வாழ்வின் மௌனமான
வாய்பேசா தருணத்திலும்
வார்த்தைகள் உள்ளே குதியாட்டம் ஆடுவதை
உணரும் தளமாக இருந்தது – தமிழோசையின் அந்த பாராட்டு மேடை..
வரவிருக்கும் காதலர் தினத்தை முன்னிட்டு, தாஜ்மஹாலினை மையமாகக் கொண்டு, நடத்தப்பட்ட கவியரங்கமும், உலக அறிவியல் முன்னேற்றம் குறித்தும், குவைத் பொன்விழா ஆண்டு குறித்து கருத்துப் பரிமாறலும், பாட்டு மன்னர்கள் கணேஷ் முருகானந்தத்தின் மெல்லிசை பாடல்களும், விருது பெற்றதற்கான வாழ்த்துப் பாக்களும், பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தலும் என சுவையான மதிய உணவோடு, காலை மணி பத்தரையிலிருந்து மாலை நான்கு மணி நெருக்கம்வரை விழா மகிழ்வாக நடந்தேறியது.
விருது என்பது நம் எழுத்திற்கு கிடைத்த அங்கிகாரம் தானேத் தவிர; நமை மாற்றிவிடும் சாவியல்ல. எனவே இருப்பது போலவே இயல்பாக இருந்து நாம் நம் கடமையினை தொடர்ந்து செய்வோம், நடப்பதும் நல்லதாகவே நடக்குமென்பதுபோல் தன்னடக்கம் கொண்டு மட்டுமல்ல, நேரமின்றியும் அதிகம் பேசாமல் விடை கொண்டேன்.
அவைத் தலைமையினை நான் ஏற்றிருந்ததாலும், விழா மரியாதை குறித்து; அவசியம்தானா இதலாம்? எனும் கேள்விக் கணைகளை சுமந்தவனாகவும் பேச எண்ணிய நன்றிகளுக்கான வார்த்தைகளை முழுமையாக சொல்லாமலும்; மென்று விழுங்கி – விடைபெற்றேன். ஐயா சேகர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்து இந்த வெற்றிகளுக்கு உதவியாக இருக்கும் அவரின் மனைவி செல்லம்மா வித்யாசகருக்கும் இந்த பெருமைகள் சாரும்’ என்று சொல்ல அவருக்கான அன்பினை மதிப்பினை அரங்கம் கரவொலியில் காண்பித்தது.
உடனும் முன்னிருந்தும், ஐயா விட்டுக் கட்டி மஸ்தான் அவர்களும், அசிஸ் அண்ணன் அவர்களும், கவியரங்க தலைமையில் கவிஞர் சாதிக் பாட்சா அவர்களும், விழா மேடையில் கவிதாயினி தேவிரவி மற்றும் கவிஞர் அபுதாகிரும் உடனிருந்து உதவ, கவிஞர் கார்த்திக் மற்றும் கவிஞர் சேந்தை ரவீந்தர் அவர்களுமென அவரவர் பங்கிற்கு மிகையாய் உடன் நின்று மேடையை கம்பீரப்படுத்தவும் சிறப்புச் செய்யவும் செய்தார்கள். விழாவின் இறுதியில் நடத்தப் பட்ட தமிழறிவு போட்டியில் கவிஞர் முனு.சிவசங்கரன் பரிசுபெற கைதட்டல்களோடு தமிழ்த்தாய் வாழ்த்து பாடி விழா நிறைவுற்றது.
விழாவிற்கு புறப்பட இருக்கையில் முகில் வேறு கீழே விழுந்து காயமுற; புருவத்தின் மேல் ரத்தம் சொட்ட, கண்களில் சிவந்து காயம் தெரிய, இதயம் துடித்து ஐயோ எனும் வலியோடு அவசரமாக அவனை தூக்கிக் கொண்டு ஓடினோம்.
