மீனும் மீனும் பேசிக் கொண்டன.. ( பாகம் – 7)

லக மக்களின் மொத்த பரபரப்பினையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்ட ஒரு பிரபல்யம் மிக்க அசைவ உணவகமான சனியாண்டி விலாஸ் வாசலில் வந்து நின்றது அந்த மீன்களை சுமந்து வந்து விற்பனைக்குக் கொட்டும் மீன்பாடி வண்டி.

பழக்கத்தின் பேரில் மிக லாவகமாக ஈர வலையில் சுற்றிக் கட்டப் பட்டிருந்த மீன்களை எடுத்து முதுகு மேலிட்டு சற்று சாய்ந்தவாறு நடந்து உள்ளே சென்றார் ‘அந்த மீன் வியாபாரியால் அனுப்பப் பட்ட தொழிலாளி ஒருவர்.

“இருப்பா இருப்பா அதோ அந்த மேசை மேல கொட்டு”

கொட்டி மீன்களை மேஜையில் பரப்பி –

“பார்த்தியா, மீனு துள்ளோ துடிக்கோ எப்படி ஜம்முனு இருக்கு..?”

“பாதி செத்து போச்சு போலிருக்கே, பழைய மீனை கலந்துட்டாரா உங்க முதலாளி?”

“அட, என்னண்ணே நீ, என்னைக்கு நாங்க அப்படி கொடுத்தோம் இப்படி பேசுற, எல்லாம் கடல் ல இருந்து இறக்கியாந்த புது மீன் ண்ணே, செவல பிச்சி பாரேன் தெரியும்”

“சரி சரி போ, நாளைக்கு வந்து பணம் வாங்கிக்கோ”

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே இரண்டு மீன்கள் மட்டும் மேஜையிலிருந்து எகுறி வாசலை நோக்கி ஒன்றாக குதித்தன. அந்தமீன் கொண்டு வந்தவர் வெளியே போக, உணவகத்தின் சொந்தக் காரரான மற்றொருவர் குனிந்து மீனை எடுக்கப் போக அதற்குள் வாசலில் ஒருவர் நேர்த்தியாக தலைவாரி மாநிற முக வாட்டத்தில் வெள்ளையும் அடர்நீள வண்ணச் சட்டையுமாக தோளில் ஒரு தோள் பையை மாட்டிக் கொண்டு நுழைய, மீனை அப்படியே கீழே போட்டு விட்டு எழுந்து ஓடிபோய் “வாங்க ஐயா வாங்க உள்ளே கைகாட்டி மிக மரியாதையோடு அழைத்துக் கொண்டு போய் தனியாக ஓர் நல்ல மேஜையாக பார்த்து அமரவைத்து, அமரும் முன் சுத்தம் செய்து, பின் சற்று புன்னகைத்தவாறே மௌனம் காத்து, நலம் விசாரித்து மேஜை தொடைக்கும் வேறொரு நபரை அழைத்து மேலும் மேஜையை சுத்தமாக துடைக்க சொல்லி, சீரகமிட்டு வெந்நீர் கொடுத்து பிறகு என்ன வேண்டுமையா என்றார் – அந்த சனியாண்டி விலாசின் முதலாளி

“கோழிக் கால் சூப்பு இருக்கா?”

“ஐயா நீங்க அதலாம் சாப்பிடுவீங்களா?”

“ஏன் சாப்பிடக் கூடாதா?”

“யாருங்க சொன்னது நம்ம சாப்பிடத் தானுங்க கடவுளே படச்சாரு”

“அப்படியா..?”

“அபப்டி யெல்லாம் இல்லீங்கோ, ஏதோ நமக்கு தெரிந்ததை சொன்னேங்க.. டேய் ஐயாவுக்கு ஒரு கோழி கால் சூப்பு கொடு”

கொண்டு வர ஒருவர் ஓடினார். என்னடா முதலாளியே இந்த ஆட்டம் ஆடுறார் அரசியல் வாதியோ என்றொரு நினைப்பு வேலை செய்பவர்களுக்கு எல்லாம் வர, ஒருவருக்கொருவர் குசுகுசுவென்று லேசாகப் பேசிக் கொண்டார்கள்.

