“பிரிட்டீஷ்காரனுங்க எப்பவுமே ஒரு இடத்தோட வாழ்ந்தோமா இருந்தோமான்னு போக மாட்டானுங்க. அப்பல்லாம், நாடு புடிக்க அலையிறதே அவனுங்களுக்கு வேலை. அதில்லாம, அவனுங்க நாட்டுல தப்பு பண்ணினா(ல்), தண்டிக்க அமெரிக்கா என்கிற குடியேற்றப் பகுதியில் போட்டு தண்டிக்கிறது தான் அப்போதைய அவனுங்க வழக்கமா இருந்துது”
“அமெரிக்காவுல போட்டா!!!?”
“ஆமாம், அமெரிக்காவுல தான்”
“அமெரிக்காவுக்கும் கதை இருக்கா?”
“நம்ம தெருவுக்கு பேரு ‘முனியப்பன் தெரு’வுன்னு வைத்ததற்குக் கூட ஒரு கதை இருக்கும். நாம் தான் ஆராய்வதுமில்லை. வரலாற்றை ஆராய்ந்து தேடி படித்து நம்மை நாம் முழுமையாய் தெரிந்துக் கொள்வதுமில்லை”
“சரி அமெரிக்கா பெரிய கதையா? உன் கூட பேசி பேசி நேரம் போனதே தெரியலையேப்பா” இருவரும் பேசி பேசியே மதியம் வரை கடந்திருந்தார்கள். நடுவில் மேகநாதன் அண்ணனிடம் நாளை சத்யா புறப்படுவதற்கான விமானப் பயணச் சீட்டு கொண்டுவந்து கொடுக்கப் பட்டது.
இருவரும் பேசிக் கொண்டே நடந்துச் சென்று அருகாமையில் உணவகம் ஒன்றில் உணவுண்டார்கள். சாப்பிட்டுவிட்டு வந்து மீண்டும் அதே அறையில் ஏசி சரியாக பணி செய்யவில்லை என்று திட்டிக் கொண்டே மின்விசிறியின் வேகத்தினை அதிகப் படுத்திக் கொண்டு அமர்ந்துக் கொண்டார்கள். சத்யா அமெரிக்கா பற்றி சொல்லத் துவங்கினான்.
“அது ஒரு உருவாக்கப்பட்டு பின் விரிவு படுத்தப் பட்ட ஐம்பது மாநிலங்களின் கூட்டணி தேசம்ண்ணே. முதலில், நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் பன்னிரெண்டாயிரம் ஆசிய மக்கள் சென்று வாழ்ந்த இடம் அது.
பின் பல நாட்டு மக்களின் குடியேற்றத்திற்கு பிறகு, ஜெர்மனியின் வரைபட நிபுணரான மார்டின் வால்ட்ஸ்முல்லர் என்பவரால்; மேற்கத்திய அரைக்கோள நிலப்பகுதிக்கு ‘இத்தாலிய ஆய்வுப் பயணியாக வந்தவரும், வரைபட நிபுணருமான அமெரிக்கோ வெஸ்புகியின்‘ பெயரில் “அமெரிக்கா” எனப் பெயரிடப் பட்டது. பிறகு அது வளர்ந்து பெரிய அமெரிக்கக் கண்டமாக அறிவிக்கப்பட்டது என்பதெல்லாம் வேறு நிறைய பெரிய கதை.
இருப்பினும், அப்போதைக்கு அங்கே, குறைந்தளவே மக்கள் வாழ்ந்து வர, அவர்களோடு மேலும், ஐம்பதாயிரம் குற்றவாளிகளை தண்டிப்பதற்காக, பிரிட்டீஷிலிருந்து கொண்டுபோய் அமெரிக்காவில் சிறைவைத்து, அவ்விடத்தினை ஒரு தவறு செய்பவர்களை நாடுகடத்தித் தண்டிக்கப் பயன்படுத்தும் அடிமைகளின் இடமாகவே வைத்திருந்தார்கள் பிரிட்டீஷ் காரர்கள்.
