நாலு ரூபாய் வருவாயில்
நானூறுக்கும் மேலேக் கனவுகள்,
யார் கண்ணைக் குத்தியேனும்
தன் வாழ்வைக் கடக்கும் தருணங்கள்;
சாவின் மேலே நின்றுக் கூட
தன் ஆசை யொழியாச் சாபங்கள்,
ஆடும் மிருக ஆட்டத்தில்
மனித குணத்தை மறந்த மூடர்கள்;
போதை ஆக்கி போதை கூட்டி
எழுச்சிப் பாதை தொலைக்கும் பருவங்கள்,
படிப்பில் படைப்பில் கணினியில் வாய்ப்பேச்சில் மட்டும்
வீரம் காட்டும் வித்தகர்கள்;
காலில் பட்ட அடிக்குத் துடிக்கும்
விழுப்புண் இல்லா வீரர்கள்,
நூறுபேர் சேர்ந்து ஒருவனைக் கொன்றாலும்
கண்மூடிச் செல்லும் கோழைகள்;
பெண்ணின் ஒரு மயிர் உதிர்ந்தால் போதும்
காதல் காதலென சுமக்கும் பொய்முகங்கள்,
பெண்ணின் வலி கண்ணீர் இழப்பு ஏக்கம்
பற்றியெல்லாம் பின் வருத்தப் பட்டிடாத வேடதாரிகள்;
பணத்தில் பிறந்து பணத்தில் வளர்ந்து
பணத்தால் சாகும் இழிபிறப்புகள்,
உடுத்தும் உடையில் நடக்கும் நடையில்
மனம் எரிந்துப் படிந்த மினுமினுக்கிகள்;
யாருக்கு என்னா னாலும் வருத்தமின்றி
தன் பாருவுக்குபுடவை மடிக்கும் கரைவேட்டிகள்,
பக்குவமில்லா வெட்டிகளிடத்தில்
பயங்கொண்ட மக்களின் கைநிறைந்த தேசங்கள்;
காட்டுவழியேப் போகும் வாழ்க்கை
இடையே களவும் கற்கும் புதுமைகள்,
பொய்யில் அழியும் பாதைத் தெரிந்தும்
புகழுக்கேவாழும் பெரும் பிழைகள்;
கடவுள் பித்து கடவுள் பித்து
மதத்தின் நிறத்துள் போதனைகள்,
கலந்து கெடுத்து கலந்துக் கெடுத்து
குற்றம் சுமக்காக் கயவர்கள்;
கடவுளைக் கொன்று கடவுளைக் கொன்று
பதவியைத் தேடும் ஆசைகள்,
அறிவு புகட்டி அறிவு புகட்டி – பின்
கிணற்றில் வீழும் கொடுமைகள்;
காசுக்கில்லை மனிதம் தெளிவு
காடும் மேடும் கோவில்’ கலவரம்’
வெறும் தெய்வம்செய்து குற்றம் சொல்லிக்
குழந்தையைப் பசியில் கொல்லும் கொடூரங்கள்;
மூடத்தனத்தின் உச்சம் ஏறி
முழு நிர்வாணங் காட்டும் அழிவுகள்,
யாரோ சொன்ன தெருவழி நடந்து
சுடு-காட்டில் முடியும் தொடர்கதைகள்;
சிந்தித்திடுடா சிந்தித்திடுடா எனச்
சொன்னோரெல்லாம் ச்சீ…ச்சீ ஆனான்; சரியில்லையே..
வீட்டைத்திருப்பி வைத்தவன் கையில்
நாட்டைக் கொடுப்பது வளமில்லையே;
குறுக்குவழியில் தேடிடும் கடவுள்
கையிலிருந்தும் கண் தெரியலையே’
கத்தும் உயிரின் கழுத்தை நெறிக்கா –
கருணையில் பார்த்தால் நீயும் கடவுளடா!!
——————————————————————————-
வித்யாசாகர்
என்ன சொல்லவதென்றே தெரியலை உங்களின் கற்பனை
பெரும் சுவரை.உங்களின் கற்பனை மதில் மேல் ஏற
நான் நினைக்கிறேன் ஆனால் அது முடியாமல்
சறுக்கி விழுகின்றேன்.
சரி அது போகட்டும். கடவுளை
கொல்லும் சாமிகள் என்பதற்கு ஒரு
உதாரணம் சொல்கிறேன் கேளுங்க.
ஒரு இடத்துல உள்ள அம்மன் கோவில்ல நடந்த உண்மை சம்பவம் இது
இந்துக்களின் புனித விரதமான கேதாரகௌரி விரதம் அண்மையில்
அனுஸ்டிக்க பட்டு வந்தது தானே? ஆம்
அன்று கடைசி பூஜை. அந்த ஊரிற்கு பல இடங்களில் இருந்தும்
பெண்கள் வந்து கும்பிட்டார்கள். தெர்ப்பை அணிந்து கொண்டிருந்தனர்.
பூசகர் மெய் மறந்து மந்திரம் சொல்லி கொண்டிருக்க அந்த ஒலி
ஒலி பெருக்கி மூலம் ஊரையே பக்தியில் விழுங்கி கொடிருக்க
அந்த நேரத்தில் பூசகருக்கு தொலை பேசி அழைப்பு வந்ததாம்
உடனே அவர் தன் பக்தியை மறந்து ஒலி பெருக்கியில் கேட்கும்படி
சத்தம்போட்டு சிரித்தபடி நலம் விசாரித்தாராம். கிட்டத்தட்ட ஐந்து நிமிடம்
இருக்கும் அவர் மறுபடி பூஜை ஆரம்பிக்க முன் வரிசையில் இருந்த பெண்கள்
கோபத்துடன் சென்றனராம்.
