ஒட்டிக் கொள்ளவும் –
உதடுகள் ஈரமாகவும் ஒரு பூ உள்ளே பூக்கிறது.
நெருக்கத்தின் நெருப்பில் அன்பு வார்க்கவும்
பண்பின் நகர்தலில் காதல் கற்கவும் –
ஒரு சப்தம் இசையாய் காற்றிலே கலக்கிறது..
முகத்தின் மாயயை உடலால் உரசி கிழித்து
உள்ளத்து கதவுகளை வாழ்விற்காய் திறந்துவைக்க
உலகதத்துவம் வெற்றிடமாய் உள்ளே பரவுகிறது..
பேசிக் கழிக்காத பொழுதொன்றாய்
ஒவ்வொரு நாளினையும் – வாழ்ந்துக் காண்பிக்க
காலக் கணக்கின் அச்சாணி புடுங்கி –
ஒரு அசட்டுத் தைரியம் உட்புகுந்து
வருடங்களை எல்லாம் நாட்களாய் மாற்றி
நாட்களை நொடிகளாய் திரித்து – யுகம் பல உன்னுள் தொலைக்க
உனை மட்டுமே தேடி –
யாருமிலா அண்டப் பெருவெளியில்
அலைகிறதென் இமைப் பூட்டாத யிக் கண்களிரண்டும்..
உச்சி நடுக்கோட்டில் முத்தம் பதித்து
பாதபஞ்சுதனில் பூமிபடாதுனை – நெஞ்சுக் கூட்டில் தாங்கிக் நிற்க
நித்தமும் நித்தமும் ஓர் தவம்
காத்திருப்பின் கண்ணீர்பெருக்கில் கரைந்தேப் போகிறதெனில்
நம்புவாயா???
சப்தமிடாத வானத்தின் இரவொன்றில்
நட்சத்திரம் பொருக்கி பெயர்கோர்த்து
அதற்கு வானவில்லில் கோடுகிழித்தா லென்ன யெனும் கற்பனை
உனை எண்ணும் போதெல்லாம் –
உன் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் – உன் நினைவுகளாய் உள்ளே
பெருக்கெடுக்கிறது…
காலத்திற்குமான சாபமாக காதலை திரித்த
பொய்யர்களின் முகத்தில் – எது காதலென எழுதிவிட்டு
ஜாதியின் மதத்தின் வெறியை
ஒரு முத்தத்தில் அழித்துவிட்டு –
வெறுமனே திரும்பிப் படுத்துக் கொள்ளும்
ஒரு இள-ரத்த துணிவல்ல யிது;
உன்னோடு வாழமட்டுமே –
கனவின்றி காத்திருக்கும் ஒரு வாலிபனின் உணர்வு.
உனக்கும் பிடிக்குமெனில் சொல் –
இரு கைவிரித்து –
இதோ இந்த கனம் முதல் நமதென்று முழங்கி
வார்த்தைகளில்லா ஓரிடம் நோக்கி
நீயும் நானும் பறந்துபோவோம்!!!
————————————————————————————–
வித்யாசாகர்