சமூகத்தின் சந்து பொந்துகளில் வீழ்ந்துகிடக்கும் மனிதர்குல இன மானத்தை நிமிர்த்தி, மனிதர்களை மனிதர்களாக அடையாள படுத்த நல்லதொரு திரைப்படமாய் விரியத் துணிந்திருக்கிறது வானம்.
நடக்கும் தவறுகளை யார் சட்டையையும் எட்டிப் பிடிக்காமல், நகர்வுகளில் வெளிப்படும் மனிதரின் இயல்பான மனிதத்தினால் எடுத்துக் காட்டி, ஆங்காங்கே தெறிக்கும் ஞானமென; அதர்மத்தை உடைத்தெறியத் தக்க காட்சிகள் அமைத்து, கடவுள் பற்றிய ஒரு மறைமுகப் புரட்சி செய்து, மனிதரை மனிதர் அறிந்துக் கொண்டால் கடவுளும் புரியும் என்கிறார் இயக்குனர் கிருஷ்.
கொல்லும் மனிதரைக் கூட மனிதத்தால் வெல்லும் மனிதர்களின் பார்வையில் பிறக்கிறது தெய்வமும் தெய்வத்தின் இன்னபிறவும் என்பதை காட்சிகளால் உறுதிபடுத்துகிறது இந்த ‘வானம்’ திரைப்படம்.
ஒரு நிரபராதி அநீதியினால் தண்டிக்கப் படுகையில், அவன் வாங்கும் அடியைக் காட்டிலும் மனது எப்படி வலித்துத் துடிக்கும் என்பதை தன் அபார நடிப்பினால் நடித்துக் காட்டி அசத்தியிருக்கிறார் பிரகாஷ் ராஜ். வயிற்றில் வளரும் தன் கரு களைந்துவிட்டதென்பதை திடுக்கென அறியும் அப்பாக்களின் மனசு ‘சுமக்காத தாயாக எப்படி மரணத்திற்கு நிகராகத் துடிக்கும் என்பதை புதுவிதாமாகக் காட்டியது அவரின் அந்த அழுகை.
தன் குழந்தையின் எதிர்காலம் வளமாக அமைய தன் உயிரையும் தரும் பெற்றோரை தாய்வடிவாக காட்டியது படமென்றாலும், அந்த தாய் சிந்தும் கண்ணீர் மொத்தமும் தன் குழந்தையின் நலத்திற்கன்றி வேறில்லை என்பதைக் காட்ட அடுத்தடுத்து வரும் காட்சிகளில் சரண்யாவின் நடிப்பு இதயம் கசக்கி எறிகிறது.
அவர் தன் பிள்ளையின் படிப்பிற்கென படும் துயரங்களை கண்டு, திரையரங்கின் இருட்டிலும் யாருக்கும் தெரியாமல் அழுகிறது படம் பார்ப்போரின் மனசெல்லாம். அத்தனை கண்ணீரும் ஓர்நாள் சரண்யாவிற்கு விருதாகக் கிடைக்கும் என்பதில் ஆச்சர்யமொன்றுமில்லை. (பதினைந்து நாட்களுக்கு முன் எழுதிய விமர்சனம் இது, என்றாலும், தற்போது தேசிய விருது கிடைத்துள்ளது என்பது வாழ்த்திற்கும் மகிழ்ச்சிக்கும் உரியது)
அதிலும், சரண்யாவின் மாமனாராக வருமந்த பெரியவரின் நகர்வுகள் ஒவ்வொன்றும் நம் வீட்டு மனிதர்களை எல்லாம் நம்முன் நிறுத்தி; அவர்கள் நமக்கென எடுக்கும் அக்கறைகளை வலியினூடாகக் சொல்லிப் போகிறது காட்சிபடுத்திய விதம்.
சிம்பு மருத்துவமனையில் இருந்து பணப்பையினை பறித்துக் கொண்டு ஓடுகையில், அதை தடுத்துவிடவேண்டி அந்தப் பெரியவர் சிம்புவின் காலைப் பிடித்துக் கொண்டு ‘ஐயா என் பணம்யா, ஐயா என் பேரன் படிப்புய்யா’ என்று கதறும் ஒரு காட்சி’ இளகிய மனம் கொண்டோரை அழவைத்து, அழமுடியாதோரை இச்சமுகத்தின் அவலம் கண்டு முகமிறுகச் செய்கிறது.
