அவளே கொஞ்சம் அவளை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள். சற்று நிதானித்து என்னைப் பார்த்தாள். கலங்கிய விழிகளில் கோபத்தை கடந்து உடைத்துக் கொண்டு வழிந்தது கண்ணீர் அவளுக்கு.
எனக்கு அவளைப் பார்க்கையில் மனம் எனையறியாது கலங்கித்தான் போனது. எத்தனை வலியிருக்கும் அவளுக்கு!! ஒரு நாள் குழந்தையை காணாவிட்டால் எப்படி துடித்துப் போகிறோம் நாம்? கடைக்குப் போன அம்மா திரும்பி வர தாமதமானால் வீடு எப்படி விரிச்சோடிப் போகிறது? வேலைக்குப் போன அப்பா நேரத்தில் வராவிட்டால் எப்படித் தவிக்கிறோம், பள்ளிக்குப் போன பிள்ளை எங்கோ அடிப்பட்டு ரத்தசகதியாய் வீழ்ந்துக் கிடக்கிறது என்றால் எத்தனை துடி துடித்துப் போவோம் நாமெல்லோரும்???
இவர்களெல்லாம் பின் எந்த மனநிலைக்கு உட்படுபவர்களாவர்? பள்ளிக்குப் போனக் குழந்தைகளை கொத்தாக குண்டு போட்டு சிதறடித்துவிட்டான் ஆர்மி காரன், என்று கேட்ட தாய் எந்த சுவற்றில் முட்டி அழது தன் உயிரை விடுவாள்?
இருந்த ஒற்றை மகன் ஒற்றை மகள் கைசிதறி கால் சிதறி வாசலில் போடப் பட்டு வைத்தியம் பார்க்கக் கூட சூழலில்லாத தேசத்தில் அந்த தாய் எப்படி மார்பில் அடித்துக் கதறி இருப்பாள்?
கணவன் இறந்த சேதி மட்டும் கேட்டு ஓடிப் போய் ‘ஐயோ என் ஐயா என்று கட்டிப் பிடித்தழ’ உடலின் ஒரு பாகம் கூட கிடைக்கப் பெறாமல் மண்ணில் சிதைந்து ரத்தமாக கலந்துப் போன ஒரு மாவீரனின் மனைவி எந்தக் கடவுளிடம் சொல்லியழத் துணிந்திருப்பாள்?
வீடு விட்டு ஒரு நாள் பிரியலாம், ஒரு மாதம் பிரியலாம், ஒரு வருடம் கூட பிரியலாம்; அல்லது என்றேனும் திரும்பப் போய்விடுவோம் என்று எண்ணி வாழலாம், ஆனால், இனி அந்த மண்ணே எனக்கு சொந்தமில்லை எனில், நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண்ணை விட்டேப் பிரிவதெனில் அதைவிட உலகில் கொடுமையும் வேறுண்டா?
தேள் கடிக்குமோ, பாம்பு கொத்துமோ, பேய் அண்டுமோ, பிசாசு தின்னுமோ என்ற பயமெல்லாம் அற்று; ஐயோ ஆர்மி வருவானோ!! என்னைக் கொள்வானோ!! என் பிள்ளைகள் முன்னமே வைத்து எனை சித்தரவதை செய்வானோ? மானபங்கப் படுத்துவானோ, படுக்கச் சொல்லி அடிப்பானோ? கெடுப்பானோ!! இல்லை ஒருவேளை என்னை விட்டு என் மகளையோ தங்கையையோ…………………. ???? ஐயோ இறைவா!!!!’ என்று நொடிக்கு நொடி தவித்து வளர்த்த மகள் முண்டச்சியாய் நிற்கவும், முண்டமாய் கிடக்கவும்; காண எத்தனைப் பெரிய வலி வலித்திருக்கும் உயிர்வரை???
அப்படி ஒரு வலிதான் அவளுக்குள்ளும் வலித்து கண்ணீராய் வழிந்தோடியது. விருட்டென அவள் கண்களை துடைத்து அழாதே என்று சொல்ல என்னால் இயலவில்லை. அழுவதற்கென்றே பிறந்த இழி பிறப்புக்கள் நாங்கள் என்பதுபோல் துச்சமாக எனைப் பார்த்தாள் அவள்.
கண்களில் நீர் மேலும் கலங்கியது. அவளின் மன நிலை என்னையும் உடைத்துப் போட, என் கரிசனம் அவளுக்கும் புரிந்திருக்கும் போல். “என் அண்ணனென்டு எண்ணி உங்களிடமொன்று சொல்லுறன்…” ஏதோ சொல்ல வாயெடுத்து, முடியாதவளாய் மீண்டும் அழுதாள்.
என்னால் அவள் தலை சாய்த்து கண்ணீரை துடைக்க துணிந்துவிட முடியாமல் போனது. வேறு பக்கம் திரும்பி என் கண்களைத் துடைத்துக் கொண்டேன். அவளுக்கு என் சிவந்த கண்களின் உண்மை புரிய, சற்று அருகில் வந்து அமர்ந்துக் கொண்டாள்.
“எண்ட அண்ணை போல இருக்கியள். கொஞ்சநஞ்ச அவதியல்ல நாங்கப் பட்டது. எங்கட கஷ்டம் எல்லாம் சொன்னாலும் உலகிற்கு வெறும் வார்த்தையில் புரியாது. இதலாம் ஒரு கொடூர வலி, என்ன பாவம் செய்தோமோ……….” விசும்பினாள்..
