நாலுச் சுவத்துக்குள்ள வாழ்க்கைதாங்க – எங்க
கட்டில்சுகமும் கனவுலதாங்க,
சம்பளமெல்லாம் பெருசுதாங்க – அதைச்
சம்பாதிச்சும் வாழ்க்கை நெருப்பிலதாங்க;
சுட்ட பணம் பளபளக்கும் – மிளகாய்ச்
சிவப்பாய் நாட்கள்கூடக் கடக்கும்,
அனல்’ல வெந்து சாகும்வரை – நாங்க
சமைக்கும் சோறு மணமணக்கும்;
நொந்த மனசு நெடுநாள் வலிக்கும் – கரண்டி
துழாவி’ தெரியும் முகங்களைப் பார்க்கும்,
வடிச்ச சோறு ஆவிப் போல – வயசு பறந்து
வாழ்க்கை உப்புச்சப்பில்லாம முடியும்;
முப்பது கடந்து – மனசு பொண்ணு தேடும்
தேடல் நீளும், எங்கோ ஒரு பொண்ணுக் கிடைத்தாலும்
அது தொப்பியைக் கழற்றிப் பார்க்கும் – தொந்தியைத்
தடவிநிக்கும் – வேறவழியில்லாம மனசு வேறுவீட்டைப் பார்க்கும்;
எப்படியோ திருமணமும் முடியும் – போகும்வரும் சொச்சநாளில்
பேருசொல்ல பிள்ளைகளும் பிறக்கும், பிறகு
பிள்ளைகளைப் பார்க்காம – மனைவியிடம் சேராம
போறநாளு ஒவ்வொன்னும் ‘ஏன்டா கட்டிக்குனன்னு கேள்விக் கேட்கும்;
சரி தலைஎழுத்தேன்னு சாம்பார் வைப்போம்
குழம்பு வைப்போம் சுட சுட இறக்கி வைக்கையில்
கைச்சுட்டாலும் கருமம்னு விடுவோம் – கரிப்பிடித்த
அடுப்போட மனசையும் போட்டெரிப்போம்;
உடம்பு முடியலையோ – வெகுநாளாத்
தூங்கலையோ – நாள்கடந்து நாங்க
திங்கலையோ’ கேட்க யாரிருக்கா – ஒருநாளு
சமைக்கலைன்னா கூலி குறைக்க ஆளிருக்கும்;
காதல்ல தோற்றாலும் – கட்டின மனைவி
கல்லெறிந்தாலும், வீட்டில் யாரோ செத்தாலும்
எங்கள் கண்ணீரும் சுவையாகும் – வெளியத்
தெரியாதச் சாபமாகும்;
கருவேப்பிலை பிச்சிப் போட்டா – மனசும் கூட
பிய்ந்துவிழும், கடுகள்ளிப் போட்டாலும்
கனவெல்லாம் கூடவிழும், எரியும் நெருப்பைப் போல
மனசெரிந்து விறகாக் கருகும்;
பண்டிகைன்னாலே பயம் வரும் – அன்று
அரைப்பொழுதில்’ ஒரு நாள் வேலை கணக்கும்
கொண்டாடத் துடிக்கும் மனதில் – பிள்ளைங்க
அப்பான்னு ஏங்குமோன்னு கவலைவரும்;
பொண்டாட்டிப் பேசிடுவா; என்ன தொழிலுய்யான்னு
சொல்லாமல் முனுமுனுப்பா, வெடிக்கும் பட்டாசு சப்தம்
அவப் பேசும் தொலைப்பேசியில் கேட்கும், மனசு
சிட்டா பறந்து அம்மா அப்பாவையெல்லாம் நினைக்கும்;
படிச்சவங்களுக்கு மின்னஞ்சல் வரும் – நாங்க
படிச்சாலும் மீன்குழம்புதானே மிச்சம்? கொழும்பு கொதிக்கும்
நேரத்துக்குள்ள பழைய கடிதம் நினைப்பு வரும் – எடுத்துப்
படித்தா லழுகை வரும்; அவப் பட்டினி ஆங்காங்கே ஈரமா எழுதியிருக்கும்;
என் குறைய நான் சொல்ல எனக்குன்னு – யாரிருக்கா
இன்னொரு சமையல் காரன் என்னைப்ப் போல
எதிரிருப்பான் – எங்களுக்கு புரிஞ்ச வாழ்வை எதுக்கு சொல்லி
வெளியவைக்க, உள்ளே புகையிலை வெச்சி பீடியா புகைச்சித் தீர்ப்போம்;
ஒரு கிளாசு சாராயம் விளக்கு வெச்சா
குடிச்சித் தீர்ப்போம், விடிஞ்சா தெரியும் கறுத்த முகத்தில்
யாரும் துப்பாத எச்சில் துடைப்போம்’
குடிகாரன் பேரழிக்க நல்ல சமயல்காரன்னுப் பேரெடுப்போம்!
