தேசம் நமக்காக என்ன செய்தது
என்பதைவிட தேசத்திற்காக நாம் என்ன செய்தோம்?
என்றக் கேள்வியை இனி மாற்றி, நாம் தான் நம் தேசத்திடம்; தமிழராகிய எங்களுக்கு என்ன செய்தாய் என் தேசமே? என்றுக் கேட்கவேண்டும் போல்!!
அத்தனை இந்தியா மீதான தேசபக்தி நம் ரத்தத்தில் முழுதுமாய் ஊறிப் போய், வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று சொல்லச் சொல்ல உடல் சிலிர்த்துத் தான் கொள்கிறது. அசையும் அந்த மூவர்ணக் கொடிக்கு முன், பக்தியோடு நிற்கும் மனதையும் தனை மீறி கைகளை வானம் நோக்கி உயர்த்திக் கொள்ளும் மனநிலையிலேயுமே தமிழர்களாகிய நாம் வளர்க்கப் பட்டிருக்கிறோம்.
அங்ஙனம், உடல் சிலிர்த்து, மயிர்கால் கூச்செரிந்து, நம்மோடு சேர்ந்து, நம் உணர்வெல்லாம் நிறைந்து ‘வந்தேமாதரம்’ என்று சொன்னதோ என்னவோ; காரணம், அப்படி எண்ணுமளவிற்கு பாரத தேசத்தின் பற்றினால் உணர்வு பீறிட்டெழும் அரங்கமாக விளங்கியது குவைத்தின் அந்த “கார்மல் பள்ளிக்கூட அரங்கம்”.
சற்றேறக் குறைய பத்துக் குழந்தைகள்; காந்தியாக, நேருவாக, சுபாஷ் சந்திர போஸாக, இந்திராவாக, ஜான்சிராணி லட்சுமிபாயாக, கிருஷ்ணனாக, கண்ணகியாக, கண்ணனாக, பாரதியாராக, பாரத் மாதாவாக என்று வந்து கண்முன்னே ஜாதிமதமெனும் பாகுபாடற்ற ஒரு பாரம்பரிய ஒற்றுமையினை நிலைநிறுத்திச் சென்றார்கள். மனிதருக்கும் கடவுளுக்குமிடையே, மனிதருக்கு முழுமையாகப் புரியாமலுள்ள ஒரு சமன்பாடு அந்த மேடையில் புரியவந்தது.
என் பொதுநல பார்வை நீங்கி, சுயநல சந்தோசமாக; விழா மேடையில் ஒரு பெரிய மகிழ்ச்சியளிக்கக் கூடிய இன்னொரு நிகழ்வும் நடந்து என் கண்களை பூத்துப் போகச் செய்தது.
அந்த ஒரு நிமிட கனம் என் பிறப்பின் பயனையும்; பிள்ளையை பெற்றதன் பயனையும் அடையும் தருவாயாக இருந்தது அந்த கணம். என் பத்து புத்தகங்களை அந்த ஒரு மேடையில் வெளியிட்டதில் எத்தனை மகிழ்ந்திருப்பேனோத் தெரியவில்லை; அதைக் கடந்தும் கண்ணனாக வேடமிட்டு மேடையேறி மகன் முகில்வண்ணன் நிற்க, கூட்டம் அவனின் சிரிப்பையும் நடையையும் விளையாட்டையும் குறும்புப் பார்வையையும், செல்லம்மாவின் அலங்கரிப்பையும் பார்த்து ஓ-வென்று குரலெழுப்ப; என்ன செய்வானோ அவன் என்றிருந்த நேரம் பார்த்து ‘எல்லோருக்கும் வணக்கம்’ என்று காற்றுப் புல்லாங்குழலுக்குள் நுழைந்து வெளியே வரு-மிசையாய் வந்தது அவன் குரலும். பின் ‘ஹே…’ என்றவன் வாயில் கைவைத்துச் சிரிக்க; மக்கள் ஓ-வென்று ஆரவாரம் செய்து கைதட்டி ஆச்சார்ய விழி திறக்கச் செய்த அந்த இரண்டு வயது குழந்தைக்கு இறைவன் தந்த பேற்றினை எண்ணி உளம் குளிர்ந்துப் போனேன்.
