12 பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு…..

1
வ்வொரு பருக்கைச் சோற்றிலும்
ஒருவரின் பசி அடைக்கப் பட்டிருப்பதை
அறியாமலே குப்பையில்
கொட்டப் படுகிறது தினமும்
பழைய சாதம்!!
——————————————————————–

2
ணக்க மணக்க
உண்டுமுடிக்கும் முன்
ஒரு கை சோறு ஒதுக்கி
பிறருக்கும் தர இயலுமெனில்
ஒரு உயிரேனும்
உயிர்  பிழைக்கும்!!
——————————————————————–

3
டீ
  குடித்து
பண் தின்று வாழ்பவர்களுக்கு
சாபம் பணத்திலா
உழைப்பிலா
பதிலேயில்லை பல காலமாய்..
——————————————————————–

4
கா
க்கை குருவி கூட
எதையோ தின்று விடுகிறது
மனிதன் எதையோ தின்பதிலும்
தின்னாமையிலும் –
இறக்கிறான் இறக்கிறான் இறக்கிறான்
பசி மட்டுமே
பெரிதாகப் பேசப்படுகிறது..
——————————————————————–

5
ப்பு
காரம்
புளிப்பு
சுவையெல்லாம் வேண்டாம்
ஒரு உண்டை சோறிடு
மண்ணேனுமிடு –
உயிர்’ பசியால் போதல் தீது..
——————————————————————–

6
ரம் நட்டான்
மலை குடைந்தான்
வானம் பொறாமைப் பட
வீடும் கோவிலும் கட்டினான்
விமானம் செய்தான்
வான் வழியே மேகம் கிழித்து
விண்முட்டி நின்றான்;
இத்தனை –
உயரச் சென்ற மனிதன்
திரும்பிப் பார்க்காதலில் –
கீழே விழுந்துகிடக்கிறது சில பிணங்கள் –
பசியால் இன்றும்!!
——————————————————————–

7
ட்டைப் பை
சூட்கேஸ்
வீட்டு அலமாரி
வங்கி கணக்கு
வேறு எங்கெல்லாம்
சேமித்து வைத்திருப்பீர்களோ’ பணத்தை
அங்கெல்லாம் –
நன்றாக சற்றுக் கிளறிப் பாருங்கள் –

ஒரு எளியவன்
திருட எண்ணிய கணமும்
திருடவைத்த பசியும்,
அவன் உழைக்க மறுத்த கணமும்
உழைக்கக் கிடைக்காச் சூழலும்
அங்கே மரணமாய் முனுமுனுத்துக் கிடக்கலாம்..
——————————————————————–

8
வீ
ரம்
வீம்பு
வியாக்யானம்,
மானம்
மரியாதை
மனசாட்சி,
அண்ணன்தம்பி
அக்காத் தங்கை
அம்மாப் பிள்ளை’
அத்தனையையும் மறக்கடிக்கும் பசியென்று
பசியில் மட்டுமேப் புரியும்…
——————————————————————–

9
மு
டிந்தால்
இரண்டோ மூன்றோ நாள்
பட்டினியிருந்து பாருங்கள்
பசியில் இறப்பவரின் வலியை
ஒரு முறையேனும் –
உண்டுத் தீருங்கள்..

மறுநாள் கிடைக்கும் உணவில்
பசிக்கும் எவரோ ஒருவரின் முகம்
கனவு போலேனும் தெரியும்; காணுங்கள்!!
——————————————————————–

10
குப்பைத் தொட்டி
திருமண மாளிகையின் வாசல்
அல்லது பின்புறம்,
விழாநாளில் மிச்சப்படும் உபரி,
உணவகங்களில் –
நிறைய உணவுகளை வாங்கிவிட்டு
முழுதும் உண்ணாமல்
பாதியில் எழுந்துப் போகும் நாகரிகம்’

எப்படியறியும் – எங்கோ ஓருயிர்
பசியால் செத்து நம்மை
கொலைக் காரனாக்குவதை..
——————————————————————–
வித்யாசாகர்

குறிப்பு: இதனைத்தும் சோமாலியாவில் பசியினால் பாதிக்கப் பட்டுள்ள முப்பது சதவிகித குழந்தைகளுக்குச் சமர்ப்பணம். சமர்ப்பணம் மட்டுமல்ல, சிறுதொகையும் உணவுச் செலவிற்கென அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. நீங்களும் உரியோரை தொடர்பு கொண்டு முடிந்தால் உதவுங்களேன்.. பாவம் நிறையக் குழந்தைகள் அங்கே பசியால் இறக்கிறதாம்..

