இன்னும் எத்தனைக் காலத்திற்கு அன்று நாம் வாங்கிய அடிகளை மறந்தும், சிந்திய ரத்தத்தை மறந்தும், விட்டுப்போன அவனின் காய்ந்திடாத எச்சத்தில் ஊறிப்போயும் கிடப்போம்? எம் தமிழர் பிறந்தநாளில் வெறும் ஹேப்பி பர்த்டே படிப்போம்? செம்மொழி செய்தும்கூட எம்மொழி எம் மொழியோயென்று ஏளனப்படவே ஆனோமே இனமே? ஆங்கிலம் என்ன அத்தனை என் வீடு தாண்டி என் உள்ளம் கடந்து மூளையின் சப்தங்களுக்குள் சென்று அடைத்தா கொண்டது? இதோ அதைக் களைந்துவிடச் சொல்லிக் கேட்குமொரு வேண்டுதலை இந்தப் பாடலில் பாருங்கள். அல்லது நாளைய தலைமுறைகளுக்கும் மேலேறி நிற்க வளந்துவிட்ட நமக்கொவ்வாத அப்பண்பிற்கு ஒரு முதற்புள்ளி வைக்கும் முயற்சியாய் இப்பாடல் வருகிறது கேளுங்கள். விரைவில் அன்புறவு இசையமைப்பாளர் திரு. ஆதியின் இசையில் தரணியெங்கும் ஒலிக்கவுள்ளது. ஒலிக்கும் முன் உங்களின் விழிகளில் பூட்டி ரசனை பார்க்கக் துணிந்த இவ்வரிகள் இங்கே உங்களின் கருத்தையும் நாடி நிற்கிறது பணிவுடன்:-
இனிக்க இனிக்க வாழ்த்துவோம்…
இனிக்க இனிக்க வாழ்த்துவோம்…
தமிழிலினிக்க மொழியும் சிறக்க –
பிறந்தநாளில் வாழ்த்துவோம்;
பிறந்தநாளில் வாழ்த்துவோம்;
வாழ்கவே வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவாழ்கவே…
கற்கண்டுச் சிதறலாய் –
சிரிக்கும் சிரிப்பு இனிக்கட்டும்,
சொட்டும் தேன் இனிமையில்
சொற்களெல்லாம் இனிக்கட்டும்;
கனுக்கரும்பின் இனிமையாய்
வாழ்க்கையது நொடிக்கட்டும்,
புகழைக் கூட கசக்காமல்
பிறர் வாயேப் பேசட்டும்;
பொற்காலம் இதுவென்று நீ
வாழும் காலம் ஆகட்டும்,
புதையல்போலுன் மனதென்று
பார்ப்போரெல்லாம் மெச்சட்டும்;
தரணி முழுக்க தமிழ்போல
உன் பேருமது சிறக்கட்டும்,
பெருமையோடு உலகம் பேச – முழுப்
பக்குவமும் கிடைக்கட்டும்;
செல்வம் பல செழிக்க – நீயும்
பெருநிறைவோடு வாழனும்
சேர்த்துவைக்கும் சுகத்தோடு
நல்ல பேரும் நிலைக்கனும்;
பெரியோரை மதிக்கணும் – பேணிப்
பிள்ளையைப்போல் காக்கனும்
மற்றோரையும் மதிக்கணும் – பெண்ணின்
மாண்பு உயர நடத்தனும்;
மகிழ்ச்சிப் பொங்கும் நாளிலும்
கர்வமின்றித் திரியனும்,
கடலளவுப் பணிவிலே –
இவ்வுலகப் பார்வை அடங்கனும்;
வாழ்த்துவோம் வாழ்த்துவோம் எல்லோரும்
வாழ்த்துவோம்;
சிரித்து சேர்ந்து வாழ்த்துவோம்
மனசு குளிர வாழ்த்துவோம்
மீண்டும் மீண்டும் வாழ்த்துவோம்
மகிழ்வுபொங்கும் நன்னாளில் –
பல்-லாண்டு வாழ வாழ்த்துவோம்;
வாழ்கவே வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவே…
வாழ்கவே வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்கவாழ்கவே..
—————————————————
வித்யாசாகர்
அருமை! அருமை! .நல்ல முயற்சி..இசையோடு கேட்க ஆவலாக இருக்கிறது.
இனி பிறந்த நாளுக்கு ஒரு நல்ல தமிழ் பாடல் கிடைக்க போகிறது.
பாராட்டுக்கள்!
LikeLike
மிக்க நன்றி உமா. இது ஒரு பெரு முயற்சி தான். பார்ப்போம். கைகூடுமெனில் நலன் சேரும். வணக்கம்!
LikeLike
அருமையான முயற்சி.
மனப்பூர்வ வாழ்த்துகள்.
LikeLike
அன்பு அய்யாவிற்கு நன்றி. இது முதல் படியாக அமையும் இனி இதை தொடர்ந்து நிறைய வரும் ஏதேனும் ஒன்று நிற்கும். அந்நிய மொழியின் மீதான அவசியமற்ற மோகம் மற்றும் இடைப்புகுந்த திணிப்புகள் தானே விலகும். தமிழர் வாழ்வு நற் பண்போடு மிஞ்சும்!
LikeLike
காத்திருக்கிறேன் இசையாய் சுவைக்க …………..மிக்க அருமையான வரிகள் மனிதனின் வாழ்கைக்கும் ,வளர்ச்சிக்கும் தூண்டுகோலாய் அமையும் உங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் …இன்னும் கூறலாமே உங்களின் எழுத்துக்கள் மூலம் தாயை முதியோர் இல்லங்களில் விட்டு விட்டு பிறந்தநாள் கொண்டாடுவோர்கள் இனி இருக்க வேண்டாம் என்றும் என எதிர்பார்க்கிறேன் …இந்நிலைமை மாற்ற உங்கள் எழுத்துக்கு அந்த சக்தி உண்டு
LikeLike
கண்டிப்பாக மாறும் அய்யப்பன். உங்களைப் போன்ற நல்ல இளைஞர்கள் உள்ள நம் மண் இனி மேலும் புனிதமடையும் என்றே நம்புவோம். நன்றியும் வணக்கமும்!
LikeLike
பிங்குபாக்: ஹேப்பி பர்த்டே இனி எதற்கு? பிறந்தநாளுக்கு தமிழிருக்கு!! | வெளிச்சவீடு