அதன் தொடக்கமாக மற்றொரு குழந்தை கண்ணகியாக மேடையேறி வந்து சொன்ன ஒரு தொடர் வசனத்திற்கு; அரங்கத்தில் தட்டாத கைகள் கைகளேயல்ல என்று சொல்லும்விதம், ஒவ்வொரு குழந்தைகளும் வந்து, தன் பெற்றோர் அவர்களின் மீது காட்டும் அன்பினை, அக்கறையினை, மேடையில் தோலுரித்துப் போட்டனர்.
கடைசியாக – பாரத மாதா வருகிறார் என்று சொல்ல; மேடையில் அவரை தேடும் கண்களுக்கு வெற்றிடம் மட்டுமே தெரிய; பின்னே இருந்து வந்தார் பாருங்கள் பாரதமாதவாக அந்த சிறுமியொருவர்; வார்த்தையே இல்லை அந்த தருணத்தை வர்ணிக்க; காரணம் அவருக்குப் பின்னே ஐயா விட்டுக் கட்டி மஸ்தான் அவர்கள்வேறு கையை மேலே தூக்கித் தூக்கி ‘பாரத மாதாக்கி ஜெய்; ‘பாரத மாதாக்கி ஜெய்; ‘பாரத மாதாக்கி ஜெய் என்று முழங்க அந்த குழந்தை வெள்ளை சேலையில் மேடையேறி அத்தனை பிள்ளைகளுக்கு மத்தியில் சென்று நின்றதுதான் தாமதம், ஐயா பிரான்சிஸ் அவர்கள் உடனே ஒளிப் பெருக்கியினை வாங்கி “ஒரு தாய் மக்கள் நாமென்போம்; ஒன்றே எங்கள் குலமென்போம்; தலைவன் ஒருவன் தானென்போம், சமரசம் எங்கள் வாழ்வென்போம்” என்று பாட;
சிறப்பு அழைப்பினை ஏற்று வந்திருந்த இந்திய தூதரிலிருந்து, தமிழகத்திலிருந்து வந்திருந்த லயோலா கல்லுரி முனைவர் சாரோன், இயக்குனர் தம்பி ராமையா, நடிகர் கலைவாணி புகழ் ‘விமல்’ வரை, இதர குவைத்தின் சிறப்பு விருந்தினர்கள் அத்தனைப் பேரும் எழுந்து நின்று ஒட்டுமொத்த இந்தியராய் சிலிர்த்துப் போனார்கள்.
அப்போது தான் எனக்குத் தோன்றியது இத்தனை தேசப் பற்றோடு; ஒவ்வொரு முறை ‘இந்தியா’ எனும் போதெல்லாம்; கத்தி ஆரவாரமிட்டு ‘இதிய தூதர் மேடையேறிப் பேசிய ஒவ்வொரு வரிக்கும் கைதட்டி, நம்மை இத்தனை ஆழமாக பற்றுக் கொள்ளும் இந்தியர் ஆக்கியதன் முயற்சியில் தான்; ‘தமிழர் இன ஒற்றுமையும், தமிழர் சார்ந்த பற்றும் மறைக்கவோ மறக்கவோப் பட்டிருக்கிறது‘ என்று.
அப்போது மீண்டும் நினைத்தேன்; ஏ பாரதத் தாயே!!!!! என் இந்திய தேசமே!!!!!!! இத்தனை உனக்காக கூச்சல் போடும் எம் மக்களுக்காய் என் செய்தாய் என் தேசமே? மாறாக எம் உறவுகளை கொன்று வீழ்தினாயோ??? என்று எண்ணுகையில் உள்ளே இந்திய தேசத்திற்கென உணர்வு பூண்டிருந்த நரம்புகள் ஒவ்வொன்றாய் அறுந்து, இதயத்திற்குள் ரத்தமாய் சொட்டிப் போனது.
