காற்றுவீசும் திசையெல்லாம் நின்று நீயும் வாழ்வாய் தமிழினமே..

மிழினமே..
தமிழினமே..
என் தமிழினமே..
விண்ணை விரல்நுனியில் சுமக்கவும்
உயரே பறந்து வான்முட்டி நிற்கவும்
என்றோக் கற்ற தமிழினமே…

காலத்தை காற்றுப் போல
கடந்துவந்துள்ளாய், உலகின் நாகரிகத்தில்
உயிரெனக் கலந்துள்ளாய், ஊரின் பேரின்
வாழ்தலின் இடுக்களில் மொழியாய் நிறைந்திருக்கிறாய் தமிழினமே…

தமிழினமே…
தமிழினமே…
என் தமிழினமே…
எங்கிருக்கிறாய் இன்று தமிழினமே..
யாருக்கு கீழ்நின்று உன் மூச்சை விடுகிறாய்
யாரை நம்பிக் கொண்டு இன்னும் உனை யிழக்கிறாய்..
கடல் தின்றதில் கலங்காத நீ
காற்றுப் புயலென வீசியதில் கலையாத நீ
பூமி இரண்டெனப் பிளந்தபோதும் உள்ளடங்கிவிடாத நீ
இப்போது எங்கிருக்கிறாய்..
எங்கிருக்கிறாய் என் தமிழினமே..

உன் பாட்டன் முப்பாட்டன் ஆண்ட மண் இன்று
உனதில்லை
உன் தாய் உன் தந்தை கொண்டிருந்த மாண்பு
இன்று உனதில்லை
நீ கொண்டாடிய கலை வீரம் விளையாட்டு
வாழ்க்கைக்கான கல்வி
இன்று உனதில்லை
உன் மொழி உன் இனம் பற்றிய சிந்தை
நீ வாழ்ந்த வரலாறு
நீ படைத்த சாதனைக் குறித்த அக்கறை
ஒன்றுமே யின்று உன்னிடமில்லையே என் தமிழினமே..

எவனோ அடிக்கிறான்
எவனோ கொல்கிறான்
எவனெவனோ உன்னையழிக்க
உலகக் கைபிடித்துத் திரிகிறானே ஏனென்றுக் கேட்டாயா
எதற்கென்று யோசிக்கவேனும் செய்தாயா?

நீ யார் ?
உன் வீரமென்ன?
உன் தீரமென்ன ?
நீ கொண்ட திறனென்ன ?
நீ அசைந்தால் இந்த உலகம் சற்று அசைந்துக்கொடுக்க வேண்டாமா?
நீ நில்லென்றால் நிற்கவும்;
போவென்றுச் சொன்னால் போயிருக்கவும்வேன்டாமா?
அதற்கு மாறாக இருக்கிறாயே என் தமிழினமே
எல்லாம் இழந்து நிற்கிறாயே தமிழினமே..

வெறுமனே நாலுபேர் போகும் தெருவில்
நடக்கும் நீயும் ஒன்றாய் ஆனாயே..
யாரோ சிரிக்கும் சிரிப்பிற்குப் பொருளும்
எவனோ முறைக்கும் முறைப்பிற்கும் பயமும் நீயாய் ஆவதா?

நான்குபேர் செத்தாலும்
ஐந்தாவதாய் முலைத்தவரில்லையா நாம்?
நம்மையழிக்க எந்த கொம்பனுண்டு?
எவனுக்கும் திராணி போதாது தமிழினமே நீ
கூடி நின்றால் அழிக்க;

எப்படி அடிப்பது
எதை தடுப்பது
யாருக்கு அஞ்சுவது
யார்யாரை மதிப்பது
எப்படி வாழ்வதென்று என்றோ எழுதி இலக்கியமும் செய்தாயே
இன்றேன் உனக்கு உலகம்
விரோதமாய் ஆனது தமிழினமே..

கிழக்குப் போனால் இருக்கிறாய்
வடக்குத் தெற்கிலிருக்கிறாய்
மேற்குமெட்டு திசையிலும் நீயிருக்கிறாய் தமிழினமே
இருந்தும் ஒரேயொரு சட்டை யின்றி
பார்ப்போருக்கு நிர்வானமாய் தெரிகிறாய்;

வா.. இதோ பறந்துக் கிடக்கும் நம் தமிழரின்
ஒற்றுமை என்னும் ஒன்றை எடு
அதை துணிவென்னும் நூலால் தை
நம்பிக்கையின் நிறம் மட்டும் தோய்த்து
காலத்திற்கும் அவிழாத சட்டையென உடுத்து;

பார்ப்போர் கண்ணை உறுத்தாத உன் வளர்ச்சியில்
உலகம் மீண்டும்புது நாகரிகத்தை
உன்னிடமிருந்து கற்கட்டும்;

எமை இத்தனைக் காலம்
மண்ணில் புதைத்துவைத்திருந்த தேசங்கள்
எம் வாழ்தல் கண்டு தன் தவறுக்கு வருந்தட்டும்;

காற்றுவீசும் திசையெல்லாமென் தமிழர்
அடிமைத் தனமின்றி வாழட்டும்;

கத்தி கதறி அழத தெருக்களெல்லாம்
எம் சுதந்திர கீதம் ஒலிக்கட்டும்;

எமைக் கொன்று கொன்று புதைத்த
மண்ணில் காலத்திற்கும் அது
நிகழாத வரம் வாய்க்கட்டும்;

பசுமை பொங்குமொரு வாழ்வை
உலகம் கண்டு மெச்சட்டும்..