அதேப் போல இந்தியாவுல தப்பு பண்ணா தண்டிக்கவும், தண்டிக்கையில யாருமே வந்து என்னன்னு கேட்காத மாதிரியும் ஓரிடம் தேவைப் பட்டதாகக் கருதி பிரிட்டீசாரால் தேர்ந்தெடுக்கப் பட்ட தீவு தான் அந்தமான்”
“அதுசரி, அப்போ அப்படி தான் அந்தமான் வந்துதா”
“அப்படி பயன்படுத்தப் பட்டது”
“அமெரிக்கா கூட அவர்கள் உருவாக்கியது தானா?
“அவர்கள் உருவாக்கியது கிடையாது, பிரித்தானியர்களால் நாடுகடத்தப் பட்ட குற்றவாளிகள் அங்கே விடப்பட்டு, அடிமைகளாக வைத்து ஆளப் பட்ட இடம். பின் பல குடியேற்றங்களுக்குப் பிறகு; தன்னை ‘அமெரிக்க ஐக்கிய நாடுகள்’ என்று தன் ஒற்றுமையாலும், உழைப்பாலும், முன்னேற்றத்தாலும் அறிவித்துக் கொள்ளுமளவிற்கு வளந்துப் போனது அமெரிக்கா”
“ஓ… ஹோ…”
“அந்த உத்தியில தான் பெரிய பெரிய குற்றவாளிகளை யெல்லாம் இன்றும் அந்தமான் ஜெயிலுக்கு மாத்துவாங்க. இந்த அந்தமான் பிரித்தானியர்களால் எப்படி இதற்கென கவரப் பட்டதோ; அது போல, அவனை துறைமுகம் சார்ந்தும் அழகு சார்ந்தும் மிகவும் கவர்ந்த இடம் ‘திரிகோணமலைப் பகுதியாகும். இந்த திரிகோணமலை நம்ம பாரம்பரியத் தமிழர் வாழ்ந்த பகுதியில ஒன்று.
உலகின் நிறைய நாடுகளை, தனக்கு கீழாக வைத்திருந்த பிரிட்டீசாரின் பல நாடுகளுக்கு மத்தியில்; இந்தியா ஒரு சிம்ம சொப்பனமாக இருந்தது வெள்ளையனுக்கு. எனவே, எங்க இலங்கையை சும்மாவிட்டா அது வழியா வந்து பிரெஞ்சு காரங்க இந்தியாவை கைப்பற்றுவாங்களோன்னு பயந்து டச்சுக் காரர்களிடமிருந்த இலங்கையையும் அவனே பிடித்துக் கொண்டான்.
அதற்கு மிக முக்கிய காரணமாக; இலங்கையில் இருந்த அந்த திரிகோணமலை துறைமுகமும், அந்த திரிகோணமலை ஒரு பூலோக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையப் பெற்றதுமாக இருந்தது.
பின் கண்டி மலை நாட்டைக் கையகப்படுத்தி இலங்கையை ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்து, மொத்த இலங்கையையே முழுதாகப் பிடித்து ஆளத் துவங்கினான்.
அவனை பொறுத்த வரை இலங்கை வேறில்லை, இந்தியா வேறில்லை, எல்லாம் தனக்குக் கீழான அடிமை பிரதேசங்கள், அவ்வளவு தான்.
அப்பவும், தமிழன் ஒரு புறம், சிங்களர் ஒரு புறம்னு வாழ்ந்து வந்த நிலையில; இலங்கை முழுதும் ஆளத் தொடங்கிய வெள்ளையன் அவனுக்கு சாதகமா எல்லோரையும் ஒரு ஆட்சியின் கீழ் கொண்டு வருவதா எண்ணி ஒட்டுமொத்தத்தையும் சிங்கள தேசம்னு அறிவித்துவிட்டு போயிட்டான்.
அவன் கொடுமைகளிலிருந்து விடுபடல் ஒன்றே போதுமென்று எண்ணிய தமிழ் மக்களும்; சிங்களன் இத்தனை பெரிய கொடுங்கோளனாக வருவான் என்று எள்ளளவும் எண்ணாது விடுதலை ஒன்று கிடைத்தால் போதுமென்றே காத்திருந்து; பின் கிடைத்த விடுதலையை சிங்களனிடம் தொலைக்க வேண்டியதாகிப் போனதெல்லாம் எழுதா விதியாகிவிட்டதென்பது ‘நாம் நாணப் படவேண்டிய விடயத்தில் ஒன்று.