இருப்பினும், இவைகளை கடந்து; இந்திய தூதர் திரு. அஜய் மல்கோத்ரா அவர்கள் பேசுகையில்; அவர் ஊட்டியில் படித்து வளர்ந்ததாகவும், ஒரு வயதில் பேசிய முதல்வார்த்தை அம்மா என்றும், இரண்டு வயதில் எழுதிய முதல் எழுத்து தமிழ் என்றும் அவருடைய அம்மா அடிக்கடி அவரிடம் சொல்வதாகவும் சொல்லி எல்லோரையும் பூரித்துப் போக வைத்தார்.
அது தவிர, குவைத் வாழ் மக்களின் நலனுக்கான திட்டமாக; குவைத்தில் அரசு முறை தவறி வசிக்கும் இந்தியர்களை உடனே எந்த விசாரிப்புமின்றி இரண்டு மாத காலத்திற்குள் தாயகம் அனுப்பி வைக்கும் இவ்வேளையில், அதற்கான முழு செலவையும், ஏறக்குறைய நூறு பேருக்கேனும் குறைந்தது இந்திய தூதரகம் எடுத்துக் கொள்ளும் என்று சொல்லி, மேலும் தேசப் பற்று நிறைந்த உங்களை நான் மதிக்கிறேன், ஒவ்வொரு முறை இந்திய இன்னல்களுற்றப் போதும் பெரிதாய் உதவியவர்கள் நீங்கள், உங்களுக்கு இந்நேரத்தில் எந்த உதவியையும் என்னால் இயன்றவரை செய்யக் காத்திருக்கிறேன்” என்று சொல்ல எல்லோரையும் அறியாமலே, எல்லோருக்கும் அவர் பாரத தாயின் சிறந்த குடிமகனாகவே மெச்சப் பட்டுப் போனார்.
அடுத்து வந்த சாரோன் பேசுகையில், திரைத் துறையில் உள்ளவர்கள் நம் பண்பினையும் மரபினையும் தரம் குறையாவண்ணம் காத்திடல் வேண்டும் என்பது குறித்தும், தமிழராய் நாம் தலை நிமிர்ந்திடல் வேண்டும் என்றும்; அங்ஙனம் நாம் உயர்வாக இருப்பின், தமிழர் தமிழராய் வாழ்வின், ஒற்றுமை மேலோங்கின், நமக்கான தமிழ் தேசம் மலரும், ஈழம் மலரும்’ என்று கூறி பலத்த கைதட்டல்களோடு அமர்ந்தார். அவரின் புலமை, பொருமை, நிறைகுடம் தலும்பாது எனும் நம்பிக்கைக்கு சான்றாக அவரின் கூச்சலற்ற குழப்பமற்ற பேச்சும் புன்னகையும்; சாட்சியாக நின்றது.
