“கோ” திரைப்படம் பற்றிய ஒரு பார்வை – வித்யாசாகர்!!

 

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்
திருவள்ளுவர்!

ந்த ஏழு சீர், இரண்டு அடியில் ஐயா திருவள்ளுவர் இரண்டாயிரம் வருடத்திற்கு முன் சொன்ன செய்திதான் “கோ” எனும் இப்படம் இறுதியாய் சொல்ல வரும் நீதியும்.

அந்த நீதியினை வழங்குவதற்குமுன் மக்களை மக்களோடுப் பின்னி; மக்களை சார்ந்த தொண்டர்களை காட்டி; தொண்டனின் தலைவன் செய்யும் அரசியலை ஒவ்வொரு இளைஞனும் கையிலெடுத்து இத்தேசத்தை திருத்தி ஆளும் தலைவனாக வாழ்ந்தாலென்ன?’ என்று மறைமுகமாய் கேட்கும் ‘ஒரு நல்ல தலைவனை தேடும் படம் இந்த “கோ”.

தலைவனை தலைவராக்கி, தலைவரை தலைவா என்று மெச்சிக்கொண்ட நமக்கு; வெளி உலகிற்கு தெரியாத ஒரு போலித் தலைவனை, மெய்யிலா தியாகியை, கதாபாத்திரங்களுக்குக் காட்டாமல் மக்கள் முன் தோலுரித்து காட்டிய படம் “கோ”. (கோ’ எனில் தலைவன் என்று அர்த்தம்)

ஒவ்வொருவரும் தன் மகன் மருத்துவனாவனா உயர் அதிகாரியாவனா நல்ல பொறியாளராக வருவானா என்று எதிர் பார்க்கிறோமே யொழிய தன் மகன் ஏன் நாட்டை, நாட்டு மக்களை வளப் படுத்தும் நல்ல முதலமைச்சராக வரக்கூடாது, ஏன் ஒரு நல்ல பிரதமாரக வரக் கூடாது என்று நாமெல்லாம் நினைப்பதில்லையே? அப்படி நினைக்க வேண்டும் என்கிறது இந்த ‘கோ’ எனும் நல்ல திரைப்  படம்.

நான் கூட இதைத் தான் பத்து வருடத்திற்கு முன்பு என் “திறக்கப் பட்ட கதவு” என்னும் ஒரு குறுநாவலில் ஐந்து நண்பர்களை வைத்து அரசியலுக்கு வருவது பற்றி சிந்திக்கும்; திட்டமிட்டுக் கொள்ளும் இளைஞர்களை காட்டி ஒரு கதை எழுதினேன். என் காதல் புத்தகம் விற்றளவு கூட அந்த “திறக்கப் பட்ட கதவு” விற்கவில்லை, என்பது மிக வருத்தமாக இருந்தது.

இருபத்தியெட்டு வயது இளைஞன் நம் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்கும் ஒரு காட்சி’ இப்படத்தில் இறுதியாக வருகிறது. மனதிற்குள் ஆயிரம் விளக்கேற்றி மகிழும் சந்தோச பூ மலரச் செய்தது அந்த காட்சி என்பது உண்மை. என் “திறக்கப் பட்ட கதவு” நூல் விற்பனையாகிவிடாதக் குறை; பத்து வருடங்கள் கழித்து அந்த ஒரு காட்சியினை கண்டதில் தீர்ந்துப் போனது.

மிக திறமையான ஒளிப்பதிவு, அதிக குற்றம் தெரிந்திடாத இயக்கம், உணர்வு ததும்பும் நல்ல பின்னணி இசை, திகட்டாத நடிப்பென; நுழைவு சீட்டிற்கு கொடுத்த பணம் ஜீரணித்துத் தான் போகிறது. இருப்பினும்,  இடைவேளைக்குப் பின் வரும் அந்த இரண்டுப் பாடல்களையும் ‘எழுதப் படாத சட்டங்களை கருதி’ வைக்காமல் நீக்கி இருந்திருந்தால் படத்தின் விறுவிறுப்பு குறையாமல் இன்னும் சற்று கூடுதல் தரத்திற்குரிய புரட்சிகரமான படைப்பாக “கோ” இருந்திருக்கும்.

