ஒவ்வொன்றாய் மலர்கள் பூக்கும்
அதத்தனையும் மண்ணில் கவிதையாகும்;
வாசம் வானம் துளைக்கும் – அதைக் கடந்தும்
தமிழ் இலக்கியமாய் காலத்தில் நிலைக்கும்;
பாசமற உள்ளம் சேரும்
பாட்டில் பாடம் தேடும்
காடு கனக்கும் பொழுதில் – தமிழே நின்று
தலைமேல் வாழும்;
யாரும் பாடும் ராகம்
எங்கும் ஒளிரும் தீபம்
வாழ்வின் நகரும் தருணம்
நாளை தமிழில் வரலாறாகும்;
பேசும் உலகம் பேசும்
மறந்து மறைந்துப் பேசும்
கூசும் நாக்கை அறுக்கா
துணிவில் தலையை ஆட்டும்;
துடைத்த இனத்தின் மீதம்
துளியேனும் நிலைக்க எழுவோம்
துடித்து அழுத வலியை இனி
திருப்பித் திருப்பித் தருவோம்;
தடுக்க இயலா வேகம் – தமிழர்
மரபிலிருக்கு அறிவோம்;
திரட்டி திரட்டி சேர்த்து – நம்
ஒற்றுமை பலத்தை உணர்வோம்;
கொடுத்துக் கொடுத்துச் சிவந்த
கைகளை மூடு இனமே,
கத்தி, கதறி, கெஞ்சும் –
குணத்தை விட்டொழி இனமே,
கண்கள் பதியும் திசையில்
காற்றாய் பரவு இனமே,
கலங்கும் விழியின் ஓரம்
கண்ணீர் சுடட்டும் இனமே;
விட்ட ரத்த நெடியின்
முழு வீரம் கொள்ளு இனமே
உயிரின் ஈரம் தொட்டு
வாழும் திணவைக் காட்டு இனமே;
ஒண்டி ஓடி அஞ்சும்
பயத்தை விட்டொழி இனமே
ஒட்டுமொத்தப் பேரும் எங்கும்
ஒன்றாய் நில்லு இனமே;
காவியமெல்லாம் வேண்டாம்
ஒருபிடி மண்ணெடு போதுமினமே’
அந்த மண்ணிலேனும் நாளை
உன் உரிமைக் கொள் இனமே!!
———————————————
வித்யாசாகர்
வணக்கம் அண்ணா!
எத்தனையே ரணங்களையும் வலிகளையும் தாங்கிய இதயங்களுக்கு
ஒருதிறவு கோலாக உங்கள்எழுத்துக்கள் அமைந்துள்ளது……
உங்கள் பணி வெற்றிஅடைய எனது உளமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா
நன்றி
என்றும் அன்புடன்
ரூபன்
வணக்கம்பா. நலமா இருக்கீங்களா? நிறைய எழுதுகிறீர்களா? நேரம் கிடைக்கையில் வலைத்தளம் வந்துப் பார்த்துக் கருத்திடுகிறேன். தொடர்ந்து எழுதுங்கள். எழுத எழுத எழுத்து உயிர்வரை நிறைந்த சிந்தனையெனப் பரவும். அந்தப் பரவுதலின் சிந்தனையில் மெல்ல மெல்ல எழுத்தின் ஞானமும் வெளிப்படும். மிக்க வாழ்த்துக்களும் அன்பும்..பா!
நல்ல கவிதை.
வாழ்த்துகள்.
நன்றி அய்யா. தமிழருக்கென தனியான ஒரு மண், ஒரு வாழ்க்கை, தனித்த முயற்சிக்கான வெற்றிகள் கிடைக்கும்போதே, உலகத்திற்கு இன்னும் நன்றாகப் புரியவரும்; தமிழரை.
அந்த பயம்தானேக் காரணம் இப்படி எல்லோராலும் தமிழர் அலைகழிக்கப் படுவதும்…