“என்னைப் போல் எத்தனை பேரை கொள்வீர்கள் என்றேன்” அவளும் அதிர்ச்சியுற்றாள்.
“வேறென்ன காட்டிக் கொடுக்கும் சமுகத்திற்கு மத்தியில் தானே நம் போர், பிரச்சனை, எல்லாமே…?”
“அதென்னவோ சரியாகத் தான் சொன்னீர்கள், அந்த சண்டாளன் அன்று எங்கட தலைவரை விட்டுப் போகல்லை யென்டால்; இன்று இத்தனை பெரிய அவலம் ஏது எம் மக்களுக்கு? இன்று நிகழும் இத்தனை கொடுமைகளுக்கும் அவன் செய்திட்ட துரோகம் தானே காரணமாகிறது. இப்பொழுதும் ஒவ்வொரு செயலுக்கும் பின்னாலிருந்து அவன் தானே துணைப் போகிறான்; தேசத் துரோகி யவன்”
“நீங்கள் ஏன் அப்படி நினைக்கணும், இன்னொரு மாதிரியாக அதை மாற்றி யோசித்துப் பாருங்களேன்”
“எப்படி”
“அவன் யார்?”
“யாரென்றால்?”
“அவனும் ஒருநேரம் நம் மண்ணுக்காக போராடியவன் தானே?”
“ஓம்..”
“ஆக்கப் பூர்வமான செயல்பாடுகளில் அவனுடைய பங்கும் தலைவருக்குத் துணையாக இருந்தது தானே?”
“அதற்காக நாட்டை கூட்டி கொடுப்பானா? பாவி…”
“அப்படி இல்லை ‘திருமதி……..’ உங்கள் பெயரென்ன?”
“அதை நீங்கள் தெரிந்துக் கொள்ளவேண்டிய அவசியம் இப்போதைக்கு இல்லை, விசயத்திற்கு வாருங்கள்”
“அவன் தலைவரின் முக்கிய நம்பிக்கைக்கு உரியவனாயிருந்து, அவருக்கு வலது கை போல உடனிருந்து செயல்பட்டவன் தானே?”
“கண்டிப்பாக அதை மறுப்பதற்கில்லை. அவன் பலம் மிக்கவன். நல்ல திறமைகள் பொருந்தியவன். அதில் ஒன்றும் சந்தேகமேயில்லை, யார் யார் எங்கு நிக்குனம், எவ்வழி போயினம்; எல்லாம் அறிந்தவன் அந்த சண்டாளன் தான்”
ஒருவேளை அவரே நாளை அவர்களை திருப்பிக் கொண்டால்?
“என்ன சொல்ல வாரியள்?” அவள் சற்று சிரித்தாள்…
“ஆம்!! யார் கண்டது, தமிழன் ரத்தம் தானே? மண்ணிற்காகப் போராடியவர் தானே? சுதந்திரம் கேட்டு மக்களின் விடுதலைக்காக காடும் மேடும் அலைந்தவர் தானே?”
“எல்லாவற்றிற்கும் ஓம் என்று சொல்லலாம், கடைசியாய் என்ன சொல்லப் போறீங்க யென்டு, சொல்லி முடியுங்கள்”
“நாளை அவரே அவர்களுக்கு எதிராக நின்று அவனை உடனிருந்தே வீழ்த்தவும் வாய்ப்புள்ளது தானே???? யார் கண்டது”
“ஆ… அது நடக்கோணும். அப்படி; அவன் நல்ல தமிழன் என்றால்; அவன் குடித்த பால் ஒருத்தியோடவா இருந்தால்; அவன் அதை செய்யவேணும், அவன் செய்வான். அவன் செய்யக் கூடிய ஆள் தான். எனக்கும் சில நேரம் தோணும், இப்படிப் போயிட்டானே இந்த பாவி என்று நினைக்கையில், எப்படியாச்சும் கடைசியா வந்துவிடுவான் என்று தோணும்..”
“சரி அண்ணன் எப்படி இருக்கார்?”
“யார்?”
“நமக்கென்று வேறு எத்தனை அண்ணன்கள் இருக்கிறார்கள்”
“தலைவரையா கேட்கிறீங்க?”
“ஆம்”
“அவரை பற்றி கதைக்க வேண்டாம் விடுங்கள், எனக்கு கெட்ட கோபம் வந்துவிடும்”
“ஏன்????!!! அவர் மீதா உங்களுக்கு கோபம்!! என்னால் நம்பவே முடியலையே..”
“நம்ப மாட்டியள், வெளிய இருந்து பார்க்கிறவர்களுக்கு என்ன தெரியும்? அவர் சரியா இருந்திருந்தால் எல்லாம் சரியா இருந்திருக்கும். இன்று நிராதரவாய் நிற்கிறோமே!! இப்படிக் கள்ளத் தோணி ஏறி அலையுறோமே யார் காரணம் இதற்கெல்லாம்???
