1
ரத்தம் பிசுபிசுத்த நினைவுகளை
சுயநலத்தினால் –
கழுவிக் கொண்டாலும்
கறைபடிந்த உணர்வோடு திரியும்
இதயத்தில் –
இன்னும் ஒட்டிக் கொண்டுள்ளது அந்த
ஈழத்திற்கான ஒருதுளி நம்பிக்கை!!
———————————————–
2
ஈழம் வெல்லும் வெல்லுமென்று
முழங்கியேனும் கொண்டிருப்போம்;
உள்ளே உறங்கிப் போகும் உணர்வுகள்
அம்மண்ணில் உறைந்த ரத்தத்தை நினைத்தேனும்
ஈரமொடிருக்கட்டும்.
நெஞ்சின் ஈரம் –
நாளை எஞ்சிய உறவுகளையேனும்
காக்கப் போராடத் துணியும்!!
———————————————–
3
ஐ.நா. சங்கு வைத்து ஊதியேத்
திறக்காத காதுகள் –
இனி யார் கத்தித் திறக்குமோ?
எனும் பயத்தில் – எழுகிறது
இன்னொரு போராட்டத்திற்கான
ஆயத்தங்கள்!!
———————————————–
4
உடைந்த கால்களும்
கிழிந்த இதயமும்
பதறிய கதறலின் ஓலமும்
மண்ணில் புதையுண்ட யாருமே
தோற்கவில்லை;
பார்த்துக் கொண்டும்
கேட்டுக் கொண்டுமிருந்த நாம்
படித்துவிட்டு நகரும் வரை –
தோற்றுக் கொண்டே யிருக்கிறோம்!!
———————————————–
5
தமிழகத்தின் நிறைய தெருக்களில்
ஈழத்திற்கானப் போராட்டங்கள்
புகைப்படங்களாகவும் –
ஓவியமாகவும் காட்சி படுத்தப் பட்டிருப்பினும்;
அதை ஒட்டிய கைகள்
காசு வாங்காமல் ஒட்டியிருப்பின்
ஈழவெற்றிக்கான ஒருகொடி
விரைவில் தமிழகத்திலும் பறக்கும்!!
———————————————–
வித்யாசாகர்
//உடைந்த கால்களும்
கிழிந்த இதயமும்
பதறிய கதறலின் ஓலமும்
மண்ணில் புதையுண்ட யாருமே
தோற்கவில்லை//
உள்ளங்கள் உடைந்து போனாலும் உங்கள் எழுத்தால் எங்கள் உணர்வும் புத்துணர்ச்சி அடையுது.
LikeLike
கொடுமையான வலிகளையும், ஈழ
தேசத்தின் விடுதலை உணர்வையும் ,
உங்கள் அற்புதமான எழுத்துக்களால்
மீண்டும் மீண்டும் உணர, சிந்திக்க வைக்கிறீர்கள் .
உங்கள் உழைப்பு நிச்சயம் வெற்றி அடையும்.
ஈழம் வெல்லும் வெல்லுமென்று
முழங்கியேனும் கொண்டிருப்போம்;
ஈழவெற்றிக்கான ஒருகொடி
விரைவில் தமிழகத்திலும் பறக்கும்!!
முழு நம்பிக்கையோடு பிராத்தனை செய்வோம்!!
LikeLike
மிக்க நன்றி உமா. கடமைப் பட்டுள்ளோம் என்பதை நான் கடமைப் பட்டுள்ளேன் உமா. அண்ணா அண்ணா என்று எனை நம்புமென் உறவுகளின் விடிவிற்கு எதையேனும் எழுத்தாலேனும் செய்யக் கடமை பட்டதில் என் உறவுகளின் மீதான அன்பை மெய்ப்பிக்கும் உணர்விது உமா. இருப்பினும், நம்பிக்கையும் வாழ்க்கை இல்லையா, நல்லதையே நமக்கு வேண்டியதையே ஆணித்தரமாய் நம்புவோம்!!
LikeLike
உள்ளே உறங்கிப் போகும் உணர்வுகள்
அம்மண்ணில் உறைந்த ரத்தத்தை நினைத்தேனும்
ஈரமொடிருக்கட்டும்.
இது போன்ற கவிதை வரிகளால் ஈழத்தின் ஆணிவேரின் ஈரம் காயாமல் சொட்டு சொட்டாக நீர்விட்டுக்கொண்டிருக்க வேண்டும் . நன்றி..நன்றி..!
LikeLike
நிச்சயமாக ஐயா.. அம்மண்ணின் விடுதலைக்கு எதிர்பார்ப்பின்றி நகரும் காற்றினைப் போல்; இயங்கிக் கொண்டே இருப்போம்!!
LikeLike