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in நீயே முதலெழுத்து.. and tagged , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

11 Responses to 12 பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு…..

 1. nathnaveln சொல்கிறார்:

  அருமையான கவிதை.
  மனசை நெகிழ வைக்கிறது; நமது கடமைகளை யோசிக்க வைக்கிறது.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  Like

 2. வித்யாசாகர் சொல்கிறார்:

  மிக்க நன்றியும், வணக்கமும் ஐயா. ஓரிரு நாள் ஏன் ஒரு வேலை உணவின்றி இருப்பதே சிரமமாக எண்ணும் நிறையப் பேருக்கு மத்தியில் உணவின்றி பசியால் வாடி வாடி அறுபதாயிரம் குழந்தைகள் வரை இதுவரை இறந்துள்ளதாம்; இது எத்தனைக் கொடுமை.

  இங்குள்ள ஒரு இஸ்லாமிய அமைப்பு மூலம் நட்புறவுகள் அதற்கு பணம் திரட்டி உதவி செய்ய முன்வந்திருந்தனர். உலகளாவி நாம் இத்தனை முன்னேறி இவ்வளவு வளமையாக உள்ள இவ்வேளை; உணவின்றி இங்ஙனம் பல உயிர் போதல் என்பது நம் வாழ்வுமுறையின் தீதன்றி வேறல்ல என்றே எண்ணத் தோன்றுகிறது.. ஐயா!!

  Like

 3. vadivukkarasi சொல்கிறார்:

  நெகிழ்வான கவிதை.பதிவுலகெங்கும் பட்டும், தங்கமும்,பட்டாசுமாய் இரைந்து கிடக்க, இங்கு மட்டும் தீபம். நன்றி. சில வருடங்களாகவே என்னால் இயன்ற அளவில்,தினந்தோறும் இதற்காக செய்து வருகின்றேன்.இது பத்தாது, இன்னும் செய்..என்று குண்டு போட்டிருக்கிறீர்கள்..முயல்கிறேன்.

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   அன்பு நிறை வடிவுக்கரசிக்கு வணக்கமும் அன்பும். தங்கள் மனம்போல் தரம் மிக்க கருத்தினைப் பதிந்தீர்கள். நல்லவை செய்வதும் நாலு பேருக்கு தெரியவேண்டியிருக்கிறது. இன்னும் நாலுபேர் அதன் பின்வந்து நிற்கமாட்டார்களா என்று ஏங்கும் அளவிற்கே இன்றும் உலகின் சரிவிகித சமநிலை சரிந்தேக் கிடக்கிறது…

   Like

 4. வித்யாசாகர் சொல்கிறார்:

  என் அன்புறவுகளுக்கு மீண்டும் வணக்கம்,

  எப்படியும் தீபாவளியை முன்னிட்டு நிறைய வீடுகளில் அதிகமாகவே பலகாரங்களும், பல்வேறு வகைப்பட்ட உணவுவகைகளையும் செய்வோம்.

  அதில், இயன்றளவு முயற்சித்தேனும்’ இல்லாதோர் மற்றும் இயலாதோருக்கும் கொடுக்க முயலுங்கள். மீதமென எஞ்சுமெனில் அதை ஏழ்மை நிலை அறிந்த வீடுகள் பார்த்து அவர்களுக்குக் கொடுத்து உதவுங்கள். அல்லது வாரிக் குப்பையில் வீசுவதைக் காட்டிலும் மரம் மற்றும் செடிகள் நிறைந்த பகுதிகளில் சென்று சிற்றுயிர்கள் வாழும் இடங்களில் சுற்றுச்சூழல் அதிகம் பாதித்திடாதவண்ணம் இட்டுவாருங்கள்.

  ஒரு பருக்கை சோறு கூட
  இரண்டு மூன்று எறும்புகளின்
  பசியாற்றலாம்!!

  நன்றியுடனும், மிக்க அன்பும், கொண்டாட்டம் நிறைந்த தருணத்திற்குரிய வாழ்த்துக்களுடனும்…,

  வித்யாசாகர்

  Like

 5. munu. sivasankaran சொல்கிறார்:

  ஆனந்தத்தின் போதையில் அமிழ்ந்துகிடப்பவர்களை
  ஈனப்பிறவிகளாக உங்கள் எழுத்துச் சுட்டுகிறது..!
  நன்றி…நன்றி..!

  Like

 6. கே . பாலாசி(ஜி ) தமிழன் , குவைத் , சொல்கிறார்:

  உங்களின் எழுத்து என்னை மிகவும் பாதித்தது உங்களின் எழுத்துப்பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் ….