—————————————————————————–
வித்யாசாகர்
மனசை நெகிழ வைக்கும் அருமையான கவிதை.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள்.
LikeLike
நன்றி ஐயா. இடைவெளிக்குப் பின் சந்திப்பதில், மேலும் முகநூலிலும் பகிர்ந்ததில் மகிழ்ந்தேன்.
இக்கவிதையினை எழுதி முடித்ததும் சமைக்கும் தம்பி ஒருவரிடம் படித்துக் காட்டினேன். அவரின் கலங்கிய மனது வார்த்தையில் உடைபட்டுத் தொலைபேசியில் கேட்டது… உண்மை!!
LikeLike
எஸ்.கே.நடராசன் எழுதியது:
நிஜத்தின் வெளிப்பாடு
அருமை அருமை ஐயா
வாழ்த்துகள்
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
———————
ஜெயஸ்ரீ ஷங்கர் எழுதியது:
பெரிய விருந்துகளில் ருசி மட்டுமே தெரியும்..அதை சமைபவரும் அதில் அவர் படும் துன்பமும் புரியாது..
அந்த விருந்தின் பின்னணியில் துயர் துடைக்கும் ஆன்மாக்களின் ஆதங்கம்
கவிதையாய்…அழுகிறது..
இனிமேலாவது ருசியான உணவுக்கு பின்னால்… உறங்கும் உணர்வை
நன்றியோடு சந்திப்போம்…
நன்று.
ஜெயஸ்ரீ ஷங்கர்..
———————
வித்யாசாகர் எழுதியது:
மிக்க நன்றியும் அன்பும் உறவுகளே. பொதுவாக, சமைப்பது ஒரு உயிர்ப்பு சுரக்கும் கலை. அந்த கலைக்கு நாம் தரும் அங்கீகாரம் தான் என்ன? நன்றாக சமைத்தீர்கள் எனும் பாராட்டும், மெத்த நிறைந்த வயிற்றின் நன்றி அறிவித்தலும் தான்.
பொதுவாக நான் உணவகம் சென்றாலும் சரி, யாரேனும் சமைத்து உண்டாலுங் கூட மிக நன்றாக சமைத்துள்ளீர்களே என்று வரிந்துக் கட்டிச் சென்று சொல்லிவருவதுண்டு.
காரணம், சமைத்த கைகளுக்கு ஒரு சின்ன வலையிடுவோம்; அதை நன்றி கலந்த வார்த்தையிலும் செய்வோம்..
நன்றி : தமிழ் பிரவாகம்.
LikeLike
//குடிகாரன் பேரழிக்க நல்ல சமயல்காரன்னுப் பேரெடுப்போம்//
நச்சென்ற வரிகள்
With regards
SuganthiVenkatesh
வித்யாசாகர் எழுதியது:
மிக்க நன்றியும் அன்பும் சகோதரி…
காணும் பலதில் சிந்தனைக்கெட்டிய ஒரு வலி… அவ்வளவே..
—————————————————————–
அருமையாகக் கதை சமைத்திருக்கிறீர்கள்.
வாழ்த்துகள்
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
வித்யாசாகர் எழுதியது:
நன்றி ஐயா. பாடுபொருள் அங்ஙனம் வலித்திருந்தது..
—————————————————————–
//அதைச் சம்பாதிச்சும் வாழ்க்கை நெருப்பிலதாங்க
அனல்’ல வெந்து சாகும்வரை – நாங்க
சமைக்கும் சோறு மணமணக்கும்//
அரிய சிந்தனை..
வாழ்த்துக்கள்
அன்புடன்
அகிலா ராமசாமி
வித்யாசாகர் எழுதியது:
அன்புச் சகோதரிக்கு நன்றியும் வணக்கமும், பார்க்க ஒரு முருக தீட்சண்யம் தெரியும் அவர் பார்வையில், பதின்மூன்று வருடங்களுக்கு முன், ஓமானில் இருந்தபோது, எஞ்சிய நேரங்களில் நாங்கள் அவரோடும் அவர் எங்களோடும் அமர்வதுண்டு.
அவரும், அவரோடு, எங்கோ மழைநாளில் அடுப்பு மூடிய களிமண் சுவர் உடைந்த ஒரு உணவகத்தில் பணிக்கிடையே உணவுண்ணச் சென்று அங்கே சமைப்பவரின் நிலைக் குறித்து’ குறித்துக் கொண்டதும்,
இங்கே சென்ற வாரம் பக்ரீத் பண்டிகையன்று தம்பி ஒருவரை சந்திக்கப் போகையில், அவர் வெந்த முகத்தின் நீர்துளிகளோடு எங்கள் முன் வந்து நின்றதும், இதுபோல இன்னும் சிலவும்…. இந்த வரிகளுக்குச் சொந்தமாயின….
வித்யாசாகர்
நன்றி: சந்தவசந்தம்
LikeLike
ஆம், அதே நேரம் சிந்திக்கவும் செய்யுது
ம்ம்ம்ம் என்ன சொல்ல தெரியலை.
LikeLike