“வேற என்னங்கையா வேணும், நீங்க இங்க வந்தது ரொம்ப சந்தோசங்க, எங்க கடைக்கே இனி ஒரு மரியாதை கிடைக்குங்கையா”

“உங்கள் அன்பு பெரிது, இறைவன் உங்களுக்கு எல்லாம் பெரிய மனதை கொடுத்திருக்கிறார். பரவாயில்லை நீங்க போய் வியாபாரம் பாருங்க, நான் எனக்கு என்ன வேண்டுமோ அதை சொல்லிக் கொள்கிறேன்”

“அட வியாபாரம் என்னங்கையா வியாபாரம், வராதவங்க வந்திருக்கீங்க, உங்களை விட ஒருநாள் வியாபாம் தான் கெட்டாலும் வருத்தமில்லீங்க, எனக்கு என்ன வேணும்னு மட்டும் சொல்லுங்கையா”

அவரின் அன்பினால் உயிர்வரை மெச்சிப் போனார் அவர். “என்னென்ன இருக்கு இங்கே சாப்பிட?”

“மெதக்குரதுல கப்பலு; பறக்குரதுல விமானம் தவிர எல்லாமே உண்டுங்க”

“எண்ணெய்ல போட்டு நல்ல முறுவல் போல கோழி காலை மட்டும் வருப்பாங்களே அதென்ன?”

“கோழி பகோடா???!!”

“இல்லையே.. வேற…”

“ஆமாங்க, லெக் ப்ரை..”

“ஆங்.. அது ஒரு தட்டு கொடுங்க”

“சரிங்கையா சாப்பிட ரொட்டி போட்ருல்லாங்களா, சும்மா ஜம்முனு இருக்கும், கூட ஒரு மசாலாவும் போட்ருவோம்”

“சரி ஒரு மசாலாவும், ஒரு முட்டை பிரியாணியும் கொடுங்களேன், இருக்கா?”

“என்னங்க நம்ம கிட்ட போய் இருக்கான்னு, ஏம்பா ஐயாவுக்கு நல்லா நாட்டு முட்டை போட்டு ஒரு பிரியாணி, ஒரு விடலை கோழியா பார்த்து புடிச்சி ஒரு மசாலாவும் போட்டு கொண்டுவா”

“இனிமே கோழி புடிச்சி தாமதம் ஆவுமே, இருக்கிறதை கொடுங்க”

“அதலாம் இல்லீங்க, மெஷின்ல போட்டா அஞ்சே நிமிஷம் பிச்சி கழுவி சுத்தமா கொடுத்துடும், கோழி செத்ததும் தெரியாது; சுட்டதும் தெரியாது, இப்போ வந்துடும் நீங்க சூப்பு குடிங்க”

“கோழி செத்ததும் தெரியாது; சுட்டதும் தெரியாது’ எனும் வார்த்தை வலித்தது”

”என்னங்கையா.. வேற எதனா???”

“இல்லை ஒன்னும் வேண்டாம், இன்றைய நாளிதழ் இருந்தா கொடுங்களேன்”

நாளிதழா நாளிதழ். சூப்பா சூப். கறியா கறி என எல்லாமே கேட்டதும் அவரின் கைக்கு வந்தது. சற்று நேரம் நாளிதழ் புரட்டினார். சூப்பு சூடாகக் கொடுத்து குடிக்கச் சொல்லிக் கேட்டதற்கு சூடு ஆரட்டுமென்று சொல்லி விட்டார். அருகில் சாப்பிட வந்து அமர்ந்தவர்கள் எல்லாம் அவரையே பார்த்தனர். சிலருக்கு அவரை தெரிந்திருந்தது. நிறைய பேருக்கு அவரின் முகம் பரிச்சயப் பட்டிருந்தது. ஆனால், எல்லோருக்குமே அத்தனை இவரென்று சட்டெனத் தெரிந்திடவில்லை.

