கண்குத்திக் கிழிக்கும் பார்வைகளில் வடிகின்றன
காமப்பசிக்கான ரத்தம், இரத்தம் சுவைக்கும் மிருகக்கடலில்
விட்டில்பூச்சிகளென விழுந்து – உடலாசைநெருப்பில்
கருகிப்போகின்றன பல பெண்களின் முகங்கள்;
பச்சைப் பச்சையாய் மணக்கும் – அம்மா
அக்காத் தங்கைகளின் வாசமருத்து, எப்படி ருசிக்கிறதோ
அந்த வெறும் தசையும் வளைவுகளும்
உரிமையில்லாப் பார்வையும்;
மனதை ரணமென வலிக்கச் சுடும் – குற்றவுணர்வை
கசக்கியெறிந்துவிட்டு – ரசிக்கப் புதுப்புது
பெண்களைத் தேடும் ஆணுக்கு’ எப்படிச் சொல்வேன்
அதைக் கடந்து வா, உலகமுன் கையிலென்று;
வலிக்க வலிக்க இரவுகள் – உதிரும் குழலென
தனிமையின் விரகத்தில் தகித்துத் தகித்து விழ,
எண்ணிப் பார்க்குமந்த – கடந்த வயதுகளில்
வாழ்க்கை வெறுத்து வெறுத்தேப் போனது வதைதான்;
கடல்சில தாண்டி – பருவம்
மூழ்க மூழ்க உழைத்து
நரைக்கும் முடிகளில் – ஆசை
வெம்பிக் கிடப்பதுக் கொடுமைதான்;
கற்கள் இறுகியப் பாறைகளுடைத்து – ஒருதுளி
ஈரம் தேடும் அந்நியப் பறவைக்கு
ஆங்காங்கே ஓடும் நதியது – பார்க்க
தாகமொழிக்கும் தண்ணீர்தான்;
கடக்கும் பெண்களின் இனிக்கும் பார்வையது
இருண்டோரா’ உன்னோடும் என்னோடும் நடக்கின்றார்?
இரத்த உறவென்று அவரை உணர்வதில் விரிகிறது
தோழமைக்கான சிறகுமென்பதை’ வெப்பந்தனிந்த பார்வையே யறியும்;
எதார்த்தமாய் யாரோ எட்டிப்பார்க்கும் ஒரு நோக்கில்
ஏதோ ஒரு ஜீவன்’ ஒட்டியிருப்பதென்பது வேறு,
உடல்மொழியெனும் அசைவை – ஒவ்வாதப் பலவாறு
தவறாகக் கற்று’ காற்றில் காற்றோடு மனது கலைந்துப்போவது வேறு;
சரிப் போகட்டுமென்று விடுவோம்;
இனியேனும்,
நடக்கும் நடையில் புரியும் குருட்டுப் புலம்பல்களை
ஏதேனுமொரு லட்சியக்குழிக்குள் போட்டுப் புதைத்துவிடு;
மனதின் அழுக்கை அண்ணாயெனும் வார்த்தைகளில்
நிரப்பி அலசியெடு, பிடித்த பெண்டிருக்கு இருக்கும் மனதின்
நீளம் ஆழம் கிடைத்தளவுப் படித்துவிடு, அவர்
பார்க்கும் பார்வையில் நீ இத்தனைச் சரியென்றுக் காட்டிக்கொடு;
பின் நிமிர்ந்து எழுந்து நீ நடக்கும் நேர்மை
நடையின் மிடுக்கில் – நிற்பர் பலர்
அம்மா அக்காத் தங்கையோடு ஒரு
காதலியோ; உனக்கான மனைவியோ; அன்று
உலகை ஒரு சின்ன மனசுக்குள்
உனக்காய் சுமந்து இரு!!