இதற்கு முன்னதாக, தன் ராஜ்யத்தின் கீழுள்ள இந்திய மக்கள்வேறு (இருப்பதையெல்லாம் வந்தேறிகள் சூறையாடிக் கொண்டதால்) ஆங்காங்கே வருமையில் கிடப்பதாய் எண்ணி, அதையெடுத்து இங்கே விட்டலாவது நல்ல வேலை பார்க்க ஆளாகுமே என்று கணக்கிட்டு; 1827 ஆம் ஆண்டு ‘எட்வட் பர்ன்ஸ்’ற ஆங்கில கவர்னர் ஒருவனால், கண்டி மலைப் பிரதேசத்தில் காபித் தோட்டங்களை நிர்மாணித்து; அவற்றில் வேலை செய்வதற்காக சென்னை மாகாணத்தில் இருந்து 300 தொழிலாளர்கள் வரவழைக்கப் பட்டார்கள். இந்த எண்ணிக்கை தான் காலப் போக்கில் பல மடங்காகப் பெருகிப் போனது.
காரணம், அவர்களின் உழைப்பில் திகைத்துப் போய் வாயடைந்துப் போன வெள்ளைக்காரன் பிறகு பாலம் கட்டுவதிலிருந்து, சாலை அமைப்பது வரைக்கும்; நம்ம தமிழரை வைத்துத் தான் செய்திருக்கிறான். அதோடு விட்டானான்னா; அதுவும் இல்லைன்னு தான் சொல்லுது வரலாறு”
“அதுசரி..” அவர் புதிதாக கேட்கும் கதைபோல கேட்டுக் கொண்டிருந்தார்.
“முதலில் காப்பி தோட்டம் அமைத்து, பிறகு; காபிக்கு பூச்சி பிடிக்கும் ஆபத்து வருவதைக் கண்டு, காப்பி தோட்டத்தினை அப்படியே விட்டுவிட்டு தேயிலை தொழிலை ஆரம்பித்து, அதை விருத்தி செய்ய இன்னொரு புறம் மீண்டும் தமிழர்களை போட்டுக் குவித்து, அடர்ந்து பயங்கரமாக வளர்ந்திருந்த காடுகளையெல்லாம் அழித்து, அழகான பசுமை பிரதேசங்களாக உருவாக்கின, தமிழர்களால உருவான, தமிழனின் ரத்தம் அன்றே வியர்வையாய் சிந்தி ஊறிய மண் அது ஈழம்”
“எந்த வருசத்துல.. தம்பி”
“வருசம்லாம் சொன்னா நிறைய சொல்லனும்ணே”
“தெரிஞ்சா சும்மா சொல்லுங்களேன், கேட்டு வைப்போமே”
“எனக்கு தெரிந்த வரையும், படித்தது வரையும் சொல்றேன், மீதியை நீங்கதான் ஆராய்ந்து சரிபார்த்துக் கொள்ளனும் சரியா..”
“எண்ணத்த பாக்க, அதான் இவ்வளோ விவரமா சொல்லுதியலே, விவரமா தானே படிச்சிருப்பிய, சும்மா சொல்லுங்க”
“கி.மூ 500க்கும் முன்னால் விஜயன்ற இளவரசன் நடத்தைக் கேடு காரணமாக தனது பதினெட்டாவது வயதில் நாடு கடத்தப்பட்டு, எழுநூறு பேரோட இலங்கையின் தம்பலகாமத்திற்கு வந்திருக்கிறான். (அவ்விடம் தங்கப்ப்பண்ணி என்றும் கூறப்படுகிறது. (இப்போதய அமைப்பு படி அவ்விடங்கள் மன்னார், நேகோம்போ, புத்தளம் என்பதாக குறிப்பிட்டுள்ளார்கள்)
அங்கனம் வந்தவன், அங்கு வசித்து வந்த இயக்கர் இனத்தின் தலைவியான குவேனியை மனம் முடித்து அவ்விடத்தின் தலைவனாகி, பிறகு பதினைந்து வருடம் கழித்து பாண்டிய மன்னனின் இளவரசியை மணந்து இலங்கையின் மன்னனாக விளங்கியதாக மகாவம்சமும் சில வரலாற்று குறிப்புகளும் கூறுகின்றன. .
