காற்றிற்கு குறுக்கே கயிறு கட்டி
ஏறிநடந்த தூர அளவிற்கு
வந்து விழுந்த சில்லறையில் –
ஒற்றை ரூபாய்க்கு அரிசி கிடைக்கும் – சீனி கிடைக்குமா?
கலை குடும்பம், பாரம்பரியம், பரம்பரை தொழில்
என்றெல்லாம் சொல்லி – நாயனம் ஊதியவருக்கும், தபேலா அடித்தவருக்கும்
பொங்கலை தொலைகாட்சியில் பார்க்கலாம்
வீட்டில் கொண்டாட இயலுமா?
பிற வீடுகளில் பாத்திரம் தேய்த்து, துணி அலசி போட்டு
குழந்தைகள் குளிப்பாட்டி, கூரை முடிந்து, வேலி கட்டி
வந்த பணத்தில் – பழைய துணிகளை தைத்துப் போட முடியும்
புதிய துணி வாங்க முடியுமா?
பேருக்கு இலவசம் கொடுத்து
ஊருக்கு வெளியே எங்களை நிறுத்திய தேசத்தில்
பொங்கல் வரும் போகும் –
போகும் அவ்வளவே!!!
என்றாலும் –
முறுக்கேறிய உடம்பின் திமிரில் கடிக்க அல்ல
மண்மிதித்து நெல் குவித்த என் ஏழைக்குக் –
கடிக்கச் செங்கரும்பும்
கஞ்சிக் கூழ் குடித்து நெஞ்சி நிமிர நடந்த
என் தமிழர் ஜாதி பரம்பரைக்கு –
அஞ்சி வாழா மனித ஆணிவேருக்கு சீனிப் பொங்கலும்..
என உழைத்தவருக்காய் படைத்திட்ட
இம்மூன்றுப் பொங்கலின் திருநாட்களும்
அவர்களுக்குத் தித்தித்தோ இல்லையோ,
வாருங்கள் நாம் மனம் இனிக்க இனிக்க
பொங்கல் தின்று புதுத் துணியுடுத்தி – கூட ஒரு
கவிதையும் எழுதிக் கொண்டாடித் தீர்ப்போம் – அவர்களின்
வியர்வை வாசம் மறந்ததொரு பொங்கலை!!
————————————————————————————–
வித்யாசாகர்
பொங்கல் திரு நாளில் மகிழ்ச்சி பொங்க வாழ்த்துவோம். வேலைப்பளு காரணமாக் வாசிக்க் அதிகம் வ்ருவதில்லை. மீண்டும் வருவேன்.
LikeLike
என்னன்பு சகோதரிக்கு அன்பு வணக்கமும், மனம் நிறைந்த வாழ்த்துக்களும். நேரம் கிடைக்கையில் வாருங்கள் சகோதரி, உங்களின் வருகைக்காய் இச்சகோதரனின் இதயம் காத்தே கிடக்கும்.. நன்றிகளுடன்!!
LikeLike