அடுத்து வந்த ‘கலவாணி’ திரைப்படத்தின் கதாநாயகன் விமல் அவர்கள் பேசுகையில்; அவரின் மீதான ரசிகர்களின் ஈர்ப்பை மேலும் அதிகப் படுத்திக் கொள்ளும் விதமாக மூன்று படத்தின் வெற்றிக் களிப்பின்றி, துளியும் கதாநாயகனெனும் கர்வமின்றி, எந்த அவசியமற்ற ஆரவாரமுமின்றி, மிக தன்னடக்கத்தோடும் எளிமையோடும் பேசி, பிறகு எல்லோரும் கேட்ட சில கேள்விகளுக்கு மிக பொருத்தமாக நிதானமாக சிரித்த முகத்தோடு பதிலளித்து, கூத்துப் பட்டறை பற்றியும் அவரின் குரு பற்றியும் சொல்லி;
கடைசியாக “அவரவர் செய்யும் தொழிலில் அவரவர் நல்லவராக இருந்தால் போதும்; அந்த தொழிலில் அவர் நிச்சயம் நட்சத்திரம் போல் மின்னுவாரென்று” அவர் குரு அவருக்குச் சொல்லிக் கொடுத்ததை நமக்கும் நட்போடு பகிர்ந்து; பின், அவரும் அங்ஙனம் இருக்க முயல்வதாகவும்; நீங்களும் அங்ஙனம் இருக்க முயலுங்கள் என்றும் ‘ஒரு உயர்ந்த எண்ணத்தின் விதையினை எல்லோர் மனத்தினிலும் மிக லாவகமாக தூவி அதேநேரம், மிக இயல்பாக ‘நான் நல்லவனாக இருக்க முயன்றதால் தான் இன்று நான் நன்றாக இருக்கிறேன், நீங்களும் முயலுங்கள் நன்றாக வருவீர்கள் என்று சொல்லியமர –
அந்த வாய் இன்னும்கொஞ்சம் ஏதேனும் பேசிடாதா, அந்த முகத்தை இன்னும் கொஞ்ச நேரத்திற்கு கண்டுக் கொண்டே இருக்க மாட்டோமா என்றொரு ஆசை எல்லோருக்குள்ளுமே வரத் துவங்கியது.
அடுத்து வந்த இந்திரலோகத்தில் நா. அழகப்பன் திரைப்படத்தின் இயக்குனர் தம்பி ராமையா பேச வந்தபோது – வருத்தம் எல்லோருக்குள்ளும் உண்டு, அவைகளை கடந்து சிரிக்க முயல்வோம் என்று சொல்லி சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார். இருபது வருட உழைப்பே எனை உங்கள் முன் கொண்டு வந்து நிற்க வைத்துள்ளது, நீங்களும் உழைத்தால் வெற்றி உண்களுக்கும் நிச்சயம் உண்டு என்று கூறியதோடு நில்லாமல் –
திரை துறை என்றாலே; எல்லோரையும் தவறாக பார்க்கும் பார்வையை நீங்கள் எல்லோரும் மாற்றிக் கொள்ளவேண்டும், காரணம் உங்களில் அதிகம் பேர் எண்ணுவது போல திரைத்துறையில் உள்ள மொத்த பேருமே தவறல்ல.
இந்த இருபது வருடத்தில் நான் சந்திக்காத பிரபலங்களோ; அழகிய பெண் நட்சத்திரங்களோ அல்ல; ஆயினும் என் மனைவியைத் தவிர இதுவரை யாரையும் நான் தொட்டது கூட கிடையாது’ என்று கூறி எல்லோரையும் நெகிழவும், அதோடு நல்ல நோக்கு கொள்ளவும் செய்தார். ஆக, அவரின் வெள்ளை மனசும் அவரின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணமென்பது மேடையின் கீழ் அமர்ந்து அவர் பேசக் கேட்ட எங்களுக்கு நன்றாகவே புரிந்தது.
இடையே விழா நடத்தும் ‘குவைத் தமிழோசைக்கு‘ கொடையளித்து வெற்றிக்குப் பின் நின்ற முதன்மை கொடையாளி TVS கார்கோ நிறுவனர் பேசுகையில், அம்பானி உருவான கதையும், அவரின் உழைப்பும் நேர்த்தியான பார்வையும் சிந்தனையுமே அவரை உலக பார்வையில் அம்பாணியாக்கி நிறுத்தியது என்றும், நாமும் முயற்சித்தால், நல்லவர்களாக நம்மை நாம் செம்மைப் படுத்திக் கொண்டால்; நாமும் வல்லவர்களாக திகழலாம் வையகத்தில் என்றும் தனது அனுபவ பாடத்தை வந்தோருக்கு அளிக்கும் ஆர்வததோடு பேசி அமர்ந்தார். அவரின் நல்ல மனசும், உண்மையை மறைக்காது நடக்கும் நல்நடத்தையும், கடவுளின் மீது கொண்ட பற்றும் தான் அவரை இத்தனை பெரிய கொடையாளி ஆக்கியதென்பதற்கு அவர் பேச்சும் ஒரு சான்றாக அவருக்கு; மேடையிலும் துணை நின்றது.
