ஒன்று சேர்; ஏனென்று கேள்; எட்டி சட்டை பிடி!

ன்று சேர்
ஏனென்று கேள்
எட்டி சட்டைப்பிடி
இல்லை – மனிதரென்று தன்னைச்
சொல்லிக் கொள்வதையேனும்
நிறுத்து;

தன் கண்முன்
தன்னின மக்கள் இத்தனை லட்சத்திற்கு
மடிந்தும் ஒன்றுதிரண்டிடாத நாம் –

அதற்கு ஏதோ ஒரு நியாயம் கற்பித்து
நம்மை மனிதரென்று சொல்ல
நாக்கூசவில்லையோ???

கண்முன் படம் படமாய்
பிடித்துக் காட்டும் அந்நியனின் கைபிடித்தெழுந்து
அந்த கயவனுக்கெதிராய் ஒரு ஒட்டுமொத்த
குரலை கொடுத்தாலேனும் திரும்பிப் பார்க்காதா உலகநாடுகள்?
அவனின் சட்டையைப் பிடிக்காதா உலகநாடுகள்???

மூடி இருந்த கண்கள்
இன்று திறந்தேனும் இருப்பது நன்று
என்றாலும் கட்டிவைத்திருக்கும் கைகளையும்
அவிழ்த்து விடு உறவே;

என் தாயைக் கொன்ற
என் மகனை கருவறுத்த
என் மனைவியை கர்ப்பத்தில் கொன்ற
என் சகோதரியை நிர்வாணப் படுத்தியதொரு
கோபத்தை  – அங்கே கடைசித் தமிழனொருவன்
சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் வரை சுமந்து நட;

ஒருவரைக் கொன்றதால்
பலரைக் கொள்ளத் தீர்ப்பளிக்கும் தேசம்
பலரைக் கொன்றவனை
ஒரு வார்த்தை கேட்காத குற்றத்தை
ஏனென்று தட்டிகேள்;

தமிழன் எனில்
தண்ணீர் தெளித்து விடப் பட்டவனா?
கேள்வி கேட்க யாருமற்றவனா?
ஏனென்றுக் கேட்க நாதியற்றவனா???
இல்லையென்று பறைசாற்று;

தெருவில் செல்கையில் ஒருவன்
இடித்துச் சென்றாலே கோபம் வரும்
இவனென் சகோதரிகளை துணியவிழ்த்து
படம் பிடித்து
எள்ளிநகைத்து
இழுத்து லாரியில் வீசுகிறான், கையை உடைக்க வேணாம்?
காரி உமிழ வேணாம்? கொன்று புதைக்க வேணாம்???

என்ன செய்தோம் நாம்?
இனி என்ன செய்வோம் நாம்?
வாய்மூடி காணொளி பார்த்து
போஸ்டர் ஒட்டி
செய்தியில் பேசி
கூட்டம்போட்டு
கண்ணீர்விட்டழுது
யாரோ ஒரு சிலர் பேசிப் பேசி
காலத்தை கடத்திவிட்டு – வரலாற்றில் நம்மை
கோழையென்று எழுதிக் கொள்வோமா?

இறந்தவரையெல்லாம்
நஞ்சு எரித்து சுட்டவன்
இருப்பவரை நயவஞ்சகத்தால் சுடும் முன்
ஒரு தீக்குரல் கொடுத்து –
தன் இருப்பினை ஒற்றுமையை
ஒட்டுமொத்தமாய் காட்டவேண்டாமா?

போர்க்குற்றவாளி போர்க்குற்றவாளியென்று அவனை
காணுமிடமெல்லாம் வார்த்தைகளால்
தோலுரிக்க வேண்டாமா?

