ஆயிரம் கைகளை விரித்துப் பறந்துக் கொண்டிருந்த பாலைவனக் காற்றின் குளிரின் நடுக்கத்திற்கிடையே அந்த இதயங்கள் விடுதலையின் வெப்பத்தையே முழுக்கச் சுமந்துக்கொண்டு மாவீரர்களைப் பற்றிய நினைவுகளையெல்லாம் அலசி’ மீண்டும் கேட்போர் மனங்களில் விதைத்துக் கொண்டிருக்க, உணர்வுகளில் தகித்துத் தகித்து ஈழக் கனவினை எல்லோர் எண்ணத்திலும் சமைத்துக் கொண்டிருந்தது அந்த நிகழ்வு.., அந்த அரங்கம்.
குவைத் தமிழர் கூட்டமைப்பின் சார்பில், நேற்று மாலை ஐந்து மணியளவில் துவங்கப்பட்டு இரவு ஒன்பதரை மணிவரை சகோதரி செங்கொடி நினைவரங்கத்தில், மாவீரர்களின் நினைவெழுச்சி நாள் நிகழ்த்தப்பட்டது. நிகழ்ச்சியின் முதலாக கவிஞர் திரு.விருதைப் பாரி அவர்கள் வரவேற்புரையாற்றித் துவங்கிவைக்க, அய்யா திரு. தமிழ்நாடன் அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றி மாவீரர்களை நினைவுக் கூற, கவிஞர் திரு. முனு சிவசங்கரன் அவர்கள் மாவீரர் உரையாற்றி அமர நேரம் மெல்ல மெல்லக் கடந்து மனதில் விடுதலைத் தீபமென ஒளி வீசிக் கரைந்தது. இறுதியில் பேச எண்ணியவருக்கெல்லாம் உணர்வு பகிரும், கருத்துப் பகிரும் வாய்ப்பினை அளித்த ஒரு மேடையாக நிறைவுற்றது அந் நிகழ்வு.
அரசியல் போக்கு குறித்தும், ஈழ விடுதலைப் போரில் நிகழ்ந்த போர்க்குற்றம் பற்றியும், இழப்புப் பற்றியும், எழுச்சிக் குறித்தும், இனி செய்யவேண்டியது குறித்தும் பேசப் பேச சுடர்விட்டெரிந்த எண்ண அலைகளில் கைக்கோர்த்துக் கொண்டது அந்த ஒற்றுமையென்னும் மீப்பேறு ஆயுதம்.
இடையே, தமிழர் ஆங்காங்கே சீர்குலைந்துக் கிடப்பதற்கான காரணங்களை ஒற்றுமையின்மையின் ஒற்றைப் பொருட்டெனப் பேசி எடுத்துரைத்தார் ஐயா திரு. தியாகு அவர்கள். இனம் குறித்த அக்கறையும், தமிழர் விடுதலைக் குறித்த உணர்வுப் பெருக்கும், ஈழமக்களின் வலியும் வலிக்கான காரணமுமென்ன என்பதை தொலைதூரத்திலிருந்து இணையம் வழி வந்து சிந்திக்கச் சொல்லி மாவீரர்கள் தின சிறப்புரையாற்றி விடைப் பெற்றார். அவரின் ஒவ்வொரு எண்ணமும் வார்த்தைகளாய் சிதறி எல்லோரின் மனதிலும் பதிந்துக் கொண்டதை’ வரிக்கு வரி எழுந்த கரவொலி சப்தம் சாட்சிசொல்லிப் போனது.
அடுத்து இணையம் ஊடாகப் பேசிய சர்வதேச தமிழீழ அரசின் துணைப் பிரதமர், ஐயா திரு. உருத்திரபதி சேகர் அவர்கள் ஈழத்தில் நிகழ்ந்த பேரிழப்பு குறித்தும், ஒரேயொரு நம் வீரர்கள் கூட நம்மிடமிருந்து பிரிந்துச் சென்றிடவில்லை, மாறாக நமக்குள்ளேயே உணர்வுகளாய் உறைந்துக் கிடக்கின்றனர், அவ்வுணர்வினை மீட்டு அடுத்தப் பயணத்தை நம் விடுதலை நோக்கி நடைப்போடுவோம்’ காற்று உடன் வருவதுபோல் அவர்களும் நம்மோடு நெருங்கியே இருப்பார்கள் என்று குரல் நெருடிச் சொல்லி விடைக் கொண்டார். வந்த உறவுகள் அவரின் வார்த்தையின் ஈரத்தில் சற்று மனம் நெகிழ்ந்துப் போயினர்.
அடுத்தடுத்து.., தோழர்கள் திரு. ராமன், திரு. மணிகண்டன், திரு. முத்து, திரு. ரகுநாதன், திரு.செந்தில்குமார், திரு. மாதவன், திரு. சேகர், திரு. வின்சென்ட், கவிஞர் திரு. சிவமணி, கவிஞர் திரு. முனு.சிவசங்கரன், கவிஞர் திரு. சத்யா, கவிஞர் திரு. வித்யாசாகர், கவிஞர் திரு. பகலவன் என அவரவர் சார்ந்த இன உணர்வினை, கோபத்தை, உள்ளே அழுதுக் கொண்டிருக்கும் தன் இனத்தின் மீதான பற்று கொண்ட அக்கறையினை உரையாகவும் கவிதையாகவும் பகிர்ந்து, வந்தோர் போய் ஒரு நூறு பேரிடமேனும் சொல்லி அவரவர்க்கான உணர்வை அவரவருக்குத் தரத்தக்க சிறப்பாக பேசி மாவீரர்களை நினைவுக் கூர்ந்தனர். விடுதலை உணர்வை உதிர ஆழம்வரைப் பதித்தனர்.
இறுதியில், எந்த ஒரு அரசியல் கட்சிசார் வாசனையோ, எவரின் சுயநலப் பொருட்டோ இன்றி ஒற்றை மனிதரின் மொத்த முயற்சியில் சேர்ந்த ஒரு இனத்தின் ஒற்றுமைக்கான கூட்டம் நாங்களென தங்களைப் பற்றிப் பேசிக் கொள்ளாமல்’ பதிவுசெய்தவிதமாய் நிறைவுற்றது இம் மாவீரர்களின் நினைவெழுச்சி நாள் கூட்டம்.
இதற்கிடையே தினமலர் நாளிதழைப் புறக்கணிப்போம் என்று உறுதியேற்று கவிஞர் விருதைப் பாரி முழங்க’ அதை ஏற்றுக் கொள்ளும் விதமாக தமிழச்சி செல்லம்மா வித்யாசாகர் தன் முதல் கையெழுத்தினையிட’ அரங்கம் அதையும் பின்தொடர்ந்து, மீண்டும் நாளை விடியப் போகும் சூரியன்’ மறையும்விதமாகக் கூட்டம் கலைந்து, அங்கே வெற்றிடத்தையும், அந்த வெற்றிடத்தில் கறைபடியா எம் உறவுகளின் என்றோ வடிந்த ரத்தங்களின் ஈரத்தையும் பூசிப் பூசி, விடுதலையின் உயிர்ப்பை அங்கே மிச்சம் வைத்துக்கொள்ள’ எல்லோரும் அங்கிருந்து தமிழரென்னும் இனமான உணர்வோடு விடைக் கொண்டோம்!
—
வித்யாசாகர்
(26.11.2011)
hai
LikeLike