42 என் நம்பிக்கையும்; உறங்கா இரவின் கனவுகளும்!!

ரு பேசிடாத இரவின்
மௌனத்தில்
அடங்கா உணர்வின்
நெருப்பிற்கு மேலமர்ந்து
எதற்கு சாட்சி சொல்லிட இந்தப் போராட்டமோ?!!

மூடி  இறுகும் கண்களின்
இமை விலக்கி
கடக்கும் பொழுதின் மடிப்புகளுள்
கரையும் உயிரின் சொட்டொன்றில்
விற்காத புத்தக அடுக்கின் பயத்தை
மீண்டும் மீண்டும் எழுத்தாக்கி
அதற்குள்ளேயே என்னையும் சேமிக்கிறேன்;

பல்துலக்குகையில்
பலர் தினமும் கேட்கும்
செய்தியாக இல்லாவிட்டாலும்
என்றோ –
உறங்கச் செல்கையில் வாசித்துப் படுக்கும்
யாரோ ஒருவரின் ஓரிரு பக்கம்தான்
என் உறங்கா இரவுகளின்
காரணப் புள்ளியென்று
இந்த இரவின்
இடை விலகா இருள் முழுதும்
கொட்டையெழுத்தில் பதுக்கிவைக்கிறேன்;

இருந்தும்,

இரவிடம்
சிபாரிசு கேட்காத மனப்போக்கில்
காலத்திற்கான விடியலை
தேடித்தேடி வார்த்தைகளுக்குள் சிக்கிக் கொண்ட
அறிவாகவே –
நிறைந்துக் கொள்கிறதுயென் முயற்சியும்
நம்பிக்கையும்;

தெருவின் தூசு பறக்கும்
வண்டிப் புகையின்
கரிந்த பெட்ரோல் வாசத்திற்கிடையே அமர்ந்து
புத்தகம் விற்கும் ஒரு தாத்தாவின்
அல்லது கேட்க நாதியற்ற பெண்ணின்
வயிற்றீரம் துடைக்கும்
இரண்டு இட்டிலிப் பொட்டலத்தின்
விலையைக் கொடுக்க
எத்தனை இரவினை
தூக்கமின்றி கொல்லவும் துணிகிறது அந்த
என் நம்பிக்கை;

எனினும்,

உலகம் உறங்கும்
நிசப்த பொழுதை தகர்க்கும் கொல்லியாய்
நகரும் பகலின் பொய்மையும் அநீதியும்
படுக்கையில் முள்ளாய் குத்துகையில்
மறுக்கப்படுகிறது – யென்
கனவும் உறக்கமும் என்பதை
என் எந்த வரிகளில் தேடினாலும் கிடைக்கும்;

விளக்கெரிய வெளியில் வீசப்படும்
தீக்குச்சி
தன் எறிந்த மிச்சத்தில்
உலக வெளிச்சத்தின்
கனவினை சுமந்தே கிடக்கிறதென்னும்
சாட்சியத்தின் கண்களாய் சேகரிக்கிறப் படுகிறது
என் ஒவ்வொரு இரவும் – உன்
ஒரேயொரு விடியலுக்காய்…
———————————————————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே.. and tagged , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to 42 என் நம்பிக்கையும்; உறங்கா இரவின் கனவுகளும்!!

  1. வித்யாசாகர் சொல்கிறார்:

    நள்ளிரவு கடந்த ஓர் அதிகாலைப் பொழுதில் எழுதியது!

    Like

  2. Manoj Shidan சொல்கிறார்:

    உங்கள் வார்த்தைகளில் தெறிக்கிறது….விடியலுக்கான வேள்வி!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      தூக்கத்தை உதறி
      இரவினை மையென உறிஞ்சி
      உயிர்வரை நம்பிக்கையை வார்த்துக் கொள்ளும்
      எழுத்தின்’ பாடுபொருளாகிய –
      உங்களைப் போன்றோருக்கே நன்றிகளனைத்தும் மனோஜ்..

      Like

  3. nathnaveln சொல்கிறார்:

    நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    Like

  4. munu.sivasankaran சொல்கிறார்:

    எரிந்த தீக்குச்சி…. பின் எறிந்த தீக்குச்சி..
    வெளிச்சம் ஏந்திய தீக்குச்சி – பின்
    வெளிச்சதிற்காக ஏங்கும் தீக்குச்சி..!

    யதார்த்தத்தை இவ்வளவு எளிமையாக
    புரிதலுடன் உணர்ந்தமைக்கும், அதை வாசகரிடம்
    உணர்த்தியமைக்கும் தங்களை மிகவும்
    பாராட்டுகிறேன்!!

    Like

  5. Umah thevi சொல்கிறார்:

    படித்தவுடம், கொஞ்சம் நேரம் சிந்தித்த பிறகுதான், விளங்கியது.
    மிக அருமையான வார்த்தைகள்!
    பாராட்டுக்கள்!!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      ஆம் உமா, நள்ளிரவை கடந்த நேரம், மனது எதன் ஒரு நெடுநாளைய வருத்தத்திலோ ஆழ்ந்திருந்த பொழுது, உறக்கத்தை கண்களில் இருந்து பிடுங்கி எறியுமொரு வெறுமையான தருணத்தில் எழுதியது. அதன் வலிகள் மறைக்கப் பட்டு வார்த்தைகளால் முலாம் பூசிக் கொள்கையில் வார்த்தைகள் சற்று கனத்துவிட்டது. மிக்க நன்றியும் அன்பும் வணக்கமும் உரித்தாகட்டும் உமா..

      Like

பின்னூட்டமொன்றை இடுக