இதோ அந்த சிங்கள கொடும்பாவி போரில் அப்பாவி மக்களை கொன்று போட்டதில்லாமல், காலங்காலமாக நாங்கள் கோவில் போல புனிதமாக பாவித்த ‘துயிலகத்தைக் கூட இடித்துத் தகர்த்துவிட்டான், இனி அவர் திரும்பி வந்து மட்டும் என்ன மிச்சம் கிடைத்துவிடும்? போனதை மீட்டுத் தர அந்த தெய்வம் வந்தாலும் நடக்காது தானே???”
அவள் கண்களில் தீ பறந்தது. உணர்ச்சிவசப் பட்டு விட்டால் என்று நன்றாகத் தெரிகிறது. ஆனாலும் என்னவோ சொல்ல வருகிறாள் என்பதை கவனித்து பொறுமையாக அவளருகில் சென்று –
“பக்கத்தில் இருக்கவன் பார்க்கிறான், பொறுமையா பேசுங்க” என்றேன்.
“அப்ப விடுங்க, இதலாம் ஒன்றும் கதைக்க வேண்டாம், நீங்கள் உங்க வேலையை பாருங்க”
“அச்சச்சோ ரொம்ப கோபப் படுறீங்களே, நான் அபப்டி சொல்லவில்லை. அவர் பாவம் இல்லையா? எத்தனை வருடம் இந்த மண்ணுக்காவே மக்களுக்காவே பாடுபட்டவர் தானே நம் தலைவர்???”
“பட்டார், நிறைய செய்தார், அவரை மாதிரி உலகத்தில் ஒரு தலைவனும் வர இயலாது. ஆனால் அதற்கு பலன் வந்துச்சா? புடுச்சி புடுச்சி போனியளே எம் புள்ளைய கொடு, உன் புள்ளைய குடுன்னு உருவி உருவி போனியளே, எம் புள்ளை புருசனை எல்லாம் கொடுத்தோமே; கடைசியா என்னத்தை கண்டோம்? தெருவில் அனாதையாய் மானங் கெட்டு நின்றதோடு சரி”
“வாயடைத்துப் போனேன் நான்”
“தோ, நேற்று செய்தி பார்த்தியள் தானே, அவரையும் சுட்டுவிட்டோம் இனி புலிகளே கிடையாது என்கிறான், துயிலகம் வரை அகற்றி விட்டோம் இனி தமிழர்களின் அடையாளமே கிடையாது என்கிறான் சிங்களவன், அவரோட தல மயிர கூட இவனுகளால அசைக்க இயலாது. அது எனக்குத் தெரியும். ஆனா ஒருக்கால் அவர் போயிருந்தால்!!!!???” கேள்வியின் ஊடையில் அழை வந்துவிட்டது அவளுக்கு. விம்மினாள். ஒரு கையில் கண்களை துடைத்தவாறே மற்றொரு கண்ணால் என்னை பார்த்துப் பேசினாள் –
“எங்கட தலைவர் போனால், பிறகு நாங்களும் போனோம் என்று அர்த்தம். அவர் தான் எங்களுக்கு தாய்.. தந்தை.. தெய்வம்.. எல்லாம். அவரில்லாமல் எங்களுக்கு விடியலே கிடையாது. அவரை அந்த படுங்குழியில் போன தெய்வம்தான் மேல்வந்து நின்று காக்கவேணும். நான் சத்தியம் செய்து சொல்வேன்; எங்க தலைவர் மாதிரி உலகத்துல ஒருத்தன் வரமாட்டன், எங்களை மீட்க” கண்களை துடைத்துக் கொண்டாள். அழையை நிறுத்திக் கொண்டாள். நான் அவளையே பார்த்தேன். அவளிடம் ஒரு வீராவேசம் இருந்தது. அவள் மிக தெளிவாக தன்னை வார்த்தைகளால் வெளிப்படுத்தினாள் –
“அவரை எல்லாம் யாராலும் அழிக்க முடியாது. உண்மை தான், எங்கட தலைவர் ஒரு காக்கும் சக்தி கொண்டு பிறந்தவர். எப்படி ஆண்டாருப் பாருங்க எங்க ஈழத்தை; கொஞ்ச காலம் ஆண்டாலும் அப்படித் தான் வைத்திருந்தார், தமிழீழம் உலகத்துக்கே ஒரு பாடமாக விளங்கியிருக்கும். அவர் வந்த பிறகு தான் எங்கட ஈழத்தில் நீதின்னா என்னன்னு மக்களுக்கு மீண்டும் புரியவந்தது.
