மண்சோறு தின்ற நாட்களது..
சனி ஞாயிறு கிழமைகளில் விடுமுறையெனில்
அம்மாவிற்கும் அப்பாவிற்கும்
அத்தனை பயம் வரும்; வீடெல்லாம் விளையாட்டு நிறையும்
வாஷிங் பவ்டர் நிர்மா’ விளம்பரம் கூட இனிக்கும்
ஒளியும் ஒலியும் மாற்றிவிட்டு
வேறு சானலில் –
வயலும்வாழ்வும் வைக்க முடியாது அன்று;
தொலைகாட்சியை நிறுத்திவிட்டால்
திருடன் போலிஸ் விளையாட
பிளாட் போடாத இடங்கள் நிறைய இருந்தன;
தும்பி பிடித்து தலைதிருகி போடுவதால்
ஒரு உயிர் போகிறதே என்று கூட
அத்தனை அறிந்ததிருக்காத நாட்களது;
ஓடும் தெருவில் கோவில் இருந்தால்
உள்ளே சாமிதான் இருக்கிறதென்று
முழுமையாக நம்பிய மனது அது;
மறைத்துவைக்கத் தெரியாத பொருட்களை
கொடுக்க மனமின்றி அழுத
அந்த நாட்கள்’ அந்த தலைதிருகிப் போட்ட
தும்பிபோல திரும்பிக் கிடைக்காமலேப் போனது; வருத்தம் தான்!
படிக்கும் புத்தகத்திற்கு நடுவே அதிரசமும்
சட்டைத் துவைக்கையில்
சட்டைப் பையினுள் ஒரு துண்டு முறுக்கோ இல்லாமலும்
நாட்கள் அப்போது போனதேயில்லை;
ஒரு காகிதம் கிழித்துக் கொடுத்து
வாங்கிக் குடித்த ஒரு மூடி தண்ணீர்
அன்று படித்த பாடத்தைவிட அதிகமாகஇன்றும் நினைவிலுண்டு;
ஒரு கையில் தம்பியும் இன்னொரு கையில்
தங்கையும், தலையில் பையும் மாட்டிக் கொண்டு
ஓடிபோய் வரிசையில் நின்று
இரண்டாம் மூன்றாம் வரியிலிருந்து பாடிய
தேசியகீதம் – தவறென்றெல்லாம் இன்றுவரை வருந்தவில்லை;
நாலுமணிக்கு பள்ளிவிட்டதும்
ஓடிவந்து பையை வீட்டில் எறிந்து விட்டு
தெருவின் நீளத்திற்கும் வெவ்வேறு விளையாட்டை இரைத்து
காலெல்லாம் மண்ணோடு வீட்டிற்கு வந்து கால்கழுவி
சாப்பிட தட்டெடுத்துக் கொண்டு அமர்கையில்
வயிற்றில் இருந்த பசியும்
மனதில் இருந்த நிறைவும் தொலைந்து
அப்பாவாகி தாத்தாவாகி என்னதான் வளர்ந்தாலும்
அந்த மண்சோறு தின்ற நாட்கள்; நாட்கள் தான்!!
————————————————————————————-
வித்யாசாகர்
அருமை.
LikeLike
மிக்க நன்றி அய்யா. நான் நினைவில் சேகரிக்கும் பொழுதுகளைப் பற்றிப் பாட வாய்ப்பேற்படுத்தித் தந்த சந்தவசந்தக் குழுமத்தின் கவியரங்கத்திற்கே நன்றிகள் சேரும்!
LikeLike
இழந்த நாட்களை இனிய நினைவுகளை மீட்டிப் பார்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது… அற்புதமான பதிவு!!! வாழ்த்துக்கள் நண்பரே!!!
LikeLike
அன்பு வணக்கம் அய்யா, தங்களின் பூரிப்பு மகிழ்வைத் தருகிறது. மிக்க அன்பும் பெருநன்றியும்!
LikeLike
அருமை… அருமை… வாழ்க வளமுடன்.
திருக்கார்த்திகை நல்வாழ்த்துக்கள்.
பகிர்விற்கு நன்றி நண்பரே!
இதையும் படிக்கலாமே :
“அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)”
LikeLike
தங்களின் வருகைக்கு மகிழ்ச்சியும் அன்பும். மிக நல்ல தளம் உங்களின் தளம். நிச்சயம் பார்கிறேன். உங்களின் எழுத்திற்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..
LikeLike
கவியருவி ரமேஷ் எழுதியது:
கவிதை மிகச் சிறப்பாக இருக்கின்றது… நன்றி கவிஞரே…
கவிதையைப் படிக்கும் போது என் கிராமத்து நினைவுகளும் பள்ளிக்கூடக் காலங்களும் நினைவுக்கு வந்நன…
அந்த நாட்களெல்லாம் திரும்ப வராது… ஆனால் திரும்பத் திரும்ப நினைத்துப்
பார்க்கலாம்… இவ்வாறு எத்தனைப் பேருக்கு நினைத்துப் பார்த்து மனம் மகிழும்
இன்பம் கிடைத்திருக்குமோ தெரியவில்லை…
நேற்று நான் என் கிராமத்துக்குச் சென்று வந்தேன்… ஆம் நேற்றையப் பொழுது
எப்படிப் போனதே என்று தெரியவில்லை…
நேற்றைய கிராமத்து நினைவுகளோடு
இன்று நான் நகரத்தில்…
———————–
மிக்க நன்றி ரமேஷ். படைப்பினைப் போற்றக் கூட நல்ல மனசொன்றும் தேவைபட்டுவிட்ட காலத்தில்; அந்த நாட்கள் எல்லாம் வெறும் நினைவாகவே தான் நின்றுப்போகின்றன மனதிற்குள்!!
நன்றி: பிரவாகம்
LikeLike