அவன் அங்கு மன்னனானதோடு அல்லாமல் அவனோடு வந்து குடியேறிய எழுநூறு பேரும், அங்கு வசித்துவந்த தமிழ் பெண்களையே மணம் முடித்து, பிறகு அவர்களால் ஒரு கலப்பு சமூகம் உருவாகி, வளர்ந்து, அவ்வம்சாவழிகளால் புத்தம் பரப்பப் பட்டு, சிங்களம் உருவாக்கினதா சிங்கள ஆசிரியர்களே சொல்வதுண்டு.
பாளி மொழி பேசும் மகாவம்சத்தினருக்கு புத்தம் பரப்ப வேண்டி இங்ஙனம் ஒரு தனி இனம் தேவைப்பட, அவர்களின் ஆதரவின் பெயரில் தமிழர்களிடமிருந்தே தனித்த ஒரு இனமாக சிங்களர்கள் அடையாளப் படுத்தப் பட்டு மேன்மைபடுத்தவும் பட்டனர்.
அப்போதைய தேச அமைப்பு படி, மகத நாடும், கலிங்க நாடும் அருகாமை தேசங்கள். மாகத நாடு என்பது வங்கத்து ஒரு பகுதியையும் சேர்த்து பீகாரோடு அமைந்திருந்த இதியாவின் பல சிறப்புக்களை கொண்ட ஒரு பெரிய தேசமாகும்.
கலிங்க நாடு என்பதுஒரிஸ்ஸா ஆந்திராவோடு சேர்ந்து வடக்குத் தெற்காக சுபர்ணரேகா நதியிலிருந்து கோதாவரி வரையிலும், கிழக்கு மேற்காக வங்காள விரிகுடாவிலிருந்து அமர்கந்தாக் மலைத் தொடர் வரையும் பரந்திருந்த வளம் பொருந்திய தேசமாகும். அதுமட்டுமின்றி வலிமை மிக்க கடற்படை கொண்ட பேரரசாக விளங்கிய இந்தப் பேரரசின் கப்பல்கள் இலங்கை, பர்மா, தாய்லாந்து, வியட்நாம், போர்னியோ, பாலி, சுமாத்திரா மற்றும் ஜாவா ஆகிய நாடுகள் வரை பயணம் செய்து வணிகத்தில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப படுகிறது.
இதன் மூலமாக சிலர் விஜயன், வங்கத்தை சேர்ந்தவன் என்றும் சிலர் ஒரிசாவை சேர்ந்தவன் என்றும் சிலர் வேறு சிலவாறும் சொல்வதுண்டு. ஆனால், உண்மையில் நடந்ததாக மகாவம்சம் விஜயன் பற்றிய வரலாற்றுக் கதை ஒன்றினை கூறுகிறது.
அது, வங்கதேசத்து மன்னன் ‘வங்கா‘ என்பவன் கலிங்கதேசத்தின் மன்னனின் மகளை மணந்ததாகவும், அவனுக்குப் பிறந்த சுபதேவி உலகமகா அழகும் அதேநேரம் காமரசமும் கொண்டவளென்றும், அவள் விதியின் வசப்படி சிங்கத்துடன் சேர்ந்து”
“சிங்கத்துத்தனா?????!!!”
“இவ்வளவு பெரிய ஆச்சர்ய குறி போட்டால் அதன் கிளை கதைகள் போகும் நேரம் பத்தாதாது”
“இல்லை இது கதையா ? அல்லது நடந்த வரலாறா?”
“இப்படி கேட்டால் நானும் பதில் சொல்ல இயலாது. இப்படி நடந்ததாக சிங்கள வரலாற்று நூல் தெரிவிக்கிறதாம். சிங்கள வரலாறு பகிர இக்கதைகள் வருகின்றன. இந்த வாங்க மன்னனுக்கு ஏற்கனவே சுபதேவி பிறந்த போதே ஜோதிடர்கள் கணித்து நம் தேசத்தின் வரலாற்றில் இப்படி ஒரு சோகம் இருக்கிறதென்று சொல்லி விடுகிறார்களாம்.