இன்னும் சற்று நேரத்தில் அவர் கேட்ட இதர வகைகளும் மேஜைக்கு வந்தது. கொசுறாக தூரத்தில் ஒருவன் அவரைப் பற்றி இன்னொருவனுடன் கிசுகிசுத்ததும் அவருக்கு காதில் கேட்டது. அதற்கும் சிரித்துக் கொண்டார்.

“பெரிய எழுத்தாளர், உயிர் பற்றி எல்லாம் நிறைய எழுதுவார். யாரையும் துன்புறுத்தக் கூடாதுன்னெல்லாம் சொல்வார். மரமும் செடியும் கூட என் ஜாதி என்பார், ஆனாலும் இங்க கடிக்க மட்டும் கால் கேட்கிறது”

அவர்கள் பேசிக் கொண்டது முதலாளி காதில் விழுந்திருக்கும் போல், அவர் ஓடிப போய் என்னண்ணே வேணும்? உங்களுக்கு வேண்டியதை வாங்கி சாப்பிட வேண்டியது தானே? அவரைப் பத்தி என்ன கோளாறு பேசுறீங்க”

“நாங்க தவறா ஏதும் பேசலையே”

“பேசலை சரி, பேசிப் புடுவியலோன்னு தான் பதறி போயிட்டேன்”

“அவரு நல்லா தெரிந்தவரோ உங்களுக்கு?”

“அவர் கொடுத்த உத்வேகமும், அவர் புத்தகம் படித்து கத்துக்குன தைரியமும் நம்பிக்கையுந்தாங்க இந்த கடையே”

அவர் காதிலும் அது விழுந்திருக்க வேண்டும் போல். திரும்பி அவர்கள் பக்கம் பார்த்தார். சுற்றி முற்றி கடை முழுதும் பார்த்தார். நீண்டு அகன்ற வளாகம் கொண்ட அசைவ உணவகம். தனக்கே தெரியாமல் தன் எழுத்து கொடுத்த நம்பிக்கையில் வந்தது எனில் பெருமைதான் என்றாலும், உயிர்கள் அறுத்து ருசிக்கத் துணிந்துவிட்டு அதற்கும் நியாயம் கர்ப்பிக்கும் அசைவ உணவகமா என்று எண்ணிக் கொண்டார்.

“அவரோட ஒரு புத்தகம் விட்டதில்லீங்க நானு, கல்யாணம் விசேஷம்னா கூட இவர் புத்தகத்தை இனாமா வைத்துதான் தாம்புலமே கொடுப்பேன்”

மனதிற்குள் நன்றி நிறைய அவரை பார்த்தார் அந்த எழுத்தாளர் சந்திரோதயன். அந்த முதலாளிக்கும் அவர் பார்கிறார் என்பது தெரிந்திருந்தது. என்றாலும் இதை வாய்ப்பாக எடுத்துக் கொண்டார், தன் மனதில் இருக்கும் மரியாதையை அவருக்குத் தெரிவிக்கும் தருனாமாக அவர் எண்ணிக் கொண்டார்.

“சரி, அவர் கடல் பத்தி ஒரு புத்தகம் எழுதியிருக்காரே அதை படித்திருக்கீங்களா?”

“ம்ம்ம்ம்…”

“அது ஏன், இப்போ ஒரு தொடர் எழுதுறாரே வார இதழ்லக் கூட தொடர்ந்து வருதே அதைப் படிக்கிறீங்களா?”

“ம்ம்.. மீனும் மீனும் பேசிக் கொண்டன’ தானே.., படிக்கிறேன், அதான் எனக்கே ஆச்சர்யாமா இருக்கு, எழுதினவரா இதலாம் சாப்பிட்றாருன்னு, ஏதேனும் காரணமிருக்கும், இல்லாம செய்யமாட்டாங்கல்ல”

நிமிர்ந்து அவர்களைப் பார்த்தார். கடைசியாய் அந்த முதலாளி சொன்ன வார்த்தையும் அவருடைய நம்பிக்கையும் அவருக்கு நிம்மதியை தந்திருக்க வேண்டும். லேசாக புன்முறுவல் செய்துவிட்டு நாளேட்டினை மடித்து மேஜையின் ஓர் புறம் வைத்தார். சூப் ஒரு கிண்ணத்தில் மூடி வைக்கப் பட்டிருந்தது. திறந்தார். மிளகு தூள் தூவி.. மசாலா வாசத்தில் சுவைகூட்டும் மனம் வீச சற்று ஆவியும் பறந்தது கிண்ணம்தாண்டி.