—————————————————————
வித்யாசாகர்
வணக்கம் …”பெண்களைத் தேடும் கண்கள்” என்ற தங்களின் எழுத்தினை உண்மைகளின் உணர்வாகக் கண்டேன். உணர்ந்தேன். விழித்தேன். மேலும், தங்களின் எழுத்துகளில் பல இதயங்கள் விழித்துக்கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கு மிகுதியாக இருக்கின்றது. பயணம் தொடர எனது
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்..
கு.ஐயப்பன்
எழுதியதன் மகிழ்ச்சியும் நிறைவும் ஐயப்பன். உண்மையிலேயே இது இரண்டு பார்வையாய் மனதில் பதிந்த வலி தான். ஒன்று, ஊரில் என் தம்பிகளெல்லாம் தெருவை பெண்பார்க்கும் இடமாக மாற்றிக் கொள்வதன் மூலம் அவர்கள் தொலைக்கும் வாழ்வின் முன்னேற்ற நிலைகளைக் கண்டு.
மற்றொன்று, இங்கே வெளிநாடுகளில் தெருவில் குடும்பத்தோடு செல்லக் கூட அஞ்சுமளவு உடம்பில் மேயும் சில கண்களின் பார்வை. அதிலும், இரண்டு விதம் இருக்கும் ஒன்று, பார்வையில் மென்றுவிழுங்கும் வெப்பம் மிகு பார்வை, இன்னொன்று, தனக்கு அமையாத வாழ்வை எண்ணி நான்கைந்து வருடமாகியும் ஊர் செல்ல இயன்றிடாத என் சகோதரர்களின் வலி ஏக்கம் மிகுந்தப் பார்வை.
நம் முன்னோர் பண்பில் சிறந்தோர் என்பதற்கு பல ஆதாரம் உண்டு. பருவத்தே பயிர்செய் என்று பல இடங்களில் சொல்வர். அது உடலுக்கும் பொருந்தும். அவ்வப்பொழுது அதுஅது நடத்தல் ஒரு தேவை. பசி போல காமமும் ஒரு தேவை தான். அதுவும் ஒரு பசி. எச்சில் சுரக்கும் ராகம் போல உடம்பில் சரக்கும் ஆசை இயல்பே. அதற்குத் தக வாழ்வமையாதது ஒரு பெரும் வலிதான். என்றாலும் வாழ்வின் சூழலுக்கேற்ப தன் உணர்வுகளை இடம்பார்த்து கட்டுப்படுத்திக் கொள்வோர் தன் எண்ணற்ற லட்சியங்களை இலகுவாய் வெல்கின்றனர். அல்லது, தன் இயலாமைக்குத் தக்காற்போல் வாழ்வை அமைத்துக் கொள்ளும் திறனேனும் வேண்டும். இரண்டிற்கும் மத்தியில் அமர்ந்துப் பார்க்கும் வெற்று ஏக்கத்தில் நம் திரும்பப் பெறஇயலாத நாட்கள் வெறுமனே சென்று வாழ்க்கையை வெற்றுப் பிறப்பாக்கி, நம் எண்ணங்களையே மாற்றி திசைத் திரும்பிப் போன பாழ் படகென மாற்றிவிடுகிறது.
இளைஞர்கள் இதுபோன்ற குறுகிய மனப்பான்மை வளர்க்கத் தக்க நிலையிலிருந்து மாறுபட்டு வரவேண்டும். பெரியோர், அண்ணன்கள் அப்பாக்கள் தோழர்கள் தனக்குக் கீழுள்ளோரை, தன் உடன் உள்ளோரை இதுபோன்ற மனநிலையிலிருந்து மாறத் தக்க ஆக்கப்பூர்வ உணர்வுகளை அவர்களுக்கு அளிக்கவேண்டும்.