உரிப்போம்
இனி உரிப்போமென சூளுரைப்போம்;

தமிழர் பற்றிய ஒரு அசட்டை
அவன் உயிரின் கடைசிப்
புள்ளியிலிருந்தும் ஒதுங்கிவிட ஒற்றுமைத்
தீப்பந்தமேந்தி –
அவனுக்கு ஒத்தாசை செய்யும் நாடுகளின்
மீதெறிவோம்;

கையுடைந்து
காலுடைந்து
உயிர்பயம் தெறிக்க ஐயோ ஐயோ என்று
அலறிய மக்களின் காணொளிகளை
கண்கள் சிவக்கப் பார்க்க அனைவருக்கும் காட்டுவோம்;

நடந்தது தவறு
இத்தனை அப்பாவி மக்களைக்
கொன்றது பெருங்குற்றம்
போரெனும் பேரில் நிகழ்த்தப் பட்டதொரு
படுகொலை மன்னிக்கத் தக்கதன்று; உலகின்
காதுகளில் கேட்க முரசொலி கொட்டுவோம்;

இத்தனை வருடம்
மறைமுகமாய் அழித்தான்,
இன்று வெளிப்படையாய் கொன்றான்
நாளை ?
நாளை என்று அவன் எண்ணுவதற்குள்
அவன் கண்ணில் நம் ஒற்றுமை கைவைத்துக்
குத்துவோம்;

அவன் நாடு
அவன் ஆட்சி
எதுவாகவேனும் இருந்துப் போகட்டும், அங்கே
அழிவது நம் மக்களாக நம்மினமாக இருந்தால்
ஒன்று சேர்;
ஏனென்று கேள்;
எட்டி அவன் சட்டைப் பிடி;
எழுந்து நாலு அரை விடு;
எனக்கிராத அக்கறை வேறு எவனுக்கடா இருக்குமென்று கேள்;
உலகின் மௌனத்தை வார்த்தைகளால் உடைத்து எறி;
உறங்கும் நியாயத்தை ஒற்றுமையால் வெளிக் கொண்டு வா
நீ உயிரோடிருப்பதை ஒவ்வொரு தமிழனும் நிரூபி!!!
——————————————————————————————–
வித்யாசாகர்

ஒலியிழை தரவிறக்கம் செய்து கேட்க இங்கே சொடுக்கவும். நன்றி!!

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

15 Responses to ஒன்று சேர்; ஏனென்று கேள்; எட்டி சட்டை பிடி!

 1. nathnaveln சொல்கிறார்:

  நல்ல கவிதை.
  வேதனையாக இருக்கிறது.

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   நன்றி ஐயா. தாளாத வேதனை தான். தூர நின்று அறிந்து, காணொளி பார்த்து, செய்தி கேட்டு அறிந்தமைக்கே இத்தனை வலிக்கிறதே, அடிபட்டவர்களின் நிலையும் அடுத்துள்ளவர்களின் வாழ்வியலும் எத்தகைய நிலையிலிருக்குமோ?!! அதிலும், உலக நாடுகளே அவன் செய்தது குற்றமென்று கூறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நாமும் துணை நின்று கேள்விகேட்டால் அம்மக்களின் நீதிக்கான பதில் கிடைக்காத என்றொரு ஏக்கம் நிறைய இருக்கிறது. அது தற்போது நிறைய பேருக்கு இருக்கிறது என்றாலும் எஞ்சியுள்ளவர்களையும் எழுச்சியூட்டி, அவர்களின் விடுதலைக்கென ஒரு ஒட்டுமொத்த குரலையேனும் கொடுங்களென கேட்கும் முயற்சி இது!!

   Like

 2. munu.sivasankaran சொல்கிறார்:

  “கட்டிவைத்திருக்கும் கைகளையும் அவிழ்த்துக்கொள் உறவே”
  அடுத்து ,
  “ஒற்றுமை கையெடுத்து அவன் கண்களை குத்துவோம்”
  முடங்கியவனையும் முறுக்கேற்றும் வரிகள்..!

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மிக்க நன்றி ஐயா. ஒற்றுமை மட்டுமே அம்மக்களை காப்பதற்கான நம் கடைசி ஆயுதமாக இருக்கும் பட்சத்தில் அதை போதிக்குமொரு படைப்பாகவே இக்கவிதையும் அவசியப் பட்டது. அங்ஙனம் இது பயனுறுமெனில் நிறைவு தான்!!

   Like

 3. Umah thevi சொல்கிறார்:

  உற்சாகமான கவிதை வடிவில்,
  சமூகதித்க்கு போராடும் உங்கள் முயற்சி,
  இறைவன் அருளால் நிச்சயம் பயன் அளிக்கும்!!
  உங்கள் குரல் வளத்தோடு ஒலிக்கும் இக்கவிதை மேலும் சிறப்பாகிறது!!!

