கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 14)

இதற்கு முன்..

வள் பெயர் ‘நாராயணி பிரேமதாச’ என்றும், இனம் சிங்களம் என்றும் கண்டதும் அதிர்ந்துப் போனேன். அதற்குள் அவள் வெளிப்பட்டாள். நான் அவளின் கைப்பையினை அவசரமாக கீழே வைப்பதையும் அவள் பார்க்கத் தவறவில்லை. பார்த்துவிட்டாள் என்று தெரிந்ததில் சற்று வியர்த்துத் தான் போனது எனக்கும். அதேநேரம் ஒரு சிறிய டியூட்டி ப்ரீ பிரிவின் பெயர் பொருந்திய பாலித்தின் பையினை கையில் அவள் புதிதாக கொண்டுவருவதாயும் நான் கவனித்துக் கொண்டேன்.

என்னருகில் வந்து நின்றதும் என்னை வெளியே எழுந்து வா என்றாள், வந்தேன். அவள் உள் பக்கம் சென்று அமர்ந்து பைக்குள் இருந்து ஏதோ எடுத்து எதையோ போட்டு கடைசியில் சிறுசிறு துண்டுகளாக இருந்த சில எந்திர பாகங்களை ஒவ்வொன்றாக எடுத்து மாட்டினாள்.

அவ்வப்பொழுது ஆட்கள் இங்குமங்குமாய் வரும்நேரம் பார்த்து அதை அப்படியே பையோடு கீழிட்டாள். சற்று நேரத்தில் மீண்டும் அந்த விமாணப் பணிப்பெண் அக் கழிவறைக்குள் புகுந்து என்னவோ செய்துவிட்டு வெளியே வர, சற்று நேரம் கழித்து மாதங்கியும் அங்கே சென்று வந்தாள். போகும்போதும் வரும்போதும் கையில் அந்த டியூட்டி ப்ரீ பிரிவைச் சார்ந்த பை இருந்தது.

“கடைசியாய் வந்தமர்ந்த போது. நீ சிங்களமா?” என்றேன்

“ஏன் பயமாக இருக்கிறதா?” என்றாள்

“ஹும்.. எனக்கென்ன பயம்?” என்றேன்

அவள் என்னையே கூர்ந்து நோக்கினாள்.

“என்ன ஒன்னு எதிரியிடமே என் வீட்டைப் பற்றி பேசிவிட்டேனே என்றொரு வருத்தம் வரும்”  என்றேன்

“அப்போ இப்போது வருத்தமில்லையா?”

“ஏன்?”

“நான் சிங்களத்தியாக இருப்பேனோ” என்று

“இல்லை, அதலாம் விடு, நீயே சொல் யார் நீ?”

“முதலில் வந்த போதே சொன்னேனே ‘போராளி என்று. மீண்டும் கேட்பீர்களேயானால் தமிழச்சி என்று சொல்லலாம்”

“அப்போ ஏன் கடவுச் சீட்டில் சிங்களம் என்றிருக்கிறதே”

“தமிழச்சிக்கு அத்தனை சுதந்திரமில்லை எங்கட நாட்டில், சிங்களத்தி என்றால் ஓடும் விமானம் கூட எனக்காக உடனே நின்று, ‘எங்கு வேண்டுமோ அங்கு தரையிறங்கும்”

“ஆம், எல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன், என்றாலும் அவர்களிடம் தண்ணீர் வாங்கிக் கூட குடிக்க முடியாதவள் எப்படி இத்தனை சுலபமாக….. தன்னை சிங்களத்தி என்று சொல்லிக் கொள்ள முடிகிறது?”

“எங்கட கோபமெல்லாம் அப்பாவி ஜனங்க மீது கிடையாது,  சிங்கள அரசிடம்.  அரசு சார் அமைப்புகளிடம். சிங்கள ஆர்மியிடம். அதற்காக சிங்களத்தி என்று என்னை சொல்லிக் கொள்வது ஒன்றும் அத்தனை சுலபமுமில்லை, அதற்குபதில் மரணத்தை பதிலாக வாங்கிக் கொண்டுதான் வந்திருக்கிறேன்”

“என்ன???!!!”