தவிர, விழா நடந்த விதம் என்பது, நம்மை கலைகளினால் மெய்மறக்க செய்ததென்பது இரண்டாம் பட்சமென்றேக் கூறலாம் போல். காரணம், அத்தகு, வெளிநாட்டில் தான் வசிக்கிறோமா, வெளிநாட்டில் தான் நம் தமிழன் இத்தனை செய்கிறானா என்று எண்ணுமாறு தன் அமைவுகளை பண்பு மாறாமல் செய்து காட்டியதிந்த “ஐம்பெருங்காப்பிய விழா எடுத்த இவ்வமைப்பு.
ஆரம்பிக்கையிலேயே, வாசலில் இனிப்பும் சந்தனமும் விபூதியும் கொடுத்து இரு கவிதாயினிகள் அழகிய சேலையில் நின்று வரவேற்க, மேடைக்கு வந்ததும் குத்துவிளக்கேற்றி, பாரதனாட்டியத்தோடு விழா துவங்க, பின் சிறார்களின் நடனத்தோடும் மனதை கொள்ளை கொண்டுபோகும் ரசிக்கத் தக்கப் பாடல்களோடும், புத்தக வெளியீடும், விழா மலர் வெளியீடும், கவியரங்கமும், நாட்டியமும் என ஆடல்பாடலுமென விமரிசையாக நடந்தேறியது இப்பெரு விழா.
நம் பத்து புத்தகங்களை ஒவ்வொரு கட்டாக பிரித்து, இந்திய தூதர் திரு. அஜய் மல்கோத்ரா அவர்கள் வெளியிட நான்கு இதர படைப்புக்களை திரு. இலக்கியப் புயல் சாரோன் செந்தில்குமார் அவர்களும், மூன்று இதர படைப்புக்களை தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகருமான திரு. தம்பி ராமையா அவர்களும், மூன்று இதர படைப்புகளை பசங்க மற்றும் கலவாணி திரைப்படங்களின் புகழ் கதாநாயகன் திரு. விமல் அவர்களும் பெற்று விழாவினை சிறப்பித்தனர்.
பாடல்களை மனதின் ஆழம்வரை தன் குரலால் தொட்டுவிடும் கணேசன், கங்கேஷ்வரன், ராணி மோகன் மற்றும் பாசத்திற்குரிய குழந்தை தெரசாவும் அசத்தலாக பாடி வந்தோரை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தனர். அதிலும் பறை.. பறை.. என வரும் ‘தென்றல்’ திரைப்படத்தின் பாடலை ரா.பார்த்திபன் பாடுவதாக நடித்துக் காட்டியது போலவே, ‘அதே வீரியத்தோடு பாடகர் கணேசன் பாட; அரங்கம் சற்று கூடுதலாக உணர்ச்சிவயப் பட்டு பாட்டின் வேகத்தை உடம்பெல்லாம் புகுத்திக் கொண்டே இருக்கும் என்று சொல்லுமளவிற்கு மிக சிறப்பான பாடல்களும் மேடையில் பாடப் பட்டன.
விழாவின் முத்தாய்ப்பாக கவியரங்கம் அமைந்தது. திரு. இலக்கியப் புயல் சாரோன் அவர்கள், தலைமை ஏற்க, கவிஞர் திரு. கருங்குளம் சிவமணி, திரு. கவிசேகரன், திரு.சாதிக் பாட்சா, திருமதி.பாரதிக் கண்ணம்மா, திருமதி. தேவி ரவி மற்றும் திரு. கவிப் பிரியன் எனும் இல. கார்த்திக்கேயன் போன்றோர் கலந்துக் கொண்டு மிக சிறப்பான கவிதைகளை பாடி உள்ளத்தை உணர்வுகளால் உருக்கி எடுத்தனர்.