பாடல்களில் வரும் காட்சிகள், இடம் தேர்வு செய்து அழகாக அமைத்த நடனம், அவைகளை அழகாக படம் பிடித்த ஒளிப்பதிவின் திறத்தில் அப்பாடல்கள் மிளிர்ந்தாலும்; என்னதான் எத்தனை அழகென்றாலும் ஒரு இடை சொருகலாக மட்டுமே வருதிருக்கிறதந்த பாடல்கள் என்பது படம் பார்ப்பவர்களுக்குப் புரியாமலில்லை. ஒருவேளை, இடம் மாற்றி வைத்திருந்தால் இன்னும் சிறந்திருக்கலாம்.

கடைசி காட்சிக்கு முன் நெக்ஷளைட் தீவிரவாதியான கதிருக்கு மருத்துவர் ஒரு ஊசியை போட்டுவிட்டு சிரஞ்சியை அருகில் வைக்க, அந்த சிரஞ்சியிலிருந்து சொட்டிய ஒற்றைச் சொட்டு மருந்தின் ஜாலத்தை கூட அழகாக காட்சி படுத்தியிருக்கும் விதமும் அதன் அசைவுகளின் சப்தத்தை கூட இசையால் அடையாளப் படுத்தியதும்போன்ற பல தருணங்கள் இசையமைப்பினையும் ஒளிப் பதிவையும் மெச்சிக் கொள்ளச் செய்கின்றன.

அஸ்வினாக வரும் ஜீவா ‘வீடு பற்றி எரியும் கோபத்தை கூட, புன்னகை வீசும் முகத்தால், இணக்கமான பேசினால் மாற்றி விடலாம்’ என்பதை நிரூபிக்கும் சில காட்சிகளில் யதார்த்தம் பிசகாமல் நன்றாக நடித்திருக்கிறார்.

ராதா தன்னை மீண்டும் திரைத்துறையில் மறுபதிவு செய்துக்கொண்டது போன்று எண்ணவைக்கும் ஓர் மலர்ந்த முகத்தைக் காட்டுகிறார்; அவரின் மகளாகிய கதாநாயகி கார்த்திகா. மிக ஒய்யாரமான அழகு தான். அடர்த்தி மிகு வளைவுகளை கொண்ட இன்னொரு மீன்போன்ற கண்ணும், நெட்டை நாட்டியமும், குறையறியா நடிப்புமாய்; வெள்ளை ஆடையில் வந்த வெண்கல தேவதையாக மனதை கில்லாமல் கவர்ந்துச் செல்கிறார்.

வசந்தாக வரும் அஜ்மல், வசந்த் நண்பர்களாகிய சிறகுகளின் குழுமம், ஜீவாவாகிய அஸ்வின், கதாநாயகியான கார்த்திகா, கிருஷ் இன்னும் இப்படத்தில் வரும் இவர்களை போன்றவர்களை தேடித் தான் இத்தேசம் கைவிரித்து நிற்கிறது.

அத்தகு, ஒரு தேசத்தின் தேடல் இப்படித் தான்’ இப்படிப்  பட்ட இளைஞனை தான் தேடியிருக்கும்’ எனும் கணிப்பிற்கு உரித்த நாயகர்களாகின்றனர் வசந்தும் வசந்த் சார்ந்த சிறகுகள் அமைப்புக் குழுவினரும். இவர்களைப் போன்று ஒரு இளைஞர் படை நம் நாட்டிலும் வந்திடாதா எனும் ஏக்கத்தை வசந்த் பாத்திரத்தின் நடிப்பு குறையின்றி நம் கண் முன்னேக் காட்டுகிறது. நிச்சயம் அடுத்தடுத்த படங்களில் வசந்த் எனும் அஜ்மல் இனி இருக்கலாம். இப்படத்தின் மூலம் ஒரு பத்து இளைஞர்களாவது தன் தேசத்திற்காக புறப்படலாம்.