நிச்சயம் அந்த பெரியவரின் நடிப்பினை பாராட்டும் விதத்தில் திரைப்படத் துறையினர் மொத்தபேரும் கூட எழுந்து நின்று ஓர்முறை அந்தப் பெரியவருக்கென கைதட்டி பாராட்டினாலும் தகும்.
நெருப்பென்றால் சுடுவதில்லை என்றாலும், சில வார்த்தைகள் ஊடகத்தின் வாயிலாக உச்சரிக்கையில் நிறைய பேரைச் சுடுகிறது தான். அப்படி இப்படத்திலும் சுடும் வார்த்தைகள் ஏராளம். படம் செய்வதற்கு முன் ‘இதை இதை செய்யவேண்டும் என இயக்குனர் கையில் எடுத்துக் கொண்ட பாடுபொருள்கள் அத்தனையும் வெடித்தால்; சமூகமாக வெடிக்கக் கூடியது’ என்றாலும் மிகத் திறமாக மறுபக்க நியாயத்தைக் காட்டி பார்ப்போரை வாய்மூடச் செய்திருக்கிறார்.
ஒரு ஜனநாயக தேசத்தில் ஒரு மதத்தின் காரணம் கொண்டு மனிதர்களை இரண்டாம் நிலைப் படுத்தும் இழிசெயலினை அடிக்கோடிட்டுக் காட்ட நினைத்திருப்பார்போலும். அது முத்தாய்ப்பாகவே தெரியச் செய்கிறது சில காட்சிகளில். இஸ்லாமிய சகோதரர்களை சிறுபான்மையினர் என்று ‘வெறும் மதத்தை காரணமாக வைத்துப் பிரிக்கும் எண்ணம்’ எப்படி ஒரு ஜனநாயகத்தை ஜனஜாயக தேசமாக முன்னிறுத்தும்? என்ற கேள்வி ஏனோ இந்திய தேசத்திற்கு எழவேயில்லை! அதையும் அதனால் அவர்கள் படும் இன்னல்களையும் தலைவலிக்க வலிக்க பார்க்கமுடிகிறது இப்படத்தில்.
அதிலும், என்னதான் சிறகு ஒடிய பறந்து முட்டினாலும், ஏழ்மை குடியில் பிறந்தவன் ஏழையாகவே தான் சாக வேண்டுமா? எனும் கேள்வியை ஆங்காங்கே எழுப்புகிறதிந்த வானம் திரைப்படம். இருப்பினும், கடைசியில் சிம்பு அதே ஏழையாகவே உயிர்விடும் பாத்திர அமைப்பும், அதன் முந்தைய கேள்விகளும், சிந்திக்கையில், பணம்; பணம் உள்ளவரிடமே சேரும் என்று மறைமுகமாய் சொல்வது போலுள்ளது.
சந்தானம் இடை இடையே வந்து சிரிக்கவைப்பதில் சற்று வேறு சில வார்த்தைகளின் வீரியம் பற்றிய சிந்தனை குறைகிறது என்றாலும், ஆரம்பத்தில் அந்த காவலாளியை ஒரு இந்துவாக காட்டி, பின் அவரால் பிரகாஷ்ராஜை தீவிரவாதியாக மாற்றுவதுபோல் காட்சிகள் அமைத்து; அதன்பின் அவரை கொண்டுபோய் மருத்துவமனையில் விடுகையில் ‘இதோ இவன் ஒரு தீவிரவாதி, நீ ஒரு தீவிரவாதி, இவன் சீனியர் தீவிரவாதி நீ ஜூனியர் தீவிரவாதி’ என்று சொல்லும் காட்சி; ஆக அந்த சீனியரை உருவாக்கியதும் இந்த காவலாளி தான், அதாவது ஒரு இந்து தான் என்று காட்டிவிட்டு, கடைசியில் அவரையே அத் தீவிரவாதிகளின் கும்பலுக்கும் தலைவன் போல் காட்டுவது என்பது ‘மொத்த தீவிரவாதியையே இந்துவாகிய அக் காவல் துறையினர் தான் உருவாக்கினர் என்பது போல் சித்தரித்திருப்பதை, தமிழர்கள் பெயரில் செய்யாதிருந்திருக்கலாம்.