ஒரு கவியரங்கத்திற்கு குவைத் அரங்கம் இத்தனை மதிப்பை தந்து அமைதியாக அமர்ந்துக் கேட்டதெனில்; அது இக்கவியரங்கமாகவே இருக்கும் என்று சொல்லுமளவில் ஆறு பேருமே மிக சிறப்பான கவிதைகளைப் பாடி விழாவிற்கு மிகுந்ததொரு இலக்கிய பலம் சேர்த்தனர்.
தவிர, விழாவின் ஒவ்வொரு அசைவையும் தன் கவிதைத் திறத்தினால் சந்தம் மாறாது கோர்த்த கவி மாலை ஒன்று ஆங்காங்கே கழன்று கழன்று வீழ்வதைபோல் கவி மலர்களால் தூவி தூவி தன் தொகுப்புரையினையும் மிக சிறப்பாக வழங்கினார் நம் பாசத்திற்குரிய கவிஞர் திரு. அபுதாகிர் அவர்கள்.
மத்தியில் பெரும் நன்றிக்குரிய குவைத் தமிழோசை மன்றத்தின், தலைவர் திரு. உ.கு. சிவகுமார், இணை செயலாளர் திரு. அபுதாகிர், பொருளாளர். திரு. அசிஸ் போன்றோர் சேர்ந்து, ‘விழாவிற்கு வருகை புரிந்து சிறப்பித்த விருந்தினர்களுக்கும் இதர கொடையாளிகளுக்கும் நினைவுப் பேழைகளை வழங்கி, பொன்னாடை போர்த்தி கௌரவிக்கச் செய்தனர்.
உடன், விழா தலைவர் திரு அலாவுதீன் அவர்களும் சிறப்புரையாற்ற, முன்னாள் பொறுப்பாளர் ஐயா திரு. விட்டுக் கட்டி மஸ்தான் அவர்கள் நன்றியுரை வாசிக்க விழா இனிதாக நிறைவுற்றது.
விழாவிற்குப் பின்னே உழைத்த முகங்கள் அரங்கத்தின் வெளிச்சமாகவும் வெற்றியாகவும் வெளியில் தெரியாமல் ஆங்காங்கே வந்தோரின் முகத் திரளில் சந்தோசமாக மின்னிக் கிடந்தன.
விழா முடிந்து, கூட்டம் களைந்து, வளாகம் விட்டு வெளியேறுகையில்; வழியில் கிடந்த வெளிச்சத்தின் நுனியில் கற்றைகளாகப் புறப்பட்ட இருட்டு வாசல் கடந்து, மெல்ல மெல்ல மேலெழுந்து, வெற்றிடம் பரவி, வானம் வரை அப்பிக் கிடந்தது.
காற்றில், இருட்டில்; தன் பயணம் நோக்கி கடந்துப் போகும் மேகத்தினைப் போல், எல்லோரும், தன்னைத் தானே ஓர் இந்தியனாகவும், தமிழனாகவும் ஒருவாறு அவரவருக்குப் புரிந்தாற்போல் அவரவர் அவரவரை எண்ணிக் கொண்டு மெச்சிதலோடு வெளியேறினர்.
நானும் வெளியேறி வாசலில் இருந்த விளம்பரப் பலகையிலிருந்து உள்ளே நடந்த விழாவின் கடைசிப் புள்ளிவரை தீர அலசி, வந்திருந்த எல்லோரைப் பற்றியும் ஆலோசித்துப் பார்த்தேன், வெளியே செல்லும் மனிதர்களை பார்த்தேன், இதுவரை சந்தித்த அதிக பேரை நினைவுற்றேன், என்றோ படித்த நம் தமிழர் வரலாற்றினையும் நினைத்துக் கொண்டேன், “மனிதராக இருக்க முயன்ற நாம் தமிழராக இல்லையோ? தமிழராக இருந்திருப்பின், அத்தனை தமிழர்கள் அன்று கொடியவர்களால் அனாதைகளாகக் கொள்ளப்பட்டிருக்க மாட்டார்களோ” என்று தோன்றியது.