சோதனைகள் ஆயிரம் வந்தாலும்; அதை உடைத்தெறியும் தீயை கண்களில் கொதிக்க கொதிக்க சுமந்து திரியும் இளைய ஜோதிகளிடையே அரசியலை ஒரு சாக்கடை என்று சொல்லாமல்; அரசியலுக்கான விழிப்பினை; சரித்திரத்தை திருத்தி எழுதும் சந்தர்ப்பத்தை முன்கூட்டி காண்பித்து கடந்துவிடுகிறது படம்.

மேடைகளில் வசந்த் பேசுவதாக காட்டும் காட்சிகளில்; அசத்தலான தோற்றத்தை காட்டி நடித்திருக்கிறார், அவ் விடங்களுக்கான வசனங்களை இன்னும் கூட சேர்த்திருக்கலாம். இயக்குனரின் வித்தையில் திரைக்கதை எழுதிய பக்கங்கள் சில ஒதுக்கப் பட்டிருக்கலாம் என்றொரு சந்தேகம் கூர்ந்து கவனிக்கையில் எழுகிறது. இருந்தாலும், அதை ஒட்டுமொத்தப் பேரின் நடிப்பும், இசையும், ஒளிப்பதிவும் தூக்கி மறைத்து விட்டு கதையில் நம்மை மூழ்கடித்து தன் படத்திற்கான காரணத்தை தேவையை மிக அழகாக சொல்கிறது “கோ” எனுமிந்த திரைப்படம்.

சரோவை, அஸ்வின் கொஞ்சும் காட்சிகளும், கதாநாயகி கார்த்திகாவிடம் அஸ்வின் காதலால் உருகும் இடமும், கண்களால் அவள் பேசும் அழகும் திரைப்படத்தின் இடையே, ‘இன்றைய சமரச நட்பு நிறைந்து பழகும் இளைஞர்களின் நட்பையும், காலத்திற்கும் திகட்டாத காதலின் முகங்களையும் அழகாகவும் உருக்கமாகவும் காட்டுகிறது.

யாரோ ஜெயித்தாலும் கூடி சிரித்து; கொல்லப் பட்டாலும் இறந்ததாய் நம்பி; இறந்து போனவனுக்கு சிலை வைத்தாலும் தியாகியென வணங்கி; இன்னும் அப்பாவித் தனமாகவே நம் நம்பிக்கையையும் உரிமைகளையும் சுதந்திரத்தையும்; நம் நாட்டுப் போலிகளை நம்பி நம்பியே வீணடிக்கிறோம் என்பதையும் மறைமுகமாய் உணர்த்துகிறது “கோ”.

எரிய திராணியே இல்லாத விளக்காக இருந்தும், ஊருக்கே வெளிச்சம் காட்டுவதாய் என்னும் சில அரசியல்வாதிகளின் முகங்களை உடைத்தெறியத் துணிந்ததோடு நில்லாமல்; இப்படித் தான் இருக்கிறோம் நாம், இப்படித்தான் நடக்கிறது நம் அரசு, இப்படித் தான் நடத்துகிறார்கள் நம் அரசியல் வாதிகள் நம்மையும் மற்றும் நம் காவல் துறையினையும் என்பதை நமக்கும் காவலாளிகளுக்கும் ஏன் அரசியல்வாதிகளுக்குமே கூட; வலிக்காமல் உரைக்க வைத்திருக்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த்

தன்னால் இயன்றதையேனும் என் மக்களுக்காகவும் என் தேசத்திற்காகவும் செய்கிறேனே என்பவர்களின் முகத்தையும் காட்டத் தவறவில்லை இந்த “கோ”. அதேநேரேம், இன்றும் ரத்தம் கொதிக்க, நரம்பு புடைக்க சமூகத்தின் அவலம் காணும் போதெல்லாம் பொங்கி எழுந்து, மக்களின் சேவைக்கென மறைமுகமாய் உழைத்துக் கொண்டிருக்கும், உலக பார்வைக்கு வராத பல ஆக்கப் பூர்வமான இளைஞர்களை, யுவதிகளை, பெருமைக்குரிய மனிதர்களை இப்படம் காட்சிகளின் ஊடே தரமாக காண்பிக்கிறது.