அதாவது, இக்குழந்தை மிக அழகாகவும் அதே நேரம் காமவிரோதங்கள் ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும் என்று கூற, அவர் எத்தனை அடக்கியும் அவள் ஒரு ஆண் பிறப்பினை போல தன்னை ஒரு வீரனாக அடையாளம் காட்டிக் கொள்பவளாகவும் அவள் விருப்பத்திற்கு இருப்பவளுமாகவே இருக்க வங்க மன்னன் அவளை ஒதுக்கு புறமான ஒரு காட்டுப் பகுதிக்கு அனுப்பி வைக்க –
அங்கே, ஓர்தினம் எதிரி நாட்டிலிருந்து தன் நாடு புடிக்க வருபவர்களை மடக்கி சண்டையிடப் போகும் வீரர்கள் செல்வதை பார்க்கிறாள், ஆர்வத்தில் தானும் கலந்துக் கொள்கிறாள். அப்படி கலந்து போகும் வழியில் ஒரு பெரிய காட்டுச்சிங்கம் அவர்களை வழி மடக்கி கொள்ளப் பார்க்க சுபதேவி அந்த சிங்கத்தோடு சண்டையிட்டு அடக்கி தன்வசப் படுத்தி போர்வீரர்களை விடுவிக்கிறாள்.
பின் அந்த சிங்கத்தோடு சேர்ந்து நெருங்கி கருவுற்றும் போக, அவளுக்கு சிங்கபாபு மற்றும் சிங்கஷிவாளி என்று இரண்டு ஆண்பெண் குழந்தைகள் பிறக்கிறார்கள். சிங்க அடையாளம் கொண்ட அக்குழந்தைகளோடு அவளும் சேர்ந்து சிறிது காலம் அங்கிருந்த ஒரு குகைக்குள்ளேயே குடும்பமாக வாழ்கிறார்கள்.
ஆனால் சிங்க மற்றும் மனித உடலமைப்புக் கொண்ட அக்குழந்தைகள் வளர்ந்து பிற சிங்கங்களின் தொல்லைக்கு ஆட்பட, சுபதேவி அவர்களை அந்த குகையிலிருந்து அழைத்துக் கொண்டு வேறு இடத்திற்கு நகர்கிறாள். அங்கனம் சிறிது சிறிதாக நகர்ந்து ஒரு வாழ்விடத்தினை அமைக்கிறார்கள். அவ்வாறான ஓர் சமயம், சிங்கபாபு தன் தந்தையை கொன்றுவிட்டு தங்கை சிங்கஷிவாளியை மணக்கிறான்.
அவளோடு அவன் வாழ்ந்து பின்னால் விருத்தி செய்யப்பட்ட இடம் சிங்கூர் என்றும் சிங் பூர் என்றும் விளங்கி பின் சிங்கப்பூர் ஆனது. (அதாவது சிங்கம் வாழ்ந்த இடம் என்பது அர்த்தம்)
சிங்கஷிவாளிக்கு இரண்டு இரட்டையர்கள் பிறக்கிறார்கள். அவர்களில் மூத்தவன் விஜயன். இளையவன் சுமித்தா.
மூத்தவனான விஜயன் பேய்களிடம் தொடர்பு கொண்டவனாகவும் ஏக அட்டகாசங்கள் செய்பவனாகவும் இருக்க அதை பொறுக்காத மன்னன சிங்கபாபுவால் அவனும் அவனோடு ஏழுநூறு பேருமாக நாடு கடத்தப் படுகிறான்.
ஆக, வங்கத்து தேசத்தின் ஒரு மிகுதி மகத நாட்டோடு சேர்ந்திருந்தமையாலும், மகத நாடென்பது இப்போதைய பீகார் மாநிலம் என்பதாலும், கலிங்கம் ஒரிசாவை உள்ளடக்கியதாலும், களிங்கத்து இளவரசி வழியாக வந்த வம்சத்தை சேர்ந்தவன் என்பதாலும், விஜயனை சிலர் பிகாரிலிருந்து வந்தானென்றும், சிலர் ஒரிஸ்ஸாவிலிருந்து வந்தானென்றும், சிலர் வங்கத்து இளவரசன் விஜயனென்றும் வேறு வேறாக கூறுவதுண்டு.
