மணமகன் : தா. அருள் மணமகள்: ஜெ. சுஜிதா
மணநாள்: 05.06.2011
வாழ்த்துப் பா….……………………………….
என் உயிருக்குயிராய் இருந்தவளை
உயிராகவே சுமந்தவளே;
என் தங்கை இறந்தா ளென
இன்னொருத்தியாய் வந்தவளே;
என் தாய்; உனக்காக சுமக்காத பத்து மாதத்தை
எனக்காக மனதில் சுமந்தவளே;
சுஜிமா’ என்று நினைத்ததும் – அண்ணாயென
ஓடிவந்து நிற்கும் – அன்பின் சிகரமே;
ஒருநாள் விட்டுச் செல்வாயென்று தெரிந்தும்
என் இருப்பின் – எல்லைவரை
இதயத்தில் நிறைந்தவளே – என்னன்பு
உடன்பிறப்பே; இனியவளே;
நான் தூரநின்று தூர நின்றே
தூக்கி வளர்த்த – உயிர் சொந்தமே
என் சிரிப்பிற்குக் காத்திருக்கும்
இன்னொரு இனிய தோழியே; ஆருயிர் ஆனவளே;
உலகின் போதனைகளுக்கு காது கொடுக்காத
என் பாசப் பிணைப்பே –
இன்று எதிரே கண்டாலும்; அண்ணாயென வந்தெனை
கட்டிக் கொள்ளும் குழந்தை மனமே;
தொப்புள்கொடி உறவு பூண்டு
பூர்வஜென்ம மீதம் போல் – என்
வாழும் நாட்களின் வாசனையாய்
இதய கமலத்தில் வாழும் அன்புறவே –
இதோ; உனக்காய் இத்தனை வருடம் சேர்த்துவைத்த
சொற்களை எல்லாம் – சேமித்து
வாழ்த்து மலர்களாய் தூவுகிறேன் – நீ
வாழிய பல்லாண்டு; வாழ்வின் முழு சிறப்போடு!!
பேரன்புடன்.. பெருமகிழ்வுடன்…
ஈருடலாய் இன்று சேரும் ஓருயிர் சுஜிமாவிற்கும் திரு. அருளிற்கும்
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்களும் இறை ஆசியும்.. உரித்தாகட்டும்!!
வித்யாசாகர்
மனப்பூர்வ மண விழா வாழ்த்துக்கள்.
LikeLike
மிக்க நன்றி ஐயா, உங்களின் வாழ்த்து அவர்களின் மகிழ்வை உச்சப் படுத்தட்டும்!!
LikeLike