இரவு நெருப்பில் அணையும் தீபங்களின் விலை, இவ்வளவு என்று’ சரோ விபச்சாரிகள் குறித்த விவரங்களை சொல்ல; அஸ்வின் அப்படியா என்று கிண்டலடித்து சிரிக்க, சரி அதை விடு எனக்கு எவ்வளவு விலை தரலாம் சொல்’ என்று கேட்க, அஸ்வின் அவளை அளந்து பார்த்துவிட்டு இவ்வளவென்று சொல்ல, அவள் இவ்வளவு தானா என்று சிணுங்கிக் கொண்டே ‘சரி இவளுக்கு எவ்வளவு தரலாம் என்று கதாநாயகியை காட்டிக் கேட்க’ அவன் அவளையும் அளந்துப் பார்த்துவிட்டு இன்னதென்று சொல்வதாக அமைந்த காட்சி யொன்று சற்று வளர்ச்சியின் விரசமாக தெரிந்தாலும் –

ஒரு ஆணும் பெண்ணும் அப்படி பேசுமளவும், அங்ஙனம் பேசிக் கொண்டாலும் தங்களுக்குள் எந்த காமப் பார்வையின் கொடூர நகங்களையும் பதித்துவிடாமலும், ஆண் என்பவன் பெண்ணை நம்பி, பெண் என்பவள் ஆணை நம்பி, நட்பு ததும்பி நிற்கும் அந்த காட்சிகள்; நம் இளையசமுதாயத்தினருடனான ஒற்றுமையினையும் பரஸ்பர புரிதலையும் காட்டுவதோடு மட்டுமல்லாமல், நாளைய நம் தலைமுறையின் சமரசத்தை நம் சந்தேகப் பார்வையினால் மறைத்துக் கொண்டு; அவர்களை தன் வசத்திற்கே மீண்டும் மீண்டும் வளர்க்க வேண்டாமே’ எனும் தெளிவையும் இப்படம் காட்டுகிறது.

என்னதான் இருந்தாலும்; ரொம்ப பெருசாக மெச்சிக் கொள்ளும் படமோ, பேச வேண்டிய பிரம்மிப்போ இல்லை என்று சிலர் இப்படத்தை பற்றிப் பேசிக் கொண்டாலும், நாளைய சரித்திரத்தை மாற்றி எழுதப் போகும் பொறி இப்படத்திலும் இருக்கிறது.

அந்த கிருஷ் எனும் பாத்திரம் அந்த சூழ்சுமம் புரிந்து; தமிழ்நாடே மெச்ச வேண்டிய இளைஞனை நான் மட்டும் மெச்சுகிறேன் என்று சொல்லி முடியும் இடத்தில்; எனக்கு நம் தேசத்தின் அதுபோன்ற எண்ணற்ற இளைய சமுதாயத்தினரின் முகம் அப்பட்டமாய் தெரிந்தது.

ஒரு பெரிய புரட்சிகரமான கதையை;  மிக யதார்த்தமான திரைப்பட பாணியில் சொல்ல முயன்ற இயக்குனருக்கு, அதற்கு பலம் சேர்த்த  இசையமைப்பாளருக்கு, ஒளிப்பதிவாளருக்கு, அவர்களின் வெற்றியை முழுதுமாக தன் நடிப்பினால் பெற்றுத் தந்த ஜீவா, அஜ்மல், கார்த்திகா மற்றும் சரோ, கிருஷ், கதிராக வரும் பாத்திரங்களும், சமூக அமைப்பான சிறகுகளின் உறவுகளும், பிரகாஸ் ராஜ்  போன்ற இன்னும் நிறைய பேர் மட்டுமின்றி திரைக்குப் பின்னின்று உழைத்தவர்கள் அனைவருக்குமே படத்தின் நுழைவுச் சீட்டினை தூக்கி வீசியதோடு நின்றுவிடாமல் மனதார ஓர் நன்றியையும் சொல்வோம்.

