மரம் நெடுக வீசும் காற்றும்
காற்றெல்லாம் கலந்த மணமும்
மனமெல்லாம் நிறைந்த மகிழ்வும்
மகிழ்வில் பொங்கி நிறையும் தமிழர் பண்பும்
நன்றியும் மானுட வளர்ச்சியும்
உலகின் வேர்களில் ஊறி செழுத்திட
பொங்கட்டும் பொங்கட்டும்;
பொங்கலோ பொங்கல் பொங்கட்டும்!
என் அன்புள்ளங்களுக்கு இனிய வணக்கமும்
வாழ்த்துக்களும் நிறையட்டும்!
போ(க்)கியும் பொங்கலும் அதன் சிறப்புக்களும்..
ஆண்டாண்டு காலமாக ஆண்ட இனம்
தினசரி பொருள்களுக்கு கூட
“எக்ஸ்பைரி” தேதி வைத்த இனம்
பழைய படுக்கை, தேய்ந்த துடைப்பம்
ஓய்ந்துப் போன முரம், பழங்கந்தை, கிழிந்த ஆடைகளை
சுற்றுச் சூழல் கருதி ஒதுக்குப் புறத்தில் போட்டெரித்து
பழையன கழித்து; புதியன புகுத்தவும் தேதி குறித்த இனம்
அதற்கு போ(க்)கி என்று பெயர்வைத்த இனம்!!
வீடெல்லாம் சுத்தம் செய்து
வண்ணப்பூச்சி பூசி –
புத்தாடை உடுத்தி –
வெளிச்சம் தந்த சூரியனுக்கு நன்றி சொல்ல
வாசலில் – சூரியன் பார்த்து பொங்கல் வைத்து
தைப் பொங்கல் திருநாளென்று கொண்டாடிய இனம்!
சோறுபோட்ட மண்ணுக்கு கரும்பு சாய்த்து
ஏரு பூட்டி உழைத்த உழவனுக்கு புது சட்டை யுடுத்தி
காலமும் உழைக்கும் கால்நடைக்கு நன்றி சொல்ல
மாடுகளை குளுப்பாட்டி அலங்கரித்து மஞ்சுவிரட்டி
மூன்றாம் நாளை –
உழவருக்கென கொண்டாடிய இனம்!
இருப்பவர் –
இல்லாருக்கு இனாம் தந்து மகிழ்ந்து
உள்ளூர் உறவு தாண்டி வெளியூர் வரை சென்று
புதிய மனிதர்களை சந்தித்து
பழைய கனவு பற்றி பேசி –
மனிதருக்குள் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள
காணும் பொங்கலென்று –
நான்காவது நாளை கொண்டாடிய இனம்!
இன்று புது நாகரிக பொங்கலை கேஸ்-டவ்வில் வைத்து
தொலைகாட்சிக்கு முழு நேரத்தை படைத்து
சமைத்ததை மேஜையில் பரப்பி தின்றுவிட்டு
புதுபடத்தை பிளாக்கில் சீட்டு வாங்கி பார்ப்பதில்
முனைப்பு காட்டாமல் –
குழந்தைகளின் குதூகலத்தில் தெளிவான சிந்தனைகளை புகுத்தி
தமிழர் மரபு மாறாது இருக்க முயல்வோம்;
வாழ்வின் மொத்த அசைவுகளுமே நம் மொத்த உயிர்களின்
நன்மைக்கு மட்டுமென்றெண்ணி மனிதம் வளர்த்து உயர்வோம்!
மரமும் செடியுமென் ஜாதி என்று வாழ்ந்தவன் தமிழன்
தானத்திலும் வீரத்திலும் பண்பிலும் அன்பிலும் கூட
அன்றே சிறந்தவன் தமிழன் –
அவ்வழியில் வந்த தமிழரின் சிறப்பாக
நாமும் வாழ முற்படுவோம் வாழ்த்தறிவிப்போம்
பொங்கலோ பொங்கல்!!
வித்யாசாகர்
————————————————————————
இயற்கையை காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!
மாச்சீர், மாச்சீர், ஓர்விளம் வாய்பாட்டில் அமையும் விருத்தம்
வாய்க்கால் தண்ணீர் வந்திடும்
வாய்ப்பு மில்லை; பெய்திடும்
பேய்போல் வெள்ளம் சூழ்ந்திடும்
பேரா பத்தால் நெற்கதிர்
காய்த்து வந்தும் பொய்த்தது
காலம் தோறு மிந்நிலை
மாய்த்துக் கொள்ளும் மக்களோ
மங்கிச் சொல்லும் “பொங்கலோ”
பொங்க லன்று பொங்கிடும்
பொங்கற் சோறு போலவே
எங்கு மின்பம் தங்கிட
எம்வாழ்த் தாலே பெற்றிட
பங்க மில்லா வாழ்வினைப்
பற்றிப் போற்றி வாழ்ந்திட
அங்க மெங்கும் பொங்கிடும்
அன்பே வாழ்த்தாய்த் தங்கிடும்
சோற்றில் கையை வைத்திட
சேற்றில் காலை வைத்திடும்
ஆற்றல் மிக்க மக்களை
ஆர்வம் கொண்டு வாழ்த்திடு
ஏற்றம் பெற்ற ஏரினை
ஏந்திச் சிந்தும் வெற்றியால்
மாற்றம் பெற்று முன்வர
மக்க ளெல்லாம் போற்றுவோம்!
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்
எனது வலைப்பூத் தோட்டம் உலா வர வழி:
http://www.kalaamkathir.blogspot.com/
LikeLike
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா
LikeLike
என்னன்பு தம்பிக்கு வாழ்வின் எல்லாம் வளமும் கிடைத்து, இவ்வருடம் பேரும் புகழும் சேர்க்கும் நல்வருடமாய் அமைந்து நீடு வாழ இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்களும் புத்தாண்டு மகிழ்வும் உரித்தாகட்டும்!!
LikeLike