சாரையாக ஊர்ந்துக் கொண்டிருக்கும் எறும்புகளின் வரிசைக்கிடையே கைவைத்துக் கலைத்தால் அது எப்படி நகர்ந்து இங்குமங்குமாய் நாலாப்புறமும் சிதறி ஓடுமோ அப்படி ஒரு பத்து பேர் விமானத்தினுள் ஏறி இங்குமங்குமாய் பரவி சுத்தம் செய்ய ஆரம்பித்தனர்.
அதில் ஒருவன் எங்களுக்கருகில் வந்தான். அவளை நெருங்கி ‘மாதங்கி அக்கா என் பெயர் கிருபன் என்றான். எனக்கு சற்று அதிர்ச்சி ஏற்பட்டது. அவள் திரும்பி என்னைப் பார்ப்பாள் என்று பார்த்தேன் அவள் பார்க்கவில்லை. எல்லாம் தயார் தானே என்றாள்.
அதற்குள் அங்கிருந்து ஏறிய ஒருவர் தன் கைப்பையினை மேலறையில் வைக்கவேண்டி எங்களின் அருகே வர அவன் அங்கிருந்து நகர்ந்து கழிவறை பக்கம் கண்காட்டிவிட்டுப் போனான். ஐந்து பத்து நிமிடத்திற்கு மேல் கதவு திறக்கப் படவேயில்லை. வேறொருவர் வந்து கதவு தட்ட அவன் தரை துடைத்துக் கொண்டே வெளியேறுவதுபோல் வந்தான்.
எதிரே வெளியிலிருந்து உள்வர நின்றிருந்த பயணி ஒருவனைக் கூட தடுத்து இதில் வேண்டாம் வேறு கழிவறையில் போ என்று சொல்லி வேறொன்றினை காட்டினான். இவள் விருட்டென எழுந்து அவனை நோக்கிப் போக அவன் கவனியாதது போல் வெளிச்சென்று, விமான வாசலில் நின்று எதிரே பார் என்று சைகை காட்டினான்.
எதிரே, வந்ததிலிருந்து எங்களுக்கு சேவை செய்த அந்த விமானப் பணிப்பெண் நின்றிருக்க, அவளிடத்தில் இவள் பார்வையால் ஏதோ சொல்லிவிட்டு வந்து என்னோடமர்ந்தாள். சற்று நேரத்தில் விமானம் புறப்பட்டு பறக்கத் துவங்கியது.
அந்த விமானப் பணிப்பெண் ஒரு குவளையினை கொண்டுவந்துக் கொடுத்துவிட்டு கழிவறைக்குள் போக, மாதங்கி அவள் கொடுத்த குவளையில் இருந்து தண்ணீர் அருந்துவதுபோல் அருந்திவிட்டு அடியில் இருந்த எதையினையோ தன் கைப் பை எடுத்து அதனுள் கொட்டிக் கொண்டாள்.
விமானம் தரையிறங்க இன்னும் ஒன்னரை மணிநேரமே மீதம் இருந்தது. எனக்கு எண்ண செய்வதென்று எந்தவொரு யோசனையும் வரவில்லை. இம்மூவருக்கும் ஒரு தொடர்பிருப்பது மட்டும் புரியவர, அமைதியாக அமர்திருந்தேன்.
அவளின் பார்வை அதாவது மாதங்கியின் பார்வை நடத்தை எல்லாம் பார்க்க ஒரு எந்திரத் தனமாக இருந்தது. எனை பார்க்கும் பார்வையிலேயே ‘என் மீதான நம்பிக்கையினை அவள் தன் கண்களில் காட்டினாள். நானும் எனை மௌனப் படுத்திக் கொள்ள –
சற்று நேரத்தில் அவள் எழுந்து கழிப்பறைக்குள் போக, நான் வெகு வேகமாக என்னருகில் வைக்கப் பட்டிருந்த அவளின் கைப் பையினை எடுத்து ஆராய்ந்ததில் கடவுச் சீட்டு மற்றும் பயணச் சீட்டும் இரண்டும் உள்ளிருக்க, எடுத்துப் பார்த்ததில் மேலும் அதிர்சியானேன். அதில் அவள் பெயர் ‘நாராயணி பிரேமதாச’ என்றிருந்தது. பிறப்பு கண்டி என்றும், இனம் சிங்களம் என்றுமிருந்தது.
————————————————————————————————————–
தொடரும்..
பிங்குபாக்: கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 14) | வித்யாசாகரின் எழுத்து பயணம்