மெல்ல யோசித்துக் கொண்டே, தயங்கித் தயங்கி ஒரு மினர் சூப் விழுங்கினார்..

‘உள்ளே ஒரு உயிரின் பச்சை வாசம் இறங்கி திராவகம் போல உடலெங்கும் கலந்து பரவியது’. அடுத்து அதை கீழே வைத்து விட்டு கோழிக் கால் மசாலாவினைத் திறந்தார். ரத்தம் திரிந்த மிளகாய் தூள் நிறத்தில் சிவக்க சிவக்க அதுவும் மணத்தது. எடுத்து ஒரு ஓரமாக கடித்து விழுங்கினார்..

‘ச்சே.. என்னை கொடுத்தால் கூட இம்மனித இனம் இப்படித் தான் கண்டம் துண்டமாக வெட்டி என் அடையாளமே தெரியாமல் சுவை பட சமைத்து விடும் இல்லையா(?), தின்னத் துணிந்த நாக்கு இனி எதை மிச்சம் வைத்து தன்னை பாதுகாப்பானவன் என்று காலத்திற்கும் சொல்லிக் கொள்ளுமோ தெரியவில்லையே இறைவா?!!!!

“ஐயா சரியா இருக்குங்களா எல்லாம்?” அந்த முதலாளி ஓடி வந்து கேட்டுக் கொண்டார்.

“எல்லாமே தவறாய் போன பின், இது சரி என்றால் கேட்க யாரிங்கே தயார் என்றார்’ தாடையில் கைவைத்துத் தாங்கிக் கொண்டு அந்த முதலாளியை பார்த்தவாறே.

அந்த முதலாளி அவரின் கண்ணாடிக்குள் தெரியும் அவரின் இரு விழிகளுக்குள் வழியும் ஈரத்தை ஊடுருவி பார்த்து “என்னங்கையா பண்றது உலகம் கற்றுக் கொண்டது போல் வாழ்ந்தும் கொள்கிறது என்றார்.

“ஓ…. ஆமா ஆமா.. சரியாய் சொன்னீங்க”

“தப்புன்னு தெரிந்தா நாளுக்குப் பின்ன திருத்தித்தானெங்க கொள்றோம். இது தவறுன்னு சொல்லித் தர ஆள் வேணும்ல”

“சரி தான்”

“நான் எல்லாம் சும்மா தெருவுல சுத்தனவன் தாங்க, உங்க புத்தகமெல்லாம் படித்த பிறகு தான் புத்தகம் படிக்கிற பழக்கம் எப்படி தன் வாழ்க்கையையே மாற்றும்னு தெரிந்துகிட்டேன்”

“புத்தகம் நாம் பணம் கொடுத்து வாங்குற குரு மாதிரி. படிக்க படிக்க பாடம் தான். நேரம் அதிகம் கிடைக்காதவங்க தேர்ந்தெடுத்தேனும் படிப்பது நல்லது”

“ஆமாங்க, நான் பார்த்து பார்த்து தாங்க படிப்பேன்” அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே இன்னொருவர் முட்டை பிரியாணி கொண்டு வந்து வைத்தார். ஆவியும் வதக்கிய மசாலா மனமும் சுள்ளென்று மூக்கில் ஏறியது.

“சரிங்கையா நீங்க சாப்பிடுங்க நானாக உங்களுக்கென்று வேற ஏதேனும் (ஸ்பெசலா) பிரித்தியேகமா போட்டுக் கொண்டாறேன்”

அவர் நகர, முட்டை பிரியாணியிலிருந்து ஒரு கவளம் அள்ளி வாயில் போட்டார். இரவையும் பகலையும் தன் மலட்டுத் தனத்தை எண்ணி எண்ணி கண்ணீர் வடித்து ஒரு மழலையின் குரலுக்கு ஏங்கி, சாகக் கூட முடியாமல் வாழ்வினை கழிக்கும் பல தாயுள்ளங்களின் கண்ணீர் அவர் நினைவில் வருத்தமாய் சொட்டியது.

எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு மலைப்பாக பார்த்தார். திரும்பி ஜன்னலின் வழியே மரத்தின் மீது நின்று கத்தும் காகம், தூரத்தில் சாலையை கடந்து போகும் மாடுகள், வாலாட்டி பின்னே ஓடும் நாய், மதில் மேல் நின்று மியாவ் என்று பாவமாக கத்தும் பூனை, காற்றின் மொழிக்கெல்லாம் தலை அசைத்துக் கொண்டு ஆடும் மரம், வெயிலுக்கு பயந்து நிழலில் வந்து நிற்கும் மனிதர்கள், இட்டது தன் கடமையென்று தெருக் காதுகளை பிய்த்துக் கொண்டு போகும் வாகனங்கள், பக்க வாட்டில் காற்றின் கைபிடித்துக் கொண்டு பறக்கும் சிவந்த மண் தூள்களும் அதன் வாசமும், காலில் விழுந்து மிதி பட்டாலும் சரியாக அணையாமல் கடந்து செல்லும் குழந்தைகளின் நாசியில் நுழைந்து அவர்களின் ஒரு சொட்டு உயிரையேனும் எல்லோரின் முன்னிலையிலும் குடித்துக் கொள்ளும் வெண்சுருட்டுத் துண்டுகள் என எல்லாவற்றையும் பார்க்கிறார்.

ஒரு பெரு மூச்சினை இழுத்துவிட்டுவிட்டு, உள்ளே திரும்புகையில் மேஜையின் மேல் கொட்டிவைக்கப் பட்டுள்ள மீன்களின் மேல் பார்வை படுகிறது. உயிருக்கு போராடியும்; விட இருக்கும் மிச்சம் மீதி உயிரின் மரண வலி தாளாமலும் துடித்தும் கொண்டிருக்கும் மீன்களைப் பார்க்கிறார். மேஜையின் மேல் இருக்கும் இறைச்சியையும் பார்க்கிறார், உள்ளே உயிரின் பச்சை வாசத்தின் நெடி தொண்டை நெட்டி வெளியே உரைக்க; இதுவரை தான் வலியுறுத்தி வந்த மனிதம் கண்ணீராய் அவரின் மனதை நனைக்கிறது.

அந்த மேஜையின் மேல் கொட்டிவைக்கப் பட்டுள்ள அத்தனை உயிரையும் காப்பாற்ற, என்னை ஒருவனை வேண்டுமெனில் வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் என்னை வெட்டிவிட்டேனும் அந்த மீன்களை விட்டுவிடுவார்களா??? என்னை ஒருவனை கொன்றுவிட்டு அத்தனை உயிர்களையும் காக்க, அறிவு பெறுமா இச் சமூகம்???

அதற்குள் ஒருவர் ஒரு அன்னக் கூடை போன்ற அலுமினியப் பாத்திரம் கொண்டு வந்து மீன்களை எல்லாம் வாரிப் போட்டுக் கொண்டு போனார். மேஜைக்கு கீழே ஒதுங்கி இரண்டு மீன்கள் மட்டும் வாளை அசைத்துக் கொண்டு கொஞ்சம் இருக்கும் உயிரைவைத்துக் கொண்டு, அவரையே பார்த்துக் கொண்டேப் போனது. அவைகள் இருக்கும் தன் மிச்ச உயிரையும் தனக்கென்று புத்தகம் எழதிய அந்த சந்திரோதயனைப் பார்த்துக் கொண்டே போக்க எண்ணியிருக்கும் போல்.

என்றாலும் அதிசயமாய் மீன் வாரிச் சென்றவர் அவ்விரு மீன்களைச் சரிவரப் பார்க்க வில்லை. எப்படியோ தன்னிரு கண்கள் தப்பித்தது போல, அவ்விரண்டு மீன்களும் தப்பித்துக் கொண்டதாய் அவருக்கு ஒரு நிம்மதி எழ, சட்டென்று எழுந்துச் சென்று அம்மீன்களை எடுத்துக் கொண்டு வெளியே ஓடி சமையல் அறைகளின் வாசலின் வழியாக வெளியே போனார்.