LikeLike
இதையெல்லாம் கடந்த சாமிகள் நான் சொன்ன கடவுளைக் கொன்ற சாமிகள் சுகந்தினி. யாரையெல்லாம் நாம் பெரிதாக மதிக்கிறோம். சாமி என்று அழைக்கிறோம்? நம்மில் பெரியோரெனக் கருதுவோரை.
ஒரு பாமரனின் பார்வையில் ஒரு மதப் போதகர், ஓதும் மௌலான, தினமும் கடவுளைத் தொழுவதை கடமையாய் எண்ணும் பூசாரிகள், நம்மில் உயர்ந்த மேலோர் பலரை நாம் சாமி என்றேப் பார்க்கிறோம், அங்ஙனமே அழைக்கிறோம்.
ஆனால் அவர்கள் மொத்தப் பேரும் முழுமையாக அல்லது அவர்களின் பதனைப் படியேனும் சரியா என்றால்’ நிறைய இடங்களில் பாரபட்சமின்றி ஏமாற்றம் எதிர்படுகிறது.
அங்ஙனம் இவர்களால் நிகழ்த்தப் படும் அநீதி அதர்மம் சூழும் இடங்களில் கடவுள் எனும் புனிதமும் கெட்டு, கடவுளை நாடும் நன்னடத்தைக்கான வழிகளும் எண்ணமும் முடங்கப் பட்டு தடம் மாறிப் போகின்றன. அதற்கெல்லாம் நாமும் பொதுவாக பார்க்கின் மூலக் காரணமாகவே இருக்கிறோம். ஆக, எங்கெல்லாம் நல்லவை நடப்பது தீய செயல்கலால் மூடங்கிப்போகிறதோ, அதர்மம் கொடிகட்டிப் பறக்கிறதோ ‘அங்கெல்லாம் கடவுள் கொள்ளப்படுகிறது. அதைக் கொள்ளும் சாமிகள் நாமுமாகிறோம்!
LikeLike
(தமிழ்த்தென்றல் குழும உறுப்பினர் எழுதியது:
//குழந்தையைப் பசியில் *கொள்ளும்* கொடூரங்கள்// இது சரியாகப் புரியவில்லை.
கவிதை அருமை)
வித்யாசாகர் எழுதியது:
மனிதரை ஆளக் கற்று
பின் கடவுளைப் புரிதல்
அதாவது இறுதி அறிதல் ஞானத்திற்கு உரிய வரம்பென்று அறிகிறோம்;
அத்தகைய ஞானம் பேசும்
இவ்வுலகிலும்
அத்தகு நிலைக்கு வளர்ந்தபோதும்
நீதி நியாயம் தர்மம் என்று எல்லாம் பேசிக் கொண்டிருக்கும் போதும்
ஒருவன் கோபுரத்தில் இருப்பதும்
எங்கோ ஒரு குழந்தை (அதிகமாக சோமாலியாவிலும்) ஒரு பிடிச் சோறின்றி
இறப்பதும் நம் வாழ்வுமுறையின் முரணுக்கு உட்பட்டதில்லையா?
என்னிடம் கோடி கோடியாய் பணமுள்ளது
என்னைப் போல் கோடி பேர் உள்ளனர்
எனக்குப் பின்னே கோடியைத் தொடுமளவிற்கு
பிள்ளைகள் பசியால் இறக்கின்றன’ யெனில்
நாம் யார்?
மனிதனின் முழு தெளிவு அறவே அனைவருக்குமின்றி
காட்டிலிருந்து வீடுவரை கோவிலையும் கலவரங்களையும் செய்து
தெய்வம் பற்றியும் பேசி கொலைகளும் கொள்ளையும் கற்பழிப்பும் செய்து
பின் ஒரு குழந்தை பசியால் சாவதை மாடிமீதமர்ந்து கணினியில் படிக்கும் நாம்
அக்குழந்தையின் இறப்பிற்கு காரணமான சமுகத்தின்’
கொடூர மனிதர்களில் ஒருவரில்லையா???
ஒருவர்தான்.
ஓசோன் மண்டலத்தில் ஓட்டைவிழ நாம் காரணமானவர்கள் எனில்
அதை நம் மாற்று செயல்பாடுகளால் மெல்ல மெல்ல குறைக்கவோ
அதிகரிப்பதை தடுக்கவோ நம்மால் இயலுமெனில்
இங்கு நாம் மீதம் மிஞ்சி கீழே ஒரு தட்டு உணவைக் கொட்டுகையில்
எங்கோ ஒரு குழந்தை ஒரு பிடி உணவின்றி பசியால் இறக்குமானால்
அதற்குக் காரணமும் நாம் தான்’ என்பதையே முன்வைக்கிறது அவ்வரிகளும்..
தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றியும் அன்பும். ஒருவேளை அவ்வாறில்லாது, அது “கொள்ளும்” என்று இருப்பதால், குழம்பிப் போய் கேட்டிருப்பின் மன்னியுங்கள், அது தட்டச்சுப் பிழை. “கொல்லும்” என்றே இருத்தல் வேண்டும். இப்போதே கவிதையிலும் திருத்தி விடுகிறேன். மிக்க நன்றியும் வணக்கமும்!
வித்யாசாகர்
LikeLike