இன்றுவரை இஸ்லாமியரும் இந்துக்களும் ஒரே தட்டில் உணவுண்ணும் நேசம் மிக்க மண்; நம் மண். அதற்குள் இப்படி ஒரு நஞ்சினை புகுத்தாமல் இருந்திருக்கலாம். என்றாலும், இப்படி சில காவலாளிகளின் தவறான பார்வையால் அல்லது, மதவெறி கொண்ட சிலரால், அல்லது அவர்களின் சாட்சியமற்ற சந்தேகத்தால் தான் தீவிரவாதம் தலைதூக்கி நிற்கிறதோ என்றும் சிந்திக்க வைக்கவும் செய்கிறது வானம் திரைப்படம்.
சிம்பு, பேபே…., என் பேபே..’ என்று தன் காதலியின் பின் உருகிவரும் கணமெல்லாம் காதலை கண்களில் காட்டினாரோ இல்லையோ; இக்கால இளைஞர்களின் திறனையும் அவர்களின் உயர்தட்டு சிந்தனையையும் அழகாகக் காட்டி இருக்கிறார். பொதுவாகவே, சிம்பு என்றாலே; நிறைய திறமைகளில் சற்றும் சளைத்தவர் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்தவிடயம் தான் என்றாலும், இப்படமும், கோவில் மற்றும் விண்ணைத் தாண்டி வருவாயாயினை போல்; அவரின் நடிப்புத் திறனுக்கு ஒரு ஆதாரமென்றே சொல்லலாம்.
கடவுளை பரத் உணரும் காட்சியாக, அவருக்கு அதை போதிக்கும் காட்சியாக வரும் இடங்களில் வளம்வரும் இரண்டாம் நாயக நாயகிகளின் பாத்திரம் கூட; இயக்குனர் எடுத்துக் கொண்ட பாடுபொருளின் மூலத்தை சொல்லும் அவசியம் கொண்டதாகவே அமைந்ததும், அதி முக்கியமாக பின்னணி இசையும், ஒளிப்பதிவும், நடிகர்களின் தேர்வும் படத்திற்கு பலம்.
இருப்பினும், அனுஷ்கா வரும் காட்சிகள் அழகென்றாலும்; வசனத்திற்குத் தான் காதை மூடிக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு கட்டத்தில் அனுஷ்காவின் தோழி, உயிர் பிரிய இருக்க, மருத்துவரிடம் அனுஷ்கா காப்பாற்றச் சொல்லிக் கேட்கையில் ‘இடையில் அவள் தன் உயிர் பிரிய இருப்பதையும் பெரிதாகப் பொருட்படுத்தாமல் ‘எப்படியாவது என்னை காப்பாற்றி விடுங்கள் டாக்டர், அவளுக்கு என்னை விட்டால் வேறு யாருமே இல்லை டாக்டர்’ என்று அனுஷ்காவைப் பார்த்து சொல்லியழும் காட்சி’ தோழமையை வலுப் படுத்துகிறது.
கடவுள் வேறெங்குமே இல்லை, உள்ளே கசியும் இரக்கத்திலும், மானசீகமாய் தவறுணரும் தருணத்திலும், பிறர் நலம் கருதும் குணத்திலும், ஆபத்திற்கு எதிரியாயினும் உதவும் மனிதாபிமானத்திலும், இயல்பை இயல்பாகவே ஏற்று தெளிவின் கண் திருத்திக் கொள்ளும் நன்மையிலுமே உண்டென வெகு நாசூக்காய் புரிந்துக் கொண்டு வருகின்றனர் இக்கால மக்கள்.
மதம் பிடித்தமையால் பிறர் மனம் வருத்தி, தன் சுயநலத்திற்கென பிறரை கடவுளின் பேரில் மட்டப் படுத்தி, தன்னை எப்பொழுதுமே புத்திசாலியாக காண்பித்துக் கொள்ள முனையும் ‘நிறைய பேரின் மனநிலையில், மதத்திற்கென மனிதனைக் கொன்று, ஆடு வெட்டி, கோழியறுத்து; கொன்ற உயிரில் ‘பிறக்கும் தெய்வம் ‘மனிதத்தைக் கொன்றே பிறக்கிறது’ என்பதை இளைஞர்கள் இனி புரிந்துக் கொள்ளும் நாளும் வெகு தொலைவில் இல்லை என்பதற்கு கிருஷ்ஷும், கிருஷ்ஷின் இந்த வானமும் சாட்சி தான்!!
————————————————————————————————————
வித்யாசாகர்
தங்களின் விமர்சனத்தை பார்த்த பின்னர் இந்த படத்தை பார்க்கவேண்டும் போல் தோன்றுகிறது! மிகவும் நன்றி ஐயா!
