நான்
வேண்டாமென்று தான் நினைத்தேன்
எனக்கே தெரியாமல்
உன் பெயர் உச்சரிக்கப் படுகிறது எனக்குள்;
என்ன செய்ய ?
இதோ இரவினை வெளுக்க முடியாத
ஒரு அவஸ்தையில் –
மொட்டைமாடி ஏறி
தெருக்கம்பத்து விளக்கு வெளிச்சத்தில் அமர்ந்துக் கொண்டேன்
வெளிச்சத்தின் வண்ணங்களில்
உன் நினைவுகளாக –
நிறைகிறாய் நீ..
என்ன செய்ய ?
எழுந்து இங்குமங்கும் பார்த்தேன்
வெளிச்சம் முடியும் நுனியில்
விடமனமில்லாத இருட்டின் எல்லை போல்
உள்ளே இருந்து கத்தியது உன் நினைவு
யாரோ அழைக்கிறார்களோ என்று
திரும்பிப் பார்த்தேன்..
பார்த்த திசையெலாம் –
நிலவு, மரம், இருட்டு, வெளிச்சம், மேகம் என
எல்லாமோடு நீயுமிருந்தாய்.
சரி இனி என்ன செய்ய ?
வந்து புத்தகம் எடுத்தேன்
எதையோ படித்தேன் –
உள்ளே புரிந்த வார்த்தைகளின் மத்தியில்
வாயில் எப்படியோ சிக்கிக் கொண்ட –
இடைச் சொல்போல் உன் பெயரை உச்சரிக்கலானேன்
இல்லை இல்லை –
அத்தனை மனபலம் அற்றவனா நான்
உன் பெயரை உச்சரிக்காமல்
புத்தகத்தை வாசிக்க எத்தனித்தேன்..
சற்று நேரத்தில் –
புத்தகத்தின் ஆழ சிந்தனைக்குள்
பொதிந்துக் கொண்டது மனசு
இடை இடையே லேசாக
உன் நியாபகம் வர –
எட்டி வெளியே பார்த்தேன்
இரவு தான் –
வெறும் இருட்டு தான் தெரிந்தது
இரவுப் பூச்சிகள்
உறங்காமல் கத்தும் சப்தம்
மனதை என்னவோ செய்தது
ஒரு நிழலும் உடன் தெரிய
சற்று அதிர்ந்து போனேன் –
இதய வேகம் இன்னும் கூடியவனாய் எழுந்து
தெருவை பார்த்தால் – தெருவில் நீ
நின்றிருந்தாய்; என்னைப்போல..
எனன் செய்ய?
இப்போது என்ன செய்ய ????
புத்தகத்தை மடக்கி வைத்து விட்டேன்.
ஒரு நிமிடம் இரு என்று
உனக்கு ஒரு கையை காட்டி விட்டு
உள்ளே சென்று ஒரு காகிதம் எடுத்து
இவைகளை எல்லாம் மடலாக எழுதினேன்
அவசரமாக எடுத்துக் கொண்டு வெளியே நிற்கும்
உனை நோக்கி ஓடிவந்தேன்
வெளியே –
கொட்டும் பனி போல
அடர்ந்த இருள் போல
அந்த இருளில் பிராகாசிக்கும் நிலவினை போல
அடிக்கும் சில்லென்ற காற்றினை போல
அந்த விட்டில் பூச்சி சப்தத்திற்கு நடுவே
நீயும் வலிக்கும் கால்களை மறந்து –
எனக்காக நின்றிருந்தாய்
நான் –
ஒரு புன்னகையை பூத்து விட்டு
ம்ம்.. பிடி என்று உன் கையில் அந்த மடலை
திணித்து விட்டு திரும்புகையில்
என் கை பிடித்து நிறுத்தி
நீயும் ஒரு காகிதம் திணித்தாய்
என் கைகளை இருக்க பிடித்து விட்டு
போ.. என்றாய் –
நான் உணர்ச்சியின் வேகத்தில்
திணறி –
இருட்டில் தகிக்கும் வெளிறி போன முகமாக
உள்ளே சென்று அந்த காகிதத்தை பார்த்தேன்
ஆனால் பிரித்துப் பார்க்க
எண்ணவில்லை –
நீ தந்த சந்தோசத்தை
நீ கையிருக்கி விட்ட அந்த உணர்வை
கடக்கும் நிமிடமெல்லாம் அனுபவித்தேன்
மீண்டும் மீண்டும்
அந்த மடல் பார்த்து சிரித்துக் கொண்ட
என் மனசுக்கு தெரிந்தது
உள்ளே நீ உன் இதயம் வைத்திருப்பாய் என்று!!
————————————————–
வித்யாசாகர்
மயிலிறகு கொண்டு
வருடி விடுவதுபோல்
ஒரு சுகந்த சுகம்
தங்கள் கவிதை வரிகளில்
காணப்படும்-எப்போதும்!
தங்கள் முகம்போலவே
பொலிவு தரித்துப்
பூக்கும் வார்த்தைகள்
காதலை உள்ளங்கையில் வைத்து
விசாரிக்கும்
வித்தக அழகை
மனவிழிகளால் பருகி
மயங்கினேன் நான்..!
சோலைகளில் கிடைக்காத
சுத்தக் காற்று
தங்கள் கவிதைகளில் கிடைபபதாய்
நுவல்கிறது -என்
நுரையீரல்!
உதிர்ந்த செல்களாய்
ஒன்றுமில்லாமல் போன
உற்சாகக் கனவுகள்
உயிர் பெறுகின்றன-தங்கள்
உதிரம் தெறிக்கும்
உள்ளப் புணர்ச்சி
வரிகளால்..!
வாழிய கவிஞரே..தங்கள்
வளமார்ந்த சிந்தனைகள்..!
கவிஞர்.கங்கை மணிமாறன்
செல்;9443408824
LikeLike
ஐயா அவர்களுக்கு பெருத்த நன்றியானேன். தங்களின் வரவால் என் எழுத்துக்கள் பெருமையுடன் மெச்சிக் கொள்ளும். உணர்வுகளுக்கு வார்த்தை தருவதன்ரி பெரிதாக என் படைப்புக்களை நான் எண்ணிக் கொள்வதில்லை. எதுவாயினும் எல்லாம் இறைவன் செய்யலே.. தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் என் அன்பு நிறைந்த வணக்கங்கள் உண்டாகட்டும்..
இயன்றவரை இதயத்தாலும் எழுத்தாலும் இணைந்திருப்போம் ஐயா..
மிக்க நன்றிகள்.. மீண்டும் மீண்டும்..
LikeLike