1
உன் வாசனையில்
உயிர் சுரக்கும் இன்பம் எனக்கு,
எல்லாம் கடந்து விடுகிறாய் நீ
உனை விட எந்த வெற்றியோ
ஆசையோ –
பெரிதாகப் படவேயில்லை எனக்கு,
உன் சிரித்த முகம் பார்த்து பார்த்து
பூமியெல்லாம் மழை பெய்வதுபோல் ஒரு
துள்ளலில் மிதக்கிறேன் நானும்,
வாழ்வின் – கொடுமைகள்
ஆயிரம் இருக்கலாம்
வருத்தங்கள் ஆயிரம் இருக்கலாம்
இருந்து போகட்டுமே;
அவைகளை சமன் செய்ய
நீயொருத்தி –
மகளாக பிறந்தது போதும்!!
——————————————————————————-
2
“வித்யா..…………”
நான் ஒருநேரத்தில்
அழைத்து அழைத்தும்
சலித்திடாதப் பெயர்,
பின், அழைத்து அழைத்து
அழுத பெயர்,
உயிர்ப்பின் பாதி தூரத்திலேயே
நான் அழைக்க கிடைக்காது
எனைவிட்டுப் போன பெயர்,
எப்படியோ மீண்டும்
அன்று – இயற்கையினை
சபித்துவிடாதப் புரிதலில்
அதேபெயரோடு நீ இன்று – எதிரே நிற்கிறாய்,
வித்யா வித்யா என்று வாய்குளிர
அழைக்கிறேன் இன்று,
வானமும் பூமியும்
வாழ்க்கையும் வசந்தமும்
அந்த மூன்று எழுத்துகளுக்குள்ளேயே
‘வித்யா’ என்ற பெயருக்குள்ளேயே
அடங்கிப் போகிறதெனக்கு!!
——————————————————————————-
3
வீட்டில்
உன்னோடிருக்கும் சமயமெல்லாம்
உன்னைத் தான் நினைத்துக்
கொண்டுள்ளேனாத் தெரியவில்லை;
ஆயினும் உனை விட்டு
வெளியே வந்து விட்டால்
உன்னை மட்டுமே அதிகம் நினைக்கிறேன்.
அழுதாயோ
என்னைத் தேடுவாயோ
அண்ணன் தெரியாமல் அடித்திருப்பானோ
காதுகளில் ஏதேனும் எறும்பு புகுமோ
எதையேனும் தின்பண்டமென யெடுத்து –
வாயில் வைத்துக் கொள்வாயோ
உருண்டு புரண்டு வருகையில்
தொட்டிலிலிருந்து –
கீழே வீழ்ந்துப் போவாயோ என்றல்லாம்
ஒரு அச்சம் இருந்துக் கொண்டே
இருக்கும்,
நினைவு வந்தாற்போல்
அம்மாவை தொலைபேசியில் அழைத்து
சாப்பிட்டாயா என்ன செய்கிறாய் என்று
குசலம் விசாரிப்பதுபோல் விசாரித்துவிட்டு
வைத்துவிடுவேன்;
வைக்கும் முன்
உன்னைப் பற்றிக் கேட்டிருக்காவிட்டாலும்
அவளோடு பேசி முடித்து
வைத்ததற் கிடையே
ஒருமுறையேனும் –
உன் சப்தமும் எனக்குக் கேட்டிருக்கும்!!
——————————————————————————-
4
முன்பெல்லாம்
உனக்கு ஆராரோ பாடினால்
என்னை மதிக்க கூட
மாட்டாய் நீ;
அண்ணன் –
கொஞ்சம் அவனை தூக்கி தாலாட்டினாலே
தூங்கிப் போவான்,
எனவே, உன்னை நினைத்து – நீ ஏன்
இப்படியோ என்று வருத்தம் எழும்.
மாதம் ஒன்றிரண்டு கடந்தப் பின்
நீயும் – இப்போது
அப்படித் தான் ஆனாய்,
தூக்கி –
இரண்டு கைகளில் வைத்துத் தாலாட்டி
லேசாக –
ஆரி ராரி ராரி ராரோ……. என்பேன்
உடன் லேசாக
உச் உச்சென்று வாயில் சப்தங்களை
கூட்டுவேன்..