காரணம், இப்படத்தின் மூலக் கருத்து நம் தேசத்து ஒட்டுமொத்த மனிதர்களுக்கும் புரியவேண்டும். அரசியலுக்காக இளைஞர்கள் படிக்கவேண்டும். நானொரு முதலமைச்சராகி பிரதமராகி என் தேசத்தை உலகம் மெச்ச உருவாக்கிக் காட்டுவேன் என்று இளைய சமுதாயத்தினர் சபதம் ஏற்கவேண்டும். நம் தொகுதி வேட்பாளராகவாவது இளைஞர்கள் தன் ஒட்டுமொத்த அரசியல் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.

மெல்ல மெல்ல நகர்ந்து தவறுகளின், சமூக அவலங்களின் ஆணிவேர் வரை ஊடுருவி அவைகளை கற்றையாகப் பிடுங்கி யெறிய வேண்டுமெனில் அரசியல் நமக்கு சரியாக புரியவேண்டும். அரசியல் வாதிகளை நமக்குள்ளிருந்து சரியாக நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு அரசியலை நாம் முறையாக கற்க வேண்டும். அரசியல் குறித்த நம் பங்கினை ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் தெரிந்துக் கொள்ளவேணும் வேண்டும்.

எனக்கு நம்பிக்கை இருக்கிறது, இந்த இளைஞர்கள் பக்குவப் பட்டவர்கள். இனி வரும் காலங்களில் இவர்களால் இன்னும்  ஒரு நல்ல சமுதாயத்திற்குரிய, மனிதர்களை இவர்கள் பெற்றுத் தருவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. நாளைய சமுதாயம் நாளைய மனிதர்களால் எழுச்சிக் கொள்ள இன்றைய இளைய சமுதாயம் நல்ல விதையாக தம்மை தூவிக் கொள்ளுமென்று நான் நம்புகிறேன்.

அந்த நம்பிக்கையினை வலுப்படுத்த இதுபோன்ற திரைப்படங்களின் ஊடாக உணர்த்தப் படும் உணர்வுகள்; கலையினை என்றும் தமிழர்கள் மதிப்பதன் காரணமென்றுக் கருதி, இன்னும் பிற நாட்களின் நம் வளர்ச்சிக்கு நம் தமிழர் பண்பும், மொழியின் வளமும் அதொத்த காதலும், காதலினால் பாகுபாடற்ற தன்மையும் நமக்குள் நிறைந்து நமக்கு துணை நிற்குமென்று நம்பி; அந்த காதலின் மென்மை குறையாது நம் வாழ்தலைப் பற்றிப் பேசும் இதுபோன்ற திரைப் படங்களுக்கு; திரைப்படத்தில் அளவுக்கதிகமாக நாம் நம் நாட்டத்தை செலுத்திவிட்ட காரணத்தினால் நன்றியினை தெரிவிப்போம்!!
————————————————————————————————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in திரை மொழி and tagged , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to “கோ” திரைப்படம் பற்றிய ஒரு பார்வை – வித்யாசாகர்!!

  1. மனோஜ் சொல்கிறார்:

    நேர்த்தியான….சினிமாத்தனம் இல்லாத புரட்சிமுகத்தை மட்டும் உரித்து காட்டிய உங்கள் விசாலமான விமர்சனம் அருமை… 🙂

    Like

  2. மனோஜ் சொல்கிறார்:

    நேர்த்தியான….சினிமாத்தனம் இல்லாத புரட்சிமுகத்தை, தெளிவாக உரித்து காட்டிய உங்கள் விசாலமான விமர்சனம் அருமை… 🙂

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி மனோஜ், உலக இசைவுகளுக்கு வேறு வழியின்றி ஒத்துப் போய்; அதன் பின்னும் அதற்குள்ளிருந்து தான் சொல்ல வந்ததை சொல்லத் துடிக்கும் இயக்குனர், எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர்களின் உலக; சமூக வேட்கையினை அடையாளம் கண்டு அதன் மீதியினை தன் உறவுகளோடு பகிர்ந்துக் கொள்வதாக மட்டுமே என் எண்ணம் இருந்தது. அதற்கு பலம் சேர்க்கும் உங்களின் கருத்திற்கும் நன்றி மனோஜ்!!