“எல்லாம் கடந்து நாங்கள் எங்களின் விருப்பிற்கு வாழ்பவர்கள் அல்ல, லட்சியத்திற்காக உயிரை விடவும் சம்மதித்துள்ளவர்கள். தலைமை ‘போ என்றால் போகவேண்டும் அவ்வளவுதான்”

“அது புரிகிறது மாதங்கி”

“வேறென்ன புரியவேண்டும்”

“கள்ளக் கடவுசீட்டு தானே அது?”

“ஆம்”

“ஏன் அப்படி”

“கட்டளையின் படி வந்துள்ளேன். வேறொன்றும் சொல்வதற்கில்லை”

“தப்பித்துப் போவதாக சொன்னாயே?”

“தப்பித்து வருவதாக சொன்னேன், அதற்காக விட்டுவிட்டு  ஓடுவதாக சொல்லவில்லையே”

“பிறகு கடவுச் சீட்டில்…. உன் பெயர் …………. கூட…. வேறாக பார்த்தேனே”

“பார்த்திருப்பாய் என்று தெரியும்”

“ஒருவேளை நான் யாருடமேனும் சொல்லி இருப்பின்”

“சொல்லமாட்டாய் என்றும் தெரியும்”

“அதெப்படி, இதலாம் கவனமின்மை”

“கற்பனை செய்துக் கொள்ளாதீர்கள், அதிகம் பேச எனக்கு நேரமில்லை, போராளி என்றாள் என்ன துப்பாக்கி சுடமட்டும் தெரிந்தவள் என்று எண்ணிவிட்டீர்களா?”

“சரி, நேரே விசயத்திற்குவா என்ன செய்யப் போகிறாய் இந்த விமானத்தை”

“அதலாம் சொல்ல எனக்கு அனுமதி கிடையாது. எனக்கு இட்ட கட்டளையை கூட உமக்காக தாமதப் படுத்திக் கொண்டுள்ளேன்”

“எனக்காகவா……………….????!!!”

“ஆம். நீங்கள் யார் என்பதை நான் கொழும்பு விமான நிலையத்திலேயே அறிந்துக் கொண்டேன். உம்மை நாங்கள் மொத்த பேரும் நம்பி இருக்கிறோம்”

அவள் என்னென்னவோ சொன்னாள். ஒரு சிறிய நினைவடக்கியினை (மெமரி சிப் ஒன்றை) எடுத்து என் கைக்குள் திணித்தாள். இதில் நிறைய புகைப்படங்கள் உள்ளன. எல்லாம் சிங்களன் செய்த போற்குற்றத்தை நிரூபிக்கக் கூடியது. அதை உலக மக்களிடம் சேர்க்க வேண்டும் சேர்ப்பாயா என்றாள்.

கண்கள் கலங்கிப் போனது. இதை செய்யாத என் பிறப்பெல்லாம் பிறப்பா என்று தோன்றிற்று. ஆனால், வெளிக்காட்டிக் கொள்ளாமல் “அதை நான் பார்த்துக் கொள்கிறேன் மாதங்கி ‘எங்கே போகிறாய் நீ? என்ன செய்ய வந்துள்ளாய்?” என்றேன்

“போவதை பற்றி பிறகு தெரிந்துக் கொள்வாய். இருக்கும் வரை நடந்ததை சொல்கிறேன் கேள் –

‘அன்றொரு மாலை நேரம், பூந்தோட்டம் போன்ற எங்கள் வீடு குழந்தைகளின் சிரிப்பில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. அப்பாவும் நானும் வீட்டில் புழுக்கமாக இருப்பதாக எண்ணி காற்றாட வெளியில் வந்து அமர்ந்தோம்.

அண்ணன் அப்போது தான் கடைத்தெரு வரை போகிறேன் என்று வெளிவந்து எங்களோடு பேசிக் கொண்டே நின்றார். அதற்குள் அவருடைய பெரிய குழந்தையொன்று ஓடிவந்து, அப்பா நானும் கடைக்கு வரேனென்டு அழ அவர் ஒரு அடிபோட்டு உள்ளே நின்றிருந்த அண்ணியிடம் விட்டுவிட்டு வந்தார்.