இரண்டொரு சப்தத்தில்
உடனிரண்டு ஆரிராரோவில் –
ஒரு மலர்போல் என் கைகளில்
உறங்கிப் போவாய்..
முத்தமிடக் கூட மனமின்றி
உனையே பார்த்து அமர்ந்திருப்பேன்;
காலம் இனிமையாய் கழியும்!!!
——————————————————————————-
5
அம்மா சொல்வாள்
பெண் குழந்தை இல்லையா
அப்பாவிடம் தான் ஒட்டுமென்று;
நான் சொல்வேன்,
இவள் நம் குழந்தை’
இரண்டுபேரிடமும் ஓட்டுவாளென்று.
யாரோ சொன்னார்கள்
பெண் குழந்தை தானே
பால் கொடு போதும்’ ஆண் குழந்தையெனில்
பூஸ்ட்டும் போன்விட்டாவும் கொடுக்கலாமென்று.
நாங்கள் முகிலுக்கு என்ன
கொடுத்தோமோ –
அதையே உனக்கும் கொடுத்தோம்,
இருவருக்கும் துளிகூட மானுட
பேதமையை காட்டவில்லை,
பலத்தை மாற்றி ஊட்டவில்லை,
பண்பை குறைக்கவோ கூட்டவோ
எதிலும் எவரையும் வேறுபடுத்திப்
பார்க்கவோ இல்லை;
பெண் என்ற ஒற்றை வார்த்தையின்
மதிப்பை மட்டும் –
இருவருக்கும் சொல்லித் தந்தோம்
அந்த அடையாளத்தை போற்ற மட்டுமே
இருவருக்கும் போதித்தோம்;
அதனால் ஓர்தினம்
நீயும் – போற்றப் படுவாய்,
அதற்கு அண்ணனும் காரணமாவான்,
அண்ணனுக்குள் அம்மாவும் நானும்
அவனாகவும் இருப்போம்!!
——————————————————————————-
வித்யாசாகர்
Anbulla vidhya sagar avargalukku
LikeLike
அன்புள்ள வித்யாசாகர் அவர்களுக்கு,
வணக்கம். தங்களின் கவிதை ஒரு குயிலின் கீதம் போல்; யாழின் இசை போல்; தேனின் இனிமை போல்; தென்றலின் குளுமை போல் மனதிற்கு இதம் அளிக்கிறது.
தங்களின், ஒரு கவிதையான “பொய்யெனப் போனதடி ஓர் போர்” கவிதை மனதை படிக்கையில் பாதிக்கிறது. உங்களின் எழுத்து வளம் மென்மேலும் வளர்க.
வாழ்த்துக்களுடன்..
கீர்த்தி
LikeLike
மிக்க நன்றி கீர்த்தி. உங்களின் வாழ்த்துக்கள் என்னை வளர்க்கிறது என்பதை விட, கடமைப் பட வைக்கிறது கீர்த்தி. நல்லதை நினைத்தால் நல்லதை அடைவோம் என்பதற்கு என் வாழ்நாள் உதாரணங்கள் நிறைய உள்ளன. பார்ப்போம். நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும் கீர்த்தி!!
LikeLike
ovoru padaippilum ethanai vithyjaasam ithellaam ungalaal eppady saaththijamaahirahtu?
LikeLike
கவிதை மிகவும் நன்றாக இருக்கு ஆனால் அதை ஒரு கவிதை என்று சொல்லவதை விட ஒரு புனிதமான பிறவி என்றும் சுதந்திரமான உலகம் என்றும் சொல்லவேண்டும் இல்லையா? உண்மையில் ஒரு பெண் தாய்மை அடைவதும் ஒரு மனிதனின் ஆரம்பம் அந்த கருவறைக்குள்ளே என்று நினைக்கும் போதும் எத்தனை ஜென்மம் தவம் புரிந்தாலும் கிடைக்காத ஒரு வரம் என்றே கூறவேண்டும்.
LikeLike
ஆம் சுகந்தினி, மனிதரின் பிறப்பே ஒவ்வொன்றும் வரம் தான்; அதை பிறர் மகிழ வாழ்கையில்!!
LikeLike