93 ஞானமடா நீயெனக்கு…

1
ருட்டில் தெருவின் ஓரம் நின்று
வாசலில் போகும் வரும் வண்டிகளின்
வண்ண விளக்குகளை உனக்குக் காட்டினேன்;

அவை சென்று தெருமுனை
திரும்பும்வரை நீ
கண்கொட்டாமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தாய்

நானும்
உன்னையே பார்த்துக் கொண்டிருக்கையில்
ஒரு வண்டி உன்னைக் கடந்துப் போய்
தெருமுனை எட்டியது –

நீ இருட்டில் தெரியுமந்த
வண்டிவிளக்கின் வண்ணத்தில்
ரசனை பூரித்து
லேசாக சிரித்தாய்,

உன்னையே பார்த்துக் கொண்டிருந்ததில்
எனை மறந்து நானும் உன் சிரிப்பில் கரைந்துக் கொண்டாலும்
மனசு என்னவோ இன்னொரு வண்டி வருமாயென
காத்திருக்கவே செய்தது!
——————————————————————-

2
நீ
பிறந்து

ஒன்ப
து மாதமே ஆகிறது..

உனக்குப் பாவாடை சட்டை
போட்டதாய் சொன்னார்கள்,

ஓடோடி வந்து பார்த்தேன்
நீ எனைப் பார்த்ததும் துள்ளிக் கொண்டு
ஓடி வந்தாய்;

எனக்கு பாவாடை சட்டையில் நீ
வளர்ந்தவளாகத் தெரிந்தாய்,

கனவுகள் வருடங்கள் கடந்து
பூக்கிறது; இடையே
பயத்தில் சில இதழ்கள்
காலத்தின் கட்டாயம் கருதி
கண்ணீராய் உதிர்கிறது..
——————————————————————–

3
ன் சிரிப்பு –
என்றுமே எனக்கு மீண்டும் மீண்டும் கிடைக்கும்
வரம் தான்;

வரம் பெற எனக்கு
வேண்டியதெல்லாம் – ஒரு குச்சி மிட்டாயோ
கை விரல் அப்பலமோ
குடிக்கும் தேநீரில் ஒரு சொட்டோ
மேலே தூக்கி உன் கன்னத்தில் கொடுக்கும்
ஒரு முத்தமோ மட்டுமே!!
——————————————————————-

4
து என்னடி
சிரிப்பது –
சிட்டுக்குருவி வாய்திறந்ததுபோல்;

இருந்தாலும் அந்த உன்
சிரிப்பில் தான் திறக்கிறது
எங்களுக்கான வசந்தத்தின் கதவும்!!
——————————————————————-

5
ன்னை தூக்கி மடியில்
வைத்துக் கொள்வேன்,

சிலநேரம்
பசி வந்துவிட்டால்
உன் அம்மா வந்து வாங்குவதற்குள் வீல் என்று
கத்துவாய், பூச்சிப் போல நெளிவாய் நீ;

உன்னை எண்ணப் பண்ணுகிறேன் பாரென்று
கோபத்தில் உனைப் பார்ப்பேன்
திட்டக் கூட திட்டுவேன்

நான் திட்டுவதை நீ
உன்னிடம் நான் வேறு ஏதோ பேசுவதாய் எண்ணி
அதற்கும் சிரிப்பாய்

உன் சிரிப்பைக் கண்டு
நானும் சிரிக்க – முத்தங்களே உனக்கு
மீண்டும்  பரிசாகும்!!
——————————————————————-

6
ண்ணனைத் தூக்கி
ஆரி ராரி ராரி ராரோ என்று சொல்லி
கொஞ்சம் ஆட்டினால் போதும்
உடனேத் தூங்கிப் போவான்;

உன்னிடம்  அந்த ஆரிராரோ எல்லாம்
செல்லுபடியாவதில்லை,

இரண்டு கையிலும் உன்னை ஏந்தி
உன்னையே பார்ப்பேன் நான்

நான் பார்க்க பார்க்க நீ
சிரிப்பாய் சிரிப்பாய்
அப்படிச் சிரிப்பாய்

நானும் சிரித்துக் கொண்டே உன்
கன்னத்தில் முத்தமிட்டு உனைக் கொஞ்சுவேன்,

நீயும் என் முகத்தை கட்டிக் கொண்டு
உவா உவா என்று உன் கன்னத்தை வைத்துக்
கொஞ்சுவாய்
கன்னத்தோடு கன்னம் வைத்து உரசுவாய்
அப்படியே லேசாக ஆராரோ பாடி ஆட்டினால்
என் மனநிலையோடு ஒன்றிப் போய்
சற்று நேரத்தில் உறங்கியும் போவாய்;

