அன்புள்ள அம்மாவிற்கு,
வீடும் நீயும் உறவுகளும் நலமா அம்மா?
அப்பாவிற்கு என் வணக்கத்தையும் அன்பையும் சொல்லுங்கள் அம்மா.
நானும் நண்பர்களும் உங்களின் நினைவுகளை தாங்கியவண்ணம் இங்கு நலமாக உள்ளோம்.
நலமெனில், உணவிற்கு பஞ்சமின்றி உடுத்தும் ஆடைக்கு பஞ்சமின்றி உடனிருக்கும் தோழமைக்கு பஞ்சமின்றி நலம்.
இது ஒரு வேளைதவராமல் மருந்துண்ணும் கட்டாய வாழ்க்கை அம்மா. ஏழுமணிக்கு வரிசையில் நின்று எட்டு மணிக்குள் சாப்பிட்டால்தானே இங்கே சாப்பாடு கிடைக்கும். நீ காத்திருந்து என் சுவைப் பார்த்து பரிமாறி அன்பினால் இட்ட உணவு கிடைக்கும் நம் தாயகம் இல்லையே இது. உணவு உண்ணுப்போதெல்லாம் உன்னை நினைத்துக் கொள்வேன் அம்மா. கண்ணீர் உணவோடு தட்டில் கலந்துக் கொள்ளும், அதற்குள் அருகில் நிற்பவன் நேரமாச்சி சீக்கிரம் சாப்பிடு என்பான். என்னடா உணவு என்று எழுந்து வரவும் முடியாதே. பாதியேனும் தின்று விட்டு மீதியை உன் நினைவால் நிறைத்துக் கொள்வேன் அம்மா.
மனது கஷ்டமாகத் தான் இருக்கிறது அம்மா, பிடிக்கவேயில்லை நீயில்லா இந்த தேசம். அப்பா தங்கை அண்ணா நினைவுகள் தினம் தினம் என்னை கொல்கிறது. படித்த பின் அழுவாயோ என்று பயம் இருந்தாலும் மனது கணக்கிறதம்மா. உன்னிடம் சொல்வதன்றி வேறு உலகம் இல்லை எனக்கு. இருந்தாலும் தாங்கிக் கொள்வேன் அம்மா. நீ கொடுத்த தைரியம் எனக்குள் நிறைய வைத்திருக்கிறேன். அது என்னை பலப் படுத்தும் அம்மா. நீ கற்றுத் தந்த ஒழுக்கம் எனை நல்லவனாய் அடையாளம் காட்டுகிறது இங்கே. வேலையில் கூட என்னைத் தான் எல்லோரும் பாராட்டுகிறார்கள். விரைவில் எனக்கு சம்பள உயர்வு செய்வார்களாம். இங்கே முன்னேற்றம் என்பது மாடிப்படியில் ஏறுவது போல் சுலபமாக இருக்கிறதம்மா.
சொன்னால் ஆச்சர்யப் படுவாய், வேலைவிட்டு வந்ததும் உன் நினைவென்னை கொள்கிறதே என்ன செய்வதென்று மாலை நேரத்துக் கல்லூரி யொன்றில் சேர்ந்து நானிங்கே பட்டயம் படிக்கிறேன் அம்மா. சேரும் முன்னே உன்னிடம் கேட்கவேண்டும் என்று எண்ணினேன். போனமாதக் கடிதத்திலேயே குறிப்பிடலாம் என்று பார்த்தேன். பிறகு ரகசியமாய் முடித்துவிட்டு சொல்வோமே என்றுத் தோன்றியது. ஆனால் முடியவில்லை அம்மா, என் கண்ணீரும் சிரிப்பும் முதன்முதலாய் உனக்காகவே சேகரிக்கப் படுகிறது.