      Like

  3. வித்யாசாகர் சொல்கிறார்:

    //முருகன் அருள் எழுதியது: நண்பர் வித்யா சாகர் நீங்கள் ஒரு எழுத்தாளனா என்பது எனக்கு சந்தேகம் உள்ளது .எழுத்தாளன் என்பவன் ஒரு கதையை விமர்சனம் பண்ணும போது அதன் நிறைகளை பற்றியே விமர்சிக்க கூடாது .அவற்றில் உள்ள குறைகளையும் விமர்சனம் பண்ணனும்.

    இந்த படம் ஒரு வெற்றி படம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. மக்கள் விரும்பும் அனைத்தும் மிக சாதுரியமாக கலந்து இருக்கு. ஆனால் இந்த கதையின் நோக்கம் வாழை பலத்தில் விஷம் தடவி மக்களுக்கு கொடுத்து உள்ளதை போன்று அமைந்திருக்கிறது. மொத்தத்தில் மக்களை முட்டாளாக்க பார்த்துள்ளார்கள்.

    தாத்தாவுக்கு உள்ள நயவஞ்சக மூளையை பேரன் மிக சாதுரியமாக கையாண்டு உள்ளார்.

    எத்தனை நயவஞ்சகம் எப்பப்பா என் தாய் தமிழ் உறவுகளை எப்படியெல்லாம் திசை திருப்பும் செயலை செய்கிறார்கள் .இது தெரியாமல் படித்த அறிவாளிகள் இதற்க்கு வரிந்து கட்டிக்கொண்டு வாழ்த்து பாடுகிறேர்கள் .அழுவதா .சிரிப்பதா ?//

    வித்யாசாகர் எழுதியது:- திரு. முருகன் அருள், இது படத்தை பற்றிய எனது பார்வை மட்டுமே. இதில்; குறைகளை வாரி இறைத்து ஒரு படைப்பினை, பலரின் உழைப்பினை தாழ்த்துவது அவசியமெனில், அதை எழுத வேண்டிய அவசியமே இல்லை.

    முதலில், இது படத்திற்கான விளம்பரமும் அல்ல, எல்லோரும் சென்று படத்தை பாருங்கள் என்றெல்லாம் அழைக்கும் நோக்கத்தில் எழுதியதில்லை. மாறாக இடை இடையே மறைமுகமாக குறைகளை சுட்டிக் காட்டியும் உள்ளேன். அரசியல்சார் ஓர் அறிவினை யொத்து எல்லோரும் சிந்திப்போம், அதற்கென தன் தலைமுறையினை தயார்படுத்துவோம் என்று அழைக்க இப்படம் எனக்கொரு களனாக இருந்தது அவ்வளவே.

    மற்றபடி தன்னை எழுத்தாளனாகவோ அல்லது யாருக்கேனும் பரிந்தோ எல்லாம் இதை இத்தனை மெனக்கெட்டு செய்திடவில்லை என்பதை தங்களின் தெரிவிற்கென தெரிவிக்கிறேன்.

    ஓரிடத்தில் பிரகாஷ் ராஜ் நடித்துள்ள கதாப்பாத்தித்தின்மூலம்; அவர்களின் ஆட்சியை அவர்கள் சரியெனக் காண்பித்துக் கொள்ள, தன்னை நியாயப் படுத்திக் கொள்ள; தெருவில் இறங்கி நடப்பதையும் அதற்கு பின்னான வசனத்தையும் கூட கவனிக்க, உணர தவறவில்லை, என்றாலும், அதை எடுத்துக் காட்டத் தக்க அவசியம் ‘நான் இந்த திரைப்படம் குறித்த கட்டுரையை எழுதியதற்கான நோக்கத்திற்கு பயன்பட்டிருக்கவில்லை திரு.முருகன்.

    என் நோக்கம் குறைகளை காட்டுவது அல்ல; (அதை நிறைய பேர் செய்கிறார்கள்) நிறைகளை எடுத்தியம்பி இப்படிப் பட்டவன் நீ, இன்னும் இப்படி செய்து பார் என்று கூறி மேல்கொண்டு வருவதும், மேல் வருகையில் தவறுகளையும் திருத்திக் கொள்வர்; அவரே, என்பதும் நோக்கமாக இருந்தது.