பெண் பிரம்மிப்பானவள். அழகு நிறைந்தவள். அன்பும் நம் மீது மதிப்பும் தனித்துவ அக்கறையும் ஆசைமிகும் இன்பமும் நிறைந்துக் கொண்டவள்’ என்பதை கடந்து அவரவர்க்கான சுய ஆசைகள், எதிர்பார்ப்பு, லட்சியம், சூழல், வளர்ந்தப் பக்குவம், கலாச்சார அறிவு.. இன்னும் இத்யாதி இத்யாதி என நம் பார்வைக்குப் புரியா நிறைய மெல்லிய உணர்வு சார்ந்த விடயங்கள் உள்ளன. அவைகளை எல்லாம் நட்பெனும் பண்பிற்குள் நிறைக்கப் பார்ப்போம். நம் உயர் பண்புகளை வளர்த்து நம்மை மேல்நோக்கி நல்திசை நோக்கிச் செலுத்துவோம். நம் மனதுள் நிறைந்த ஆசைகளை கனவுகளை நமக்காய் காத்திருக்கும் நம்மவளுக்காய் உணர்வுமுழுக்க சேகரிப்போம்…
அய்யன் திருவள்ளுவன் சொல்கிறார், நம் பார்வையில் வெளிப்படும் பெண்களின் மீதான கொச்சைத் தனமான சிந்தனை, உரிமையற்ற ஆசை, நம் கற்பிதத்தில் ஏற்றுக் கொள்ளப் படாத கற்பனை’ அவர்களை நம் அறிவின் வழியே கற்பழித்ததற்கு ஈடாகக் கொள்ளப்படும் என்கிறார்.
இந்த அளவீடை மனதில் ஏற்போமெனில், நிச்சயம் யாரைப் பார்க்கையிலும் எண்ணம் தவறெனத் திரியாது…
சகோதரி சுகந்தி எழுதியது:
மனதை ரணமென வலிக்கச் சுடும் – குற்றவுணர்வை
கசக்கியெறிந்துவிட்டு – ரசிக்கப் புதுப்புது
பெண்களைத் தேடும் ஆணுக்கு//
திருந்திய பின் உலகத்தைக் கொடுத்தால் அது பெண்களை மிதிப்பதாய் ஆகாதா?
இராவணனுக்கா மீண்டும் ராஜாங்கம்?
—————————————————————————-
//மனதை ரணமென வலிக்கச் சுடும் – குற்றவுணர்வை
கசக்கியெறிந்துவிட்டு – ரசிக்கப் புதுப்புது
பெண்களைத் தேடும் ஆணுக்கு’ எப்படிச் சொல்வேன்
அதைக் கடந்து வா, உலகமுன் கையிலென்று//
அன்புச் சகோதரிக்கு வணக்கம், இதை அந்தளவிற்கு யோசிக்கவேண்டாமே. தெருவில் போகும் பெண் ஒருத்தியை, தனக்கும் ஒரு தங்கையோ, தமக்கையோ, தோழியோ இருப்பதையும் மறந்து, திரும்பித் திரும்பி கொச்சையாகப் பார்த்துப் போகும், ஒரு இளைய சகோதரனை அழைத்து, அதை விடுப்பா’ அதைவிட, இங்கு நீ படைக்க இன்னுமிவ்வளவு சாதனை இருக்குப் பார், இந்த உலகமே நீ நினைத்தால் உன் கையில் தானே என்று கேட்கும் ஒரு நடை இது அவ்வளவுதான்..
நன்றி: சந்தவசந்தம்
வணக்கம் அண்ணா ஆம் உங்கள் வடிவில்
புதிய பாரதியாரை நான் காண்கிறேன்.
ஒரு பெண்ணாக இருந்தும் கூட இதை
நான் கூறுகிறேன்.
தனித்து ஆண்களை மட்டும்
இப்படி சொல்ல கூடாது?
என்ன நான் சொல்வது
சரி தானே அண்ணா?
உங்கள் உணர்வுகளை மிக்க மதிக்கிறேன்மா.., உண்மைப் புரியாமலில்லை.., அதிக வீழ்ச்சியின் ஒரு பக்கம் தூக்கி நிறுத்தும் முயற்சிதான் இது…