மரமெல்லாம் பூப்பூக்கும்
பூவோடு இலைக் கணியாகும்
கணியோடு’ தின்று நிற்க நிழலாகும்
நிழலுக்குப் பின் விறகாகும்;
விறகெல்லாம் நெருப்பாகும்
நெருப்பெல்லாம் எரிந்து விளக்காகும்
விளக்கில் வெளிச்சம் பூக்கும்
வெளிச்சத்தில் வாழ்க்கை நமக்கே வசமாகும்;
மனசெல்லாம் ஆசை நிறையும்
ஆசையில் அன்பு மலரும்
அன்பில் நெருக்கம் தீயாகும் – உடல்தீயின்
தகிப்பில் வீடெல்லாம் மழலைச் சிரிக்கும்;
செடியாகி மழலை மரமாகி
ஆளான பின்னாலே நம் பெயராகி
பெயரின் உச்சத்தில் முடிநரைக்க – மீண்டும்
பெற்றோராய் மடிதாங்கும் பிள்ளைகளே நம் வரமாகும்;
மேகம் இடித்து மழையாகும்
மழை வேரில் நீராகி உடம்பில் உயிராகி
காலம் உயிரைத் தாங்க’ மூச்சு நிற்காதப் –
பொழுதுகளில் குழந்தைகளே உலகமாகும்;
உலகின் சிறப்பொன்றில் வானமது மூடும்,
திறக்கும், திறக்கையில் சூரியன் வெப்பத்தால் சிரிக்கும்
பின் மூடும் அந்திப் பொழுதில் –
கைமேல் நிலவாய் குழந்தைத் தூங்கும்;
வளர்ந்து காதின் மடல் தொட்டு நிற்கும்
கைகனக்க புத்தகம் சுமக்கும், வாழ்க்கை
கனத்தக் கண்ணீரில் தேக்கி நம் மனசைத் தாங்கும்
வானமும் பூமியுமாய் நம்மையே நினைக்கும் குழந்தை;
காற்றும் மொழியும் குளிரும் வெப்பமும்
நல்லதும் கெட்டதும் சரியும் தவறும்
தந்தை வலியும் தாயின் உழைப்பும்
ஒற்றைச் சொல்லால் நிறையும் – அந்த சொல்லுக்கு
உயிரென்றும் குழந்தையென்றும்
இருபெயராகும் –
அதைப் பெற்ற வயிறொன்றும் சுமந்தத் தோளொன்றுமே
அநிச்சையாய் யறியும்;
அறிய மறுக்கும் பொழுதுகளில்
விடுபடுகின்றன வாழ்க்கையும்; வீட்டின் வெளிச்சமும்!!
————————————————————————————————–
வித்யாசாகர்
குறிப்பு: நவம்பர் பதினான்காம் நாளன்று நாம் கொண்டாடிவரும் குழந்தைதினத்தை முன்னிட்டு எழுதியது..
அருமை..அருமை…முத்தான வரிகள் ……
LikeLike
அன்பும் வணக்கமும் பாலாஜி, மெச்சுதலுக்கு நன்றி. ஒரு பெற்றோரின் கடன் என்பது சமுகத்தின் அத்தனை மாற்றத்திற்கும் உரித்தான பெரும்பணியாகவே உள்ளது. முட்டையிலிருந்து புட்டு உலகைக் காண்பிக்கையில்’ உலகை நல்லவிதமாகவே காட்டிவிடுவதும்’ நாளை அந்த குழந்தை இவ்வுலகை நல்ல விதமாகவேப் பார்க்கவும் பயன்படலாம்..
LikeLike
என் அண்ணன் எழுதும்
ஒவ்வொரு வரியும்
வித்தாகும் வித்துகள்
செடியாகும் செடிகள்
சில மரமாகும்
அப்படி மரமானாலும்
அதில் சில பூத்து
குலுங்கும்.
அவையே உங்கள்
கவிதையின் வெற்றி.
வெற்றி பெரும்
ஒவ்வொரு எழுத்தும்
கின்னஸில் இடம்பெறும்
அது என் ஆசியும்
ஆசையும் கூட.
மழலையின் சிரிப்பு
ஒரு போதை.
அதில் மூழ்கினாலும்
தித்திக்கும்.
மூழ்காவிட்டாலும்
தித்திக்கும்
பேசும் ஒவ்வொரு ஒலியும்
வேத வேதாந்தமாகும்
பாதாள உலகில் கூட
அதன் பெறுமதி
புல்லரிக்கும்
கேட்கும் பேச்சும்
இசையாகும்.
நாம் வாங்கும்
ஒவ்வொரு சின்ன செல்ல
உதையும் பஞ்சு மூடை
எம் மேல் பட்டது
போல இதம் தரும்.
LikeLike
ஒரு குழந்தைப் பற்றியப் புரிதல் தாய்க்கு மிக நிறைவானதாகவே இருக்குமென்பதன் பொருத்தம் மிகு வரிகள் சுகந்தினி. உங்கள் அன்பும், நீங்கள் கொண்டுள்ள மதிப்பும், உங்களைப் போன்ற அன்புள்ளங்களின் ஆசியும் மட்டுமே என் மேன்மைக்கு முதல் வித்தாகிறது..
மிக்க அன்பும் நன்றியும்மா…
LikeLike
மிக அற்புதமான வரிகள்..நன்று!
LikeLike
மிக்க அன்பும் வணக்கமும் உமா.., மனதின் அடியாழப் பாராட்டென்றுப் புரியும், ஒவ்வொருப் படைப்புக்களையும் படித்து ரசித்து’ ஒரு ஆசிரியையினால் நம் படைப்புக்கள் மெச்சப் படுவதில் மனது நிறைந்த மகிழ்வே….
LikeLike