“ஆக இலங்கையை பிடித்துக் கொண்டு இது என் நாடு, எனது மண்; என்று சொல்லும் சிங்களர்கள் வந்தேறி குடிகள் தான் இல்லையா சத்யா?”
“அதிலென்னண்ணே சந்தேகம். வந்தவர்கள் தானே இப்போ நம்மை ஆள்கிறார்கள். அதை சற்று விரிவா பிறகு பேசுவோம், ஆகமொத்தம், விஜயன்ற மன்னன் நம்ம மண்ணில் வந்து கி.மு 543-இல் துவங்கி கி.மு 504 வரை, 38 ஆண்டுகள் முழுதாக ஆட்சி செய்ததாக மகாவம்சம் கூறுகின்றது.
அதுக்கப்புறம் அசோகா சக்ரவர்தியோட மகன் மகிந்தன் எனும் மகிந்த தேரரும் அவனுக்குப் பின் வந்த அவனின் சகோதரி சங்கமித்தையும் சேர்ந்து புத்தம் பரப்பினதாவும், அதற்கு முன்னரே அங்கு நாகர் இயக்கர்னு நான் முன்னம் சொன்னதுபோல நம்ம இனம் அங்கே வாழ்ந்ததாவும் தான் வரலாறு இருக்கு. அதுக்கப்புறமும் கூட நம்ம எல்லாளன் கி.மு 145 இல் இருந்து கி.மு 101 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை 44 வருடம் ஆண்டிருக்கிறார்”
“சரி, எல்லாம் சரி தான் ஆனால் கதைய மாத்தீட்டீங்களே!!! முதல்ல வெள்ளைக் காரன் ஆட்சியில தமிழர் சென்னையிலிருந்து போய் அங்கே காடழித்து ஊர் வளர்த்தார்கள் என்று சொன்னீங்களே!!! அதை முழுசா சொல்லலியே?”
“அதலாம் பெரிய கொடுமைண்ணே. இந்தியாவானாலும் சரி இலங்கையானாலும் சரி இரண்டுமே பிரிட்டிஷாரின் கீழிருந்த காரணத்தினால் எங்கும் எல்லோருமே அடிமைகள் தானே எனும் வருத்தம் எல்லோருக்குமே இருந்தது. யாரையும் யாரும் பிரித்துப் பார்த்துக் கொள்ளவில்லை. அனைவரும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் குடிமக்கள் எனபதை மட்டுமே கருத்தில் கொண்டு இந்தியாவிலிருந்தும் கண்டிக்குப் புறப்பட்டனர்.
யாரும் செல்லவே இயலாத அடர்காடுகளுக்கு இம்மக்கள் அனுப்பப்பட்டு தன் ரத்தத்தை வியர்வையாக்கி இலங்கையின் பிற்கால ஏற்றுமதி உற்பத்திக்கு தன் உயிரையும் உழைப்பினையும் முதலாக இட்டனர். அவர்களால் செழுமை படுத்தப் பட்ட அந்நிலமே பின்னர் அழகிய மலையகமானது. அதற்கென அவர்கள் கொடுத்த உயிர்களின் என்னிக்கை கணக்கிலடங்காதவை என்கிறது வரலாறு.
1926 -இல் மட்டும் மலையகம் வந்தவர்களில் நூற்றில் நாற்பது சதவிகிதத்தினர் இறந்துபோனதாகவும், 1841-ற்கும் 1849 -ற்கும் இடையில் எழுபதாயிரம் பேர், அதாவது 25 சதவிகிதத்தினர் இறந்துப் போனதாகவும் பத்திரிகை செய்தியொன்றினால் சொல்லப் படுகிறது.
அதன் பொருட்டே; 1837 – இல் 4,000 ஏக்கராக இருந்த காபித் தோட்டத்தின் பரப்பு 1881 இல் 2,56,000 ஏக்கராக வளர்ச்சி கண்டுள்ளது. பின், 1860 இல் தேயிலை பயிரிடுதல் அறிமுகப்படுத்தப்பட்டு 1870 -இல் பூச்சிகள் தாக்கி காபிச் செடிகளெல்லாம் சேதமானதை கருத்தில் கொண்டு அவைகளெல்லாம் தேயிலை தோட்டங்களாக மாற்றப் பட்டன. அதன் பொருட்டு 1917 இல் தேயிலை உற்பத்தி 4,26,000 ஏக்கராக ஏற்றம் கண்டது.