பெரிய பெரிய பாத்திரங்கள் எல்லாம் அங்கே கழுவப் போடப் பட்டிருந்தன. இரண்டு மூன்று வேறு ஏதோ பழைய எந்திரங்கள் இருந்தன. குழாய்கள் வசதி செய்யப் பட்டிருந்தது. ஒரத்தில் ஒரு இரும்பு சல்லடையினால் மூடி ஓரளவு நீர் நிரம்பிய ஆழக் கிணறு ஒன்றும் இருப்பது தெரிந்தது. வேகமாக சென்று அந்த இரும்பு சல்லடையினை நீக்கி அந்த இரண்டு மீன்களையும் பூவெடுத்து தூவுவதுபோல வலித்துவிடாமல் கிணற்றிலேப் போட்டார்.

நீரின்றி, வெளிவெப்பத்தின் கொடூரத்தினால் விட யிருந்த தன் கடைசி உயிரின் ஒரு துளி அந்த கிணற்று நீரில் நனைந்து உயிர்பூக்கும் துள்ளல் உடம்பெல்லாம் பரவியது அந்த இரு மீன்களுக்கும். உயிர்பெற்றுவிட்ட ஆனந்தத்தில் துள்ளிக்குதித்து இங்குமங்குமாய் நீந்தி; அவர் பாதம் தேடி அலைந்தன அம்மீன்களிரண்டும். நன்றி சொல்ல வடித்த அவைகளின் ஆனந்தக் கண்ணீரெல்லாம் அவருக்கு தெரியாமல் அந்த கிணற்று நீரோடு கலந்து போனது..
——————————————————————————————-
தொடரும்.. (மீன்கள் இன்னும் நிறைய பேசும்..)

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in மீனும் மீனும் பேசிக்கொண்டன.. and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

13 Responses to மீனும் மீனும் பேசிக் கொண்டன.. ( பாகம் – 7)

 1. rathnavel natarajan சொல்கிறார்:

  நல்ல பதிவு.

  Like

  • தவறாமல் படித்து வருகிறீர்கள். உங்களின் அவசர நேரத்தில் எனக்கும் நேரம் ஒதுக்கி கருத்து பதிந்து செல்வது நன்றிக்குரியது ஐயா.

   இன்றே தங்களின் அரும்பணி பற்றிய விவரத்தினை, இவ்வயதிலும் தமிழுக்கென ஆற்றும் பணியினையும் கண்டேன். மிக்க பொதுவுடைமையும் பொதுநலம் குறித்துமான தங்களின் பயணம் வளர்ச்சியின் நன்மைக்குரியது. மிக்க நன்றியும் வணக்கமும் ஐயா!!

   Like

 2. jani சொல்கிறார்:

  நல்ல பதிவு..

  Like

 3. munu.sivasankaran சொல்கிறார்:

  வணக்கம் …! மிகவும் மகிழ்ச்சி ! கருத்தைப் பதிய களம் தந்தமைக்கு நன்றி..!

  மனித சமூகத்தை நல்வழிப் படுத்த உலகில் தோன்றிய சமயநெறிகளில் சமண நெறியைத் தவிர்த்து வேறெதிலும் புலால் மறுப்பு என்பது கிடையாது.! ஹிந்து சமயத்திலும் குறிப்பிட்ட ஒரு சாராரைத் தவிர்த்து மற்றெல்லோரும் இயல்பான உணவு முறையில் வாழ்பவரே..!

