வாழ்வின் பாடங்களில்
கிழிந்த பக்கங்களின்
ஒவ்வொன்றையும் எடுத்து
தன் சிரிப்பில் ஒழுகும் எச்சிலால் ஒட்டிவிடுகிறாய்;
இதயம் தைக்கும் ஊசியென
என் அறுந்த மனதின் கிழிசல்களில்
உன் நிறைவுறாத வார்த்தைகளைப் போட்டு
பிறந்த பயனை நிரப்புகிறாய்;
தத்தி தத்தி நடந்துவந்து
எனை எட்டியுதைக்கும் ஒற்றை உதையில்
என் மெத்த கர்வத்தையும்
இலகுவாக உடைத்து உடைத்து வீசுகிறாய்;
நீ தின்ற உணவில்
ஒரு பாதி எடுத்து எனக்கூட்டி
என் பாதி ஆயுளை
அந்த ஒரு பிடி உணவில் நிறைக்கிறாய்;
நான் வெளியில் போக வீடுபூட்டி
தெருவிறங்கி நடக்கையில்
நீ ஓடிவந்து அம்மா தோளேறி ஜன்னலில் எட்டிப் பார்த்து
அப்பா அப்பா என்று கத்தி கத்தி நீ உடனில்லாதப் பொழுதை
நினைக்க நினைக்க வலிக்கும் ரணமாக்கிவிடுகிறாய்;
நீ பார்க்காத
பேசாதப் பொழுது ஒவ்வொன்றையும்
சுமக்க இயலாதவன்போலே யெனை
ஓடி வீடு வரவைக்கிறாய்;
நீ பெரிதா நான் பெரிதா
என்று யாரோ கேட்கையில்
நீ பெரிதில்லை
நான் பெரிதில்லை
என் அப்பாதான் எனக்குப் பெரிதென்று நீ சொன்ன வார்த்தையில்
என் பூர்வ ஜென்ம பலன்களையெல்லாம் வாரி
உலகின் சிரிப்புசப்தத்திற்கு இடையே இரைத்தாய்;
நானந்த சிரிப்பின் சப்தத்திற்கு இடையே வந்து
உன்னையும்
அவர்களையும்
பார்த்தவாறே நிற்கிறேன்
இனி’ மரணமொன்றும் அத்தனைப் பெரிதில்லை.. யெனக்கு!!
—————————————————————————————
வித்யாசாகர்
ஒரு அன்பு தந்தையின் பாசத்தின் வெளிபாடு .மிக அருமை!
LikeLike
மிக்க நன்றி உமா. என்னைக் கேட்டால் எழுதுவதில்லை, எழுதப் படுகிறேன். பசியில் இருப்பவனுக்கு உணவு எத்தனை அவசியமோ அப்படி என் உணர்வுகளுக்கு தமிழ் பூசுவதும் உமா..
உண்மையில் குழந்தை முகிலோடு இருந்த நாட்கள் மறக்க இயலாதவை. அவன் இப்போது வளர்ந்து தெளிவாக பேசவும் துவங்கிவிட்டான். பாப்பா தான் இப்போதெல்லாம் அப்பா அம்மா மட்டுமே உலகமென்று திரிகிறது. ஒருநாளெல்லாம் அது சொல்லும் அதிக வார்த்தை அப்பா. அதைக் கூட முழுதாக சொல்லாமல், ப்ப்ப்பா………….. எனும் அழகு அழகு தான்.
பெண் குழந்தைகள் குழந்தையாவே இருந்துவிடக் கூடாதா என்று எத்தனை அப்பாக்கள் அழுதிருப்பார்களோ தெரியவில்லை. எனக்கு அந்த அழை அவ்வப்பொழுது எதிர்காலத்தையும் வித்யாவின் அன்பையும் நினைத்தாலும் வரும்…
LikeLike
ஆம் சிறு மழலை இன்பம் எவ்வளவு பெரிய சுகம்?
ஆனால் சிலர் அதை புரிந்து கொள்ளாமல்
குப்பை தொட்டிகளிலும், புகையிரத நிலையங்களிலும்
வீசிவிட்டு செல்கிறார்களே அந்த கொடுமையை பற்றி
எவன்(ர்) பாடுவார்.
மழலை செல்வம் இல்லை என எத்தனையோ பேர்
ஏங்க இத்தனை கொடுமைகள் நடக்கிறது?
நீங்கள் தந்தையின் பாசத்தை பற்றி எழுதி இருந்தீர்கள்.
ரொம்ப நல்லா இருக்கு என்று மட்டும் சொல்ல என்னால்
முடியலை.
அண்ணா நீங்க எழுதும் ஒவ்வொரு எழுத்தும்
பசும்மரத்து ஆணி போல எல்லாருக்கும் எவ்வளவு தூரம்
சேர்கிறது தெரியலை. நிச்சயமாக என் அண்ணன் இன்னும்
இன்னும் இன்னும் என்று போய்கொண்டே இருக்கணும்
வித்யாசாகர் என்னும் அந்த பெயர் இந்த உலகில ஓங்கி
ஒலிக்கணும்.அந்த ஒரு ஆசை என்றாலும் என் வாழ் நாளில்
நிறைவேறனும்.
LikeLike
வார்த்தைகளில்லை சுகந்தினி. உங்கள் அன்பு வாழ்வின் ஏக்கம் உங்களின் கனவு நிறைந்த எதிர்ப்பார்ப்பென இதெல்லாம் என்னவொணா உயர்வு மிக்கதுமா..
இத்தனை இரவில் அமர்ந்து தூக்கத்தைப் பெரிதுபடுத்தாது எழுதத் தூண்டும் சக்தி உங்களின் இவ்வார்தைகளுக்கே இருக்குமா..
எங்கோ பறந்து எங்கோ வளர்ந்து தமிழாள் மடியில் அண்ணன் தங்கையென நிறையும் இப்பாசம் எழுத்தின் வரமன்றி வேறில்லை..
தவிர, நீங்கள் கேட்டதற்கிணங்க அங்ஙனம் சிசுக்களை கொள்ளும் வதை கொடுமை கொடும்பாவம் பற்றி “வாயிருந்தும் ஊமை நான்” எனும் தொகுப்பில் “கள்ளிப்பாலில் எம அவதாரம்” என்றொரு நெடுங்கதையும், “பெண்சிசு கொலை;செய்யலாம் செய்யலாம்” என்றொரு நெடுகவிதையும் கூட எழுதியுள்ளோம்..
http://vidhyasaagar.com/2010/01/06/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/
LikeLike