இப்படி இன்றைய இலங்கையின் முதன்மை உற்பத்தி தொழிலான தேயிலை உற்பத்திக்கு அடி உரமாக தமழரின் உயிரும், பாலம் கட்டுதல், இருப்புப்பாதை மற்றும் சாலைகள் அமைத்தல் என வியர்வை சொட்டுமிடமெல்லாம் தமிழரின் ரத்தம் சொட்டப் பட்டும்; உருவான ஒரு மண்ணில் இன்று சொந்த ஒரு வீட்டிற்கு கூட இடமின்றி, போதிய சுதந்திரத்தோடு வாழ தகுதியற்றுப் போனான் தமிழன் எனில்; சொல்பவரை திருப்பி யடிக்க மாட்டானா தமிழன்????
சொட்டு சொட்டாக உயிரை விட்டு விட்டு காத்து வந்த மண்ணில் தனக்கு உரிமையில்லை என்றால் இல்லை என்றவனை எட்டிச் சுடமாட்டானா தமிழன்?
உலகிற்கு நாகரீகம் போதித்து; வாழ்விற்கு அர்த்தம் சொல்லிக் கொடுத்து, ஆயிரமாயிரம் ஆண்டுக்கு முன்னரே கொடி பறக்க வாழ்ந்த இனத்தை பின்னால் வந்தவன் வெளியேறு என்றால்; வெளியேறி விடலாமா தமிழன்?
அவன் ஆத்திரம் பொங்கக் கேட்கிறான். சத்தியாவின் கேள்வியில் எழும் கோபத்திற்கு பதிலற்ற இவ்வுலகின் ஊமைப் பார்வையின் வழியே மேகநாதனும் அமைதியாய் அவனையே பார்க்க; கொடுங்கோபம் வந்தவனாய் தன் சட்டையினை வெடுக்கென தன்னிரு கைகளால் பிய்த்தெரிந்து மார்பை காட்டி பார்த்தியா!! பார்த்தியா!! என்று மார்புகளைக் காட்டிக் கத்த, மார்பில் ‘ஈழம் எம் மூச்சு, ஈழம் எம் தேசம், ஈழம் எம் லட்சியம்’ என்று பச்சை குத்தி எழுதப் பட்டிருந்தது.
மேகநாதன், சற்று அதிர்ச்சியுற்றவராகப் பார்க்க, சடாரென நான்கு பேர் அந்த அறைக்குள் நுழைந்து மேகனாதனை நோக்கிப் பாய, சத்தியன் சிரித்துக் கொண்டே தன் மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டு அங்கிருந்த மேசையின் மீதேறி அமர்ந்து ஹா ஹா என்று கொக்கரித்து அரக்கத் தனமாக சிரிக்க, அந்த நான்கு பேரில் இரண்டு பேர் உடனே பாய்ந்து மேகநாதனைப் பிடித்து ஜன்னல் கம்பிகளின் வழியே கயிறு போட்டு கட்டி விட, மற்ற இரண்டு பேர் எகுறி பாய்ந்து மேகநாதனை சதக் சதக்கென கத்தியினால் குத்தி ரத்தசகதியாக்க, சத்தியன் வானமே அதிரும் அளவிற்கு மீண்டும் சிரிக்கத் துவங்கினான்….
———————————————————————————————-
தொடரும்…
அவசர உலகில்,சரித்திரத்தை புரட்ட கூட நேரம் இல்லாத வேளையில்
இப்படி ஒரு உரையாடல் போன்ற ஆழமான, துல்லியமான தகவல் பறிமாற்றம் செய்து,
எங்களுக்கு அதை அறிந்துக்கொள்ளும் விழிப்புணர்வை கொடுத்து , எங்களை வளப்படுத்தி கொள்வதற்றுக்கு தங்களின் ஆத்மார்த்தமாக ஈடுபடும் எழுத்து பயணம் அருமை.