நீ வருந்தக் கூடாது, என்னை எண்ணி மகிழவேண்டும் என்று தான் சொல்கிறேன். வேலை படிப்பு சார்ந்தெல்லாம் இங்கு கவலை படுவதற்கில்லை. அண்டை மாநிலப் பிரபுக்கள் இங்கும் ஆட்சியை கைபடுத்தும் சுயநலவாதிகளாகவே இருப்பதால் அவ்வப்பொழுது தமிழ் குறித்தும் தமிழர் குறித்தும் நக்கல் செய்கையில் கோபம் வரும், சண்டை கூட போடுவேன், என் மண்ணைப் பற்றி யார் என்ன சொன்னாலும் தட்டிக் கேட்பேன் அம்மா, நீ ஊட்டி வளர்த்த வீரம் உள்ளே என்னை சரியானவனாக வைத்திருக்கிறது அம்மா.
அப்பா அடிக்கடி சொல்வாரே, நம்மூரில் வாழ்ந்து உயர்ந்தவன் தான் அசலூரில் நம்மை மட்டம் தட்டுவானென்று, அப்படித் தான் நடக்கிறது. உடன் இருந்துக் கொண்டே என் வேலைகளில் கூட எனக்கு எதிராக சூழ்ச்சிகளை செய்கிறார்கள். அவர்களின் உறவுகளை முன்கொண்டு செல்வதில் தான் அவர்களுக்கு கவனம் அதிகம் இருக்கிறது. நம் தமிழர்கள் அப்படி இல்லையே அம்மா. உணர்ச்சிவசப் பட்டு விடுகிறார்கள். கோபம் வந்தால் அடித்துவிடுகிறார்கள், உடனே ஊருக்கனுப்பிவிடப் படுகிறார்கள். இல்லையெனில் நம்பி விடுகிறார்கள் ஏமாந்துப் போகிறார்கள்.
ஆனால், அவர்கள் சாதுர்யமாக சில இடத்தில் பணிந்தும் ஆமாம் போட்டும் வெற்றியே பிரதானமாக கொண்டு முன்னேறிச் செல்கிறார்கள் சில அண்டை மாநிலத்து சுயநலமிகள். போகட்டும் அந்த வேடதாரி வாழ்க்கை நமக்கு வேண்டாம். தமிழர்கள் மனசு போல் வாழும் சுத்தம் உள்ளவர்கள். உணர்ச்சிப் போல முகத்தை காட்டும் உண்மை மாந்தர்கள். நானும் அப்படியே இருப்பேனம்மா என் திறமைகள் இவர்களை வென்றுவிடும். என்ன தான் சூழ்ச்சி செய்தாலும் நாம் செய்யும் நல்லவைகள் அதை காத்துக் கொள்ளும் அம்மா.
இங்கு நாங்கள் நண்பர்களெல்லாம் கூடி மாதமாதம் ஏதேனும் செய்கிறோம். மாதம் வரும் இருபதாயிரம் சம்பளத்தில் ஆளுக்கு இருநூறு பணம் போட்டு, மொத்தமாய் நூறு பேர் என்று சேர்க்கையில் இருபதாயிரம் தாண்டி கிடைக்கிறது. அதை உதவிகள் கிடைக்காத ஆதரவற்றோரின் இல்லங்களுக்கு அனுப்பி உதவுகிறோம் அம்மா. அதை அனுப்பிவைக்கும் ஒவ்வொரு மாதமும் எனக்கு இன்னொரு நல்லதும் நடக்கிறது. எதையும் எதிர்பார்த்து நாம் இதை எல்லாம் செய்யவில்லை என்றாலும், நாம் செய்யும் நற்பணிகள் நம்மையும் காக்கிறது அம்மா.
