ஒரு வீடு ஒரு பெண்ணின் வெளிச்சத்தில் பிரகாசிக்கிறது. அந்த பெண் தன் குடும்ப மகிழ்வில் ஒளிர்கிறாள். அவள் ஒளியைப் பற்றி மார்தட்டிக் கொள்ளும் நாம் அவளின் கண்ணீரைப் பற்றி அத்தனைக் கவலைப் பட்டதில்லை. இதோ, அப்படி ஒருத்தி தன் இறந்த தாயை எண்ணி அழுகிறாள்..
தலைப்பு: என் தாய் வீடு..
———————————————
முன்பெல்லாம் எனக்கு
அம்மா என்று அழைக்கவாவது
ஒருத்தி இருந்தாள்;
என்றேனும் அவளைப் பார்க்கப்
போகையில் மாத தவணையில் பணம் கட்டியேனும்
எனக்கொரு புடவை வாங்கி
வைத்திருப்பாள்;
முடியாவிட்டாலும்
எழுந்து எனக்குப் பிடித்ததை
பார்த்துப் பார்த்து சமைத்துத் தருவாள்;
உதவி செய்யப் போனால் கூட
வேண்டாண்டி இங்கையாவது நீ
உட்கார்ந்து தின்று போ; அங்கே உனக்குத் தர யாரிருக்கா? என்பாள்.
என்னதான் நான் பேசாவிட்டாலும்
இரண்டொரு நாளைக்கேனும்
எனை அழைத்து எப்படி இருக்க..
என்னடி செய்த..
உடம்பெல்லாம் பரவாயில்லையாயென்று கேட்பாள்;
இப்போது எனக்கென்று யாருமேயில்லை.
நானெப்படி இருக்கேனோ என்று
வருந்த அம்மா போல் யார் வருவா???
அவள் ஊட்டிவளர்த்த சோறும்
கட்டி அனைத்த அன்பையும் தர
அவளைப்போல் இனி யாரிருக்கா???
அம்மா இல்லாத வீடென்றாலும்
எப்பொழுதேனும் அங்கேச் சென்று
அவள் இருந்த இடத்தை, அவள் தொட்டப் பொருட்களை யெல்லாம்
தொட்டுப் பார்க்க நினைப்பேன்,
எனக்கென்று அங்கே ஏதேனும்
வாங்கி வைக்காமலாப் போயிருப்பாளென்று கூட நினைப்பேன்.
ஒரு சொட்டுக் கண்ணீராவது
விட்டுத் தானே போயிருப்பாள்’
இல்லாவிட்டாலென்ன, பொருளென்ன பொருள்
எனக்கென்று அவள்
அங்கே எத்தனை நினைவினை சேர்த்துவைத்து
அழுதிருப்பாள்?? அந்த ஒரு சொட்டுக்
கண்ணீரேனும் ஈரம் காயாமல் எனக்காக இருக்காதா? என்றுத்
தோன்றும்.
ஆனால் –
எத்தனை இலகுவாகச் சொல்கிறதுயென் வீடு
அம்மா இல்லாத அந்த வீட்டில்
உனக்கென்னடி வேலை’யென்று!!
——————————————————————————————
வித்யாசாகர்
நிஜம் தான்.
அம்மா இல்லாத வீடு பெரிய இழப்பு தான்.
அருமையான கவிதை.
வாழ்த்துகள்.
LikeLike
உண்மையிலேயே வருந்தத் தக்க நிலை தானே இது, பெற்று வளர்த்தோரை ஒரு பெண் வெறுமனே விட்டுவருவது? அதோடு அந்த வீட்டில் அவளுக்கான கடமைகள் எல்லாமே ஒரு கேள்விக்குறியை சுமந்துக் கொண்டு, யாரையேனும் தேடியே நிற்கும் ஒரு நிலையின் வுத்தத்தை சுமந்தவளாய்த் தானே அவளால் நம் வீடுகளில் திரியமுடிகிறது..
இந்த வலிகளெல்லாம் கடந்து, நம் அம்மா பிரிவது மட்டுமே நமக்கு வலிக்கிறது. பிரிவு எங்கும் யாரிடத்தும் வலிதான் வழிதான்..
தங்களின் கருத்திற்கு நன்றி அய்யா..
LikeLike
அம்மா அழகான கவிதை ……….,
இன்னும் தொடரட்டும் அம்மாவின்னைப் பற்றி எழுதும் உங்களின் எழுத்துக்கள்!!
LikeLike
அம்மா அப்பா இரண்டும் உயிரின் சுவடுள்ள வரை தனை அழித்துக் கொள்ளாத வார்த்தைகள் ஐயப்பன். நிறைவுபெறாத இலக்கியமாய் அதிரண்டும் நமைச் சுற்றி சுற்றி காலத்திற்கும் நிலைத்திருக்கும். அதில் என் பங்காய்’ நானிருக்கும் வரை என் எழுத்தும் இருக்கும்பா…
LikeLike
ஆமாம் உண்மை வரிகள். என் அம்மாவோடு இருக்கும் பொழுது, நான் மஹா ராணி போல் இருந்தேனே…மனம் கனக்கிறது.
LikeLike
உங்கள் கனத்திற்கு ஆறுதலாய் உங்களின் வீடு அன்பில் நிறையட்டும் உமா. கடவுள் உங்களுக்கு மன நிறைவையும் அமைதியையும் தரட்டும். கிடைக்காத அன்பை கிடைப்பனவற்றில் எடுத்துக் கொள்ளலும் ஒரு வடிகாலாகளாம்; மனதிற்கு உமா!
LikeLike