போராட்டத்தின் –
ஒவ்வொரு கிளையாய்
தாவிச் சென்றதில்;
உச்சியிலும் மத்தியிலும் நிற்கிறோமேயன்றி
கிளைகள் தீர்ந்தப் பாடில்லை;
ஒரு நாளைக் கடப்பதே
போரில் வெல்லும் பொழுதுகளாய் இருக்க
வருடங்களை –
சிரிக்க மறுத்து
சகித்துக் கொண்டே – கடக்கிறோம்;
எதிரே வருபவர்களை யெல்லாம்
தனக்கானவர்களாக எண்ணியும்,
கிடைப்பதிலெல்லாம் மனம் லயித்தும் –
நிரந்தர ஆசையில் உயிர்விட்டே
மடிகிறதிந்த மனித இனம்; அதில்
நானும் மாறுபட்டவனாக இல்லை;
அப்பட்டமாய் –
எதுவுமே எனக்கில்லையென்று புரிந்துப் போனாலும்
வாழ்வதற்கான உயிர்காற்று –
தொண்டையை அடைத்துக் கொள்ள,
ஏதோ ஒன்று இருப்பதான தோற்றத்தில்,
ஆசையில் –
நம்பிக்கையில் –
நாளேடுகளின் தாள்களென கிழிபட்டேப் போகிறோம்;
இதில், பெரிதாக சாதித்ததெல்லாம்
எந்த நிலையிலும் –
யார் இறப்பிலும் –
உண்டு.. உறங்கி.. சுயநலம் பூண்டதும்,
எதற்கோ ஏங்கி, பயந்து, அபகரித்துக் கொண்டதும்போல்
சில உண்டு, என்றாலும் –
மனதிற்குள் நான் தோற்றவனாகவேத் தெரிய
மீண்டும் ஒரு புள்ளியாக –
நின்றோ; தொடர்ந்தோக் கொள்கிறது வாழ்க்கை!!!
—————————————————————————–
வித்யாசாகர்
//எந்த நிலையிலும் –
யார் இறப்பிலும் –
உண்டு.. உறங்கி.. சுயநலம் பூண்டதும்,
எதற்கோ ஏங்கி, பயந்து, அபகரித்துக் கொண்டதும்போல்//
எமது நிலையை சரியாக புரிந்து எழுதியது போல் இருக்கிறது.
LikeLike