நீ உறங்கிய பின்
உன்னையே பார்ப்பேன் நான்

வைரமுத்து சொன்ன
பிஞ்சுப் பிரபஞ்சம் என் கையில் உறங்குவதாய் ஒரு
கர்வம் வரும் எனக்கு;

அந்த கர்வத்தோடு சேர்த்து
என் கர்வத்தையும் – நீ பெண் என்பதால்
உதறி விடுவேன்!!
——————————————————————-

7
பொ
துவாக நான் படுக்கவே
நடுநிசி கழியும்;

அப்போது பார்த்து நீ
வீல் என்று கத்துவாய்;

என்னாயிற்றோ என்று பயந்து
விளக்கிட்டுப் பார்த்தால் நீ
கண்ணைக் கூடத் திறக்காமல்
வேறு  எதையோக்  கண்டு அலறுவது போல்
அலறுவாய்;

நடு இரவின் நிசப்தத்தில்
எங்கு அக்கம்பக்கத்தாருக்கு தொந்தரவாக
இருக்குமோ என்று வேறு பதறுவோம்
நாங்களிருவரும்;

நீயோ எத்தனை சமாதானம் செய்தாலும்
அடங்குவதேயில்லை
கன்னத்தில் மாறி மாறி நான்கு வைக்கலாமா
என்று கோபம் வரும்;

கோபத்தில் ஏதேனும் கடிந்துக் கொண்டால்
அதற்கும் சேர்த்து இன்னும் வேகமாக கத்துவாய்
வேறு உன்னை என்ன செய்திட முடியும் – அத்தனைக்
கோபத்தையும் அடக்கிக் கொண்டு,

கண்ணே மணியே செல்லமே என்று கொஞ்சி
வாசலுக்குக் கொண்டு போய்
நிலா காட்டி
விளக்கு காட்டி
சாமியிடம் வேண்டி திருநீரிட்டு
ஆரிராரோ பாடி – எப்படியோ ஒரு கணத்தில்
உறங்கிப் போவாய்;

தூங்கியும் தூங்காமலும்
அன்றைய இரவு முடிந்து காலை எழுந்தால்
கைமீது பூமாதிரிப் படுத்திருபாய்,

முகத்தைப் பார்த்ததும் ‘ஐயோப் பாவம் குழந்தை
எப்படியெல்லாம் இரவு
கோபப் பட்டமேயென்று எண்ணுகையில்
உள்ளே உன் உறக்கத்தைக் கலைக்காமல்
மானசீகமாய் ஒரு மன்னிப்புச் சுரக்கும்,

நீ சடாரென கண் திறந்து
எதிரே என்னைக் கண்டதும் சிரிப்பாய்

நான் கேட்ட மன்னிப்பு உனக்குத்
தெரிந்திருக்காது –
என் சிரிப்பு மட்டுமே தெரியுமேயென்று எண்ணி
நானும் சிரித்துக் கொள்வேன்

இரவெல்லாம் தூங்காத தூக்கம்
பகலெல்லாம் இப்படி உனக்காக –
கவிதையாகப் பூத்திருக்கும்,

காலத்தின் கைகளில் எல்லாம்
கவிதைகளில் புதைந்த
நினைவுகளாகவேப்  பதிந்திருக்கும்!!
————————————————————
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

16 Responses to 93 ஞானமடா நீயெனக்கு…

  1. rathnavel natarajan சொல்கிறார்:

    அருமையான பதிவு.
    நாமும் குழந்தையாகிறோம்.
    வாழ்த்துக்கள்.

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      நம் குழந்தைப் பருவத்து நினைவுகளை மீட்டெடுக்கும் முயற்சியும் தானிது. காரணம், நம்மை புரிகையில் நம் பெற்றோரையும் புரியுமெனும் நம்பிக்கை ஐயா! வாழ்த்திற்கு நன்றி!

      Like

  2. அமைதிச்சாரல் சொல்கிறார்:

    இரவில் விழித்த தூக்கத்தால் பூத்த பகல்பூக்கள் ரொம்ப அழகாருக்கு.. அருமை. எந்தவொரு கல்லையும் கனியச்செய்யும் மந்திரவாதிகளாச்சே,..இந்த பிஞ்சுப்புன்னகைகள் :-))

    Like

  3. Umah thevi சொல்கிறார்:

    //முகத்தைப் பார்த்ததும் ‘ஐயோப் பாவம் குழந்தை
    எப்படியெல்லாம் இரவு
    கோபப் பட்டமேயென்று எண்ணுகையில்
    உள்ளே உன் உறக்கத்தைக் கலைக்காமல்
    மானசீகமாய் ஒரு மன்னிப்புச் சுரக்கும்,
    நீ சடாரென கண் திறந்து
    எதிரே என்னைக் கண்டதும் சிரிப்பாய்//

    உள்ளிருக்கும் உணர்வுகளை அருமையாக எழுத்தால் உணர்த்தி உள்ளீர்கள்.