“எங்கடப் போல கஷ்டம் ஒரு மனுசனுக்கும் வரக்கூடாது. அன்றைக்கும் இன்றைக்கும் ஒரு மாற்றமும் இல்லாமல் கண்ணீருக்கு மட்டுமே அடிமையான இனமாகிப் போனோம்”
எனக்கு வேறு வழி தெரியவில்லை விருட்டென அங்கிருந்து எழுந்தேன், இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு கழிவறை நோக்கி நடந்தேன், வாய் விட்டு கத்தி கதறியழ வேண்டும் போல் இருந்தது. இம்மக்களுக்காய் என்ன செய்யப் போகிறோம்???? எதைக் கொண்டு துடைக்கப் போகிறோம் இந்தக் கண்ணீரை? யார் யார் பொருப்பிந்தக் கண்ணீருக்கெல்லாம்????
கேள்விக் கணைகள் இதயத்தை துளைத்தெடுத்தன.., கண்ணாடியில் தலை முட்டி அழவேண்டும் போலிருந்தது. எல்லாம் உணர்வுகளையும் மொத்தமாகச் சேர்த்து ‘அழுதுவிடக் கூடாதெனும் வீம்பின் உச்சத்தில்’ வெறும் கோபமாக அடக்கிக் கொண்டேன்.
இந்தக் கோபம் எனக்குள் ஒரு ஆயுதமாக பிறப்பெடுக்கும் என்றொரு நம்பிக்கை இருந்தது. இப்பொழுதே இந்த விமானத்தை கைகொண்டு உடைத்து தகர்த்து விட்டு நேரே இலங்கை சென்று என் மக்களுக்கான நீதி கேட்டு; என் மண்ணை என் மக்களிடம் பிடுங்கிக் கொடுக்கவேண்டும் எனும் அசூர துணிச்சல் உள்ளெழுந்தது.
ஒருவேளை அவர்களுக்கு எம் நியாயம் இனியும் புரியாதெனில் உலக கண்களில் கைவிட்டு இமைகிழித்து பாரென்று ‘எம் ஒட்டுமொத்த இழப்பையும் காட்டிவிடத் துடிக்கும் ஓர் உணர்வினை உள்ளடக்கி வைத்துக் கொண்டு தண்ணீரெடுத்து முகத்தில் அடித்து அடித்துக் கழுவினேன். அதற்குள் யாரோ ஒருவர் வந்து கழிவறை கதவு தட்ட – கதவை திறந்தேன் அவள் கதவிற்கு வெளியே நின்றிருந்தாள்!! கண்கள் தீயென சிவந்திருந்தது!!
————————————————————————————————————-
தொடரும்..
பதிவைப் படித்தேன்.
வேதனையாக இருக்கிறது.
LikeLike
மிக்க நன்றி தங்களின் தொடர் கருத்தளிப்பிற்கு. வேதனைக்குரிய செயல்கள் தான் நடத்தி முடிக்கப் பட்டுள்ளன.. அதன் ஒரு பதிவாகவேனும் இப்படைப்பு இருக்கட்டும் என்பது என் எண்ணம் தோழமை. இதனால் எழும் உணர்வுகளில் துடிந்தெழுந்தாவது மக்கள் நம் அவர்களின் நலத்திற்கென போராடத் துணியட்டும் என்றொரு எதிர்பார்ப்பு!!
LikeLike
படித்தேன்….என் கண்களில் நீர் ஓடுகின்றது…அந்த துன்பத்தை அனுபவித்து வந்தவள்தானே…..உங்கள் உணர்வுகளை அப்படியே வார்த்தையில் வடித்திருக்கிறீர்கள்……உங்கள் எழுத்துக்களால் தமிழின மக்களை விழித்தெழ வையுங்கள்….
LikeLike
மிக்க நன்றி தேன்மொழி.. என்றோ அழும் கண்களை பார்த்து பார்த்து ரத்தத்தால் உறைந்துப போன சிவந்த விழியன் உலகிற்குத் தெரியாத ஈரங்களே இங்கு எழுத்தாக வடிக்கப் பட்டுள்ளது!!
LikeLike
பிங்குபாக்: கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 12) | வித்யாசாகரின் எழுத்து பயணம்
//நெற்கட்டு சுமந்துப் போனாலும் பிரித்துப் பார்க்கையில் நான்கு புற்களின்
துண்டுகள் இல்லாமல் இல்லையே; அதுபோல் எண்ணி அக்கறை இல்லா மனிதர் ஓரிருவரை
விடுத்து லட்சியத்தோடு கைகோர்க்கும் நிறைய பேரைக் கொண்டு நம் கனவினை வெல்வோம்
சகோதரி”//
அருமையான, தெளிவான முற்போக்கு சிந்த்னைகள். ஒரு நல்ல தமிழ் சமுதாயப் பிரதிநிதியாக தங்கள் வாதங்கள்! இவையெல்லாம் ஒரு நாள் சாத்தியமாகக் கூடும் என்று நம்பிக்கையூட்டும், சக்தி வாய்ந்த எழுத்து அம்புகள்! நல்ல நோக்கம் கருதி பயணிக்கும் தங்கள் பயணம் இனிதே தொடரட்டும்! வாழ்த்துக்கள் ஐயா.
LikeLike
உங்கள் எழுது கோலால் உங்கள் உணர்வுகளுக்கு உயிர் ஊட்டியுள்ளீர்கள். என்று தீருமோ எம்மவர் வேதனை ……..?
LikeLike
நம்பிக்கையோடு நாட்களை கடப்போம், கண்ணுள்ளவர்களுக்கு ஓர்தினம் இரக்கமும் சுரக்கும், தமிழர் ரத்தம் ஊறிய மண்ணிலோர் நாள் தமிழர் விடுதலைக் கொடியும் பறக்கும்!!
LikeLike