போகும்வழியில் தமிழோசை கவிஞர் மன்றத்திற்கு அறிவிப்பு கொடுத்துவிட்டு நெடுந்தூரத்தில் உள்ள சிறப்பு கண் மருத்துவமனைக்குப் புறப்பட்டோம், அங்கு சென்றதும் மருத்துவர் பயம் கொள்ள ஒன்றுமில்லை என்று சொல்லி மருந்திட்டதும், முகில் சிரித்து விளையாட துவங்கியதும், மனம் சற்று அமைதியுற்று, நிம்மதி பெறுமூச்சு விடுகையில் விழா பற்றி நினைவு பீறிட்டது. பாவம் நமக்காகவும் காத்திருப்பார்களே என்று அங்கிருந்து அரங்கம் நோக்கி ஓடினோம்.
ஓட்டம் தான் வாழ்க்கை என்று ஆன பின் சலிக்க ஒன்றுமில்லை என்றாலும், வாழ்வின் நகர்தலில் அடுத்த கட்டமென்பது ஆச்சர்யங்களோடும், அன்பு தாங்கி உழன்ற இதயத்திற்கு அணிசேர்க்கும் தருணமாகவுமே வந்துகொண்டிருக்க; சற்று எச்சரிக்கை உணர்வையும் பூரிப்பையும் சேர்த்துத் மனதில் தாங்கிக் கொண்டு -அரங்கம் நுழைந்து – நலம் தெரிவித்து –
“எண்ணெய் நாடு
என் உலகத்து மார்புகளில் எனை பச்சை குத்திய மக்கள்
மக்களின் ரசனையில் எனை எழுதிக் கொண்ட என் படைப்புகள்
படைப்புக்களை போற்றும் வகையில் சமூகத்தால் கிடைக்கப் பெறும் விருது
விருதிற்கு விழா எடுக்கும் – தமிழோசை
தமிழோசை மாமன்றத்தின் நிர்வாகிகள் – நிர்வாகத்தின் தலைமை – தவிர – இங்கு வந்து எனை பெருமை படுத்திக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் முதல் வணக்கம்” என்று துவங்கியபோது –
‘வாழ்க்கை என்பது இது தான், வாழ்ந்து பார்’ என்பது போல் உள்ளிருந்து கேட்ட ஒரு ஒலியை மானசீகமாய் நன்றிகளுடன் உணர்ந்தேன்!
——————————————————————————————
வித்யாசாகர்
பின்குறிப்பு: முகில் இப்போது மிக்க நலம். அடிப்பட்ட தழும்புகளும் மறைந்துக்கொண்டிருக்கின்றன. நல்ல மருத்துவரை காண தூரம் பாராமல் விழா பாராமல் முடிவெடுத்ததே அன்றைய தினத்தின் பெரிய செயலாகக் கருதுகிறோம்!!
LikeLike
குழந்தைகள் பெரும் ஒவ்வொரு வெற்றியையும் எவ்வளவு ஆசையாக பார்ப்போமா; அதே ஆசையோடு தான் உங்களின் வளர்சியினையும் மகிழ்ச்சியினையும் மனதார பார்த்து மகிழ்கிறேன்..
லக்ஷ்மிநாதன்.M
LikeLike
எல்லாம் இறைவன் செயலென்று அடக்கம் கொள்ளவே விருப்பம் என்றாலும், உழைப்பும் முயற்சியும் நம்பிக்கையும் இறைநம்பிக்கையும் தரும் சிறப்புகளின்றி வேறில்லை லக்ஷ்மி. எதுவாக எண்ணுகிறோமோ; அதுவாக ஆகிறோம் என்பது மட்டும் திண்ணம்.
உங்களை போன்ற அன்புள்ளங்களின் வாழ்த்தும் அன்பும் அதற்கு துணை நிற்கிறது; நன்றிப் பெருக்குடன் நான் முன்செல்கிறேன்..
முன் சென்று திரும்பிப் பார்க்கையில் என் பின்னால் இருப்பவர்களும் என்னோடு வந்திருப்பார்கள் எனில் எனை முந்தியிருப்பார்கள் எனில்;நமை நாம் சரியென்று கொள்வோம் லக்ஷ்மி.
வீட்டாருக்கு அன்பையும் வணக்கத்தையும் சொல்லுங்கள். உங்களுக்கும் வாழ்த்துக்கள். உங்களின் புத்தகத்தை பதியவும் முகில் பதிப்பகம் காத்திருக்கிறது என்பதையும் இங்கே நினைவு கூறுகிறேன்..
LikeLike