  தமிழனின் சமய நெறிக்கு அப்பாற்பட்ட சீர்பெற்ற நாகரிக வாழ்க்கையில் அவைகள்குறிக்கிட்டபோதுதான் அவன் அடிமைசமூகமாய் மாறிப்போனான் என்று அறிஞர்கள் ஆய்ந்து கூறுகிறார்கள்..! குறிஞ்சி முல்லை நெய்தல் பாலை மருதம் என்ற ஐந்திணை வாழ் நிலங்களில் வயலும் வயல் சார்ந்த வாழ்க்கையான இன்றைய மருதத்தின் பெருக்கத்தால்தான் குறிஞ்சியும் முல்லையும் நெய்தலும் பாலையாகி கொண்டிருக்கின்றன…! இன்னும்கூட ஆழ்ந்து சிந்தித்தால் பேரழிவு என்றாலும் போரழிவு என்றாலும் நெய்தல் வாழ்வாதாரங்கள்தான் உடனடி பாதிப்புக்கு உள்ளாகின்றன ! உலகமயமாக்களின் உல்லாச வாழ்க்கை நெயதல்நிலக்காரர்களின் மீது நெருப்பள்ளிகொட்டுகிறது..!

  நீங்களுமா…?

  Like

  • நோக்கம் புரிந்தும் கேட்பதால் வருத்தத்திற்குரிய கேள்வி தான். என்றாலும், உங்களின் பார்வை குறிப்பிட்ட மனிதரை மட்டுமோ அல்லது குடித்தே வாழ்பவன் ஒருவன் இருப்பின் அவனை தடுக்க நினைத்தால், அல்லது தடுத்தால், பின் அவனுக்கு உண்ண உணவே கிடைக்காது என்பது போல் உள்ளது. என் வருத்தம் உலகத்தின் மொத்த உயிர்களினிடத்துமாய் நீள்கின்றது. குறிப்பாக மனிதரிடத்தும்.

   நல்லவை நோக்கிய மாற்றங்கள் தேவை ஐயா. ஆயிரம் கோடி மைல்கள் தாண்டிய வெற்றி எனினும் ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து நகரவேண்டியுள்ளது. இது முதல் நகர்தலுக்கான வேண்டுதல் மட்டுமே, ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் படிப்பவரின் புரிதலுக்கு உட்பட்ட அளவு பொருத்தது.

   தவிர, கண்ணெதிரே, துடிக்க துடிக்க கழுத்தை வெட்டும் உயிரை தடுக்க மனசாட்சியும், பார்வையில் மனிதமும் போதும், அன்றி எந்த சமயநெறியிலும் குறிப்பிடேயாக வேண்டிய கட்டாயமெல்லாம் இல்லை என்பதே மேன்மையெனப் படுகிறதையா.

   இதர வாசிப்போரின் புரிதலுகு அவசியப் படின் : –

   குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த நிலமும்
   பாலை – முல்லையும் குறிஞ்சியும் திரிந்து வெம்மை உற்ற நிலம்
   முல்லை – காடும் காடு சார்ந்த நிலமும்
   மருதம் – வயலும் வயல் சார்ந்த நிலமும்
   நெய்தல் – கடலும் கடல் சார்ந்த நிலமும்

   Like

 4. Umah thevi சொல்கிறார்:

  கதையை படித்து கொண்டு இருக்கையில், மனதில் அந்த இரண்டு மீன்களும் என்ன ஆனது, என்ன ஆச்சு,
  என்று கேள்விகளோடு தொடர்ந்து .. இறுதியில்

  // அந்த இரு மீன்களுக்கும். உயிர்பெற்றுவிட்ட ஆனந்தத்தில் துள்ளிக்குதித்து இங்குமங்குமாய் நீந்தி; அவர் பாதம் தேடி அலைந்தன அம்மீன்களிரண்டும். நன்றி சொல்ல வடித்த அவைகளின் ஆனந்தக் கண்ணீரெல்லாம் அவருக்கு தெரியாமல் அந்த கிணற்று நீரோடு கலந்து போனது..//

  என்று முடிக்கையில் மனதுக்குள் ஒரு பேர் ஆனந்தத்தை ஏற்படுத்தியது. அருமையாக முடித்து உள்ளீர்கள்.

  Like

  • மிக்க நன்றி உமா, கதையில் மட்டுமே காக்க முடிகிறது. நிஜத்தில் மிகக் கடினம் போல்!! இருப்பினும், அதுகள் விதி; என்று விட்டுவிட முடியாமையின் தவிப்பு தானே இது. புரிபவருக்கு புரியும். புரிகையில் ஒரு மீன் காப்பாற்றப் பட்டாலும் ‘மீனும் மீனும் பேசிக் கொண்டமைக்கு ஒரு பயன் இருக்கும்!!