ஏதோ நாம் பேசும் ‘மிச்சம் மீதி இருக்கும் தமிழ் மட்டுமே’ நம்மை தமிழராய் அடையாளம் காட்டி, எஞ்சிய இனத்தவரிடமிருந்து’ வாழுமளவிற்கு நம்மை காத்துக் கொள்கிறது போல்’ என்றெண்ணி, விரைவாய் தமிழோடு கலந்துப் பேசும் ஆங்கிலத்தை; இறக்கத் தின்ற மருந்தென’ மறக்கத் துணிந்தேன்!!
——————————————————————————————-
வித்யாசாகர்
அருமையான பதிவு.
விழா நிகழ்ச்சியை நன்கு விவரித்து எழுதியிருக்கிறீர்கள்.
குழந்தைகள் அனைவரும் நன்கு அலங்கரிக்கப்பட்டு உள்ளத்தை கொள்ளை கொள்கிறார்கள்.
வாழ்த்துக்கள்.
LikeLike
//ஏதோ நாம் பேசும் ‘மிச்ச மீதி இருக்கும் தமிழ் மட்டுமே’ நம்மை தமிழராய் அடையாளம்
காட்டி, எஞ்சிய இனத்தவரிடமிருந்து’ வாழுமளவிற்கு நம்மை காத்துக் கொள்கிறது
போல்’ என்றெண்ணி, விரைவாய் தமிழோடு கலந்துப் பேசும் ஆங்கிலத்தை; இறக்கத் தின்ற
மருந்தென’ மறக்கத் துணிந்தேன்//
நன்று வித்யா வாழ்த்துக்கள் !!
LikeLike
மிக்க நன்றிகளென் உறவுகளே;
உங்களின் வாழ்த்துக்களும் அன்புமன்றி வேறென்ன எனை உயர்த்திவிடும். நீங்கள் என்னை நம்பும் வரை, வாழ்த்தும் வரை, அன்பு செய்யும் வரை.., ரசிக்கும் வரை எனக்கான வளர்ச்சி வான்கடந்து நிற்குமென்று நம்பிக்கை உள்ளது!!
மிக்க அன்பும் வணக்கமும் உரித்தாகட்டும் ரத்னவேல் மற்றும் நடாசிவா!!
LikeLike
அவ்வளவு அழகாக விழாவின் நடப்பை சொல்லி உள்ளீர்கள். படிக்கும் பொழுது நானும் அவ் விழாவில் கலந்து கொண்டு, அழகிய தோற்றத்தோடு ஜொலிக்கும் அன்பு செல்வங்களின் அழகையும் கண்டது போல் ஒரு உணர்வு. முகிலின் அழகோ அழகு.. அணைத்து ஒரு முத்தம் தர வேண்டும்.
உங்களின் பத்து புத்தகம் வெளியிட்டதில்…உங்களின் ஆழ்ந்த ஈடுபாடு, கடும் உழைப்பு மற்றும் திறமை எல்லாம் தெரிகிறது. அதற்கு பெருமை சேர்க்கும் வகையில் சூடிய புகழ்மாலை தான் இது.
நம் தமிழர் கலாச்சாரத்தோடு குவைத்தில் இப்படி ஒரு பெரும் விழா நடந்தது நினைத்து மிகவும் பெருமை கொள்கிறோம். உங்களின் அருமையான பதிவிற்கு மிக்க நன்றி. வாழ்துக்கள்!
LikeLike
மிக்க நன்றி உமா. மனதார தெரிவிக்கும் இதுபோன்ற வாழ்த்துக்கள் தான் எமைப் போன்றோருக்கு பலமாக இருக்கின்றது. குழந்தைகள் அன்று மிக திறமையோடு பேசியும் நடித்தும் காட்டினார்கள். பெற்றோரின் பதபதைப்பு ஆசியாக அவர்களுக்கு இருந்தது. எல்லோரின் அக்கறையின் பேரிலும் விழா நன்றாக நடந்தேறியது..
LikeLike