    Like

  4. G.S.Velan சொல்கிறார்:

    //எனக்கு பாவாடை சட்டையில் நீ
    வளர்ந்தவளாகத் தெரிந்தாய்,

    கனவுகள் வருடங்கள் கடந்து
    பூக்கிறது; இடையே
    பயத்தில் சில இதழ்கள்
    காலத்தின் கட்டாயம் கருதி
    கண்ணீராய் உதிர்கிறது..//

    nice….

    Like

  5. munu.sivasankaran சொல்கிறார்:

    ” உன் சிரிப்பு –
    என்றுமே எனக்கு மீண்டும் மீண்டும் கிடைக்கும்
    வரம் தான்;

    வரம் பெற எனக்கு
    வேண்டியதெல்லாம் – ஒரு குச்சி மிட்டாயோ
    கை விரல் அப்பலமோ
    குடிக்கும் தேநீரில் ஒரு சொட்டோ
    மேலே தூக்கி உன் கன்னத்தில் கொடுக்கும்
    ஒரு முத்தமோ மட்டுமே!! ”

    ம்ம்..வரம் வாங்கி வந்துருக்கிங்க…..

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      ஆம் ஐயா, நண்பர்கள், உறவுகள், மனிதர்களைப் பொருத்தவரை; குழந்தைகள் வரை எனக்கு வரங்களேக் கிடைத்துள்ளது. சாபங்களை நான் கணக்கில் கொண்டுக் கொள்வதில்லை. அது என் தவறுகளுக்கு தண்டனையாய் கழிந்தே போகிறது. மிக்க நன்றியும் அன்பும்!!

      Like

  6. neelavannan சொல்கிறார்:

    இவைதான் ஒவ்வொரு தகப்பனின் உணர்வுகளும். என் குழந்தைக்கும் எனக்குமான உணர்வுகள் கூட அப்படியே பொருந்துகிறது. மரணிக்கும் வரை மனதின் அடியில் தேனாய் இனிக்கும் மழலை இனிது.

    ஆனால் குழந்தை வளர்ந்த பின்போ நம் நிலை….!?

    நம் தந்தைக்கு இன்று நாம் தந்த நிலைதானோ!!!?

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      ஓ……, மிக்க வாழ்த்துக்கள் தோழமை. நாம் இன்று நம் தந்தைக்கு செய்தது தானா நாளை நமக்குமென்று ‘தந்தையை சரியாக வழிநடத்தாதார் அல்லது கவனியாதார் எண்ணக் கூடியதென்றாலும், பிள்ளைகளிடம் எதிர்பார்த்து வாழ்ந்த காலம் பாதிக்குமேல் போயிற்று. இப்போது உள்ளவர்கள் அதிகபட்சம் தமக்குத் தாமே பாதுகாப்போடு தான் இருக்கிறார்கள். இருப்பினும், ஒரு நல்ல தந்தையாக ‘நாம் நம் பிள்ளைகளை கவனிக்க வேண்டியது மட்டுமே நம் கடமை இல்லையா, அதற்காக நாளைக்கு அவர்களுக்கு சுமையாய் இருந்து அவர்களை தொந்தரவு செய்வானேன். அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழட்டுமே, நம் வாழ்க்கையை எதுவாயினும் நாமே அனுபவிப்போம்!!

      Like

  7. சத்ரியன் சொல்கிறார்:

    //கனவுகள் வருடங்கள் கடந்து
    பூக்கிறது; இடையே
    பயத்தில் சில இதழ்கள்
    காலத்தின் கட்டாயம் கருதி
    கண்ணீராய் உதிர்கிறது..//

    வணக்கம் வித்யாசாகர்,

    உரைநடை வீச்சில் மலர்ந்திருக்கும் உங்களின் இந்த அனுபவப் பூச்சரத்தில், மேலே குறிப்பிட்ட வரிகளில் “தகப்பன்”மார்களின் பொது குணம் காட்சியாய் விரிகிறது.

    வாழ்த்துக்கள், எழுத “கரு” கொடுத்த உங்களின் மகளுக்கு!

    Like

  8. Raj Ram சொல்கிறார்:

    அருமையான கவிதை..

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி ராஜாராம், இது உணர்வின் பகிர்வு, மொழியின் ஆழமோ இலக்கணமோ ஆராயாமல் மனதில் பட்டதை இட்டது. இனி இது எங்கனம் மக்களிடம் சேருமோ என்று எண்ணுகையில் தங்களைப் போன்றோரின் பாராட்டுக்கள் மகிழ்வளிக்கிறது. மிக்க நன்றியும் வணக்கமும்!!

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s