    இருப்பினும் இந்த கருத்துப் பகிர்வினை இங்கு என் வலைதளத்திலும் பகிர்ந்து வைக்கிறேன். இவ்விமர்சனத்தை படிப்போர் அதையும், அந்த அரசியல் தந்திரம் கொஞ்சம் கைகொள்ளப் பட்டுள்ளதையும் தெரிந்துக் கொள்வர். மிக்க நன்றி தங்களின் நேர்பட கூரிய மறுபக்க கருத்திற்கு, நேரம் கிடைக்கையில் இதர பைப்பின் தவறுகளையும் குறைகளையும் கூட சுட்டிக் காட்டுங்கள்; சரியெனில் திருத்திக் கொள்வோம் திரு. முருகன் அருள்!!

    Like

  4. dasin சொல்கிறார்:

    உங்கள் விமர்சனம் அருமை…

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி உங்களின் கருத்துப் பதிந்தமைக்கு. இந்த படத்தின் சூழ்ச்சி என்னவாக இருக்குமோ; எனக்கு அரசியல் சார்ந்த தவறுகளை சுட்டிக் காட்டும் படமாகவும்; அதை எதிர்த்து இளைஞர்களை அரசியலுக்கு வரவைத்துவிடும் எண்ணமாகவும் மட்டுமே எண்ணத்த தோன்றியது தசின்!!

      Like

  5. வித்யாசாகர் சொல்கிறார்:

    //முருகன் அருள் எழுதியது: மன்னிக்கவும் நண்பா .உங்களை குறை கூறவேண்டும் என்பது என் நோக்கம் கிடையாது .ஆனால் இந்த படம் ஒரு அரசியல் உல் நோக்கம் கொண்ட கதை .குறிப்பாக ஈழப்போராட்டத்தை மறைமுகமாக இழிவு படுத்தும் செயலையும் ,சீமானை தவறானவர் என்ற கருத்தையும் முன் வைத்தே சாடையாக கதை அமைத்துள்ளார்கள் .இது தமிழ் உணர்வாலனுக்கு மட்டுமே புரியும் கதையின் நோக்கம் .ஆகவேதான் உங்கள் விமர்சனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தேன்//

    வித்யாசாகர் எழுதியது: தவறில்லை திரு. முருகன். உங்களின் கருத்தினை நீங்கள் நேரிடையாக பகிர்ந்துக் கொண்டுள்ளீர்கள். பார்ப்போரின் பார்வைக்குத் தக்க காட்சிகளும் மாற்றுக் கருத்தோடு தெரிவது என்பது; சில காட்சிகளின் யதார்த்தம் தான்.

    அதும் இன்றைய இளைய சமுதாயத்தின் நம்பிக்கைக்குரிய தலைமை குற்றம் சாட்டப் பட்டுவிடக்கூடாது என்பதான தங்களின் முனைவு; நன்றிக்கும் உரியது. நாங்களும் வசந்தாக நடித்த அஜ்மலை தரமாக காட்டும் வரை அண்ணன் சீமான் அவர்களை, அப்படி ஒரு புரட்சிகரமான அமைப்பை நினைவுற்றோம், மாறாக தவறாக காட்டிய காட்சிகளின் நொடியில் அவர், ‘தானே அங்கிருந்து அகன்றுக் கொண்டார், தவறு செய்தது ஒரு அரசியல் தலைவன், அவனை நம்பி ஏமாறுகிறோமே என்ற வருத்தம் மட்டுமே உள்புகுந்தது!!

    Like

  6. பவள சங்கரி சொல்கிறார்:

    அன்பின் திரு வித்யாசாகர்,

    ஒரு திரை விமர்சனம் கூட ஒரு காவியம் ஆக முடியும் என்பதனை தங்கள் இந்த இடுகையைக் கண்ட பின்பே உணர்ந்து கொண்டேன்……..உயிரோட்டமுள்ள ஒரு கட்டுரையாக்கியுள்ளீர்கள். அரசியல் ஒரு சாக்கடை என்று காத தூரம் ஓடுபவர்களில் அடியேனும் ஒருத்தியாக இருப்பினும், பூனைக்கு யாரேனும் மணி கட்டித் தானே ஆக வேண்டும். அந்த வகையில் தங்களுடைய இந்த விமர்சனம் கட்டாயமாக இளைஞர்கள் மத்தியில் ஒரு எழுச்சியை ஏற்படுத்த வேண்டும். கட்டாயம் ஏற்படுத்தும். என்ற நம்பிக்கையும் வருகிறது. வாழ்த்துக்கள். பகிர்விற்கு நன்றி.

