கு வணக்கம்,
எங்கள் மகள் வயிற்றில் இருக்கும் போது அடிக்கடி வயிற்றை பிடித்துக் கொள்வார் மனைவி. முதல் மகனான முகிலுக்கு அப்படி இல்லை. உதைப்பான் நகர்வான் அவ்வளவே. ஆனால் மகள் பொற்குழலி நகர்கையில் வயிற்றை மனைவி பிடித்துக் கொண்டு உதடு கடித்து சமாளிக்கையில் ஏன் அத்தனையா வலிக்கிறதென்பேன்.
ஆனால், குழந்தை பிறந்த பின் தான் விரல்களின் வீச்சான நகங்களை கண்டோம், நாங்களே பேசிக் கொண்டோம் இதனால் தான் கை படுகையில் கீறியது போல் வலித்ததென்று. அந்த வலியை வார்த்தையில் எப்படி உருவகப் படுத்தலாம்?
எண்ணிப் பாருங்கள் வயிற்றிற்குள் இழுத்துப் பிடிக்கையில் அது சுள்ளென்று தானே வலிக்கிறது. சற்று அதை வைத்து ஒரு தாயின் கற்பனை நீள்வதை, இப்பொழுதிருக்கும் இனி வரும் மகன்கள் ‘அந்த தாயின் கனவுகள் இந்த அவஸ்தையிலும் இப்படியாகவும் நீள்கிறது போல் என்று புரிந்துகொள்ள மேற்கோளிடவெ எழுதினேன்.
உண்மையில் நான் நிறைய பேரிடம் இதுபற்றி ஆய்ந்து பார்த்தேன், அந்த பட்டாம்பூச்சி சமாச்சாரமெல்லாம் கிடையவே கிடையாதாம். தன் குழந்தையை சுமக்கிறோம் எனும் மகிழ்வில் வலியை கணத்தை கூட மிதமாக சுகம் போல எடுத்துக் கொள்ளலாம் தான். உண்மையில் கணம் கணம் தானே.. என்கிறார்கள்.
ஒவ்வொரு மாதத்திற்கான ஒவ்வொரு வேதனையும் ‘ஒருவேளை கணவனின் நெருக்கமான அனுசரணை, அன்பு, உடனிருக்கும் உறவுகளின் அக்கறை கூடிய அன்பான உபசரனைகளால் ஒருவேளை குறைவாக உணரப்படலாம். மகிழ்வாகவும் எடுத்துக் கொள்ளப் படலாம். அது அவரவர் மனநிலை மற்றும் உடல்வாகு பொறுத்தே அமையப் படுகிறது.
மொத்தத்தில் இப்படைப்புகள் எல்லாமே ‘ஒரு பெற்றோருக்கும் பெற்ற குழந்தைக்குமான கனவு வலி பூரிப்பு எனும் உணர்வுகளெல்லாம் எப்படி பரிமாறப் பட்டிருக்கும், எப்படி உணரப் பட்டிருக்கும் என்பதை பதிவு செய்ய மாத்திரமே.
எனினும், தங்களின் கருத்துகள் மிக நிறைவினை தருகிறது. கலந்து பேசுவதன் மூலமே சரி தவறினை அளவிட முடிகிறது.
மிக்க நன்றி உறவுகள் அனைவருக்கும்..
வித்யாசாகர்
LikeLike
கவிதை மிகவும் நன்றாக இருக்கு ஆனால் அதை ஒரு கவிதை என்று சொல்லவதை விட ஒரு புனிதமான பிறவி என்றும் சுதந்திரமான உலகம் என்றும் சொல்லவேண்டும் இல்லையா? உண்மையில் ஒரு பெண் தாய்மை அடைவதும் ஒரு மனிதனின் ஆரம்பம் அந்த கருவறைக்குள்ளே என்று நினைக்கும் போதும் எத்தனை ஜென்மம் தவம் புரிந்தாலும் கிடைக்காத ஒரு வரம் என்றே கூறவேண்டும்.
LikeLike
ஆம் சுகந்தினி. ஒவ்வொரு பிறப்பும் ஓர் வரம் தான். அதை வாழ்பவர் பொறுத்தே அது சாபமாகிறது. எனினும் நம் முயல்வு நம் பிறப்பினை வரமாக்கிக் கொள்வதாக இருக்கட்டும்!!
LikeLike