அதையெல்லாம் கேட்காமல் அக்குழந்தை மீண்டும் அழ, அண்ணி இரண்டாம் மகளை காட்டி பார்த்தியா உன்னிண்ட தங்கச்சியானாலும் எப்படி  நல்ல பிள்ளையாக நடந்துக் கொள்கிறாள், நீ பெரியவனாக இருந்தும் இப்படி அடம் பிடிக்கலாமா என்று கேட்க அந்த சின்னக் குழந்தை பெரியவனை நோக்கி ‘வா அண்ணா நாம் விளையாடலாம் என்று அழைத்துக் கொண்டு அவன் கை பிடித்து ஓட பின்னாலேயே இவனும் ஓட., இருவரும் –

ஹே… என்று கத்திக் கொண்டே, ஓடிச் சென்று வெளியே வாசலில் அமர்ந்திருந்த அப்பாவை தொட்டுவிட்டு இருவரும் வீட்டிற்குள் ஓடுகிறார்கள். பின் வீட்டிலுள்ள அண்ணியை தொட்டுவிட்டு வாசலுக்கு ஓடி வருகிறார்கள். வீடெல்லாம் அவர்களின் சிரிப்பு சப்தம் நிறைந்துப் போகிறது.

மீண்டும் அந்த சின்னக் குழந்தை ஓடி வாசலுக்கு ஓடி வந்து யே… அப்பா’ என்று அண்ணனைத் தொட்டுவிட்டு வீட்டிற்குள் ஓட அண்ணா அவர்களையே பார்த்து சிரித்துக் கொண்டு நிற்க;

நொடிப் பொழுதில் சீறி வருகிறதந்த விமானம், கண்ணிமைக்கும் பொழுதிற்கெல்லாம் இரண்டுமூன்று குண்டுகளை சரமாரியாக வீட்டின்மீதும் தோட்டத்துப் பக்கமும் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த பக்கமும் என வாரிவீச வீடும் குழந்தைகளும் சிதறிப் போகிறது.

திரும்பிப் பார்க்கும் வேளையில் குண்டுப் போட்டுக் கொண்டேப் போன அந்த விமானத்தின் சப்தம் காதிலிருந்து ஓயும் முன், சிதறி பஞ்சு பஞ்சாக பிய்ந்துப் போனார்கள் அண்ணியும் அந்த குழந்தைகளும்.

கை தனியே கால் தனியே சக்கை சக்கையாக பொறுக்கி எடுத்து கூடையில் போட்டுக் கொண்டு மார்பில் அடித்து அழுதக்  கதை கேட்டால் நெஞ்சை சுடவில்லையா?” கண்களில் நெருப்பு சிதறுவதைப் போல் கோபத்தை வைத்துக் கொண்டு என்னைப் பார்த்துக் கேட்டாள் மாதங்கி.

அந்த காட்சியை கண்ட இடத்திலேயே அப்பா மூர்ச்சையாகி பின் அன்றே இறந்தும் போனார். கையில் தன் மனைவியையும் இதுவரை விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளையும் தூள் தூளாக எடுத்துப் பார்த்த பெரியண்ணனுக்கு அப்போதே மதி கேட்டுப் போனது. இன்று வரை அவருக்கு பைத்தியம் தெளிந்த பாடில்லை, தெருவெல்லாம் அண்ணியின் குழந்தைகளின் பெயர்களைச் சொல்லிக் கொண்டே சுற்றி அலைகிறாராம். ஆனால் பாருங்கள், அவர்மேல் இன்றுவரை ஒரு குண்டு விழாமல் நோக நோக உயிரோடு வைத்திருக்கிறது இந்த பாழாப்போன விதி கூட.

கடைசியில் எல்லாம் இழந்து எனக்கென மீதம் இருந்தது ஒரே ஒரு சின்னண்ணன் மட்டும் தான். அவரையும் ‘புலி’ என்று சந்தேகப் பட்டு அதற்கெல்லாம் முன்னாலேயே கொண்டு போய் எத்தனை சித்திரவதைகளை செய்தார்கள் தெரியுமா?’ நாங்கள் கூட எங்கோ வேலை காரணமாக போயிருக்கிறார் என்று தான் முதலில் எண்ணியிருந்தோம்.