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மிக்க நன்றி உமா. ஒரு உணர்வு பெருக்கு, தாளாத வலி, கொட்டித் தீர்க்கும் முயற்சியோடு, பிறரை உசுப்பி ஒட்டுமொத்த போரையும் இந்நேரமே ஒரு முடிவெடுக்க சிந்திக்க வைக்கும் எண்ணமன்றி வேறில்லை!

   Like

 4. SRIDHAR சொல்கிறார்:

  இது போன்ற உணர்ச்சிக் கவிதைகளை ஒவ்வொரு கவிஞனும் படைக்க வேண்டும்.கடைசித் தமிழனுக்கும் ரத்தம் கொதிக்க ,கோழைத்தனத்தை அகற்ற வேறு எந்த திசைமாற்றமும் இல்லாமல் போராட உணர்வு அனைவருக்கும் வர வேண்டும். மேலும் பல கவிதைகளை எதிர்பார்க்கிறோம். ஒலி வடிவம் மட்டும் சற்று ஏற்ற இறக்கங்களுடன்,தேவையான இடங்களில் நிறுத்தி வாசித்திருந்தால் இன்னும் உணர்வு மேலோங்கும்.முடிந்தால் வேறு நபர் குரலொலிக்கு முயற்சிக்கவும்.

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   வணக்கம். எனக்கும் குரலொலி பதிவு போதுமானதாக இல்லை. இது சற்று உணர்வுகளை பகிர்ந்துக் கொள்ள வேண்டி வீட்டிலிருந்த வெப்கேமில் பதிவு செய்தது. அதின்ரி குழந்தை எழும் முன் முடிக்க வேண்டுமெனும் அவசரம் வேறு. எனினும் இன்னும் நன்றாக செய்திருக்கலாம் தான். முயற்சிப்போம். தங்களின் கருத்திற்கு நன்றியும் அன்பும் உரித்தாகட்டும்!

   Like

 5. aruleesan சொல்கிறார்:

  அண்ணனுக்கு வணக்கம் அருமை வரிகளுக்கு எனது புகள்ளாரம். திருந்தாத உள்ளங்கள் இருக்கும் வரை ,புரிந்தாலும் புரியாதது போல் நடக்கும் வரை, அநியாயம் கண்டமக்கள் விழிக்கும் வரை,உணர்ந்தாலும் உணராததது போல் நடிப்போர் விலக்கும் வரை, உங்கள் போன்றோர் கரங்கள் ஓயாது எழுதட்டும் ஒவ்வொருவர் ஆவது விழிப்புப்பெறட்டும் . நன்றி

  Like

 6. Ambaladiyal சொல்கிறார்:

  ஒற்றுமையால் இன்புற்று வாழவேண்டிய சமூகம்
  வேற்றுமையால் இன்று அதன் வேர் பட்டுப் போவது
  கொடுமை.இதை எத்தனைமுறை சொன்னாலும் ஏற்றம்
  காண்பது அரிதாகிக்கொண்டே போகும் எமது இனத்தின்
  பாரா முகத்தை நல்லதொரு தேசப்பற்று மேலோங்க
  உங்கள் உணர்சிகளை அருமையான கவிதை வரிகளாய்த்
  தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே.எங்கள் பணி எதுவோ
  அதை நாங்கள் செய்வோம். இதை ஏறெடுத்துப் பார்ப்பவர்கள்
  ஒரு சிலரேனும் உணர்ந்தால் அது பெருமை. இதுவே
  ஒவ்வொரு கவிஞனின் உணர்வாகவும் இருக்க வேண்டும்.
  வாழ்த்துக்கள் மென்மேலும் சிறந்த ஆக்கங்களால் உங்கள்
  கனவும் நிறைவேற…………….

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மிக்க நன்றி சகோதரி. இது ஒரு ஆதங்கம், உணர்ச்சிக் குவியல் தான், எட்டித் தொட இயலாததை நாளையேனும் எட்டிப் பறித்துக் கொள்வோமெனும் நம்பிக்கையில் எட்டி எட்டி பார்த்து எழுத்தினால் சாதிக்கத் துடிக்குமொரு படைப்பு மட்டுமல்லாது, அந்த என் மக்களுக்கென எதையேனும் என்னால் இயன்றதை செய்யத் துடிக்கும் ஒரு பற்று இது.