ஒரு பொடியன் அப்போ குடிச்சானில்லை. குடிய அறவே ஒழிச்சது அவர் தான். தோ, இவனுங்களைப் போல் யாரிருப்பார்கள் உலகத்தில்; இந்த சிங்களக் கூட்டம் எம் பெண்டுகள் எல்லாம் செத்தப் பிறகு கூட பரவாயில்லையென்டு உயிர்போன பிறகும் மேல ஏறி மெறிப்பினும். சிங்கத்துக்கு பிறந்தவனுகள். ஆனால் எங்கட புலிங்க அப்படி இல்லை”
பேச்சை நிறுத்தி விட்டு என்னை கிட்ட வந்து பார்த்தாள்.
“உண்மையை தான் கதைக்குறன், பாருங்க, யாராச்சும் ஒரு சிங்களத்தியை எங்கட புலிகள் கெடுத்தாங்க, பொம்பளை மேல கைய வெச்சாங்கன்னு சொல்லச் சொல்லிடுங்களேன் பார்ப்பம். வெட்டியே போடுவார் எங்கட தலைவர். அவர் அப்படிப் பட்டவர்.
எங்களை எல்லாம் தான் பெற்ற மகளைப் போலும்; தன்னோட தங்கையை மாதிரியும் பார்த்தவர். பெண்களுக்கு ஒரு கேடென்றால் அதை ஒருக்காலும் பொருக்க மாட்டார், ஆனால் தவறை யார் செய்தாலும் தவறு தான், அவரிடத்தில் தவறுக்கு மட்டும் தண்டனை இல்லாமல் போகாது. அந்த தண்டனை மரணமாகக் கூட இருக்கும்”
அதற்குள் உணவு கொடுத்துவிட்டுப் போன பணிப்பெண் திரும்பப் பெற்றுக் கொள்ள வந்தாள். வேறேதேனும் வேண்டுமா என்று விசாரித்தாள். அவள் வேண்டாம் என்று மறுக்க நானும் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி பணிப்பெண்ணிற்கு வழிகொடுத்து அனுப்பிவிட, மீண்டும் நான் அவளை பார்த்தேன். அவளுக்கு தான் மனதிற்குள் இருப்பதை எல்லாம் யாரிடமேனும் கொட்டிவிட வேண்டும் போல் இருந்தது போலும், அவளே என் பக்கம் திரும்பி பேசினாள் –
“நான் சொன்னது விளங்கிற்று தானே?”
“ஆம், தலைவரை பற்றி சொன்னீர்கள், நீதி வழுவ மாட்டார் என்றீர்கள்”
“ஓம், நெசம் தான். அவரிடத்தில் மன்னிப்பென்பது கிடையாது. செய்யக் கூடாது யென்டு சொன்னால்; கூடாது தான். மீறி செய்தால் கழுத்தை வெட்டனுமென்டால், வெட்டணும், கண்ணை தோண்டனும்மென்டால் தொண்டனும்”
“கொடுமையா இருக்கே”
“கொடுமை இல்லை. ஒரு ஆட்டை வெட்டினால் தான் பத்து ஆட்டுக்கு பயம் வரும். அப்படி தான் திருந்துச்சி எங்கட ஆளுங்க, அதுக்கு முன்னாடி குடி கூத்து எல்லாம் ஆங்காங்கே இருந்தது தானே? யார் வந்து மாத்தினது அதை எல்லாம்? எங்கட தலைவர்!! நடுவில் சிங்களனால் சீர்கெட்டுப் போன தமிழீழத்தை பழைய மாதிரி மீட்டுத் தந்தவர் எங்கட தலைவர்”
“அவர் இப்பவும் இருக்கார் என்கிறீர்களா?”
“என்ன கேள்வி இது பச்சை புள்ளையாட்டம், அவர் இன்ன பொடியனென்டா நினைச்சியள்? அவர் எங்கட தெய்வம். தெய்வம் வீழுமா???”
“செய்தியில சொன்னாங்களே?”
“ஆயிரம் முறை சிங்களவன் அப்படித் தான் சொல்லிக் கொண்டு போறான், அவன் சொல்லுறதை உலகம் நம்பும், நாங்கள் நம்ப மாட்டோம். அரசு பூர்வமா பதினாறு முறை அறிவிச்சான் தானே, அதுபோல ஒன்னு இது.
அவனுக்கு வேண்டுமென்டால் அவரை பரிசோதனை செய்த டோக்டருன்ட சான்றிதழ் இருக்கும் தானே அதை சமர்ப்பிக்கச் சொல்லுங்களேன் பார்ப்பம். சும்மா அங்கனால யாரையாச்சும் புடுச்சி இது தான் புலின்னு காட்டிட்டா ஆச்சா? பூனை புலி எப்படி ஆகும் என்பது என்னட கேள்வி”
“சரி, நான் ஒன்னு கேட்டா கோபப் பட மாட்டீங்களே?”