பிறகு யாருமற்று நானிருந்த இருட்டு நாளொன்றில் வந்தார் சின்னண்ணா. அடையாளமே மாறியிருந்தார். கேட்டதற்கு ‘உடம்பெல்லாம் நெருப்பால் சுட்டான் சிங்களவன் என்று சட்டையை கழற்றிக் காட்டி அழுதார். நடந்த கதையெல்லாம் சொல்லிக் கதறினார். கைவிரல் நகத்தை மட்டும் ஒவ்வொன்றாக துண்டித்தார்களாம் பாவிகள்.

அதலாம் கூடத் தாங்கிக் கொள்வேன்; சிங்களன் பேண்டதை கையிட்டு வாரச் சொல்லி அடித்தார்களாம். ஒவ்வொன்றினையாய் வந்து சொல்லி கதறி கதறி அழுதார். இந்த கையை வெட்டிவிடுகிறேன் என்று சொல்லி சொல்லி துடித்தார். ஒரு கட்டத்தில் பெரியண்ணன் உள்ளே வர –

அவரை  பைத்தியமாக கண்டபிறகு தான் வேறு வழியின்றி அண்ணியும் குழந்தைகளும் என்ன ஆனார்கள் என்பது பற்றியும், அப்பா இறந்துவிட்ட விவரம் பற்றியும் சொல்லவேண்டி வந்தது. அன்று அதலாம் கேட்டுவிட்டு தாளமுடியாமல் ‘இந்த மண்ணே எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு தெரு நோக்கி ஓடியவர் தான்; இன்றும் எங்கிருக்கிறார் என்று தெரியாது.

இது என் ஒற்றை வீட்டின் கதை எனில், இன்னும் எத்தனை எத்தனை வீடுகள், எத்தனை எத்தனை மனிதர்கள் எல்லாமே இந்த சிங்களனின் சுயநல வெறியால் எப்படி மண்ணோடு மண்ணாகப் போனார்கள் தெரியுமா?????????

கண்ணீர் வந்தாலே தாங்காத உறவுகளை ரத்தசகதியாக பார்ப்பதென்பது எத்தனை கொடுமை? அதன் பின்னும் ஏனிந்த உயிர் வைத்து இத்தனை காலம் இருந்தேன் தெரியுமா???”

நான் ஏனென்றெல்லாம் கேள்வி கேட்கவில்லை, அவள் எது செய்தாலும் சரி என்று எண்ணியிருந்தேன்.

“இதோ பார்…..”

எதையோ எடுத்துக் காண்பித்தாள். உற்றுப் பார்க்கையில் எலும்பென்று தெரிந்தது. கண்கலங்கி கண்ணீர் வர அதை; அழவொன்றும் அவசியமில்லை இனி என்பது போல் துடைத்துக் கொண்டு, அவளே ‘இது யாரினுடியது தெரியுமா?’ என்றாள்

அதற்குள் விமானம் தரை இறங்குவதற்கான அறிவிப்பு வந்தது. அந்த பணிப்பெண் ஓடிவந்து முன்னிருந்த இருக்கையில் எதிரே அமர்ந்துக் கொண்டாள். எல்லாம் தயார் என்பது போல் – கைகாட்டி கண்ணசைத்தாள்.

மாதங்கி அவசரமாக எழுந்து கழிவறைக்குள் போக’ சும்மா தடுப்பது போல் அந்த பணிப்பெண் எழுந்து ‘ஏய் என்கு போகிறாய் போய் அமர்ந்துகொள் என்று சொல்ல, அவள் அவசரம் என்று ஏதோ சொல்லிக் கெஞ்சுவதுபோல் பார்ப்போர்முன் நடித்துவிட்டு கழிவறைக்குள் போனவள் விமானம் தரை இறங்கும் வரை வெளியே வரவே இல்லை.

நான் பதற்றமுற்று உள்ளேப் பார்க்கப் போக, அந்தப் பணிப்பெண் எனை தடுத்து உள்ளே போகாதே என்று சப்தமாக சொல்லிவிட்டு ‘அவள் இருக்கையில் போய் பார்’ என்று மெல்லமாக கிசுகிசுத்தாள்.