   Like

 5. munu.sivasankaran சொல்கிறார்:

  வணக்கம்.. உங்களின் பண்பட்ட பதில்களுக்கு நன்றி…! மனம் புண்பட்டிருப்பின் மன்னிக்கவும்..! முரண் படுகிறேனே அன்றி எதிர்படவில்லை..! கொலை, களவு, மது, சூது , போன்ற பஞ்சமாபாதகங்களுக்கு ஒப்பாக புலால் உண்பதை குறிப்பிடுகிறீர்களோ என்றுதான் கவலையுறுகிறேன்..! உங்கள் பாதையின் நீட்சி ஒருவழிப் பாதையில் முடியும் என்பதே என் தாழ்மையான கருத்து..! காலில் மிதிப்பட்டு சிற்றுயிர்கள் அழிந்துவிடுமோ என்று செருப்பணியாமலும் மூச்சுப் பாதையில் நுண்ணுயிர்கள் இறந்துபடுமோ என்று முகமூடி அணிந்தும் வாழ்கின்ற சமணர்களின் பாதையில் இருந்து மீண்டுவந்தவர்கள்தானே நாம்…? சமூகத்தின் இன்றைய தடைக்கற்களை நெம்பிப் புறந்தள்ளும் கோலாக உங்கள் எழுதுகோல் இருக்கவேண்டும் என்பதே என்போன்ற வாசகர்களின் எதிர்ப்பார்ப்பு ..! காலில் மிதிபடுபவர்களை கவனியாது கண்ணில் தென்படுபவர்களை பற்றிய கவலையாக உங்கள் படைப்பை பார்ப்பது என் தவறல்ல..! அது வலி தாங்காத முனகல்…! நன்றி..!

  Like

  • // கொலை, களவு, மது, சூது , போன்ற பஞ்சமாபாதகங்களுக்கு ஒப்பாக புலால் உண்பதை குறிப்பிடுகிறீர்களோ என்றுதான் கவலையுறுகிறேன்// புரிதலுக்கான உதாரணமாக மட்டுமே அதைக் காட்டினேன் ஐயா. மற்றபடி எதிர்பார்ப்புக்கள் எதையும் வைத்துக் கொள்ளாமல் எண்ணுவதை பொது நன்மைக்கென எண்ணி எழுதவே நோக்கம் கொள்கிறேன். வலிக்கும் என்று தெரிந்தாலும் மருத்துவம் பார்ப்பது இன்றைய வலியை கவனியாத அர்த்தத்தில் அல்ல; நாளைய ஆபத்தை தவிர்க்க என்றும் புரியவேண்டிய நிர்பந்தத்தில் பயணிக்கிறோம்.

   அநேகம், தற்காலிகமாகவோ அல்லது இறுதியாகவோ அடுத்த பாகத்தொடு இம் ‘மீனும் மீனும் பேசிக் கொண்டன’ நிறுத்தப் பட உள்ளன அல்லது முடிக்கப் பட உள்ளன. அதில் எதன் நன்மைக் கருதியும் இதுநாள் வரை இத்தனை ஆழமாக இது எழுதப் படுகிறது என்பதையும் அறிய வாய்ப்புள்ளது. தாங்களும், வருந்தி இருப்பின் மன்னிக்கவும். நன்றிகளும் உரித்தாகட்டும் ஐயா!!

   Like

 6. suganthiny சொல்கிறார்:

  ஒரே சொல்லில சொல்லனும்னா நீங்க இந்த மிலேனியத்தின் புதிய பிரம்மா தான்.

  தவிர, நான் கூட suganthiny77@wordpress.com இல் எனது கவிதைகளை பதிப்பித்துள்ளேன் அதற்கு பதில் போடவும்.

  Like

 7. பிங்குபாக்: மீனும் மீனும் பேசிக் கொண்டன.. ( பாகம் – 8) | வித்யாசாகரின் எழுத்து பயணம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s