“சும்மா கேளுங்க, நீங்க ஆம்பளை, உங்க மேல எனக்கென்ன கோபம், சும்மா கதையிங்க”
“இல்லை, அவர் பேரை சொன்னதும் இப்படி இவ்வளோ பேசிட்டீங்களே”
“ஓம்… பின்ன எங்கட மண்ணுக்கு உழைத்த எங்கட தலைவரை சொன்னா விடுவோம்னு நினச்சியலா???”
“இல்லை, அதை சொல்லவரவில்லை, ஆதலாம் சரி தான், என்னிடமே யாரேனும் வந்து அவர் இப்படி என்று குறையாகச் சொன்னாலும் நானும் அதை நம்ப மாட்டேன்தான். ஆனால் நீங்க முன்ன குறைபோல சொன்னீங்களே?” அவள் படக்கென என்னை பார்த்தாள். பயங்கர கோபக்காரியாக இருப்பாள் போலிவள்.
“என்ன சொன்னேன்”
“அவர் தான் காரணம் என்றீர்களே”
“ஆமாம், இப்பவும் தான் சொல்றன்”
“இப்படி நீங்க இந்த விமானம் ஏறி வருவதற்கும் அவர் தான் காரணமென்றீர்களே?”
“எங்க வந்து கற்பூரம் அடிச்சி சொல்ல சொன்னாலும் சொல்வேன். அவர் தான் காரணம், யார் கேட்டது எங்கட பிள்ளைங்களை ஒவ்வொன்னா புடுச்சி போயி புடுச்சி போயி விட்டுட்டு இப்படி எம் மக்களை தெருவுல நிக்கவைக்க சொல்லி?
ஒரு வயசுப் பிள்ளைய; ஒரு வாய் அண்ணந்தண்ணி குடிக்க விடாதவாக தானே நீங்க? கேட்டா, ஆர்மிய அடக்கனும்னுவிய, அது புலியால தான் முடியும்பிய, அடக்குனியளா இன்னைக்கு???
“ஆமாம், வீட்ல வந்து ஆள் கொண்டு போவாங்களா?”
“வீட்ல வந்தா? வேறென்ன கதையா கேட்கிறீங்க, சோத்துல கைய வெச்சி உட்கார்ற பிள்ளைய வந்து வா அங்கே ஆர்மி நிக்கிறான் ஆள் பத்தலைன்னு கேட்பாங்க. ரெண்டு இருந்தா ஒன்னை குடுக்கணும். மூன்று இருந்தா ரெண்டைக் கொடுக்கனும், கேட்டா நாட்டுக்கு என்பினும்.
எல்லாத்தையும் ஒன்னுஒன்னா கொடுக்கத் தானே செஞ்சோம், கடைசியா பொம்பளைய விட்டியளா? பொட்டச்சியைக் கூட ‘வாடி பட்டாளத்துக்குன்னு வீட்ல இருக்குற பொண்ணுங்களை எல்லாம் கூட கூட்டி தான் போனீங்க, கடைசியா எண்ணத்தை சாதிச்சீங்க???
இன்னைக்கு எம் மக்கள் நிக்குதே அம்போன்னு??? தெரு தெருவா சுத்துதே?? நாடோடியா உட்கார ஒரு அடி மண்ணு தேடி அலையுதே.., அடி அடின்னு அடிக்கிறானே சிங்களவன்!!!! கேட்டீங்களா? நின்னு எதிர்க்க முடிஞ்சிதா கடைசிவரையும்? பிறகு எதுக்குயா எம் புள்ளைய எம் பொண்ணை யெல்லாம் கொடுன்னு கூட்டிகிட்டு போய் மண்ணுல புதச்சீங்க?
ஒண்ணுமே நடக்காததுக்கு எதுக்குயா எங்க வீட்டு தாலியை யெல்லாம் அறுத்தீங்க? அன்னைக்கு அதை செய்ததெல்லாம் நீங்கன்னா; இன்னைக்கு நடக்குறதுக்கு காரணம் யாரு; நாங்க இப்படி நிக்க நாடு இல்லாம அலையறதுக்கு காரணம் யாரு? தாயிழந்து தந்தை இழந்து மனைவி இழந்து அப்பா அம்மா இழந்து அண்ணன் தம்பி இழந்து குழந்தைகளை எல்லாம் இழந்து ஒத்தையா நிக்க காரணம் யாரு? அதுக்கும் நீங்க தானே காரணம்???” அவள் கேள்வியில் நெருப்பு தெறித்தது. உண்மை கேட்க கேட்க மனதைச் சுட்டது. என்னால் பேசிக் கொள்ள முடியவில்லை. கேட்க மட்டுமே நிறைய இருப்பதாய் எண்ணி அவளையே பார்த்தேன்..
————————————————————————————————————–
தொடரும்..
பிங்குபாக்: கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 11) | வித்யாசாகரின் எழுத்து பயணம்