நான் வேகமாக வந்து அவள் இருக்கையில் பார்த்தேன். அந்த பையும் ஒரு கடிதமும் இருந்தது. அந்த பையில் சில காணொளிகளின் குறுந்தட்டுகள் இருந்தன. அதை எடுத்து துரிதமாக என் பெட்டியில் வைத்துக் கொண்டேன். கடிதத்தை படித்து விவரம் தெரிந்துக் கொண்டேன். விமானம் நின்றதும் அவள் வருவாளா என்று பார்க்க கழிவறை பக்கம் நோக்கி எழுந்து போனேன். அந்த பணிப்பெண் வந்து விரைவாக இறங்கிவிடு என்றும், முதலாக இறங்கி ஓடிவிடு என்றும் மட்டும் சொன்னாள்.

ஏன் என்று கேட்டேன். இந்த விமானம் இன்னும் ஒருசில மணித் துளிகளில் வெடிக்கப் போகிறது என்று சொல்லிவிட்டு, என் மூலம் அந்த காணொளியும் புகைப்படங்களும் உலக மக்களுக்கு சேர வேண்டுமென்றும் ஒரு காகிதத்தில் எழுதி கையில் கொடுத்தாள்.

நான் மாதங்கி??? என்று கேட்கத் துணியவில்லை. அவளோடு அமர்ந்துப் பேசக் கிடைத்த மணித்துளிகளை எண்ணி பெருமிதம் கொண்டவனாய் ஏதோ செய்யப் போகிறார்கள், ஆனால் காரணமாகத் தான் செய்வார்கள் என்று கடிதத்தில் எழுதியிருந்தபடி எண்ணிக் கொண்டு அவர்களுக்கு ஒத்துழைக்கும் விதமாக, சற்று முன் நகந்து அவளிடம் புறப்படுவதாக சைகை காட்டிவிட்டு ‘வேகமாக விமானம் விட்டிறங்க முன் சென்றவர்களை நகர்த்தித்  தள்ளிக் கொண்டு ‘வேறு விமானம் பிடிக்க வேண்டும் என்று பொய் சொல்லிவிட்டு முன்னோக்கி நடந்தேன்.

எனக்கு முன் ஒன்றிரண்டு பேர் அவசரமாக இறங்கிப் போகப் பார்த்தார்கள். அவர்களை முந்திக் கொண்டு நான் சற்று வேகமாக நடந்து அவர்களுக்கு முன் சென்று வெளியேறுவதில் மட்டும் குறியாக இருந்தேன். என்னோட லட்சியமெல்லாம் அவள் தந்தந்த புகைப்படங்களையும் காணொளிகளையும் கொண்டுப்போய் உலகத்தாரிடம் சேர்ப்பதில் மட்டுமே இருந்தது. நான் வெளியேறி விமான நிலையத்தில் நுழைந்ததும் –

மாதங்கி ஓடி வந்து விமானத்தின் வாசலின் முன் நின்றுக் கொண்டாள். சட்டையை கழற்றி தூர எறிந்துவிட்டு பாருங்கள் நான் பாம் கட்டியிருக்கிறேன் அழுத்தினால் வெடித்துவிடும் என்று காட்டினாள். எல்லோரும் அதிர்ச்சியுற்று அவளைப் பார்க்க, தாமதிக்கவேண்டாம் ஓடி தப்பிக்க முடிந்தவர்கள் ஓடுங்கள் என்று சொல்ல, கோர்ட் சூட் போட்டுக் கொண்டு முன்னாள் முதலிட இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவன் எழுந்து ஓடப் பார்க்க எட்டி அவனைப் பிடித்துக் கொண்டாள். அசைந்தால் அழுத்தி விடுவேன் என்று சிவப்பு நிற பொத்தானை காட்டினாள்.

எதிரே படாரென சுட ஓடிவந்த இரண்டு மூன்று காவலாளிகளை நோக்கி வேண்டாம் துப்பாக்கியை கீழே போடுங்கள் என்றுகத்திக் கொண்டே  கையை மேலே தூக்கி சிவப்பு நிற பொத்தான் ஒன்றினை காட்டி ‘இனி யார் அசைந்தாலும் அழுத்திவிடுவேன் என்றாள்.

