கண்ணிரண்டை விற்றுவிட்டு
கண்ணாடியை வாங்குறோம்,
விளக்கை அணைத்துவிட்டு
வெளிச்சத்தை தேடுறோம்;
நாலும் தெரிந்தவர்கள்
தனியாளா நிக்கிறோம்,
சொந்தபந்தம் இல்லாம
செத்த பிணமா அலையுறோம்;
நல்ல நாலு ஏதுமில்லை
நிகழ்ச்சின்னு ஒண்ணுமில்லை
கல்யாண நாளைக் கூட
தொலைபேசியில் தீர்க்கிறோம்;
இயக்கிவிட்ட எந்திரமா
இரவு பகல் உழைக்கையில
வியர்வையில் சரித்திரத்தை
காய காய எழுதுறோம்;
காற்று போல மண்ணு போல
மனசெல்லாம் ஆசை ஆசை,
ஆசைப் பட்ட அத்தனையையும்
அற்ப பணத்துக்கே விற்கிறோம்;
பணமென்னும் காகிதம் தான்
விதியை கூட மாத்துதே,
வீடுமனை பல இருந்தும்
மனசு ஒத்தையாவே வாடுதே;
சின்ன சின்ன கனவுகளும்
சேர்த்துவைத்த நினைவுகளும்
மனதில் மரணமாவே கனக்குமோ
பெரும் தீயாக எரிக்குமோ;
கல்லறையில் கூட நாளை
வெறும் புல்லாக முளைக்குமோ?
காற்றாட நகர்ந்து நகர்ந்து – நாம்
வாழாததை பேசுமோ…(?)
காட்டாற்று வெள்ளத்தில்
கரையும் புள்ளியாய் போகுமோ,
காலத்தின் நகர்தலில் –
எங்களின் நிறத்தை வெள்ளையாகவே தீட்டுமோ..(?)
வெளிச்சமில்லா வீடாக
வாழ்க்கை வலிக்கவலிக்கத் தீருமோ..
யாரோ விட்டசாபம் அத்தனையும்
மரணக் குழியில் தள்ளிச் சிரிக்குமா!!
——————————————————————————-
வித்யாசாகர்
வெளிநாட்டு வாழ்க்கை பற்றிய ஒரு பாடலுக்காக எழுதிய பல்லவியை சற்று சீர்செய்து, ‘மெல்லினம்’ மாத இதழுக்காக அனுப்பப்பட்ட கவிதை!!
LikeLike
எங்கும் மனதில் ஊடுருவும் ஒரு ஊர்வலத்தின் உலா’ வரச் செய்து, எல்லொர் மனதிலும் வலம் வருக……..வாழ்த்து!
LikeLike
பெரிய மனசு கொண்டுள்ளீர்கள். உழைப்பினால் ஓர்தினம் உயர்ந்து நிற்கும் நாளில் உங்களின் வாழ்த்தும் ஆசியும்கூட அதன் ஒரு பங்காக வகித்திருக்கும் சகோதரர். மிக்க நன்றியும் வணக்கமும்!!
LikeLike
“நாலும் தெரிந்தவர்கள்
தனியாளா நிக்கிறோம்,
சொந்தபந்தம் இல்லாம
செத்த பிணமா அலையுறோம்;”
வரிகள் ‘வரும் கண்ணீரை
துடைக்க முயன்று முடியாது
குடித்துத் தளும்புகின்றன..!
LikeLike
ஆம்; சில உணர்வுகள் மருத்துப் போனவர்களாய் இருக்கத்தான் செய்கிறோம். அவைகளை மறுக்கவும் முடியாமல் நம்மை மாற்றிக் கொள்ளவும் இயலாத மனநிலை தருமிந்த வாழ்க்கை நிறைய பேருக்குக் கொடுமைதான்…. ஐயா!
LikeLike
படிக்கும் பொழுது, மனம் கனத்து..கண் கலங்குகிறது.
மிக அருமையான உணர்வின் வெளிப்பாடு!
LikeLike
மிக்க நன்றி உமா, உண்மையில் இதொரு கண்ணீர் பூத்த வாழ்ககிதானே, அதை மறந்து சிரித்துக் கொள்ளும் இதயங்கள் எத்தனை எத்தனை அயல்தேசங்களில் அழுது திரிகின்றதோ..
LikeLike
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html
LikeLike
மிக்க நன்றி ஐயா. உங்களின் இத்தகு சீரிய பணிக்கு மத்தியிலும் எம் படைப்புக்களை வாசித்து கருத்து இடுகிறீர்கள். எனினும், இங்கு இட்டமையும் நன்று. நமை வாசிப்போருக்கும் உங்களின் இத்தகு செயல்கள் சென்றடைந்து நற்சிந்தனைகளை ஏற்படுத்தும்.
தவிர, தன் வீடு உறவு நட்புள்ளங்களைக் கடந்து சொர்கமே உண்டென்று கொடுத்தாலும் அது இனிக்காத மனம் கொண்ட இனமன்றோ நாம்!!
LikeLike
”..நல்ல நாலு ஏதுமில்லை
நிகழ்ச்சின்னு ஒண்ணுமில்லை
கல்யாண நாளைக் கூட
தொலைபேசியில் தீர்க்கிறோம்;..”
இதை சொன்னா யாரும் புரியமாட்டார்கள். பணம் காய்க்கும் வயல் என்பதை யாரும் மறக்கவில்லை….
நம் எல்லோர் மனதிலும் ஒரே பாடல் தான்…அழ தேவையில்லை..கண் கலங்கத் தேவையில்லை…..வெல்ல வேண்டும்….
LikeLike
ஆம், சகோதரி. தங்கள் அன்பிற்கு நன்றி!!
வெற்றித் தீயை பார்வையில் ஏந்தியே திரிகிறோம், என்றாலும் வெல்லும் தூரம் மரணத்தில் நீளுமோ தெரியவில்லை.
இன்று எங்களின் திருமண நாள்…
LikeLike