உன் புத்தகப் பை நிறைய, அந்த கண்ணீரும் சிரிப்பும்!!

நீ பிறந்தாய்
எனக்குள் ஒரு பூ பூத்து
அப்பா எனும் வாசமாய்
உடலெங்கும் கமழத் துவங்கியது..

பின் – நீ வளர வளர
அந்த அப்பாயெனும் வாசத்தால்
நானும் உலகெங்கும் மணம் பரப்பி
மதிப்பால் நிரம்பி நின்றேன்;

இன்றும் –
உன்னிடம் நான் பெற்ற –
பெரும் –
பாடங்கள் ஏராளம், ஏராளம்;

என் குழந்தை பருவ கேள்விகளுக்கு
விடையும் –
வளரும்போது சந்தித்த குழப்பங்களுக்குத்
தீர்வையும்  உன்னிடமிருந்தே நான் பெற்றுக் கொண்டேன்.

அப்படி –
உன் ஒவ்வொரு அழுகையும்
சிரிப்பும் –
என்னையும் சேர்த்து சிரிக்கவும் அழவும் சிந்திக்கவும்
வைக்குமொரு தருணத்தில் தான்
பாடங்களை சுமந்து நீ பள்ளிக்குப் போகத் துவங்கினாய்;

போகும்போது இதயம் வழிய
கண்ணீரோடு போகும் நீ
வரும்போது புத்தகப் பை நிறைய சிரிப்பை மட்டுமே
வாரிக்  கொண்டு வந்தாய்;

இது புரிந்தும் உன்
அழும் விழிகளைத் துடைத்துவிட்டு
எந்த கட்டாயத்தை சாதித்துக் காட்டிட
உன் அழுகையினை மீறியும் உனைப்
பள்ளிக்கனுப்புகிறோமோ’ தெரியவில்லையடா…

ஒரு வேலை எல்லோரும் சுமந்த
ஊமை கனவுகளை போல் –
பதில் அவசியமற்ற இடத்தில் எழும்
கேள்வி போல் – நோக்கம் இன்றியும்
புத்தகங்களுக்குள் உன்னை புதைய வைக்கிறோமோ – எனும்
வருத்தம் ஒவ்வொரு நாள் உன்னை
தனியே விட்டு வருகையிலும் உயிர் கொள்ளும் வதை
என்பதை நீ –
பிற்காலத்தில் புரிவாய்;

என்றாலும் இந்த மூன்று வயதில்
நான்கு வயதில் நீ எதைப் புரிந்து
படிப்பென எடுத்துக்கொள்வாயென

என்னை – இதை செய்யப் பணிக்கிறதோயிந்த சமூகம் ?
தெரியவில்லை,

எப்படியோ போகட்டும் அதலாம்; இனி நீ
வீட்டிலேயே இரு,
விரும்பும் போது போ; படி; யென்று
கைகட்டிக் கொண்டுவிட யிலாமல்
நாளையை எண்ணி – இதோ நானும் உன்னோடு
உனக்கான புத்தக பையையும் மதிய உணவுகளையும் சுமந்துக் கொண்டு
நடக்கிறேன்;

பள்ளிக்கூடம் வந்ததும்
உன் கையை விட்டுவிட்டு போ என்கிறேன்,

நீ வேண்டாம்பா
நான் போகலைப்பா என்று அழுகிறாய்,

நான் சற்று முகத்தை கடினமாக
வைத்துக் கொண்டு போ’ என்கிறேன்;

நீ தேம்பியழுத கண்களைத் துடைத்துக் கொண்டு
என்னை திரும்பிப் பார்த்து திரும்பிப் பார்த்து
அழுதுக் கொண்டே போகிறாய்;

நான் உன்னை பார்க்காமல்
பள்ளிக் கூடத்து வாசலைக் கடந்து
விருட்டென வீட்டிற்கு நடந்துவருகிறேன்;

நான் உள்ளே அழும் அழையின்
சப்தம் கேட்டு; நாளை நீ படித்து
வாழத் தக்கவனாய் வருகையில்
எனை உனக்குப் புரியலாம்போலென என்
ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும்
பூமியில் சிந்திக் கொண்டே எனக்கு
ஆறுதல் சொல்கிறது.

அதேநேரம், நாளை ஒருவேளை நீ
உன் பிள்ளையை உன்னோடு வைத்துக் கொண்டு
அவனுக்கு விருப்பம் வருகையில் மட்டும்
பள்ளிக் கனுப்பினால் –
எனை ஒருவேளை கொடுமைக்காரனென – திட்டவும் செய்வாயோ’ என்று
பயமும் எழுகிறது;

பயத்தை எல்லாம் தூக்கி
மூட்டைக் கட்டிப் போட்டுவிட்டு
நேரமாகிவிட்டதை யுணர்ந்து
அலுவல் நோக்கி ஓடுகிறேன்;

அலுவல் வேலைகளுக்கிடையே யெல்லாம் – உன்
அழுத முகமே ஆங்காங்கு தெரிகிறது;
முகத்திற்கு பின்னே உனக்குள்
உன் விருப்பமின்றி திணிக்கப் படும்
பாடப்புத்தகங்களும் கனக்கின்றன!!
————————————————————————–
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to உன் புத்தகப் பை நிறைய, அந்த கண்ணீரும் சிரிப்பும்!!

  1. rathnavel natarajan சொல்கிறார்:

    அருமையான கவிதை.
    உங்களது ஆதங்கம் புரிகிறது. குழந்தைகளை படிக்க வைக்க வேண்டுமே.
    வாழ்த்துக்கள்.

    Like

  2. suganthiny சொல்கிறார்:

    கவலை வேண்டாம்.

    Like

  3. வித்யாசாகர் சொல்கிறார்:

    பொதி சுமக்கும் உணர்வோடு மட்டுமேப் பள்ளிக்குப் போகும் குழந்தைகளைக் கண்டே வருத்தமுற்றவன். பிள்ளை கண்ணீர் விட்டுப் போகையில் வலிக்காதா? வலித்த சுவடுகளே இவ்வரிகள் சுகந்தினி மற்றும் ஐயா!!

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s