   ஒரு கவிதை நூறு பேருக்குப் பிடிப்பதை விட நூறு பேரை இயக்கவோ எழுத வைக்கவோ செய்யும் எழுத்துக் குவியலாகவேனும் இருக்கச் செய்கிறது. அங்ஙனம் இது ஏதோ ஒன்று ஆயினும் பல லட்சாதி லட்ச மக்களின் கண்ணீர் ரத்தம் உயிர் விரயத்தின் இழப்பைக் கண்டு கொதித்த கொதிப்பு என்பது மட்டும் நித்திய உண்மை!

   Like

 7. suganthiny சொல்கிறார்:

  தன் கண்முன்
  தன்னின மக்கள் இத்தனை லட்சத்திற்கு
  மடிந்தும் ஒன்றுதிரண்டிடாத நாம் –

  அதற்கு ஏதோ ஒரு நியாயம் கற்பித்து
  நம்மை மனிதரென்று சொல்ல
  நாக்கூசவில்லையோ???இந்த வரிகள் ரொம்ப நல்லா இருக்கு.

  ஹாய் அண்ணா எப்படி இருக்கிறீர்கள்?
  ரொம்ப நல்லா கவிதை எழுதி இருக்கீங்க.
  இன்னும் பல மீன்கள் என் வலை பின்னலில் சிக்கி உள்ளன
  அவற்றை ஒவ்வொன்றாக பிடித்து பார்க்க
  நீங்கள் வருவதில்லையே? எனக்கு கவலையாக
  உள்ளது. இடை நிறுத்தி விடலாமா என்று கூட…………….

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   என்னன்பு சகோதரிக்கு வணக்கம், இடை நிறுத்தும் எண்ணமே இரக் கூடாது. ஒரு செயலை செய்யமுனைவதுபெரிதன்று அதை செய்து நிலைப்பதே பெரிது. நேரம் எடுத்து வந்தேனும் என் கருத்தினை பதிய முயல்கிறேன். படைப்பாளிகள் எப்போதும் சோர்ந்துப் போகக் கூடாது. தொடர்ந்து எழுதுங்கள் இந்த சகோதரனின் அன்பும் வாழ்த்துக்களும் ஒத்துழைப்பும் எப்போதுமிருக்கும்!

   Like

 8. வித்யாசாகர் சொல்கிறார்:

  //திரு.அரசு எழுதியது:-

  அன்பு வித்யாசாகர் ஐய,
  தமிழினத்தின் கையறு நிலை பற்றி நாம் நிறைய எழுதுகிறோம்.ஆனால் ஏதாவது செய்யவேண்டும்.நமக்குள் உணர்வுகலை ஏந்திக்கொள்வதோடு நில்லாமல் எந்த தகவலும் இல்லாமல் ,ஒரு சமுதய சம்பந்தம் கொண்ட் வராக ஒரு பொருட்டாகக்கூட எண்ணப்படாமல் வாழும் தமிழர்கலே பெருவாரி. என்மீது கோபப்படதீர்கள்.பெருவாரியான மக்கள் தமிழர் என்ற ஒர்ரின கோப்புக்குள் வர விருப்பமற்றவர்களாகவும் உள்ளனர்.சாதிகல் மூலம் தமிழர் ஒற்றுமை சாதியமில்லை என்ற நிலைக்கு தள்ளியுள்லார்கள் நான் எதையும் மிகைப்படுத்தவில்லை என்று நினைக்கிறேன்.

  ஒரு கற்பனை/கனவுக்கோட்டை.

  தமிழகத்தின் கிராமங்கள் 16317.
  நகராட்சிகள் 148

  சுமார் 16500 தமிழ்த்தொண்டர்கள் ,கிராமட்ய்ஹ்திற்கு ஒருவராக வேலைசெய்வது என்று பணி தொடங்கவேண்டும்.அரிச்சுவடி,ஆத்திச்சூடி அளவில் விவாதங்கள் துவங்கப்படவேண்டும்.