இங்கு நம் தாயகத்திற்கு என உதவுவோர் நிறையப் பேர் உள்ளார்கள் அம்மா. வீட்டை விட்டு வந்ததும் வீட்டின் அருமை தெரிவது போல்; நம் தாயகம் விட்டு வந்தவுடன் தான் நம் தாயகத்தின் அருமையும் பெரிதாகப் படுகிறது. இன்னொன்றினை சொல்ல மறந்தேன், இப்போதெல்லாம் மொழியுணர்வு மிகுந்து விட்டது நம் தமிழர்களுக்கு. பெரும்பாலும் இங்குள்ளவர்கள் அழகாக தமிழ் பேசுகிறார்கள். பண்பாகவும் நடந்துக் கொள்கிறார்கள். பொதுவாக எல்லோருமே நல்லது செய்யவும், நல்லவர்களாக வாழவுமே விரும்புகிறார்கள். அவர்களுக்கு முன்னின்று நல்லவைகளை எடுத்துச் செய்யவும் கூறவும் தான் நம்பிக்கையானவர்கள் தேவை படுகிறார்கள் அம்மா.
அங்ஙனம் இங்கு நிறைய தமிழ் நற்பணி அமைப்புக்களும், கவிஞர்கள் சங்கமும் நன்றாக செயல்பட்டு வருகிறது. நானும் என்னால் இயன்றவரை அவர்களோடு சேர்ந்து நம் மக்களுக்கு தொண்டாற்றி தமிழ் நிலைக்க பாடுபட்டும் வருகிறேன் அம்மா.
நம் தாயகம் எப்படி உள்ளதம்மா?
அரசியல் நிலைபாடுகளை செய்தியில் காண்கையில் வேதனையாக இருக்கிறது. இன்னும்சுயநல அரசியல் வாதிகளே நம் மண்ணில் இருக்கின்றனர். அவர்களை ஒழிக்க என் தலைமுறை நல்ல சிந்தனையோடு புறப்பட வேண்டுமம்மா. நம் தம்பியை தங்கையை அப்படி வளர்க்க வேண்டும் அம்மா. அவர்களை அரசியளுக்கென்றே சொல்லி படிக்க வைக்கவேண்டும். நல்ல பண்புகளோடு சமுதாய அக்கறையோடு, பொதுநோக்கோடு செயல்படுமாறு வளர்க்க வேண்டுமம்மா. தம்பியிடம் தங்கையிடம் இதை நான் கூறியதாக சொல்லுங்கள். கடிதம் காட்டி நம் சமுதாயம் குறித்த என் வேதனையை பகிர்ந்துக் கொள்ளுங்கள். அப்பாவிடமும் அண்ணாவிடமும் சொல்லி அதற்குத் தகுந்தாற்போல் வழிநடத்த சொல்லுங்கள் அம்மா. அண்ணாவிற்கும் அப்பாவிற்கும் தம்பி தங்கைகளுக்கும் நேரம் அமைகையில் தனியாக கடிதம் வரைகிறேன் என்று சொல்லுங்கள்.
அருகாமை வீட்டு உறவுகளுக்கும், என் நண்பர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்கும் என் வணக்கத்தை சொல்லுங்கள். இன்னொன்றினை மறந்து விட்டேன் அம்மா, அப்பாவிடம் சொல்லி தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு இம்மாதம் தவறாமல் மருந்திட சொல்லுங்கள். பிறகு மறக்காமல் எனக்கு பதில் எழுதும் போது கறுப்பி எத்தனை முட்டை இட்டாள், ஜெகன் குட்டி எப்படி இருக்கான், வீட்டை நன்றாக பார்த்துக் கொள்கிறானா? யாரையும் கடித்து எல்லாம் வைக்கவில்லையே என்பதை பற்றியும் எழுதுங்கள்.
தம்பி தங்கை நினைவு போலவே, எனக்கு நம்ம கறுப்பி(கோழி), ஜெகன்(நாய்குட்டி) நினைவுகளும் நிறைய இருக்கும் அம்மா. அவைகளின் பராமரிப்பும், தோட்டத்து வாசமும், அங்கே அமரும் தருணமும், சில்லென்ற காற்றும், நீ அருகில் அமர்ந்து பேசும் வாய்ப்பும், அப்பா திட்டாமல் கொஞ்சும் பொழுதுகளும், போர்வைக்குள் ஒளிந்துக் கொண்டு நானும் அண்ணாவும் தம்பி தங்கைகளும் விளையாடிய உறக்கத்திற்கு முன்னரான இரவும் வாழ்க்கையம்மா.