அவர்கள் செய்வதறியாது நின்று பார்க்க மீண்டும் ‘துப்பாக்கியை கீழே போடுங்கள் என்று மிரட்ட எல்லோரும் கீழே போட்டனர். என்றாலும், ஒருவன் மட்டும் சற்றும் தயங்காது சடாரென முன் ஓடிவந்து வீரசாகசம் செய்வதுபோல் சரமாரியாக மாதங்கியை நோக்கி சுட்டு சுட்டு சல்லடையாக்கினான்.

தமிழீழம் என் தாயகமென்று சுவாசித்த உயிர்மூச்சை மண்ணில் சரிந்தவாறே நிறுத்திக் கொண்டதந்த மாதங்கி என்னும் விடுதலைத் தீ. இதுவரை விடுதலைக்காக எறிந்த தீபமது அணைந்து ஜோதியற்று காற்றில் கலந்துப் போனது. மக்களெல்லாம் அலறி இங்கும் அங்கும் திண்டாடி ஓடினார்கள்.

அவள் அந்த சிவப்பு நிறப் பொத்தானை அழுத்துவதற்குள் உயிர்பிரிந்து சட்டென கீழே சரிய, நம்புவதற்கே இடமின்றி அதே கணம் அந்த விமானம் வெடித்து சுக்குநூறானது. அந்த கோர்ட் சூட் போட்டவனும் விமானத்தோடு வெடித்துச் சிதறினான்!!
——————————————————————————————-
தொடரும்..

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கொழும்பு வழியே ஒரு பயணம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

12 Responses to கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 14)

 1. Umah thevi சொல்கிறார்:

  //கை தனியே கால் தனியே சக்கை சக்கையாக பொறுக்கி எடுத்து கூடையில் போட்டுக் கொண்டு மார்பில் அடித்து அழுதக் கதை கேட்டால் நெஞ்சை சுடவில்லையா?//

  கண்கள் கலங்கி போனது…இவ்வளவு கொடூரமான மனிதர்கள் தரணியில் உள்ளார்களே…
  அவர்களை முடக்க யாருமே இல்லையா???
  வெட்கம்!..வேதனை!!

  உண்மையை மிகவும் தெளிவாக…உலகத்துக்கு தெரிய படுத்தி உள்ளீர்கள்.
  மிக்க நன்றியும் நல் வாழ்துக்களும்.

  Like

  • வணக்கம் உமா, உங்களைப் போன்றோரின் கருத்தில் எழுச்சி கொள்கிறது என் எழுத்துக்களும். உண்மையை உலகிர்கரிவிக்க வேண்டும் என்பதன்றி வேறல்ல என் முயற்சி. என்னுடன் பேசிய சகோதர சகோதரிகளின் வலி, நான் பார்த்த செய்திகளின் பாரம், நடந்த கொடூரங்களுக்கான பதிவு தான் உமா இதலாம். உண்மை சம்பவங்களை கதையாக்கியதன்றி வேறில்லை என் வேலை. மிக்க நன்றியும் அன்பும் நிறையட்டும் உமா!!

   Like

 2. suganthiny75 சொல்கிறார்:

  கதை மிக நன்றாக உள்ளது..

  Like

 3. munu.sivasankaran சொல்கிறார்:

  வணக்கம்..பரபரப்பான கதை ஓட்டத்தில் திடுக்கென திருப்பங்கள்..! நடந்தவைகள் இதைவிடவும் கூடுதல் என்பது உங்கள் எழுத்து நாகரீகத்தில் புரிகிறது! தொடரட்டும்!

  Like

  • வணக்கம் ஐயா, கண்டிப்பாக; நடந்த கொடுமைகளை மீள்பதிவு செய்யும் முயற்சி என்றாலும் எல்லாவற்றையும் பதிவதென்பது எண்ணிப் பார்க்கவே இயலாதவை. அத்தனை கொடுமைகள் நடந்த மண் அது என்பதை விரைவில் உலகமே அறியும். கதைக் கோர்ப்பு படி மட்டுமல்லாது தீர விசாரித்து அறிந்தனவற்றையே இங்கு பதிவாக்கிக் கொண்டுள்ளேன். விரைவில் அடுத்த ஓரிரண்டு தொடர்களில் இக்கொழும்பு பயணம் மூடிய உள்ளது. இதில் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன் என்பதைவிட இத்தனை உள்ளது என்பதை ஒரு பொறியாக எனைப் படிப்போருக்கு அறிவித்த சிறு நிம்மதியினை கொள்வதோடு தன்னாலியன்ற இதர முயற்சிகளும். இறை அருளால் இனியேனும் நடப்பவை நல்லவையாய் இருக்குமென்று ஆத்மார்த்தமாய் நம்புகிறேன்!!