  148 நகராட்சியை நகராடிக்கு நூறுபேர் என்ற அளவில் பகுதிநேர வேலைக்கு
  எடுத்துக்கொள்ளவேண்டும்.ஒவ்வோரு தமிழனையும் நேரில் சென்றடைய வேண்டும்.ஓராண்டு கடும்பணி புரிந்தால் பிறகு நாம் பேசுவது அவர்களுக்கு புரியும்.நாம் உருவாக்கும் கலைகளும் காவியங்களும் உணர்வு வெள்ளத்தினை கட்டவிழ்க்கும்.

  பெருவாரியான தமிழன் அறியாமை, பண்பாடு,சாதி என பெரும் அடிமைத்தளையில் உழல்கின்றான.அந்த் அடிமைத் தளையறுக்க நாம் செயல்படவேண்டும்.

  அன்புடன்
  அரசு//

  அன்பு வணக்கம்,

  மிக அறிவுப் பூர்வமான சிந்தனை வழங்கியுள்ளீர்கள். உங்களை எண்ணி மகிழ்வேன் அன்றி கோபம் கொள்வதெப்படி ஐயா.., இத்தகு பொறிகளைத் தட்டிவிடும் நற்சிந்தனைகளை நம் மக்களிடையே ஏற்படுத்தும் பொருட்டுத் தானே என் இம்மாதிரியான படைப்புக்களிற்கான நோக்கமே. எனினும், தங்களின் சிந்தனைகளை முன் கொண்டுசென்று’ பின்னதை முன்னின்று செய்வது யாரென்று கேட்கும்’ கேள்விகளுக்கு அப்பால் நின்று, யான் செய்வேனென செய்ய இயன்றுவிடாத நிலையில் வெறும் கண்ணீரையும் கோபத்தையும் ஆதங்கத்தையும் எழுத்துக்களாக்கும் ஒரு சொற்ப மனிதனாகவே நானிருக்கிறேன். உண்மையில் நீங்களும் இச்சமூகமுமே என் மீது அந்த கோபத்தைக் கொள்ள நீதி பெற்றவர்கள்.

  எனினும், இவ்விடம் (குவைத்) இருந்தும் எங்களாலான விழிப்புணர்வையும் ஆக்கப்பூர்வமான பல செயல்களையும் எழுத்து மூலவும் இன்னபிற யுத்தியாகவும் செய்தே வருகிறோம். பின்பும், இந்த உங்களின் இக்கருத்தை இன்னும் நம்மை தொடர்ந்து படிப்போரிடம் கொண்டு சேர்க்கும் வண்ணம் என் வலையிலும் பதிந்து வைக்கிறேன்.

  தவிர, நீங்கள் சொல்லும் ஒவ்வோர் இடத்திற்கு ஒவ்வொருவர் எனும் வகையில் ஒரு தீ பரவும் காடுபோலின்று தமிழகம் முழுக்க இதற்கான ஆக்கப் பூர்வ செயல்கள் பரவித்தான் வருகிறது என்றாலும், அதை மேலும் துரிதமாக இலகுவாக நகர்த்தும் பொருட்டும், இதுகாறும், இன்னும் வேறென்ன செய்யலாமெனும் புத்தியரிக்கும் உணர்வோடும், உங்களின் இக்கருத்தினை பலர்முன் வைக்க ஆவன செய்யும் எண்ணத்தோடு விடைகொள்ளும் முன், இன்னொரு உணர்வும் உள்ளெழுகிறது, ‘அப்படி ஒரு ஒற்றுமை, உடனே ஒன்று கூடி ஒரு தலைமைக்குள் இயங்கும் பக்குவம் நம்மிடம் இருந்திருக்குமானால், அல்லது இருக்குமானால், நாம் இப்படியொரு நிலைக்கு தள்ளப் பட்டிருப்போமா? என்பதும் யோசிக்கத் தக்கது.

  எனினும் இயலாததை விட்டுவிட்டு இயன்றதை நம்பிக்கையோடும் ஒற்றுமை உணர்வோடும் இனியேனும் செய்ய முயல்வோம். தங்களின் கருத்திற்கும், திரு.இளங்கோவன் அவர்களின் ஆமோதிப்பிற்கும், தமிழுலகம் குழுமத்திற்கும் என் மிகுந்த நன்றிகளும் வணக்கமும்!

  http://groups.google.com/group/tamil_ulagam/browse_thread/thread/2b0b936ef3b1a6f1

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s