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மனசின் பட்டவர்த்தனம் படைப்பாகுமெனில், உண்மையில் மட்டுமே கனக்கும் இலக்கியமாக எதிர்காலத்தில் படைப்புகள் திகழலாம் என்று எண்ணுகிறேன். பாலாஜி. மன உணர்வை மட்டுமே பதிகிறேன். அதை அழகாக்கிக் கொள்கிறது’ தமிழின் வளமை!

   மிக்க நன்றியும் அன்பும்..பாலாஜி!

   Like

 7. suganthiny சொல்கிறார்:

  சோமாலியாவில் மட்டும் அல்ல.

  இங்கும் அந்த நிலை மெல்ல தலை

  காட்டுகிறது.

  யுத்த காலத்தில் கூட

  ஒரு தாய் சாப்பிடுகிறாளோ இல்லையோ

  ஒரு தந்தை சாப்பிடுகிறானோ இல்லையோ

  ஆனால் ஒரு கர்ப்பிணியால் சாப்பிட

  முடியாது.

  அதை விட பிறந்து ஒரு மாதம்

  ஆன குழந்தை என்ன செய்யும்?

  எத்தனை எத்தனை குழந்தைகள்?

  பிணம் தின்னி கழுகள் கூட

  கால் நனைக்க முடியாத

  அந்த வறுமை நிலை.

  அவ்வாறான நிலையில்

  என்ன செய்தார்கள் தெரியுமா?

  தன் மார்பை கிழித்து

  எத்தனையோ தாய்மார்

  அந்த குருதியை பாலாக

  ஊட்டினார்கள்.

  வெறும் கவிதையாக மட்டும்

  பார்த்தால் அது கவிதை

  இதை ஒரு பாடமாக

  படித்தால் அது பரீட்சையில்

  தொலைந்து விடும்.

  ஆனால் ஒரு

  சரித்திரமாக இது வம்சாவளியாக

  தொடர்நதால் இதை என்ன என்று

  சொல்ல?

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   ஆம் காலத்திற்கும் நீடிக்கும் நெடுங்கொடுமை பசி என்று அறிகிறேன் உறவே. நாம் இதை மாற்ற வேண்டுமெனில் நம் வாழ்வு நிலையை மாற்றவேண்டும். நம் அருகில் இருக்கும் எவ்வுயிரின் வருத்தத்திற்கும் நாம் காரணமாகிடக் கூடாதெனும் பயம் வரவேண்டும். நம் அருகில் இருக்கும் ஒருவர் வருந்துவர் எனில் அதைப் போக்கும் அக்கறை’ போக்க எடுக்கும் முயற்சி எல்லோரிடத்தும் அனிச்சையாய் வரவேண்டும். அங்ஙனம் கொள்ளுமொரு பொது அக்கறை பிறர் பசியை பற்றியும் கவலைக் கொள்ளச் செய்யும். பிறர் பசி பற்றி கவலைக் கொள்ளத் தக்க மனிதன் செமித்துவைத்து தனியே தின்ன மாட்டான். தனியே பதுக்காதலில் பிறருக்கும் பொறாமையோ ஆசையோ எழாது. எல்லாம் நமக்குமானது என்று புரிய அதை பிறரிடமிருந்து எடுத்துத் தனதாக்கிக் கொள்ள அத்தனை எண்ணம் தோன்றாது. பசி எடுக்க எடுக்க பசிக்குக் கிடைக்க கிடைக்க தனதாக்கிக் கொள்ளும் நிலை விலக’ கொள்ளைகள் குறையலாம், கொலைகள் அந்நியப் பட்டுப் போகலாம்.. சமரசம் உணவின் வழியே உணர்வில் நிறைந்து உறவிலும் உலகிலும் நிலவலாம். எல்லாவற்றையும் இயக்குவது, பசி தான். பசி போக்க வழி கிடைக்காத நிலையில் தான் குறுக்குவழிகள் தேடி அலைகிறது மனசு…

   குறுக்குவழிகளில் உள்ள குழிகளில் தான் மனிதத்தை போட்டுப் புதைத்து விடுகிறான் மனிதன். இந்த புதைதலின் வழியில் நம் அழிவை நாமே தேடிக் கொள்வதைக் காட்டிலும் பசிக்கும் உயிர்களுக்கு இயன்றதைக் கொடுப்போம், என்று மன்றாடிக் கேட்கும் முயற்சியே இக்கவிதைகளின் காரணம் சுகந்தினி.

   மிக்க அன்பும் வணக்கமும் வாழ்த்துக்களும் உண்டாகட்டும்மா..

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s