தங்களின் ஞானம், உற்சாகம், துடி துடிப்பு , தெளிவான சிந்தனை , ஆழமான கண்ணோடம் ,
வெகுவாக கவர்ந்து, ஆழமாக சிந்திக்க செய்கிறது. மிக்க நன்றி!
LikeLike
மிக்க நன்றி உமா. இதை, யாருமே வந்து எட்டிப் பார்க்காத வீட்டில் ஒருவரேனும் வந்து; நலமா, வீடு நன்றாக கட்டியுள்ளாய், இப்படி உள்ளது அப்படி உள்ளது என்றெல்லாம் சொல்கையில், ‘இன்னும் வேறெங்கெங்கெல்லாம் மாற்றம் தேவையென்று பார்த்தறிய; நானே என்னை சுயபரிசோதனை செய்து கொள்ளும் முகமாக, இத்தொடரினை, என் எழுத்தினை இன்னும் செம்மை படுத்திக் கொள்வதற்குத் தக்க ஆயத்த முயற்சியினை மேற்கொள்ள உதவியாக எடுத்துக் கொள்கிறேன் உமா!! மிக்க நன்றிகளும் அன்பும் உரித்தாகட்டும்!!
LikeLike
தம்பி ஒருவர் வேறு தளத்தில் கூறியது: உண்மையில் நான் அறியாத பல விடையங்களை சுருக்கமாக விளக்கமாக படிக்க கூடியதாக உள்ளது மிக்க நன்றி சார் .
அமெரிக்காவின் உருவாக்கம், தமிழரின் வியர்வையில் உருவான இடத்தில் உரிமை இல்லையா ? பிரிட்டிஷ் காரரின் போக்கு எல்லாம் அறியகூடியதாக உள்ளது.
//உரமாக தமழரின் உயிரும், பாலம் கட்டுதல், இருப்புப்பாதை மற்றும் சாலைகள் அமைத்தல் என வியர்வை சொட்டுமிடமெல்லாம் தமிழரின் ரத்தம் சொட்டப் பட்டும்; உருவான ஒரு மண்ணில் இன்று சொந்த ஒரு வீட்டிற்கு கூட இடமின்றி, போதிய சுதந்திரத்தோடு வாழ தகுதியற்றுப் போனான் தமிழன் எனில்; சொல்பவரை திருப்பி யடிக்க மாட்டானா தமிழன்????//
வித்யாசாகர் எழுதியது: மிக்க நன்றி விஜய். இன்னும் தற்போது கூட இபப்குதியில் சில மாற்றங்களை திருத்தங்களை செய்து இங்கேயே மாற்றி மறுபதிவு செய்துள்ளேன்.
சிங்கள உருவாக்கம் புரிந்தால் தான் அவர்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் இவர்கள்’ என்று காட்ட மகாவம்ச கதை உதவியாக இருந்தது.
அதையும் சேர்த்து சற்று மாற்றம் செய்துள்ளேன். உங்களைப் போன்றோரின் கருத்துக்கள் மேலும் என்னை செம்மை படுத்துவதாக உணர்கிறேன் விஜய்.. மிக்க நன்றியுடன்!!
LikeLike
Pingback: கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 9) | வித்யாசாகரின் எழுத்து பயணம்
Pingback: கொழும்பு வழியே ஒரு பயணம்.. (தொடர் கதை - 9) - வித்யாசாகர்!! | மீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்
//சொட்டு சொட்டாக உயிரை விட்டு விட்டு காத்து வந்த மண்ணில் தனக்கு உரிமையில்லை என்றால் இல்லை என்றவனை எட்டிச் சுடமாட்டானா தமிழன்?//
பழைய சரித்திரத்தை புரட்டிப் பார்த்ததட்க்கு நிகரான சிறந்த ஒரு கதையாக அமைந்துள்ளது. தெரியாத பல விடயங்களை அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி.
LikeLike
நம் சரித்திரம் தெரியாத ஒற்றை குறைதான் நம் இனத்திற்குள் எழும் சில பிளவிற்கும் காரணமென்று உணர்ந்த உணர்வின் தொகுப்பிது, சரியாக பரிமாறப் பட்டிருக்குமெனில் மகிழ்ச்சியே நளாயினி!!
LikeLike