   Like

 4. பிங்குபாக்: கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 15) | வித்யாசாகரின் எழுத்து பயணம்

 5. thenmoli anantham சொல்கிறார்:

  அன்பின் வித்யா….!தங்களின் இந்த முயற்சி பாராட்ட பட வேண்டியது..உண்மை நிகழ்வுகளை, படிப்போரின் நெஞ்சை தொடும் வகையில் எழுதி இருக்கிறீர்கள்….ஒரே ஒரு நெருடல்….போராளிகள் அவர்களுக்கு இடப்படும் கட்டளையை, பக்கத்தில் இருக்கும் போராளிக்கு கூட சொல்ல மாட்டார். சொல்லக்கூடாது என்பது தான் அவர்களுக்கு இடப்படும் கட்டளை…யாரையும் நம்பி உண்மைகளை சொல்ல மாட்டார்கள்..சக பிரயாணி ஒருவரிடம் நம்பிக்கை வைத்து இந்த உண்மைகளை சொல்வதென்பது, ஒரு போராளியின் ரகசிய பாது காப்பை சாதாரணமாக்கி விட்டது… அந்த விடயம் ஒன்றுதான் உறுத்தலாக இருக்கிறது…மற்றும்படி தங்கள் கதை, அது சொல்லப்படும் விதம், விறுவிறுப்பு பாராட்டும் படி உள்ளது…

  Like

  • அன்பு தேன்மொழி அவர்களுக்கு வணக்கம், தங்களின் நேர்த்தியான கருத்துரைப்பிற்கு மிக்க நன்றியானேன். தாங்கள் குறிப்பிடுவதுபோல் சத்யசீலன் வெறும் வழிப்பயணி மட்டுமல்ல. அவன் முன்பே ஈழப் போராட்டம் குறித்து அதன் நிகழ்வுகளை பதிவு செய்த ஒரு போராளி என்பதை அறிந்தே மாதங்கி அவனிடம் எல்லாம் பொறுப்புக்களையும் ஒப்படைக்கும் கட்டளைதனை ஏற்றே கொழும்பிலிருந்து புறப்படுகிறாள். இதன் விவரங்கள் முன் பகுதி கதைகளை படிக்கையில் சற்று மேலும் உங்களுக்கு தெளிவாகலாம். என்றாலும், இத்தனைக் கூட ஒரு போராளியை சாதாரணமாகக் காட்ட முடியாது என்றாலும், அவருக்கும் ஒரு மனசு இருக்குத் தானே என்று எண்ணுவதை தாண்டி; நம் கதை ஒரு களம் அவ்வளவுதான். இதை வைத்து நாம் இதர அவசிய கொடுமைகளை பற்றியும் இழைக்கப்பட்ட துரோகம் பற்றியும் பேசுவது தான் நம் நோக்கமே. இருப்பினும் எல்லாம் முடிந்தபின் மீண்டும் படித்து சரிபார்க்கையில் இதுபோல் உள்ள விசயங்களை சரி செய்துக் கொள்கிறேன் தேன்மொழி. தங்களின் மதிப்புமிகு கருத்திற்கு மிக்க நன்றியும் அன்பும் உரித்தாகட்டும்!!

   Like

 6. nalayini thiyaglingam சொல்கிறார்:

  கண்கள் கலங்கி போனது…

  Like

 7. sushruvaa சொல்கிறார்:

  இதயம் வலிக்க‌
  கண்ணீர் உணர்த்தும்
  செயல்…..

  எண்ணங்கள் பாழ்பட‌
  எண்ணங்கள் வீறு கொள்ளும்
  செயல்…….

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   வீறுகொள்ளவே உணர்வுகள் எழுத்தாக்கப்படுகின்றன சுஸ்ருவா. வரும் மாதத்தில் இப்படைப்பு புத்தகமாக வெளியாகவுள்ளது. வந்ததும் தெரிவிக்கிறேன். தங்களின் மெல்லிய உணர்வினை மதிக்கிறேன்..

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s