இனி கிடைக்குமா அதலாம்? கிடைக்கும் என்று நம்பிக்கை இருந்தாலும் தங்கை தம்பி படிப்பு, அண்ணனின் எதிர்காலம், அப்பாவுக்கு உதவி, என் சமுகத்திற்கு நான் செய்ய வேண்டிய கடமைகள், உன்னையும் அப்பாவையும் கடைசி வரை என்னுடன் வைத்து நலமாகப் பார்த்துக் கொள்வதற்கான ஆடம்பரமற்ற செல்வம்’ என எல்லாம் பற்றி யோசிக்கையில்; இதத்தனையையும் என் போதாத படிப்பு என் தேசத்தில் எனக்குத் தருமா?
எனும் பயம் வருகிறது அம்மா. எனவே கொஞ்சம் காலத்திற்கு மனதை இறுக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள். எப்படியாவது இங்கிருந்தே படித்து ஓரளவேணும் என் வேலையினை உயர்த்திக் கொண்டு பின் தாயகத்திலேயே வந்து இருந்து விடுகிறேன் அம்மா.
நீங்கள் எல்லாம் இல்லாத இங்கு எந்திரமாய் சம்பாரித்து எந்திரமாய் வாழ்வதை விட, அங்கே நீயிருக்கும் மண்ணில் உழைத்து, வேண்டியதை சம்பாதித்துக் கொள்ள இங்கிருந்தே என்னை பக்குவப் படுத்திக் கொண்டு, அதற்கு தக்க என் நிலையை சமன் செய்துக் கொண்டு அங்கேய வந்துவிடுகிறேன் அம்மா.
அங்கே உன்னருகில், என் உறவுகளின் சிரிப்பில். என் மரம் செடி கொடிகளின் அசைவிற்கு மத்தியில், காகம் கத்தும் குயில் கூவும் சப்தங்களுக்கு இடையில், பெய்யும் மழையோடும் வீசும் காற்றோடும் அன்பினை அக்கறையை சமுதாய முன்னேற்றத்தை; சமுகம் மாறுவதற்கான பண்பினை பகிர்ந்து நிம்மதியாய் வாழ்வோமம்மா. அதுவரை உங்கள் எல்லோரின் நினைவுகளை சுமந்தவனாய். ஏக்கங்களையும் அன்பையும் கண்ணீரில் நிறைத்துக் கொண்டிருப்பவனாய், கடிதம் நோக்கி காத்திருக்கும் கண்களோடு உன் அன்பிற்காக காத்திருக்கிறேன் அம்மா.
நலம் பார்த்துக் கொள். உடல்நலம் தக்க மருந்தெடுத்துக் கொள். மனதை பலமாய் வைத்துக் கொண்டிரு அம்மா. விடைகொள்கிறேன். அடுத்த மாதக் கடிதத்தில் தொடர்கிறேன். வணக்கம்.
——————————————————————————————————-
வித்யாசாகர்
இது ஒரு கடிதம் வரைதல் போட்டிக்காக எழுதியது உறவுகளே…
இதன் மூலம் நம் வெளிநாட்டு வாழ் மக்களின் வலிகளை பகிர்ந்துக் கொள்ள இயலுமோ எனும் தவிப்பில் எழுதினேன்..
இது ஒரு வலிக்கான விஷயம் தான் என்றாலும், நமை சிந்தனையில் புடம்போட்டு மேலும் பலப் படுத்திக் கொள்ளவும், ஒரு தமிழ் இளைஞனின் வாழ்வும், எண்ணங்களும் இப்படி தான் உலகம் நோக்கி விசாலமாக இருந்தாலும்; உறவுகளின் அன்பிற்குள் கட்டப் பட்டு விலகியும் வருந்தும் வலிக்கும் இந்த மனநிலைக்கு சாட்சி கூறும் பதிவாகட்டும்!!
LikeLike
Amma is Great. Vidyasahar write and real is supper.
LikeLike