LikeLike
மிக்க நன்றி ஐயா, பாருங்கள் ஆங்காங்கே உணர்வுகள் புடைத்தெழும். எனினும் அவர் இப்படத்தில் எழுப்பும் கேள்விக்குறிய காட்சிகளுக்கெல்லாம் இப்படத்திலேயே பதில் தருவதெனில்; படத்தை இன்னும் ஒரு பத்து மணிநேரத்திற்கு நீட்டிக்க அவசியப் படும். அத்தகைய இடங்கள் நிறை வந்து கடந்துவிடுகின்றன வேறு காட்சிகளின் முக்கியத்துவத்திற்கிடையே!! இருப்பினும், சிரிக்க சிந்திக்க ரசிக்கத் தக்க படம்.
பார்க்கலாம்!!
LikeLike
வானம் திரைவிமர்சனம் படித்தேன். உண்மையிலேயே படம் பார்த்தது போல இருந்தது. படத்தை பார்க்கவும் தூண்டுகிறது என்பது வேறுவிடயம். இருப்பினும் படத்தை பார்த்ததும் எனக்குப் பிடித்த மற்ற விடயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.
LikeLike
மிக்க நன்றி சுகந்தினி. உங்களின் ஆர்வங்களை என் விருப்பங்கள் அல்லது பார்வை மேம்படுத்துகிறதெனில் சற்று கலக்கம் தான் எழுகிறது. காரணம், ஏற்கனவே தலைகாட்சியிலும் திரைப்படங்களிலும் மூழ்கியுள்ள நம் உறவுகளை மேலும் ஆர்வப் படுத்தி இன்னும் ஆழத்தில் தள்ளிவிட இல்லை, இவ் விமர்சனங்களை எழுதுவது.
நல்ல நோக்கம் கருதியும், நிகழ்காலத்தையும் படைப்பாக்கியும் வரும் கலைக்கு உடன் நிற்பதும், அந்த மூன்று மணிநேரத்தைக் கூட பொழுதினைப் போக்க என்று இல்லாமல்; அதன் மூலம் சிந்தித்து பொழுதுகளை ஆக்கத் தக்க, எவ்விசயத்தின் நற்கருத்துக்களையும் எடுத்தாலும் உணர்வினையும் எமை வாசிப்போருக்கு கொடுப்பதின்றி, இதன் மூலம் எழும் சிந்தனைகளில் நல்லுணர்வை கொடுப்பதுமன்றி, இதைப் போன்ற பார்வை அறிந்தும் இதன் கருத்துப் பகிர்வுகளை அறிந்தும், இனியேனும் நல்ல படத்தை, மக்களுக்கு உதவும் கலையினை தரமாட்டார்களா என்ற எண்ணத்திலுமே என் இத் திரைப்படங்கள் சார்பான பார்வையினையும் இங்கே பதிந்துச் செல்கிறேன்.
எனினும் உங்களைப் போன்றோர் என் பயணத்தின் பலமாய் இருப்பதில் மகிழ்வு சகோதரி!!
LikeLike
வணக்கம்..! படம் பார்க்கவில்லை ..! ஆனால் நீங்கள் இந்துக்கள் என்றும் தமிழரென்றும் தீவிரவாதி என்றும் கடவுள் என்றும் கூறவருவதால் படத்தைப் பார்க்கவேண்டிவருகிறது…! நன்றி…!
LikeLike
நன்றி ஐயா. படம் பார்க்கையில் மிகத் தெளிவாகத் தெரியும் எல்லோருமே இயக்குனரின் இசைவிற்கு அதிகபட்சம் ஆட்பட்டுள்ளார்கள் என்பது. பின் புரியும், ஆம் இயக்குனர் நம்மை நிறையவே சிந்திக்க தூண்ட முயற்சித்துள்ளார் என்று. அதில் அவர் எத்தனை வென்றார் என்பது; படம் பார்க்கும், உள்வாங்கும் அவரவர் பார்வையினைப் பொறுத்ததே!!
உண்மையில்; இது நீங்கள் ஆச்சர்யமாக எடுத்துக் கொள்ளும் நிறைய விசயங்களை உள்ளடக்கிய படம் தான்; என்றாலும் அத்தனையையும் நிறைவாகப் பேச ஒரு படத்தில் இயலாது, அங்ஙனம் இயலாத விடயங்களே ‘மேலே நீங்கள் சுட்டிக் காட்டிய விடையங்கள் என்பதை நாம்; படம் பார்க்கும் முன்னே அறிவோம் தானே!!
LikeLike