சின்னக் குழந்தைக்குக் கூட
நாம் தமிழரென்னும் பெருமிதம்
ரத்தத்தில் கலந்திருக்கட்டும்;

அந்த பெருமிதத்தின் நிமித்தம்
உயிர்விட்ட நம் மாவீரர்களின் மனசு
நாம் சுவாசிக்கும் சுதந்திரக் காற்றால்
என்றென்றும் நிறையட்டும்!!

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. and tagged , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to காற்றுவீசும் திசையெல்லாம் நின்று நீயும் வாழ்வாய் தமிழினமே..

  1. rathnavel சொல்கிறார்:

    அருமையான கவிதை.
    எனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    Like

  2. kathirmuruga சொல்கிறார்:

    உணர்வோட்டம் நிறைந்த நல்ல கவிதை

    Like

  3. Latharani சொல்கிறார்:

    அன்பு வித்யாசாகர்க்கு … வணக்கம்

    முகவரி தொலைத்ததைக் கூட மன்னித்துவிடலாம் ஆனால் இன்றைய தமிழன் முகமூடி போட்டுக்கொண்டல்லவா திரிகிறான். தன்னிகர்த்த தமிழினத்தின் பெருமையை உணர்ந்த – அதை மற்றவர்க்கு உணர்த்த உருமாறியிருக்கும் உங்கள் வரிகள் முகமூடி போட்டலையும் தமிழனை நிச்சயம் கீறிப் பார்க்கும்

    “விண்ணை விரல்நுனியில் சுமக்கவும்
    உயரே பறந்து வான்முட்டி நிற்கவும்
    என்றோக் கற்ற தமிழினமே…”

    அறிவிர்ச்சிறந்த தமிழினத்தின் ஆழம் அறிந்த வார்த்தைகள் வித்யா..

    “யாரோ சிரிக்கும் சிரிப்பிற்குப் பொருளும்
    எவனோ முறைக்கும் முறைப்பிற்கும் பயமும் நீயாய் ஆவதா?”

    தலை நிமிர்ந்து நின்ற தமிழினத்தின் இன்றைய நிலை…. நேற்று முளைத்த காளான்கள் எள்ளி நமைக் கண்டு நகையாடுவதை நிச்சயாமாக ஏற்றுக்கொள்ளத்தான் முடியவில்லை…. வலி தெரிகிறது…. வழிதெரியவில்லை இதிலிருந்து விடுபட

    “இருந்தும் ஒரேயொரு சட்டை யின்றி
    பார்ப்போருக்கு நிர்வா ணமாய் தெரிகிறாய்;”

    வழி தெரியவில்லையென்று நாம் நினைப்பதற்குள் …. அதற்கான காரணத்தை அறிவித்து விட்டது அடுத்துவந்த இந்த வரிகள்

    “வா.. இதோ பறந்துக் கிடக்கும் நம் தமிழரின்
    ஒற்றுமை என்னும் ஒன்றை எடு
    அதை துணிவென்னும் நூலால் தை
    நம்பிக்கையின் நிறம் மட்டும் தோய்த்து
    காலத்திற்கும் அவிழாத சட்டையென உடுத்து;”

    துண்டுதுண்டாய்த் தமிழன் ஆங்காங்கே தொக்கி நிற்கின்றான்… ஒற்றுமை விட்டபின்பு வெற்றி எப்படி வருமென்று … துண்டாகித் தனித்திருப்பவனை ஒட்டி வைத்து ஒன்று சேர்த்து… ஆதித்தமிழனின் இழந்த முகத்தை மீண்டும் பிழைக்க வைக்கும் கவிதையிது…

    அருமையான உணர்வுமிக்க கவிதை வித்யா…..

    வாழ்த்துக்கள்

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      அன்பு வணக்கம், நிறைய வார்த்தைகளின் உணர்வு கலந்த நன்றி. எம் மக்களைக் கண்டுவரும் எனக்கான அழை என் தனிமையில் மட்டுமே நிகழ்கிறது. அதற்கும் எழுத்துவர்ணம் கோர்த்து, இனியும் ஒரு தலைமுறை அழுதுவிடக் கூடாது, அதற்குமுன் அதை நாம் சிலிர்த்தெழச் செய்யும் உணர்வுக் கலவைகளால் குழைத்து வைத்திடல் கடனென்று இது எழுதப்பட்டது. வரிகள் பழையதோ, எண்ணம் பழையதோ, எல்லாமே முன்பு சொன்னவை தான்; அதேபோல் நம் வழியும் அன்றிலிருந்து அதே பட்டது தானே? எங்கு மாறினோம்? விடுதலை நோக்கிய ஒரு இயக்கம் பல இயக்கத்திற்கு மத்தியில் தோன்றியும் முப்பத்தைந்து வருடங்கள் ஆகிவிட்டது, இன்றும் எட்டி எட்டிக் கொண்டே இருக்கிறோம். இருந்தும் எட்டிக் கொண்டேனும் இருக்கிறோமே என்றெண்ணினாலும், இந்த வேகம், இத்தனை உணர்வு, இந்த பலம இன்னும் போதாது உறவுகளே…, இன்னும் இன்னும் இன்னும் அருகாமையில் மட்டுமல்ல எங்கோ தூர எனக்கென்று நிற்கும் என் தமிழனைக் கூட சட்டைப் பிடித்து இது உன் கடனெனச் சொல்லி அதை அவனின் நெஞ்சில் அவனின் பொறுப்புகளைக் குத்திவிடவேண்டும் எனும் ஒரு முனைப்பின் முயற்சி இக்கவிதையின் காரணமாக இருந்தது. அதை வரி வரிக்கு புரிந்துக் கொண்ட தன் புரிந்துணர்வையும், படிப்போருக்கு மீண்டுமொரு முறை புரியப்படுத்தும் விதமாகவும் கொடுத்த தங்களின் கருத்துரைக்கு நன்றியும் அன்பும்!!

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s