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      என் எண்ணத்தினை முழுமையாகப் புரிந்துக் கொண்ட தங்களின் கருத்தளிப்பிற்கு மிக்க நன்றியானேன். என் எண்ணம், மூன்று மணி நேரத்தையும் நுழைவுச் சீட்டின் பணத்தையும் வீணடித்து; பொழுதினை வீணே போக்கியதாக இருக்கக் கூடாது. கலை என்பது பொழுதுபோக்கிற்காக மட்டுமல்ல அல்ல; பொழுதினை நமக்கென்று ஆக்குவதற்காக, ஆக்கப் பூர்வமாக தன்னை ஒவ்வொருவரும் மாற்றிக் கொள்வதற்காகவும் என்பதனை மறுபதிவு செய்யும் எண்ணம் எனக்கு ஒவ்வொரு திரைபப்டத்திற்கென சென்று அமரும் போதும் வரும். அப்படிப்பட்ட கலையின் வளர்ச்சியின் ஒரு அங்கமாக உருவானதே ‘திரைப்படக் கலையும் எனில், அது நம் உறவுகளுக்குப் பயன்பட்டதாக இருத்தல் வேண்டாமா?

      அத்தனை முழுமையாக; வரும் அனைத்து திரைப்படங்களும் இல்லை என்றாலும், இதுபோன்று வரும் ஓரிரு படங்களை ஊக்குவித்தேனும் சமூகம் சார்ந்த சிந்தனைக்கு, நம் மக்கள் சார்ந்த சிந்தனைக்கு இத்துரைகளை ஆர்வப் படுத்தி உள்ளிழுக்கும் முயற்சியாகவே என் இதுபோன்ற திரைப்பட விமர்சனங்கள் அமைய வேண்டுமென எண்ணுகிறேன். நாலுபேர் அரைகுறை ஆடையில் அலைய, அதன் பின்னே நாலு பேர் ஓடுவதால் தானே திரைத்துறை ஜாம்பவான்கள் கூட மக்கள் ரசனைக்கேற்ப படம் செய்கிறோம் என்கிறார்கள். நாம் நாலு பேர் திரும்பி நிற்போம். நமக்கான திரைப்படங்கள் நம் முன்னேற்றத்தையும் நமக்கான ஆரோக்கியமான சிந்தனையினை வலுப்படுத்தும் திரைப்படங்களாக இருக்கட்டும். பொழுதினை வெறுமனே போக்கும் படைப்புக்கள் அல்ல தமிழனது என்பதனை உலக அரங்குதனில் மெய்ப்பிப்போம்.

      இன்றைய நிலையில், திரைத் துறை ஊடகம் மக்களின் மத்தியில் ஒரு முக்கிய அங்கமாகவே இயங்கி வருகிறது. அது உண்மையில் மக்களுக்காக இயங்குகிறது எனில்; அல்லது வியாபாரமே என்றாலும் ‘மக்களை சார்ந்து இயங்குகிறது எனில்; மக்களை மாற்றி அதன் இயக்கத்தை மாற்றுவதன் மூலம், நல்ல சிந்தனைகளை; வேகமாக, நேரிடையாக, காட்சிகளின் ஊடே பதியவைக்கும் பலம் பொருந்திய படங்களுக்கான விதையினையும் நாமே தூவிச் செல்வோம்!!

      இச் சமூகத்தின் நல்மாற்றத்திற்கென, இயன்றதை, இயன்றவகையில், எல்லாம் பக்கமும் செய்ய முயற்சிப்போம்.

      மிக்க நன்றியும் வணக்கமும்!!

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s